பலமனைவி மணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பலமனைவி மணம் அல்லது பலதார மணம் (polygyny) என்பது ஒரு ஆண் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் மண உறவு கொண்டு வாழ்வதாகும். வரலாற்று நோக்கில், இம்முறையே உலகின் பெரும்பான்மையான சமுதாயங்களில் கடைப்பிடிக்கப்பட்டது. நவீன சமுதாயங்கள் பலவற்றில், இம் முறை ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதுடன், இத்தகைய மணமுறைக்குச் சட்டப்படியான ஏற்பும் இருப்பதில்லை. எனினும், ஏதோ ஒரு வகையில் இச் சமுதாயங்களிலும் பலமனைவி மண முறை இருந்துதான் வருகிறது. இந்துக்கள் பொதுவாக ஒருவனுக்கு ஒருத்தி என்னும் கருத்துக்குப் புனிதத்துவம் கொடுத்து வந்தபோதிலும் கூட [மேற்கோள் தேவை], அரசர்கள், சமுதாயத்தில் உயர் மட்டத்தில் இருப்பவர்கள் முதலானோர் பல பெண்களை ஒரே நேரத்தில் மணந்து வாழ்வதை இந்து சமுதாயம் ஏற்று வந்துள்ளது. இசுலாம் பலமனைவி மணத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஏற்றுள்ளது.

பலமனைவி மணத்துக்கான காரணங்கள்[தொகு]

பலமனைவி மணம் பரந்த அளவில் உலகில் கைக்கொள்ளப்பட்டு வருவதற்கான காரணங்களை ஆராய்ந்த மானிடவியலாளர்கள், பலவிதமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதிக எண்ணிக்கையில் பாலுறவுத் துணைகளைக் கொண்டிருப்பதற்கான விருப்பு மனிதனில் அடிப்படை உயிரியல் பண்பாக இருப்பதாகவும், அதனால்தான், உலகளவில் பலமனைவி மணம் பரந்துள்ளதாகவும் சிலர் கூறுகிறார்கள்.

இதைவிடப் பலவாறான பொருளாதாரக் காரணங்களும் எடுத்துக் காட்டப்படுகின்றன. வாழ்க்கைக்கான பொருளாதாரச் செயற்பாடுகளில், பெண்களின் பங்கு அதிகமாக இருக்கும் சமுதாயங்களில் பலமனைவி மணமுறை அதிக அளவில் இருப்பதாக மானிடவியலாளர் கூறுகிறார்கள். குறிப்பாக முற்காலத்தில், உணவு சேகரித்தல், விவசாயம் போன்ற பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பெண்களின் பங்களிப்பை வேண்டிநின்றன. இதனால் வசதி படைத்தவர்கள் பல பெண்களை மணந்து கொண்டனர்.

அடிக்கடி ஏற்படும் போர் போன்ற நிகழ்வுகளில் பெருமளவில் ஆண்கள் இறக்க நேரிடுவதால் சமுதாயத்தின் மக்கள்தொகையில் பெண்களின் தொகை கூடுவதால், எல்லா பெண்களும் மணம் முடிப்பதை உறுதி செய்வதற்காகப் பல சமுதாயங்களில் பலமனைவி மணமுறை தேவைப்பட்டதாகச் சிலர் வாதிட்டனர். ஆனால், ஆண், பெண் மக்கள்தொகைச் சமநிலை காணப்படுகின்ற சமுதாயங்களிலும், சிலசமயங்களில், ஆண்கள் பெண்களைவிடக் கூடுதலாக இருக்கும் சமுதாயங்களிலும்கூட, பலமனைவி மணமுறை பின்பற்றப்படுவது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலமனைவி_மணம்&oldid=2946113" இலிருந்து மீள்விக்கப்பட்டது