சொல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல் என்பது ஏதொன்றையும் சுருக்கமாய்க் குறிக்கும் அடிப்படை மொழிக் கூறு. உலகில் உள்ள மிகப்பெரும்பாலான மொழிகளில் சொற்களைக் கோர்த்து ஒரு சொற்றொடர் வழி ஒரு கருத்தோ செய்தியோ தெரிவிக்கப்படுகின்றது. சொல் என்பது ஒரெழுத்தாலோ, பலவெழுத்துகளாலோ ஆக்கப்பட்டு ஒரு பொருளைத் தரும் மொழிக்கூறு. சொல்லைக் கிளவி, பதம் ,மொழி என்றும் கூறுவது உண்டு.

  • சொல்லைத் தொல்காப்பியம் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு இறந்து இசைக்கும் பொதுமொழி எனப் பாகுபடுத்திப் பார்த்தது.[1]
  • சுமார் 1,600 ஆண்டுகளுக்குப் பின்னர் மொழியை ஆராய்ந்த நன்னூல் ஈழெழுத்தொருமொழி என்னும் பகுப்பைக் கைவிட்டுத் 'தனியெழுத்துப் பதம்', 'தொடரெழுத்துப் பதம்' என இரண்டாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளது.[2]
  • மேலும் நன்னூல் சொல்லை ஒருமொழி, தொடர்மொழி, பொதுமொழி எனப் பெயரிட்டுக்கொண்டு மூன்று வேறு வகையில் கண்டது.[3]

தொல்காப்பியத்தின் விளக்கம்[தொகு]

சொல்
நிறைசொல்
பெயர்ச்சொல் வினைச்சொல்
குறைசொல்
இடைச்சொல் உரிச்சொல்
வழங்குநிலை
இயற்சொல் திரிசொல்
திசைச்சொல் வடசொல்
மொழிநிலை
ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி [4]

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர்த் தோன்றியதாகக் கருதப்படும் தொல்காபியத்தில், சொல்லுக்கு விளக்கம் தரும் பல நூற்பாக்கள் சொல்லதிகாரம் என்னும் பகுதியில் உள்ளன. அவ்வதிகாரத்தில் முதல் நூற்பாவில் [5] எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிக்கப்பட்டுள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.
சொல் எனப்படுப பெயரே வினையே என்று
ஆயிரண் டென்ப அறிந்திசி னோரே [6] என்று சொற்கள் அடிப்படையில் பெயர்ச்சொல், வினைச்சொல் என்று இரண்டே வகை என்றும் பிற சொல் வகைகள் (உரிச்சொல், இடைச்சொல் முதலியன) இவை இரண்டிலிருந்து மருவி வருவனவே என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழில் ஓர் எழுத்தும் பொருள் தர வல்லது. காட்டாக கை, தை, மை, வா, போ. இவ்வகைச்சொற்களுக்கு ஓரெழுத்தொருமொழி என்று பெயர்.

சொல் வகைகளுக்கு வாய்ப்பியம் தரும் விளக்கம்[தொகு]

வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.[7][8]

சொல் வகைகள்[தொகு]

வாய்ப்பியம் என்னும் இலக்கணநூல் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகியவற்றைத் தெளிவாக விளக்குகிறது.[7][8] எடுத்துக்காட்டுகள் சாய்ந்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன.

பெயர்ச்சொல்[தொகு]

பொருள் விளங்கச் சொல்வது பெயர்ச்சொல்

எப்பொரு ளேனும் ஒருபொருள் விளங்கச்
செப்பி நிற்பது பெயர்ச்சொல் ஆகும்.
மரம், கண், பெண் – பெயர்ச்சொல்

பெயர்ச்சொல் என்பது ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் ஆகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் பெயர்ச்சொற்கள் தோன்றும்.

  1. பொருட்பெயர்
  2. இடப்பெயர்
  3. காலப்பெயர்
  4. சினைப்பெயர்
  5. பண்புப்பெயர்
  6. தொழிற்பெயர்

என்று ஆறு வகைப்படும்.[9]

எடுத்துக்காட்டுகள்

பொருட்பெயர் : , பசு, புத்தகம் இடப்பெயர் : தஞ்சாவூர் , தமிழகம் காலப்பெயர் : மணி, ஆண்டு , நாள் சினைப்பெயர் : கண், காது ,கை, தலை பண்புப்பெயர் : இனிமை, நீலம், ந சதுரம் தொழிற்பெயர் : படித்தல், உண்ணுதல் , உறங்குதல்

வினைச்சொல்[தொகு]

தொழிலின் காலம் காட்டும் சொல் வினைச்சொல்

வழுவில் மூவகைக் காலமொடு சிவணித்
தொழிற்பட வருவது தொழிற்சொல் ஆகும்
படித்தான், படிக்கிறான், படிப்பான் – வினைச்சொல்

வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை உணர்த்துவதாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும். முடிவு பெறாத வினைசொல் எச்சம் எனப்படும்

முற்று

1. தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்று ஆகும்

எ.கா: கவிதா மாலை தொடுத்தாள்

2.குறிப்பு வினைமுற்று

பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றி, செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறினுள் செய்பவனை மட்டும் விளக்குவது குறிப்பு வினைமுற்று ஆகும்.

எ.கா: அவன் பொன்னன்

எச்சம்

1.பெயரெச்சம்

பெயரெச்சம் என்பது, பெயரைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச் சொற்கள் ஆகும். பெயரெச்சம் தெரிநிலை பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என் இருவகைப்படும்.

எ.கா: படித்த பையன்(தெ.பெ.எ), நல்ல பையன் (கு.பெ.எ).

2.வினையெச்சம்

வினையெச்சம் என்பது வினை முற்றினைக் கொண்டு முடிவுறும் காலங்காட்டுகின்ற, முற்றுபெறா வினைச்சொற்கள் ஆகும். வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் , குறிப்பு வினையெச்சம் என இருவகைப்படும்.

எ.கா: படித்துத் தேறினான்(தெ.வி.எ), மெல்ல பேசினான்(கு.வி.எ).

இடைச்சொல்[தொகு]

அணிகலன் செய்யப் பொன்னுக்கு இடையே இருந்து உதவும் இடைக்கருவிகள் போலப் பெயர்ச்சொல்லுக்கும் வினைச்சொல்லுக்கும் இடைநிற்பது இடைச்சொல்

சுடுபொன் மருங்கில் பற்றாசு ஏய்ப்ப
இடைநின்று இசைப்பது இடைச்சொல் ஆகும்
மரத்தை = மரம்+அத்து+, படித்தனள் = படி+த்+த்+அன் அள் இடைச்சொல்

இடைச்சொல் என்பது தனித்து நில்லாமல் பெயரையோ வினையையோ சார்ந்து வருவது.ஐ முதலிய வேற்றுமை உருபுகளும்; போல, ஒப்ப முதலிய உவம உருபுகளும்; அ, இ, உ என்னும் சுட்டுகளும்; யா முதலிய வினாவெழுத்துகளும்; `உம்' முதலிய பிறவும் இடைச்சொற்கள் என்று கூறப்படும். மேற்சொன்ன வேற்றுமையுருபுகள் முதலியனவும், இடை நிலைகள், சாரியைகள், விகுதிகள், தமக்கெனப் பொருளையுடைய ஏ, ஓ, மற்று, தான் முதலியனவும் இடைச்சொற்களாகும்.

எ.கா: அவன்தான் வந்தான் சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

உரிச்சொல்[தொகு]

மருவி நிற்கும் சொல்லோடு மருவாத சொல்லை உரிமையோடு சேர்த்துச் சொல்வது உரிச்சொல்.

மருவிய சொல்லோடு மருவாச் சொற்கொணர்ந்து
உரிமையோடு இயைத்தல் உரிச்சொல் ஆகும்.
சாலப் பெரிது – உரிச்சொல்

உரிச்சொல் என்பது பல்வேறு வகைப்பட்ட பண்புகளையும், குணங்களையும், வடிவங்களையும் உணர்த்தும் சொல்லாகும். பெயர்ச் சொற்களையும் வினைச் சொற்களையும் விட்டு நீங்காதனவாய் வரும்.

ஒரு பொருள் குறித்த பல சொல்

சாலப் பேசினான். உறு புகழ். தவ உயர்ந்தன. நனி தின்றான்.

சால, உறு, தவ, நனி என்னும் உரிச்சொற்கள் மிகுதி என்னும் ஒரு பொருளை உணர்த்துவன

பல பொருள் குறித்த ஒரு சொல்

கடிமனை - காவல் கடிவாள் - கூர்மை கடி மிளகு - கரிப்பு கடிமலர் - சிறப்பு

கடி என்னும் உரிச்சொல் - காவல், கூர்மை, கரிப்பு, சிறப்பு முதலிய பல பொருள்களைக் உணர்த்தும்

பகாப்பதம்[தொகு]

பகுக்கப்படாத இயல்பையுடைய சொற்கள் பகாப்பதம் ஆகும். அதாவது நேரடியா ஒரு சடப்பொருளையோ அல்லது கருத்துப்பொருளையோ குறித்து நிற்கும் சொற்கள் பகாப்பதம் ஆகும். எடுத்துக்காட்டாக நாய், மரம், வா.

தமிழ் இலக்கணம் (நூல்) தரப்பட்ட எடுத்துக்காட்டுகள்:

  • நிலம், நீர், மரம் - பொயர்ப்பகாப்பதம்
  • நட, வா, உண் - வினைப்பகாப்பதம்
  • மற்று, ஏ, ஒ - இடைப்பகாப்பதம்
  • உறு, தவ, நனி - உரிப்பகாப்பதம்

பகாப்பதத்தின் வகைகள்[தொகு]

(1) பெயர்ப் பகாப்பதம்:

பெயர்ச் சொல்லாக அமையும் பகாப்பதம் பெயர்ப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக் காட்டுகள் :

நெருப்பு, காற்று, நிலம், நீர்,என வரும் .

(2) வினைப் பகாப்பதம்:

வினைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் வினைப் பகாப்பதங்கள் எனப்படும்.

எடுத்துக்காட்டுகள் :

உண், தின் , நட, வா, முதலியன.

(3) இடைப்பகாப்பதம் :

இடைச் சொற்களாக வரும் பகாப்பதங்கள் இடைப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக்காட்டுகள் :

மன், கொல், போல், மற்று என்பன.

(4) உரிப் பகாப்பதம் :

உரிச் சொற்களாக வரும் பகாப்பதம் உரிப் பகாப்பதம் எனப்படும்.

எடுத்துக்காட்டுகள் :

கூர், மிகு, உறு, தவ, நனி, கழி

மேலே சுட்டிய எடுத்துக்காட்டுகளில் கண்ட பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரித்தால் பொருள் தருவதில்லை; அவை இடுகுறியில், இட்டு வழங்கி வருகின்ற தன்மையில் அமைந்தவை .[10]

பகுபதம்[தொகு]

பகுக்கப்படும் இயல்புடைய சொற்கள் பகுபதம் ஆகும். பகுபதங்களைப் பெயர்ப்பகுபதம், வினைப்பகுபதம் என இரண்டாக பகுக்கலாம். வினைப்பகுபதம் தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என்று இருவகைப்படும்.

ஒரு பகுபதம் பிரிந்து நிற்கும் நிலையில் அமையும் உறுப்புகள் பகுபத உறுப்புகள் எனலாம்.

இப்பகுபத உறுப்புகள் ஆறு வகைப்படும்.

பகுதி

விகுதி

இடைநிலை

சாரியை

சந்தி

விகாரம்

என்பனவாகும்.[11]

இந்த ஆறு உறுப்புகளையும் கூட்டிச் சேர்த்தால் எல்லாவிதமான பகுபதங்களும் அமையும்

பகுதி

ஒரு பகுபதத்தின் முதலில் அமையும் உறுப்பு ஆகும். எனவே இதனை முதனிலை என்றும் வழங்கலாம். உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) உண் என்பது பகுதியாகும்.

விகுதி

பகுபதத்தின் இறுதியில் நிற்கும் உறுப்பு என்பதால் இதனை இறுதிநிலை என்றும் வழங்குவது மரபு.

உண்டான் என்னும் பகுபதத்தில் (உண்+ட்+ஆன்) ஆன் என்பது விகுதி ஆகும். இது திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டி நிற்கும்.

இடைநிலை

முதனிலைக்கும் (பகுதி) இறுதிநிலைக்கும் (விகுதி) இடையில் நிற்கும் உறுப்பு என்பதால் இடைநிலை என்னும் பெயர் பெறுகின்றது. வினைப் பகுபதத்தில் இடைநிலை காலம் காட்டும் உறுப்பு ஆகும். உண்+ட்+ஆன் என்னும் பகுபதத்தில் –

உண் - முதனிலை ட் - இடைநிலை ஆன் - இறுதிநிலை

‘இடைநிலை‘ - பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்திருத்தலைக் காணலாம்.

சாரியை

இது பெரும்பாலும், இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் உறுப்பு ஆகும். சிறுபான்மையாகச் சந்திக்கும் விகுதிக்கும் இடையிலும் வரும்.

சாரியை = சார்ந்து இயைந்து நிற்பது. தனக்கெனப் பொருள் எதுவும் இன்றிப் பிற உறுப்புகள் இணையும்போது இடையில் வருவது.

வந்தனன் என்னும் சொல் ‘வா+த்(ந்)+த்+அன்+அன்‘ வா - பகுதி த் - சாந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி

‘த்’ இடைநிலைக்கும், ‘அன்‘ விகுதிக்கும் இடையில் சாரியை வந்துள்ளதைக் காணலாம்.

சந்தி

இது பெரும்பாலும் முதனிலை (பகுதி)க்கும் இடைநிலைக்கும் இடையில் வரும். பகுதிக்கும் விகுதிக்கும் இடையிலும் சிறுபான்மை வரக்கூடும். உறுப்புகளின் இணைவில் (சந்தி), அவற்றை இணைக்க வருவது சந்தி. நடத்தல் என்னும் பகுபதம் நட+த்+தல் என்று பிரிந்து வரும்.

நட - பகுதி த் - சந்தி தல் - விகுதி

பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் ‘த்‘ சந்தி வந்திருப்பதைக் காண முடிகிறது.

விகாரம்

விகாரம் என்று தனியாக ஓர் உறுப்பு இல்லை. பகுதியும் சந்தியும் மாற்றம் அடையலாம். அல்லது சந்தி மட்டும் மாற்றம் அடைந்து வரலாம். இவ்வாறு மாற்றம் பெறுவதை ‘விகாரம்‘ என்பர்.

வந்தனன் - வா+த்(ந்)+த்+அன்+அன்

வா - பகுதி த் - சந்தி த் - இடைநிலை அன் - சாரியை அன் - விகுதி

இதில் வரும் வா என்னும் பகுதி வ எனக் குறுகியும், த் என்னும் சந்தி ந் என்று மாற்றம் அடைந்தும், விகாரமாகியுள்ளன

மேற்கோள்[தொகு]

  1. ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
    இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
    மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)

  2. எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
    பதமாம் அது பகாப்பதம், பகுபதம் என
    இரு பால் ஆகி இயலும் என்ப (நன்னூல் 128)

  3. ஒருமொழி தொடர்மொழி பொதுமொழி என்றா
    இருதிணை ஐம்பால் பொருளையும் தன்னையும்
    மூவகை இடத்தும் வழக்கொடு செய்யுளின்
    வெளிப்படை குறிப்பின் விரிப்பது சொல்லே (நன்னூல் 259)

    ஒருமொழி ஒரு பொருளனவாம் தொடர்மொழி
    பல பொருளன பொது இருமையும் ஏற்பன (நன்னூல் 260)

  4. ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
    இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
    மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)
  5. தொல்காப்பியம். சொல்லதிகாரம் நூற்பா 155
  6. தொல்காப்பியம் 2-158
  7. 7.0 7.1 யாப்பருங்கலம் என்னும் இலக்கண நூலில் ஒழிபியல் நூற்பா 96-ல் வரும் ‘சொல்’ என்பதற்கு விளக்கம் கூறும்போது இந்த நூற்பாக்கள் எடுத்துக்காட்டுகளாகத் தரப்பட்டுள்ளன.
  8. 8.0 8.1 யாப்பருங்கல விருத்தி சென்னை அரசு கீழ்த்திசை எழுத்துக்கள் வரிசை எண் 66 நூல் பக்கம் 441
  9. நன்னூல் நூற்பா எண் . - 275
  10. நன்னூல் நூற்பா எண்  : 131
  11. நன்னூல் நூற்பா : 133
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்&oldid=3897468" இலிருந்து மீள்விக்கப்பட்டது