ஈரெழுத்தொருமொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் உள்ள தனிச்சொல்லை மொழி என்னும் சொல்லால் குறிப்பிடுவது தொல்காப்பியர் காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். [1] இந்த மொழி ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஓசையைக் கடந்த ஒலி கொண்ட 'பொதுமொழி' என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. [2]

விளக்கம்[தொகு]

ஓரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரைக்கு மிகாத சொல்
ஈரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரைக்கு மிகாத சொல்
இரண்டிறத்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டு மாத்திரையின் மிக்கு ஒலிக்கும் சொல்

தமிழ்ச்சொல் ஐங்கோணப் பார்வை[தொகு]

தமிழில் உள்ள சொற்களைத் தொல்காப்பியம் ஐந்து கோணங்களில் பார்க்கிறது.

  1. மொழிநிலைக் கோணம்: இந்தக் கோணத்தில் ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்று பாகுபடுத்திக்கொள்கிறது. இது ஒலிப்புக்கோணம்.
  2. பொருள்கோணம்: இந்தக் கோணத்தில் சொற்களைப் பெயர், வினை என்று பாகுபடுத்திக்கொள்கிறது.
  3. சொல்-இணைகோணம்: இந்தக் கோணத்தில் இடைச்சொல், உரிச்சொல் என்று பாகுபடுத்திக்கொள்கிறது.
  4. மொழிக்கோணம்: இந்தக் கோணத்தில் இயற்சொல், திரிசொல் என்று பாகுபடுத்திக்கொள்கிறது.
  5. வழக்குக்கோணம்: இந்தக் கோணத்தில் திசைச்சொல், வடசொல் என்று பாகுபடுத்திக்கொள்கிறது.

பாகுபாட்டின் பயன்[தொகு]

ஒலிப்புக்கோணப் பாகுபாடு புணர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது.

ஓரெழுத்தொருமொழி

பூ பறி, பூப் பறி - இவ்வாறு இருவகையிலும் எழுதலாம். இது உறழ்ச்சி.
'நா' என்பது நாக்கைக் குறிக்கும் ஒரெழுத்தொருமொழி. "நாச்செற்று விக்குள் மேல் வாராமுன்" என்பது திருக்குறள். இந்ததெ தொடரில் நா என்பது எழுவாய். அஃறிணை. செற்று [3] என்பது அதன் வினை. எழுவாய்த் தொடர் ஒற்று மிகாமல் இயல்பாக வருதல் வேண்டும். ஆனால் இங்கு ஒற்று மிக்கு வந்துள்ளதைக் காண்கிறோம். பூ என்பது ஓரெழுத்தொருமோழி. பூ பூத்தது - இங்கு ஒற்று மிகவில்லை. பூப் பூக்கும் காலம் - இங்கு ஒற்று மிக்கது. இவ்வாறு ஓரெழுத்தொருமொழி ஒற்று மிக்கும், மிகாமலும் உறழ்ந்து வரும்.

ஈரெழுத்தொருமொழி

கிளி குறிது, கிளிக் குறிது - இவ்வாறு இருவகையிலும் எழுதலாம். இது உறழ்ச்சி.
'கடு' [4] என்பது ஈரெழுத்தொருமொழி. 'புளி' என்பது மற்றொரு ஈரெழுத்தொருமொழி. இவை 'கடு தின்றான்', 'கடுத் தின்றான்' என ஒற்று மிக்கும் மிகாமலும் புணரும். புளி என்பதும் அவ்வாறே 'புளி தின்றான்', 'புளித் தின்றான்' எனப் புணரும். பொருளில் மாறுபாடு இல்லை.

இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி

மலர் குறிது - இதில் இயல்பு மட்டுமே.
'நிலா', 'கனா' என்பன இரண்டு மாத்திரையின் மிக்கு வந்த பொதுமொழி. [5] இது 'நிலா தோன்றிற்று' என எழுவாய்த் தொடரில் இயல்பாக மட்டும் வந்தது. 'கனாக் கண்டான்' என அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிக்கு வந்தது. [6]

இப்படிப் புணர்ச்சியில் நிலைமொழியின் மாத்திரை நோக்கிய பாகுபாடும் பங்கு வகிக்கிறது.
எனவே தமிழுக்கு இந்தப் பாகுபாடு இன்றியமையாதது.

தொல்காப்பிய உரையாசிரியர்கள் கருத்து[தொகு]

இளம்பூரணர்: மொழிநிலை மூன்றுக்கு ஒடுத்துக்காட்டு: "ஆ, மணி, வரகு, கொற்றன்"
நச்சினார்க்கினியார்: "ஒரெழுத்தொருமொழியும் தொடர்மொழியும் என்னாது, ஈரெழுத்தொருமொழியும் ஓதினார், சில, பல என்னும் தமிழ்வழக்கு நோக்கி."
இவர் தரும் விளக்கம்
ஆ, கா, நா - ஒரு எழுத்தொருமொழி
மணி, வரகு, கொற்றன் - 2 எழுத்தொருமொழி
குரவு, அரவு - 3 எழுத்தொருமொழி
கணவிரி - 4 எழுத்தொருமொழி
அகத்தியனார் - 5 எழுத்தொருமொழி
திருச்சிற்றம்பலம் - 6 எழுத்தொருமொழி

இவரது இந்தப் பாகுபாடுகள் செய்யுள் அசை நோக்கியவை.

மொழிமரபு நோக்கியவை அல்ல.

அடிக்குறிப்பு[தொகு]

  1. காண்க தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் உள்ள இரண்டாவது இயல் 'மொழிமரபு'ச் செய்திகளால் இதனை உணரலாம்
  2. ஓர் எழுத்து ஒருமொழி, ஈர் எழுத்து ஒருமொழி,
    இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட,
    மூன்றே, மொழி நிலை-தோன்றிய நெறியே. (தொல்காப்பியம் 1-45)

  3. அடங்கி
  4. நஞ்சு
  5. எழுத்தால் ஈரெழுத்து. ஒலியால் மூன்று மாத்திரை
  6. அஃறிணை இரண்டாம் வேற்றுமைத் தொகையில் ஒற்று மிகாது. 'தமிழ் படி' என வரும்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரெழுத்தொருமொழி&oldid=1464437" இலிருந்து மீள்விக்கப்பட்டது