அருணந்தி சிவாசாரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அருணந்தி சிவாச்சாரியார் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அருணந்தி சிவாசாரியார் [1] (கி.பி. 1180-1275) திருவாவடுதுறை ஆதீன பரம்பரையில் வந்தவர். சைவர்களால், சந்தான குரவர்களுள் ஒருவராக, மெய்கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார். சந்தான குரவர்களில் ஒருவர். சிவஞான சித்தியார், இருபா இருபது ஆகிய நூல்களை இயற்றியவர். சைவ சித்தாந்த நூல்களுள் தலையாயதாகக் கருதப்படும் சிவஞான போதத்தை இயற்றியவரான மெய்கண்ட தேவரை இவர் ஆசிரியராகக் கொண்டார்.

இவர் தமிழ் நாட்டில் திருத்துறையூர் என்னும் ஊரில் ஆதிசைவர் குடும்பத்தில் பிறந்தவர். இவர் இளம் வயதிலே இலக்கண, இலக்கிய நூல்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்ததுடன், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளில் சிறந்த அறிவு கொண்டவராகவும் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு உணர்த்தும் திறமை பெற்றவராகவும் இருந்தார்.

மெய்கண்டாரைக் குருவாகக் கொள்ளல்[தொகு]

பல மாணவர்களுக்குக் கல்வி கற்பித்து வந்த இவர், தன்னுடைய மாணவர்களிற் பலர் திருவெண்ணெய் நல்லூரைச் சேர்ந்த மெய்கண்ட தேவர் என்பவரிடம் பாடங் கேட்கச் சென்று விட்டதை அறிந்தார். தனது அறிவில் இறுமாப்புக் கொண்டிருந்த அருணந்தியார், மெய்கண்ட தேவரின் சிறப்புத் தான் என்ன என்பதை அறிய விரும்பித் தனது மாணாக்கர்களையும் அழைத்துக்கொண்டு திருவெண்ணெய் நல்லுருக்குச் சென்றார். மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியாரிலும் வயதில் இளையவர். எனினும், அருணந்தியார் வந்ததைக் கண்டும் காணாதவர்போல இருந்து, மாணவர்களுக்கு ஆணவ மலத்தைப்பற்றிப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். சினம் கொண்டு அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்த அருணந்தியார், இடையே குறுக்கிட்டு, ஆணவம் என்றால் என்ன என்று கேட்டார். அருணந்தியாரின் மனநிலையை உணர்ந்துகொண்ட மெய்கண்டார், அவரை நோக்கி, "நீர் நிற்கும் நிலைதான் அது" எனக் கூற, அருணந்தியார் தனது தவறை உணர்ந்து, மெய்கண்ட தேவரைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டார்.

நூல்கள்[தொகு]

மெய்கண்டாரின் தலைமை மாணவனாகத் திகழ்ந்த இவர், அவரால் இயற்றப்பட்ட தலை சிறந்த சைவ சித்தாந்த நூலான சிவஞான போதத்தைத் தழுவி, சிவஞான சித்தியார் என்னும் நூலை இயற்றினார். இந் நூலின் சிறப்புக்கு, சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என்று வழங்கும் பழமொழியே சான்றாகும். சிவஞான சித்தியார் தவிர, மெய்கண்ட சாத்திரங்களுள் அடங்கும் இன்னொரு நூலான இருபா இருபஃது என்னும் நூலும் இவர் இயற்றியதே.

சந்தான குரவர்களில் மூன்றாமவரான மறைஞானசம்பந்தர் இவர் மாணாக்கர் ஆவார்.

காலம்[தொகு]

இவர் வாழ்ந்த காலம் பற்றித் தெளிவு இல்லை. து. அ. கோபிநாதராயர் என்பவர் கல்வெட்டு ஒன்றை ஆதாரமாகக் கொண்டு, இவருடைய குருவான மெய்கண்ட தேவர் கி.பி. 1232 ஆம் ஆண்டின் வாழ்ந்து கொண்டிருந்தவர் என்ற கருத்தை முன்வைத்தார். எனினும், குறித்த கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளவர் சந்தான குரவரான மெய்கண்ட தேவர் தானா என்பதில் ஐயப்பாடு உள்ளது.

உசாத்துணைகள்[தொகு]

  • பூலோகசிங்கம், பொ., அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், கொழும்பு, 1975.

அடிக்குறிப்பு[தொகு]

  1. ஆசாரியார் என்பதே சரி. ஆசாரக்கோவை என்பது நூல். வாழ்க்கைக்கு ஆசாக (ஆசு = துணை, மரத்துளையில் கோக்கப்படும் மரம் ஆடாமல் துணையாக வைக்கப்படும் ஆப்பு, வாழ்க்கைக் கோப்புக்கு உதவும் துணை) விளங்கும் நெறிகளைக் கடைப்பிடிப்பது ஆசாரம். ஆசாரத்தைக் கடைப்பிடிப்பவர் ஆசாரியார். ஆசாரத்தை ஆச்சாரம் என்பது வடமொழியாக்கம். ஆச்சாரியார் என்பதும் அது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணந்தி_சிவாசாரியார்&oldid=2718261" இலிருந்து மீள்விக்கப்பட்டது