உள்ளடக்கத்துக்குச் செல்

சப்த கரை கண்ட சிவ தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சப்த கரை சிவ தலங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சப்த கரை கண்ட சிவ தலங்கள் என்பன தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் வடகரையில், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இடங்களில் அமைந்த ஏழு சிவாலயங்களைக் குறிக்கும்.[1]

தொன்மக்கதை[தொகு]

அன்னை காமாட்சி சிவனின் உடலில் இடப்பாகத்தைப் பெற வேண்டி காஞ்சியில் இருந்தவாறே தவமியற்றினாள். சிவனை வழிபடுவதற்காக நீர் ஊற்றை உருவாக்குமாறு முருகனிடம் காமாட்சி அம்மன் கேட்டுக்கொண்டாள். காமாட்சியின் கட்டளையை ஏற்று முருகன் தனது ஞானவேலை வீசினான் முருகன் வீசிய ஞானவேல் தென்கயிலாயமான பர்வதமலையின் ஏழு குன்றுகளைத் துளைத்துச் சென்றது. முடிவில் செங்கம் குன்றின் மீது குத்திட்டு நின்றது. வேல் துளைத்த இடத்திலிருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. இது சேயாறு என்று பெயர் பெற்றது. தற்போது இந்த ஆறு செய்யாறு என்று அழைக்கப்படுகிறது.[1]

வீசிய ஞானவேல் ஏழு குன்றுகளைத் துளைத்துச் சென்றபோது அங்கு தவமியற்றிய ஏழு அந்தணர்களைக் கொன்றதால் முருகனுக்கு 'பிரம்மஹத்தி தோஷம்' ஏற்பட்டது. இந்த தோஷம் நீங்குவதற்காக முருகன் செய்யாற்றின் வடகரையில் காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய தலங்களில் ஏழு சிவாலயங்களை அமைத்து வழிபட்டான். இந்த ஏழு சிவாலயங்களும் சப்த கரைகண்ட தலங்கள் என்று பெயர்பெற்றன.[1]

காஞ்சி[தொகு]

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் செங்கம் நகரின் வடமேற்கில் அமைந்துள்ள தலம் காஞ்சியாகும். இது ஏழு சப்த கரைகண்ட தலங்களில் முதாலவது ஆகும். இத்தலத்தின் மூலவர் 'கரைகண்டீசுவரர்' ஆவார். தொன்மைமிக்க ஆலயம்.[1][2]

கடலாடி[தொகு]

கடலாடி திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம் கலசப்பாக்கத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது ஏழு சப்த கரைகண்ட தலங்களில் இரண்டாவது தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் ‘வன்னீஸ்வரர்’ ஆவார். பர்வத மலை அடிவாரத்தில் அண்ணாமலையாரின் பாதம் பட்ட இடம் என்று கருதப்படுகிறது. கடவுளின் பாதம் பட்ட மலையடி என்ற பொருளில் கடவுளடி என்று வழங்கிய இவ்வூர் நாளடைவில் கடலாடி என்று மருவியுள்ளது. தொன்மைமிக்க ஆலயம்.[1][2]

மாம்பாக்கம்[தொகு]

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், கலசப்பாக்கத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் மாம்பாக்கம் ஆகும். இத்தலத்தின் மூலவரும் 'கரைகண்டீசுவரர்' ஆவார். இது ஏழு சப்த கரைகண்ட தலங்களில் மூன்றாவது தலம் ஆகும். இக்கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இங்குள்ள கல்வெட்டுகள் பதிவு செய்துள்ளன. ஒரு சமயம் மகாவிஷ்ணு அமுதம் நிறைந்த கலசத்தை பூமிக்கு எடுத்துவந்து அதனையே சிவனாக எண்ணி வழிபட்டு வந்தாராம். தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் கலசம் அடித்துச் செல்லப்பட்டது. வெள்ளத்தோடு போன கலசம் நிலைபெற்ற இடமே கலசப்பாக்கம் என்று ஒரு தொன்மக்கதை குறிப்பிடுகிறது.[1][2]

தென்மகாதேவமங்கலம்[தொகு]

சப்த கரை கண்ட தலங்களுள் நான்காவது தலமான தென்மகாதேவ மங்கலம் போளூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தென்மாதிமங்கலம் என்று திரிவு பெற்ற இத்தலத்தின் மூலவர் ‘மத்திய கரைகண்டேஸ்வரர்’ என்று பெயர் பெற்றுள்ளார். கோவிலில் இராஜகோபுரம் இல்லை. எனினும் இரண்டு பிரகாரங்களுடன் கூடிய பெரியகோவில் இது எனலாம். இது ஏழு சப்த கரைகண்ட தலங்களில் நான்காவது தலம் ஆகும்.[1][2]

எலத்தூர்[தொகு]

எலத்தூர் :திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். சப்த கரை கண்ட தலங்களுள் ஐந்தாவது தலமான எலத்தூர் கோவிலின் மூலவரும் கரைகண்டேசுவரர் ஆவார். சோழர்களால் கட்டப்பட்டு விஜயநகர மன்னர்களால் விரிவாக்கம் பெற்ற இக்கோவிலின் மூலவர் இலிங்க வடிவில் சிறு பாணத்துடன் காட்சி தருகிறார்.[1][2]

பூண்டி[தொகு]

பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம், போளூரிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். ஆறாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். மூலவர் கரைகண்டேசுவரர் பதினாறு பட்டைகளுடன் கூடிய சோடச இலிங்க வடிவில் காட்சி தருகிறார். இந்தச் சோழர்கள் காலத்துக் கோவிலில் இராஜகோபுரம் இல்லை. இரண்டு அடியார்கள் அகத்தியரின் கோபத்தால் சாபம் பெற்று நரியாகி இத்தலத்து ஈசனை போற்றி வணங்கியதால் சாபம் நீங்கி இன்புற்றதாக ஒரு தொன்மக்கதை குறிப்பிடுகிறது. ஆலயம் செல்லும் வழியில் காணப்படும் இரண்டு நரிவடிவ கற்சிலைகள் இக்கதையினை மெய்ப்பிக்கும் விதமாக நிறுவப்பட்டிருக்கலாம்.[1][2]

குருவிமலை[தொகு]

குருவிமலை திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். ஏழாவது சப்த கரை கண்ட தலம் இதுவாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோவிலின் மூலவர் கரைகண்டேசுவரர் ஆவார். மிகவும் சிதலமடைந்து உருத்தெரியாமல் போன இக்கோவில் தற்போது மேற்கொள்ளப்பட்ட பெருமுயற்சியால் நிலைபெற்றுள்ளது [2]

மேற்கோள்கள்[தொகு]