காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் பராசரேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பராசரேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பராசரேசுவரர்.

காஞ்சிபுரம் பராசரேசுவரர் கோயில் (பராசரேசம்) என்று அறியப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும். மேலும் பராசரர் வேள்வியொன்றை செய்து இறையருளால் அரக்கர்களை அழித்தாதாக கூறப்படும் இக்கோயில் பற்றிய குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகிறது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: பராசரேசுவரர்.
  • வழிபட்டோர்: பராசரர்

தல வரலாறு[தொகு]

வசிட்ட முனிவரின் மீதுள்ள பகையினால் விசுவாமித்திரர் சுதாசன் என்பவனை ஏவி, வசிட்டருடைய நூறு புதல்வர்களையும் விழுங்கும்படி செய்தார். அவ்வேளையில் வசிட்டரின் மூத்த மகனான சத்தி முனிவரின் மனைவி அதிர்சந்தினி கருவுற்றிருந்தாள். தன் கணவன் விழுங்கப்பட்டமையால், அவள் துயரம் தாளாது தன் வயிற்றை கைகளால் அறைந்து கருவை சிதைக்க முற்பட்டபோது. இச்செயலை கண்டு கலக்கமுற்ற வசிட்ட முனிவர் அவளை தடுத்தார். அவ்வேளையில் அங்கே திருமால் தோன்றி, சிவடித்து அன்பும் பக்தியுமுடைய, அனைத்து நூல்களையும் கற்றறிந்த அறிவிற் சிறந்த ஒரு மகன் இபோதே பிறப்பான் என்றருளினார். அவ்வாறே குழந்தையும் பிறந்தது. அக்குழந்தைக்கு பாராசர் என பெயரிட்டு வளர்த்தனர். தன் தாய் மூலமாக தனது தந்தைக்கும் ஏனையோர்க்கும் ஏற்பட்டதையறிந்த பராசரர், வசிட்டரின் ஆலோசனைப்படி காஞ்சிக்கு வந்து தனது பெயரில் சிவலிங்கம் தாபித்து வழிபட்டார். இவ்வழிபாட்டில் சிவபெருமான் மகிழ்ந்து காட்சி தந்து, பாராசரின் தந்தையாகிய சத்தி முனிவரை காண அருள்செய்தார். மேலும் பாராசர் வேள்வி ஒன்றை உருவாக்கி இறையருளால் அரக்கர்களை அடியோடழித்து கோபந்தணிந்த நிலையில் சிவபெருமானை வழிபட்டு வந்தாரென்பது இத்தல வரலாறாகும். பாராசர் பிரதிஷ்டை செய்த அச்சிவலிங்கமே பராசரேசம் எனப்படுகிறது.[2]

தல விளக்கம்[தொகு]

பராசரேசம், வசிட்டர் மாட்டுத் தீராப் பகைகொண்ட விசுவாமித்திரர், வசிட்டர் சாபமேற்று அரக்கனாகிய சுதாசன் என்னும் அரசனைத் தூண்ட அவன் வசிட்டர் புதல்வர்களாகிய சத்தி முதலாம் நூற்றுவரையும் விழுங்கினன். கேள்வியுற்ற வசிட்டர் மனைவி அருந்ததியோடும் வருந்திப் புத்திர சோகத்தால் உயிரைவிடத் துணிந்து மலைமேல் ஏறி வீழ்ந்தனர். பூமாதேவி தாங்கிப் பிழைப்பித்தனள்.

வசிட்டர் மூத்த மகனாகிய சத்தியின் மனைவி கருப்பம் சிதையுமாறு வயிற்றில் அடித்துக் கொண்டனள். ‘சந்ததியை அழிக்காதே’ என்னும் வசிட்டர் ஆணைக் கஞ்சிய வழிக் கருவில் இருக்கும் குழவியின் அழுகுரல் கேட்டது.

அப்பொழுது திருமால் எதிரெழுந்தருளி ‘அறிவான் மிக்கு என்னை ஒப்பவனாய்ச் சிவபிரானிடத்து மெய்யன்புடையனாய்க் குலந்தழைக்க மகனுக்கு மகன் இப்பொழுதே தோன்றுவன்’ என்றருளி மறைந்தனர்.

சத்தி மனைவியாகிய அதிர்சந்தி மகப்பெற்றுச் சடங்குகளுடன் இளம் பிறைபோல் வளர வளர்க்கும் நாளில் அன்னை மடியிலிருந்த குழவியாகிய பராசரர் தன் தாயை நோக்கி ‘மங்கல மின்றி இருப்ப தென்னை’? என் தந்தை எங்கே என வினவினர். வசிட்டர் முதலானோர் வருந்தி யழுமாறு ‘தந்தை முதலானோரை அரக்கன் விழுங்கினன்’ என்றனள் தாய். ‘உலகை விழுங்குவேன்’ என்ற பெயரனை நோக்கி ‘உலகம் என் செய்யும்? அரக்கர் குலத்தை வேரொடும் களையச் சிவபூசனையைத் தனக்கு ஒத்ததும் உயர்ந்ததும் இல்லாத காஞ்சியில் ஓர் நாள் செய்யினும் திருவருள் வாய்க்கப் பெறும்’ என்னும் வசிட்டர் மொழியைச் சிரமேற் கொண்டு காஞ்சியை நண்ணிக் கம்பா நதியில் மூழ்கித் திருவேகம்பரை வணங்கி மஞ்சள் நதிக்கரையில் மணிகண்டேசத்திற்கு வடமேற்கில் ‘பராசரேசர்’ எனச் சிவலிங்கம் நிறீஇப் போற்றி வழிபட்டனர் பராசரர். காட்சி தந்த சிவபிரானார் ‘மைந்தனே நின் பூசனையால் எம்மை அடைந்து உன்னைக் காணப் போந்த நின் தந்தையைக் காண்க. ஓர் யாகம் செய்து அதில் அசுரர்களை நீறு செய்க. இந்தச் சிவலிங்கத்தில் என்றும் வாழ்வோம்’ என்றருளி மறைந்தனர்.

அங்ஙனமே வேள்வியால் அரக்கர் பலரை அழிவு செய்து முனிவர் உரையால் முனிவு தீர்ந்து வாழ்ந்தனர் பராசரர். இத்தலம் செட்டி கோயில் என விளக்கம் பெற்றுக் காந்திரோடில் உள்ளது.[3]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தில் விஷ்ணுகாஞ்சி என்றழைக்கப்படும், சிறிய காஞ்சிபுரத்தின் மேற்கு பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலையின் 2-வது கிலோமீட்டர் தொலைவிலுள்ள அடிசன் பேட்டையின் காந்தி ரோடில் வழக்கறுதீசர் கோயிலின் உட்பிரகாரத்தில் தனிச்சந்நிதியாக இத்தலமுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008|சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2|14.பராசேரசப் படலம் 764 - 791
  2. tamilvu.org|சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த|காஞ்சிப் புராணம்|பராசரேசப் படலம் 235 - 242
  3. tamilvu.org|காஞ்சிப் புராணம்|திருத்தல விளக்கம்|பராசரேசம்|பக்கம்: 810
  4. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-13.

புற இணைப்புகள்[தொகு]