உள்ளடக்கத்துக்குச் செல்

காஞ்சிப் புராணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிப் புராணம் காஞ்சித் தலத்தைச் சிறப்பித்துக் கூறும் புராண நூலாகும். [1] இந்நூலாசிரியர் சிவஞான முனிவராவார். [2]வடமொழியில் உள்ள காஞ்சிமான்மியங்களைக் கருவாகக் கொண்டு சிவஞானமுனிவர் விரிவாக இந்நூலினை எழுதியுள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களின் தொகை 2742 ஆகும். சேக்கிழாரின் பெரியபுராணம் போன்றே இப்புராணமும் தமிழில் புராணத்தின் பெருமையை உயர்த்தியுள்ளது.

இந்நூலில் காஞ்சியிலுள்ள எழுபதுக்கும் மேற்பட்ட தலங்களின் சிறப்புக்கள் கூறப்பட்டுள்ளன. சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்னும் கோட்பாட்டைக் குறிக்கும் இந்நூல் திருமாலின் பத்து அவதாரங்களையும், அவர் கோயில் கொண்ட இடங்களையும் குறிப்பிட்டுள்ளது. சைவசித்தாந்தக் கருத்துக்களை மிக எளிமையா முனிவர் பல இடங்களிற் சொல்லிச் செல்கின்றார். சிவஞானபோதத்திலுள்ளவாறே முப்பொருளுண்மையை அழகாகக் கூறப்பட்டுள்ளது. இப்புராணத்தின் தழுவக்குழைந்த படலம், இறைவி, இறைவனை வழிபடும் முறையைக் கூறுமுகமாகப் பூசனை முறைகளை முனிவர் விளக்கியுள்ளார். இறைவி வழிபடுங்கால் இறைவன் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தத், தாம் தோற்றுவித்து வழிபடும் இறையுருவை வெள்ளம் அடித்துச் சென்று விடுமோ, என்னும் அச்சத்தால் அதனைக் தழுவிக்கொள்கிறாள். அதனால் வளைத்தழும்பும், முலைத்தழும்பும் பட இறைவன் குழைந்து காட்சி தருகின்றான்.

இப்புராணத்தின் இறுதிப் பகுதியில் மக்கள் பின் பற்ற வேண்டிய ஒழுக்கங்களும் பதிபுண்ணியம், பசுபுண்ணியம் என்ற இரண்டிலும் பதி புண்ணியம் எவ்வாறு சிறந்தது என்பதும் விளக்கப்படுகின்றது. மேலும் இப்பகுதியில் இறைவனின் உருவத்திருமேனிகள் இருபத்திநான்கின் இயல்புகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்று உண்டு.

ஆதாரங்கள்[தொகு]

  1. ஏகாம்பரநாதர் திருக்கோயில் kamakoti.org
  2. 3.1 சைவ இலக்கியம் tamilvu.org

வெளி இணைப்புகள்[தொகு]

சிவஞான சுவாமிகள் அருளிச் செய்த காஞ்சிப் புராணம் tamilvu.org

"https://ta.wikipedia.org/w/index.php?title=காஞ்சிப்_புராணம்&oldid=3836045" இலிருந்து மீள்விக்கப்பட்டது