காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஞ்சிபுரம் அபிராமேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அபிராமேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அபிராமேசுவரர்.

காஞ்சிபுரம் அபிராமேசுவரர் கோயில் (அபிராமேசம்) என்று வழங்கப்படும் இது, காஞ்சியிலுள்ள சிவக்கோயில்களில் ஒன்றாகும் . மேலும், மூலத்தானத்தில் சிவலிங்க வடிவாக அருள்புரியும் சுயம்பு லிங்க மூர்த்தமாகவும், சிறு திருமேனி எனினும் அழகுறக் காட்சிதரும் அபிராமேசுவரர் எழுந்தருளியதோடு, முகப்பில் கணபதியும், வள்ளி-தெய்வானை உடனான முருகனும் எழுந்தருளியுள்ள இக்கோவில் குறிப்புகள், காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டுள்ளது.[1]

இறைவர், வழிபட்டோர்[தொகு]

  • இறைவர்: அபிராமேஸ்வரர்.
  • வழிபட்டோர்: விஷ்ணு.

தல வரலாறு[தொகு]

மாவலி (மகாபலி) சக்கரவர்த்தியின் கொட்டத்தை அடக்கவும், தேவர்களின் குறைகளை தீர்க்கவும் ஸ்ரீமன் நாராயணன் வாமன வடிவமாக காஞ்சிக்கு வருகைபுரிந்து, ஒரு சிவலிங்கம் பிரதிட்டை செய்து அபிராமம் எனும் திருநாமம் சூட்டி வழிப்பட்டார். மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு அவன் வலிமையை அழித்து அவனை பாதாளத்தில் அழுத்தியதாலும், தடுக்க வந்த சுக்கிரனின் கண்பார்வையை பறித்ததாலும் மீண்டும் காஞ்சிக்கு வந்து, வாமன குண்டம் எனும் தீர்த்தம் அமைத்து அபிராமேசுவரரை பூசித்தார். அபிராமேசரை வழிபட்டு அவருக்கு உலகளந்த கோலத்தை மகிழ்ச்சியுடன் காட்டி, மீண்டும் வணங்கிச் சென்றார் என்பது தலவரலாறாகும்.[2]

தல விளக்கம்[தொகு]

அபிராமேசம் என்பதில் விளங்குவது, திருமால் இந்திரனுக்கு அருளுதற்பொருட்டுக் காசிபர் புதல்வராய் வாமனராகத் தோன்றி அபிராமேசரை நிறுவிப் போற்றி அருளைப்பெற்று மாவலி என்னும் அசுரர் தலைவன் வேள்விச் சாலையை அடுத்து மூன்றடி நிலம் அவனிடம் இரந்துபெற்றுத் தடுத்த சுக்கிரன் கண்ணைக் கெடுத்தனர். பின்பு, மாவலி ஆட்சியுட்பட்ட விண்ணையும் மண்ணையும் ஈரடி அளவையாற்கொண்டு மூன்றாமடிக்கு மாவலி தலையில் வைத்து அவனைப் பாதாளத்தழுத்தித் தேவர்கோன் துயரைத் தீர்த்தனர். மீண்டு வந்த திருமால் ‘வாமன குண்டம்’ என்னும் தீர்த்தம் தொட்டு நீராடி அபிராமேசரை வணங்கி உலகளந்த பேருரு (திருவிக்கிரமவடி)வை அவர்க்குக் காட்டி அருள்பெற்று ‘உலகளந்தபெருமாள்’ என்னும் திருப்பெயருடன் விளங்குகின்றனர். ‘அபிராமேசர்’ உலகளந்தார் வீதியில் சங்குபாணி விநாயகர்க்கு வலப்புறத்தே கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளனர்.[3]

அமைவிடம்[தொகு]

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரம் நடுப்பகுதியில் (பெரிய காஞ்சிபுரம் (சிவகாஞ்சி) உலகளந்த பெருமாள் கோவில் தெருவில், சங்குபாணி விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள, காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சி காமாட்சியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008 | காஞ்சிப் புராணம் | 54. அபிராேமசப்படலம் 1765-1774
  2. templesinsouthindia | அருள்மிகு அபிராமேஸ்வரர் கோயில் காஞ்சி
  3. www.tamilvu.org | திருத்தல விளக்கம் | அபிராமேசம் | பக்கம்: 818.
  4. "shaivam.org | காஞ்சி சிவத் தலங்கள் | (அபிராமேசம்) அபிராமேஸ்வரர் கோயில்". Archived from the original on 2008-03-31. பார்க்கப்பட்ட நாள் 2008-04-05.

புற இணைப்புகள்[தொகு]