காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஞ்சிபுரம் சத்ததானத் தலங்கள் என அறியப்பட்ட இக்கோயில்கள், காஞ்சியில் செய்யும் வழிபாடுகளும், தர்மங்களும் பன்மடங்கு பலன்தரக் கூடியவை என்பதை பிரம்மனின் அறிவுரைப்படி அறிந்த சப்தரிசிகளான அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர், கௌதமர், வசிட்டர், பிருகு ஆகியோர், வியாச சாந்தலீசுவரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் பெயர்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர். அவ்வாறு அவர்களால் அமைக்கப்பட்ட ஏழு தலங்களும் சப்ததான தலங்கள் என அழைக்கப்படுகின்றன.[1]

இத்தலகளின் விளக்கங்கள்[தொகு]

சத்ததானம் (ஏழிடம்), முன்னாளில் அத்திரி, குச்சன், வசிட்டன், பிருகு, கௌதமர், காசிபர், அங்கிரா என்னும் முனிவர்கள் எழுவரும் இமயமலையில் தவத்தால் பிரமனைக் கண்டு, பேரறிவாளர் பெறுதற் குரிய முத்தியை அறிவாற் குறைந்தவரும் பெறுதற் குபாயம் யாதென வினாவினர்.

பிரமன் அதற்கு விடைபகர்வான்: தருமம் ஒன்றே இறைவன் திருவுள்ளத்தை மகிழ்வித்து முத்தியை நல்குவிக்கும். அது இருவகைப்படும். ஒன்று சிவதருமம் எனவும் மற்றொன்று பசு தருமம் எனப்படும். இவை முறையே சிவபுண்ணியம் பசு புண்ணியம் எனவும் கூறப்பெறும். உலக நல்வினையாகிய வேள்வி முதலியன தம்தம் பயன்களைக் கொடுத்து அழிந்துபோம். உணவு உண்ட அளவில் பசி தீர்ந்து பின் பசி உண்டாம். சிவ புண்ணியமோ பயனையும் கொடுக்கும் பின் மேன்மேற் செலவிற் கேதுவாய் அழியாது நின்று மெய்யறிவையும் விளைத்து முத்தியை நல்கும். எங்ஙனமெனின், அமிழ்தம் பிற உணவு போலன்றி உண்ட வழிப் பசி தீர்த்தலும் அல்லாமல் பின் பசி தோன்றாதவாறும் நிற்கும்.

அத்தகு சிவபுண்ணியம் ஆவன சிவலிங்கத்தைத் தாபித்துப் பூசித்தலும், சிவனடியாரை உண்டி முதலியவற்றால் உபசரித்தலும். இச் சிவபுண்ணியங்கள் இடவிசேடத்தால் சிவதலங்களிற் செய்வுழி ஏனைய இடத்தினும் பயன் கோடிஆகும். அத்தலங்களினும் மிக்க [[காஞ்சிபுரம்|காஞ்சியிற் செய்தால் பயன் எண்ணிலி கோடி ஆகும் எனத் தெருட்டினன்.

முனிவரர் நான்முகன் மொழிவழியே காஞ்சியை நண்ணிச் சிவகங்கையில் முழுகித் திருவேகம்பரைத் தொழுது மஞ்சள் நதிக்கரையில் எழுவரும் தத்தம் பெயரால் சிவலிங்கம் நிறுவிப் போற்றுகையில் பெருமான் காட்சி தந்து ‘வைவச்சுத மனுவந்தரத்தில் நீவிர் ஏழ்முனி வரராமின், முடிவில் முத்தியையும் வழங்குவோம்’ ஏழிடங்களில் வணங்குவோர் வினைப் பிணிப்பின் நீங்கி இம்மை மறுமை இன்புடன் வீட்டினைத் தலைப்படுவர் என அருளி மறைந்தனர். இத்தலங்கள் சின்ன காஞ்சிபுரம் (விஷ்ணு காஞ்சிபுரம்) கண்ணப்பன் தெருப் புளியந் தோப்பிலுள்ளன (அக்காலப்படி).[2]

காஞ்சிபுரம் அங்கீராரீசர் கோயில் (அங்கீரசம்)[தொகு]

காஞ்சிபுரம் அங்கீரசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அங்கீரசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அங்கீராரீஸ்வரர்

காஞ்சிபுரம் அங்கீராரீசர் கோயில் (அங்கீரசம்) எனப்படும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்தத்தான தலங்களில் முதலாவது தலமாகும். மற்றும் அங்கிரா முனிவர் தாபித்து வழிபட்டமையால் இத்தலம் அங்கீரசம் என பெயர்பெற்றது. மேலும், இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

மேற்சொன்ன சப்த (ஏழு) ரிஷிகளும், காஞ்சியில் செய்யும் வழிபாடுகள், தருமங்கள் அனைத்தும் ஒன்றுக்கு பலமடங்காகப் பலன்தர வல்லவை என்பதை பிரமனின் அறிவுரைப்படி அறிந்து, காஞ்சி - திருவேகம்ப சிவகங்கையில் நீராடி, வியாச சாந்தாலீஸ்வரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் திருப்பெயர்களில் சிவலிங்கம் தாபித்து - தொழுது பேறுபெற்றதாக இத்தல வரலாறு கூறுகிறது.

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத் தலைநகரமான காஞ்சிபுரத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள சிறிய காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் விஷ்ணு காஞ்சியில்; (அக் காலப்படி) கண்ணப்பன் தெருப் புளியந் தோப்பிலுள்ள சாந்தலீசுவரர் கோயிலுக்கு அருகில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சுமார் 2 கிலோமீட்டரில் உள்ள வெங்குடி பேருந்து நிறுத்தத்திலிருந்து தென்திசையில் பச்சையப்பன் மகளிர் கல்லூரியை கடந்து சென்றால் இக்கோயிலை அடையலாம்.[3]

காஞ்சிபுரம் அத்திரீசர் கோயில் (அத்திரீசம் - குச்சேசம்)[தொகு]

காஞ்சிபுரம் அத்திரீசம் / குச்சேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் அத்திரீசம் / குச்சேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அத்திரீஸ்வரர்

அத்திரீசம் உடன் குச்சேசம் (சப்த ஸ்தானத் தலம் - 2, 3) எனும் இரு சிவலிங்க மூர்த்திகளில் - ஒன்று ஆவுடையாருனும், மற்றொன்று சிறிய பாணவடிவிலும் உள்ள இரு சிவலிங்கங்களும் ஒரே கருவறையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். இது காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் இரண்டு மற்றும் மூன்றாவது தலமாகும். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர் வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

காஞ்சியில் செய்யும் வழிபாடுகளும், தர்மங்களும் பல மடங்கு பலன்தரக் கூடியவை என்பதை பிரம்மனின் அறிவுரைப்படி அறிந்த சப்தரிசிகளான அங்கிரா, அத்திரி, காசிபர், குச்சர், கௌதமர், வசிட்டர், பிருகு ஆகியோர், வியாச சாந்தலீசுவரர் கோயிலருகில் தனித்தனியே தத்தம் பெயர்களில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டனர். அவ்வாறு அவர்களால் அமைக்கப்பட்ட ஏழு தலங்களும் சப்ததான தலங்கள் என அழைக்கப்படுகின்றன. அத்திரிமுனிவரும், குச்சமுனிவரும் என இருமுனிவர்களால் தாபித்து வழிபட்டமையால் இத்தலம் அத்திரீசம் - குச்சேசம் என வழங்கப்படுகிறது.

அமைவிடம்[தொகு]

இந்தியாவின் தென்கடை மாநில தமிழ்நாட்டின் வடக்கோடி மாவட்டங்களில் ஒன்றான மாவட்ட தலைநகர் காஞ்சியின் கிழக்குப் பிராந்திய விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் சிறிய காஞ்சிபுரம் பகுதியில் அமைந்துள்ள அத்திரீசம் - குச்சேசம் எனும் சாந்தலீசுவரர் தலம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பச்சையப்பா மகளிர் கல்லூரிக்கு செல்லும் சாலையில் சென்றால் இக்கோயிலை அடையலாம்.[4]

காஞ்சிபுரம் காசிபேசர் கோயில் (காசிபேசம்)[தொகு]

காஞ்சிபுரம் காசிபேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் காசிபேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:காசிபேஸ்வரர்.

காசிபேசம் (சப்த ஸ்தானத் தலம் 4) எனும் இது, காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் நான்காவது தலமாகும். மேலும், இக்கோயிலில் சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளதாக அறியப்பட்ட இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

காசிப முனிவர் காஞ்சியில், தங்கியிருந்து சிவபூசை செய்தும், சிவனை நோக்கி தியானம் செய்தும், பல தர்மகாரியங்களில் ஈடுபட்டும் இவ்விறைவனை வழிபட்டு பேறு பெற்றார் என்பது தல வரலாறாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சியின் கிழக்குப் பிராந்திய விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் சிறிய காஞ்சிபுரம் பகுதியில் காசிபேசம் எனும் தலம் அமைந்துள்ளது. மேலும், தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரிக்கு அருகாமையிலுள்ள வேகவதி ஆற்றங்கரையம்மன் கோயில் வளாகத்தில் இடப்புறம் தனி சிறு கோயிலாக உள்ளது.[5]

காஞ்சிபுரம் வசிட்டேசுவரர் கோயில் (வசிட்டேசம்)[தொகு]

காஞ்சிபுரம் வசிட்டேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் வசிட்டேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:வசிட்டேஸ்வரர்.

வசிட்டேசம் (சப்த ஸ்தானத் தலம் 5) எனுமிது, காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் ஐந்தாவது தலமாகும். மேலும், இவ்விறைவர் வசிட்டர் வழிப்பட்ட திருமூர்த்தியாக உள்ள இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

வசிட்ட முனிவர் காஞ்சியில், தங்கியிருந்து இவ்விறைவனை வழிபட்டமையால் இம்மூர்த்தியை வசிட்டேசுவரர் என்றும், இச்சிவலிங்கம் வெடித்துப் பின்பு கூடியதால், வெடித்து கூடிய வசிட்டேசர் என்றும் அழைக்கப்படுவது தல வரலாறாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

மாவட்டத்தின் தலைநகரம் காஞ்சியின் கிழக்குப் பிராந்திய விஷ்ணு காஞ்சி என்றழைக்கப்படும் சிறிய காஞ்சிபுரம் பகுதியில் வசிட்டேசம் எனும் தலம் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பச்சையப்பா மகளிர் கல்லூரியிலிருந்து மேலும் சற்றுத்தள்ளி, வேகவதி ஆற்றின் கரையிலுள்ள விசாய சாந்தலீசுவரர் கோயில் எதிர்ப்புற குளக்கரையின் தென்புலத்தில் காணப்படுகிறது.[6]

காஞ்சிபுரம் பார்க்கவேசுவரர் கோயில் (பார்க்கவேசம்)[தொகு]

காஞ்சிபுரம் பார்க்கவேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் பார்க்கவேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பார்க்கவேஸ்வரர்.

பார்க்கவேசம் (சப்த ஸ்தானத் தலம் 6) என அறிவது, காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் ஆறாவது தலமாகும். மேலும், இவ்விறைவர் பிருகு முனிவர் வழிப்பட்ட திருமூர்த்தியாவார். இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

பிருகு முனிவர் காஞ்சியில், இவ்விறைவனை வழிபட்டமையால் இம்மூர்த்தியை பார்க்கவேசுவரர் என்றும்,பார்க்கீஸ்வரர் என்றும் அழைக்கப்படுவது தல வரலாறாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகர் காஞ்சியின் தென்புலத்தில் உத்திரமேரூர் செல்லும் சாலையில் ஓரிக்கை அரசு நகர் பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றை சற்றுத்தள்ளி பார்க்கவேசுவரர் எனப்படும் இக்கோயில் அமைந்துள்ளது.[7]

காஞ்சிபுரம் கெளதமேசுவரர் கோயில் (கெளதமேசம்)[தொகு]

காஞ்சிபுரம் கெளதமேசம்.
பெயர்
பெயர்:காஞ்சிபுரம் கெளதமேசம்.
அமைவிடம்
ஊர்:காஞ்சிபுரம்
மாவட்டம்:காஞ்சிபுரம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:கெளதமேஸ்வரர்.

கெளதமேசம் (சப்த ஸ்தானத் தலம் 7) காஞ்சிபுரத்திலுள்ள சிவ சப்ததான தலங்களில் எழாவது தலமாகும். மேலும் சத்ததான தலங்களின் கடைதலமாகவும் இவ்விறைவர் கௌதம முனிவர் வழிப்பட்ட திருமூர்த்தியாகவும் காணப்படும், இத்தலம் பற்றிய குறிப்புகள் காஞ்சிப் புராணத்தில் தனிப்படலமாகச் சொல்லப்பட்டு காணப்படுகின்றன.

இறைவர், வழிபட்டோர்[தொகு]

தல வரலாறு[தொகு]

கௌதம முனிவர் காஞ்சியில், இவ்விறைவனை வழிபட்டமையால் இம்மூர்த்தியை கெள்தமேசுவரர் என அழைக்கப்படுவது தல வரலாறாக உள்ளது.

அமைவிடம்[தொகு]

மாவட்டத்தின் தலைநகரான காஞ்சியின் தென்புலத்தில் (கீழ்ரோடு என்றழைக்கப்படும்) உத்திரமேரூர் சாலையில் அரசு நகர் வெளிங்கப்பட்டரை அருகில் அரசமரத் தெருவில் இத்தலம் அமைந்துள்ளது. இது, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 77 கிலோமீட்டர் தொலைவிலும், காஞ்சிபுரம் பேருந்துநிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், வேகவதி ஆற்றின் முற்பகுதியில் கெளதமேசுவரர் கோயில் அமைந்துள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Project Madurai, 1998-2008 | சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப் புராணம் - பகுதி 2 | சத்த தானப்படலம் 751 - 763
  2. tamilvu.org|திருத்தல விளக்கம்|சத்ததானம்|பக்கம்: 809 - 810
  3. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|அங்கீரசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  4. "shaivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|அத்திரீசம்-குச்சேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  5. "Shivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|காசிபேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  6. "Shivam.org|காஞ்சி சிவத் தலங்கள்|வசிட்டேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  7. "Shaivam.org|காஞ்சி சிவத்தலங்கள்|பார்க்கவேசம்". Archived from the original on 2015-06-03. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.
  8. "Shaivam.org|காஞ்சி சிவத்தலங்கள்|கெளதமேசம்". Archived from the original on 2018-02-06. பார்க்கப்பட்ட நாள் 2016-02-18.

புற இணைப்புகள்[தொகு]