ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
சக்தி பீடங்களில் ஒன்றாக விளங்கும் புகழ்பெற்ற ஹிங்குலாஜ் (ஹிங்ராஜ்) மாதாவின் ஆலயம், பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கராச்சி நகரிலிருந்து கிட்டத்தட்ட 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு ஹிங்குலாஜ் மாதா கோவிலை முஸ்லீம்கள் நானி கி மந்திர் அல்லது பீபி நானி என்கிறார்கள்.[1] சிந்தி மொழியில் ஹிங்குலி என்றால், முன் வகிட்டுக் குங்குமப் பொட்டு அல்லது செந்தூரம் என்று பொருள். அன்னையின் வகிட்டுக் குங்குமம் வைக்கும் உச்சந்தலை (பிரம்மராந்திரம்) இப்பகுதியில் விழுந்து சக்தி பீடம் ஆனதால்தான் இப்புனித இடத்துக்கு ஹிங்குலாஜ் என்று பெயர் வந்ததாம். இந்த மகாசக்தி பீடேஸ்வரியின் திருநாமம் கோடரீ. இங்கே காவல் தெய்வமாக விளங்கும் இறைவன் (பைரவர்), பீமலோசனர்.[2]
ஹிங்குலாஜ் மாதா நானி கி மந்திர் | |
---|---|
![]() ஹிங்குலாஜ் மாதா | |
ஆள்கூறுகள்: | 25.0°30′50″N 65.0°30′55″E / 25.51389°N 65.51528°Eஆள்கூறுகள்: 25.0°30′50″N 65.0°30′55″E / 25.51389°N 65.51528°E |
அமைவிடம் | |
நாடு: | பாகிஸ்தான் |
மாநிலம்: | பலூசிஸ்தான் |
மாவட்டம்: | லாஸ்பெலா மாவட்டம் |
அமைவு: | ஹிங்குலாஜ் |
கோயில் தகவல்கள் |
ஹிங்குலாஜ் மாதாவிற்கு பல இடங்களில் பல கோவில்கள் இருந்தாலும் அவளின் முக்கியக் கோவில் பாகிஸ்தானின் ஹிங்கோல் மலை மீதுள்ள புகழ்பெற்ற நானி மந்திர் ஆகும். உலகெங்கிலும் இருந்து தேவியின் பக்தர்கள் இங்கு வந்து அவளைப் பூஜிக்கிறார்கள்.
ஹிங்குலாஜ் மாதா கோவில் பற்றிய வரலாற்றுத் தகவல்கள்[தொகு]
பாகிஸ்தான் நாடு பிரிக்கப்படுவதற்கு முன், தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்த, வருடம் முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்கு வந்து சென்றுள்ளனர்.[3]
இந்து மதத்தின் சைவத்தில் ஒரு பிரிவாக உள்ள நாத் எனும் மதத்தினர், இங்கே ஏராளமானோர் இருந்துள்ளனர். இன்றும் நாத் யோகிகள் பலரை அங்கே காண முடிகிறது. உஜ்ஜைனி ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஒருவர் நாத் சம்பிரதாயத்தில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டார் என்று கூறப்படுகிறது. நாத் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் சாதுக்களை கான்படா யோகிகள் என்று அழைக்கின்றனர். கான் என்றால் இந்தியில் காது. படா என்றால் கிழிந்த என்று பொருள். இவர்கள் துறவறம் செல்வதற்கு முன், இவர்களின் இரு காதுகளிலும் ஓர் அங்குல நீளத்தில் நீண்ட துளை இடப்படும். அத்துளையில் வெள்ளித் தகட்டால் செய்யப்பட்ட வளையங்களை அணிந்த இந்த சந்நியாசிகளை, அங்கே நடக்கும் பெருந்திருவிழாக்களில் கூட்டம் கூட்டமாகக் காணலாம். ஹிங்குலாஜ் மாதா நோய்களைக் குணமாக்குபவளாகவும் கற்பைக் காப்பவளாகவும் வணங்கப்படுகிறாள். இவள் குஜராத்தின் சத்திரிய வம்சத்தவரின் குலதெய்வமாவாள்.
ஹிங்குலாஜ் மாதா கோவில் பற்றிய புராணத் தகவல்கள்[தொகு]
தந்திர சூடாமணியில் முதலாவது சக்தி பீடமாகக் கூறப்பட்டுள்ள இந்த ஆலயத்தை ராமனும் சீதையும் இலக்குவனும் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்ததாக தல வரலாறு கூறுகிறது. மேலும் மஹாபாரதத்திலும் இக்கோவில் பற்றிக் கூறப்பட்டுள்ளது.[4]
பரசுராமர் காலத்தில் தற்போதைய சிந்துப் பகுதியை ரத்னசேன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அப்போது கிட்டதட்ட பரசுராமரின் சபதம் முடியும் காலம் வந்து விட்டது. இந்த ரத்னசேன் என்பவன் சூரிய குல அரசன். அவனுக்கு ஐந்து மனைவிகள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் சந்திரமுகி, பத்மினி, பத்மா, சுகுமாரி மற்றும் குசாவதி என்பனவாகும். அவர்களின் மகன்கள் முறையே ஜெய்சேன், பிந்துமான், விஷால், சந்திரசால் மற்றும் பரத் ஆகியோராவர். இவர்கள் அனைவரும் பரசுராமர் சிந்துப் பகுதியை நோக்கி வருகிறார் என்று செய்தியறிந்து கவலையுடனும் அச்சத்துடனும் இருந்தனர். அதனால் சரஸ்வதி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்திருந்த ததீசி முனிவரிடம் இவர்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர். ரிஷிகளின் ஆஸ்ரம எல்லைக்குள் போரிடக் கூடாதென்று விதியிருந்ததால் பரசுராமர் அங்கு செல்லவில்லை.[5]
இவ்வாறிருக்க ஒருநாள் ரத்னசேன் மன்னன் காட்டிற்கு வேட்டையாடச் சென்ற போது ஆஸ்ரம எல்லையை அறியாமல் கடந்து விட அதை உணர்ந்த பரசுராமர் தன் கோடரியால் அவன் சிரம் கொய்தார். அரசன் வெகு நேரமாகியும் ஆஸ்ரமம் வந்து சேராததால் கவலையடைந்த மனைவிகளும் மகன்களும் காட்டில் தேடிய போது அவன் உடல் கிடைக்க அனைவரும் கதறியழுதனர். அவ்வுடலை எடுத்துக் கொண்டு ஆஸ்ரமம் வந்தனர். மனைவிகள் ஐவரும் தன் கணவன் சிதையிலேயே உடன்கட்டையேறி மாண்டனர். அரசனின் ஐந்து மக்களையும் ததீசி முனிவர் பாதுகாத்தார். பரசுராமர் வந்து பார்த்த போது அந்த ஐவருக்கும் பிராமணர் போல் வேடமிட்டு வேதங்கள் மந்திரங்கள் முதலிய பல பயிற்சிகளை அளித்திருந்தார். அதனால் பரசுராமர் அவர்களை அடையாளம் காணாது சென்றார்.[6]
பரசுராமர் சென்ற பிறகு ததீசி முனிவர் ஜெய்சேனுக்கும் அவன் தம்பிகளுக்கும் பாதுகாப்பிற்காக ஹிங்குலா தேவி மந்திரத்தை உபதேசித்தார். ॐ हिंगुले परम हिंगुले अमृत रूपिणी तनुशक्ति मनः शिवे श्री हिंगुलाय नमः स्वाहा (ஓம் ஹிங்குலே பரம் ஹிங்குலே அம்ருத் ரூபிணீ தனுசக்தி மன: சிவே ஸ்ரீ ஹிங்குலாய் நம: ஸ்வாஹா) என்பதே அந்த மந்திரமாகும்.[7]
பிறகு தன் தம்பிகளுடன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற ஜெய்சேன் ஹிங்குலா தேவி மந்திரத்தை பாராயணம் செய்து தேவியின் அனுக்ரகம் பெற்று ஆட்சி செய்தான். இதனால் அவனை அடையாளம் கண்ட பரசுராமர் அவனை அழிக்க எண்ணி விரைந்தார். அப்போது அங்கு தோன்றிய ஹிங்குலா தேவி ஜெய்சேன் நல்லுள்ளம் படைத்தவனென்றும் அவன் தன் பக்தனென்றும் கூறி பரசுராமரைத் தடுத்தாள். அதனால் பரசுராமர் கோபம் தணிந்து தேவியை வணங்கித் திரும்பிச் சென்றார். ததீசி முனிவரிடம் ப்ராம்மண வேடத்தில் இருந்ததால் ஜெய்சேன் ப்ரம்மகுல க்ஷத்ரியன் என்று அழைக்கப்பட்டான். இதனால் இவள் ப்ரம்மகுல க்ஷத்ரியர்களின் குலதெய்வமானாள்.[8]
முன்னொரு காலத்தில் தற்போது கோவில் இருக்கும் இப்பகுதியில் ஹிங்கோலி என்ற ஒரு பிரிவினர் இருந்தனர். அவர்களின் அரசனாக விச்சதர் என்ற மன்னன் ஆட்சி செய்தானாம். அவனுக்கு ஹிங்குல் மற்றும் சுந்தர் என்ற இரு மகன்கள் இருந்தனர். இளவரசன் சுந்தரன் அண்டை நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் பலரைக் கொன்று பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்தான். இதனால் அப்பகுதி மக்கள் சிவனிடம் தங்கள் குறைகளை முறையிட்டனர். அதனால் சிவன் விநாயகனை அனுப்பி சுந்தரனை சம்ஹாரம் செய்ய வைத்தார்.[9]
ஹிங்குல் தன் சகோதரன் இறப்பிற்கு பழிவாங்க நினைத்தான். அதனால் பல வருடங்கள் தவம் செய்து மூவுலகத்திலும் உள்ள எந்த உயிர்களாலும் தனக்கு மரணம் நிகழக் கூடாதென்றும் சூரிய ஒளி புக இயலாத இடத்தில்தான் தன் உயிர் போக வேண்டுமென்றும் வரம் பெற்றான். இதனால் அனைவரையும் கொடுமைப்படுத்தி பெண்களின் கற்பையும் களங்கப்படுத்தினான். இச்சமயத்தில் ஹிங்கோலி மக்கள் பவானி மாதாவின் மீது பக்தி செலுத்தி வழிபட்டு வந்தனர். அவர்கள் அரசனின் தவறான எண்ணத்திலிருந்து தங்கள் பெண்களைக் காக்க தேவியிடம் உதவி கோரிப் ப்ரார்த்தித்தனர்.
அப்போது ஒருநாள் பவானி மாதாவானவள் அழகிய பெண்ணுருவெடுத்து அரசன் அமர்ந்திருந்த தோட்டத்தில் தோன்றினாள். அப்போது அவன் தேவியின் அழகில் மயங்கி அவளைப் பின்தொடர்ந்தான். தற்போது ஹிங்குலாஜ் மாதா கோவிலருகே உள்ள காளி கோவிலருகில் வந்த உடனே தேவி தன் உருவத்தை மாற்றி கோர வடிவெடுத்தாள். இந்தக் கோலத்தைப் பார்த்ததும் அரசன் பயத்தில் தன் கண்களை மூடி பின் மீண்டும் மெல்லத் திறந்து பார்த்தான். தேவி தற்போது பழையபடி அழகிய உருவில் காட்சியளித்தாள். அதனால் அரசன் மீண்டும் அவளைத் தொடர்ந்தான். தற்போது கோவிலின் ஹிங்குலாஜ் மாதா சிலை உள்ள இடத்திற்கு வந்ததும் தேவி திடீரென மறைந்து போனாள். பின்தொடர்ந்து வந்தவன் தேவியைக் காணாது திரும்பினான். பிறகு மீண்டும் ஒருமுறை சென்று பார்க்கலாமென்று நினைத்து அங்கு சென்று பார்த்தான். அப்போது தேவி தன் எட்டுக் கரங்களிலும் வாள், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி சிவந்த கோபமான கண்களுடன் நின்றிருந்தாள். அந்த இடம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது. வாங்கிய வரத்தின்படி தான் இறக்கும் நேரம் வந்ததையறிந்தவன் தேவியிடம் தன்னை மன்னிக்கும்படி உயிர்ப்பிச்சை வேண்டினான். அப்போது தேவி அவனிடம், ”நீ ஒரு அரசனாயிருந்து உன் நாட்டையும் நாட்டின் பெண்களையும் மதிக்கத் தவறி விட்டாய்; மேலும் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டாய்; நீ செய்த மற்ற தவறுகளுக்காக உன்னை மன்னிக்கலாம்; ஆனால் அப்பாவிப் பெண்கள் கற்பைக் களங்கப்படுத்தியதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்; அதனால் நீ இப்போதே கொல்லப்பட வேண்டியவனாகிறாய்” என்று கூறினாள். அரசன் மீண்டும் இறுதியாகக் கெஞ்சினான்.
தேவியானவள் வாழ்வைத் தவிர வேறு ஏதாவது கேள் என்றாள். அவன் தேவியிடம் அதே இடத்தில் சிலை வடிவில் தனது பெயரிலேயே என்றும் காட்சியளிக்கும்படி வேண்டினான். இந்த இடமும் தன் பெயரிலேயே வழங்கப்பட வேண்டுமென்றும் யாரொருவர் இந்த இடத்தில் தேவியை உண்மையான பக்தியுடன் வணங்குகிறார்களோ அவருக்கு மீண்டும் பிறவாத வரமருள வேண்டுமென வேண்டினான். மேலும் மனந்திருந்தி நல்லெண்ணத்துடன் இங்கு வருவோர் நல்லவரோ கெட்டவரோ நீ அவர்களுக்கு உதவ வேண்டும் என்றான். அவன் வேண்டியவாறே வரமளித்து அவனை அழித்த அன்னை அவ்விடத்திலேயே என்றும் நீங்காது அமர்ந்தாள்.
அதனால் இங்கு வந்து வணங்கினால் நிச்சயம் தேவியின் அருளால் மோக்ஷம் கிட்டும் என்பது நம்பிக்கை. இதனால் இந்துக்களின் வழிபாட்டிடங்களில் இக்கோவில் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்று இங்கு யாத்திரை செல்வது அவசியமாகிறது. பெரும்பாலும் இக்கோவிலுக்கு முஸ்லீம்களே வருகிறார்கள் என்பது வியப்பான செய்தி.
இன்னொரு கதையும் கர்ண பரம்பரையாகக் கூறப்படுகிறது. இந்தியாவின் ஒரு குக்கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்து வந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தனர். ஒருவன் துணி தைப்பவனாகவும், ஒருவன் போர்வீரனாகவும், மற்றொருவன் பொற்கொல்லனாகவும் இருந்தனர்.[10] அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்னையை பூஜித்து அவளின் ஆசி பெற்று தம் வேலையைச் செய்து வந்தனர். சகோதரர்கள் மூவரும் அவரவர் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.
ஒருநாள் இரவு தங்களுள் யார் சிறந்தவர் என்றும் யார் அதிகமாக சம்பாதிக்கிறார்கள் என்றும் விவாதித்தனர். பிறகு யார் அதிகம் சம்பாதித்துத் தேவிக்குத் திருப்பணி செய்கிறார்களோ அவர்தான் தேவிக்குப் பிடித்தமானவர் என்று பொற்கொல்லனும் துணி தைப்பவனும் கூறினர். அவர்களுள் க்ஷத்ரியன் மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. அவனை மற்ற இருவரும் அவமதித்தனர்.[11]
அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்பினான். மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் தேவி தோன்றினாள். யாருக்கு என் கையிலுள்ள குங்குமத்தை முதலில் வைக்கிறேனோ அவனே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன் என்று சொன்னாள்.[12]
சொன்னவுடன் தேவி தனக்குத்தான் குங்குமம் வைக்க வேண்டுமென்று துணி தைப்பவன் கைகால் அலம்பச் சென்றான். பொற்கொல்லன் பூப்பறிக்கச் சென்றான். ஆனால் க்ஷத்ரியன் தன் மேல் தேவிக்கு கருணை பிறக்காதென்று நினைத்து அப்படியே நின்றான். ஆனால் தேவி அவனை நோக்கி வந்து குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தாள். அப்போதுதான் தேவி யாரிடமும் பக்தியைத் தவிர வேறொன்றையும் எதிர்பார்ப்பதில்லை என்று அவன் உணர்ந்தான். பிறகு பொற்கொல்லனுக்கும் அதற்கடுத்து துணி தைப்பவனுக்கும் குங்குமம் வைத்தாள். மூன்று சகோதரர்களும் தேவியின் ஆசி பெற்று நல்வாழ்வு வாழ்ந்தனர்.[13]
கோவில் அமைப்பு[தொகு]
அழகாகத் தோற்றமளிக்கும் ஹிங்கோல் நதிக்கரையிலுள்ள ஒரு மலைக்குகையில் ஹிங்லாஜ் பீடம் உள்ளது. இப்பீடத்தின் கருவறையை அடைய, உயரம் குறைவாகத் தென்படும் குகைவாயில் வழியாக ஊர்ந்துதான் செல்ல வேண்டும். அன்னைக்காக ஹோமம் நடத்தப்படும்போது, ஹோமத்தின் பூர்ணாஹூதியின் போது எழும் உயர்ந்த ஜுவாலையில், கோடாரீ அன்னையின் திருவுருவம் ஒரு நொடி நேரத்தில் சிலருக்குத் தென்படும் என்பார்கள். ஆனால், ஹிங்லாஜ் பீடத்துக் குகைக் கருவறையில், வருடம் முழுவதும் இடைவிடாமல் எரியும் தீ ஜுவாலையில், அன்னையின் திருவுருவத்தைக் காணலாம் என்கிறார்கள்.
அந்த குகையில் இரண்டு சுயம்பு வடிவங்கள் உள்ளன. இந்த சுயம்புவே ஹிங்குலாஜ் மாதாவின் வடிவமாகும். சுயம்பு வடிவத்தில் செந்தூரம் பூசப்பட்டிருக்கும். கோவில் அதிகாலை முதல் மாலையில் இருள் சூழும் நேரம் வரை திறந்திருக்கும். உலர் பழங்கள், இனிப்புகள், சிந்தூர் குங்குமம், தேங்காய்கள், வளையல்கள், சிவப்பு நிற சுந்தாதி துணிகள், அத்தர் மற்றும் அகர்பத்திகள் ஆகியன தேவிக்கு இங்கு பக்தர்களால் வழங்கப்படுகிறது.
ஹிங்குலாஜ் பயணத்தின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை[தொகு]
• முதலில் பயணத்திற்குத் தேவை கராச்சி மற்றும் பலூசிஸ்தான் விஸா ஆகும். பலூசிஸ்தான் தீவிரவாத அச்சுறுத்தல் நிறைந்த பகுதியென்பதால் அங்கு செல்ல தனி விஸா வேண்டும். மேலும் இங்கு கெடுபிடிகள் மிக அதிகம்.
• சென்னை, பெங்களூரு, மும்பை, அஹமதாபாத், ஹைதராபாத் மற்றும் டெல்லி போன்ற இடங்களிலிருந்து நேராக கராச்சி சென்றடைய விமானம் உள்ளது.
• டெல்லியிலிருந்து வாகா எல்லை வழியே லாகூரை அடைய பேருந்து வசதியும் உண்டு. சதா – இ – சர்ஹாத் (Sada - e - Sarhad) என்ற பேருந்து செல்கிறது. அங்கிருந்து கராச்சி செல்லலாம்.
• டெல்லியிலிருந்தும் அட்டரியிலிருந்தும் (Attari) லாகூர் செல்ல சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் (Samjhauta Express) என்ற ரயிலும் உள்ளது.
• பக்தர்கள் ஒவ்வொருவரும் கட்டாயமாக தங்கள் ஐ.டி. கார்டை (அடையாள அட்டை) கொண்டு வர வேண்டும்.
• சீதோஷ்ண நிலைக்குத் தகுந்த உடையணிதல் அவசியம்.
• பயணத்தின்போது விதிக்கப்படும் கடுமையான நிபந்தனைகளை பின்பற்றியே ஆக வேண்டும்.
• தீப்பற்றும் பொருட்கள் மற்றும் மது போன்ற போதைப் பொருட்களை எடுத்துவரக் கூடாது.
• கோவில் ஹிங்கோல் நேஷனல் பார்க்கில் உள்ளது என்பதால் சுற்றுப்புறத்தை மாசடையாமல் தூய்மையாக வைத்திருத்தல் அவசியம்.
நானி கா மந்திர்[தொகு]
இங்கு செல்ல யாத்ரிகர்களுக்கு பாகிஸ்தான் அரசு எல்லா சௌகரியங்களையும் செய்து இருக்கிறது. தவிர ஹிங்க்லாஜ் சேவா மண்டலி என்ற அமைப்பு உலகில் பல்வேறு இடங்களிலிருந்து வருடம் இருமுறை கொண்டாடப்படும் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லா உதவிகளையும் செய்து வருகிறது. இத்திருத்தலத்தை அங்கு இருக்கும் மக்கள் (முஸ்லிம் மதத்ததை சேர்ந்தவர்கள்) நானி கா மந்திர் (பாட்டியின் கோயில்) என அன்புடன் கூறுகிறார்கள். இத்தலம் அவர்கள் பாதுகாப்பில்தான் உள்ளது. நானி என்றால் இந்தியில் அம்மாவின் அம்மா (தாய்வழிப் பாட்டி) என்று அர்த்தம். அதாவது இந்த இடத்தில் தாய்க்கெல்லாம் தாயானவள் என்று பொருள்படுகிறது.
கோவிலைச் சுற்றியுள்ள மற்ற இடங்கள்[தொகு]
இங்கு கணேஷ் தேவா, காளி மாதா, குரு கோரக்நாத் கோவில்களும் குரு நானக் கரோவா, ராம் ஜரோக்கா பெத்தக் போன்ற இடங்களும் ப்ரஹம் குண்ட், தீர் குண்ட், மஹா காளி குண்ட், சோரோஷி பர்வத் மீதுள்ள அனீல் குண்ட், கரி நதி (அகோரி பூஜா) போன்ற தீர்த்தங்களும் உள்ளன.
கோவிலின் விசேச நாட்கள்[தொகு]
ஹிங்குலாஜ் மாதாவை பூஜிக்க செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் மிகவும் உகந்தவையாகக் கருதப்படுகின்றன. நவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் மாதம் வரும் நவராத்திரியின்போது நான்கு நாள் யாத்திரையாக பக்தர்களை அழைத்து வர ஸ்ரீ ஹிங்குலாஜ் சேவா மண்டலி (Shri Hinglaj Sewa Mandli) உதவுகிறது. சிலர் இங்கேயே தங்கி அன்னையை வணங்குகிறார்கள். சிலர் ஒருநாள் யாத்திரையாக வருகிறார்கள்.
பாகிஸ்தானின் கராச்சியில் எம்.ஏ.ஜின்னா (M.A.Jinnah Road) ரோட்டில் அல்லது முகமது அலி ஜின்னா ரோட்டில் உள்ள ஸ்வாமி நாராயண் மந்திரிலிருந்து வருடாவருடம் பாகிஸ்தான் இந்துக்களுக்கான ஹிங்குளாஜ் ஜாத்ரா (ஹிங்குளாஜ் யாத்திரை) தொடங்குகிறது.
வழித்தடம் மற்றும் சக்திபீடத்தைப் பற்றிய முக்கியத் தகவல்கள்[தொகு]
பாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா (las bela) அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை[14]
• புகழ்பெற்ற ஹிங்குளாஜ் யாத்திரை கராச்சி நகரில் (260 கி.மீ) இருந்து தொடங்குகிறது. கராச்சி – குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீ சென்று ஜீரோ பாய்ண்ட் என்ற இடத்தை அடைந்து மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன் வழியாகச் சென்று பௌஜி கேம்ப் (fauji camp) பகுதியை அடைய வேண்டும். இந்தப் பயணத்தின் கடைசி ஸ்டாப் “அஸப்புரா” சரை (asha pura sarai) என்பதாகும்.
• ஹிங்குளாஜ் யாத்திரை கடினமான பயணமாகும். அகோர் மற்றும் கூங்கி (goongi) என்ற இரு ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
• இந்த அகோர் ப்ரிட்ஜ் பாலத்திலிருந்து கோவில் 15 கி.மீ தொலைவிலுள்ளது. இந்த அகோர் பாலம் வரை செல்ல கராச்சியில் இருந்து தனியார் வாகனங்கள் உள்ளன. மேலும் கராச்சியின் (Inter-City Bus Terminal, Baldia Town, Karachi) பால்டியா டவுனில் உள்ள இண்டர் சிட்டி பஸ் டெர்மினலில் இருந்து அரசுப் பேருந்துகளும் உள்ளன.
• இந்த அகோர் ஆறு வரை செல்ல சிறந்த வழி தற்போது அரபிக்கடலை ஒட்டி போடப்பட்டுள்ள கோஸ்டல் ஹைவே ஆகும். கராச்சியிலிருந்து இந்த ரோட்டில் சென்றால் 2.5 அல்லது 3 மணி நேரத்தில் அகோர் ஆற்றை அடையலாம்.
• பிறகு அகோரிலிருந்து நடந்தே கோவிலை அடையலாம். அல்லது அகோர் கிராமத்திலிருந்து இருசக்கர வாகன வசதி உண்டு.
• ஹிங்குளாஜ் தெற்கு பலூசிஸ்தானில் கவாடருக்கு (gawadar) வடகிழக்கே சில மணி நேரப் பயணத்தொலைவில் உள்ளது.
ஹிங்குலாஜ்கர் கோவில்[தொகு]
மத்தியப் பிரதேசத்தில் மண்ட்சார் மாவட்டத்தில் பன்புராவில் உள்ள நவலி கிராமம் அருகேயுள்ள ஹிங்லாஜ்கர் கோட்டைக்கருகே இக்கோவில் உள்ளது. பாகிஸ்தானுக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து அன்னையை வழிபடுகிறார்கள்.
ஆனால் இது சக்தி பீடமல்ல. சக்தி பீடத்திற்கான மாற்றுத் தலமாகும். இது மண்ட்சார் (Mandsaur) நகரிலிருந்து 165 கி.மீ தொலைவிலும் பன்புரா (Bhanpura) நகரிலிருந்து 26 கி.மீ தொலைவிலும் உள்ளது. இது காந்திசாகர் சரணாலய (Gandhi Sagar Sanctuary) எல்லைக்குள் உள்ளது.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- www.shaktipeethas.org பரணிடப்பட்டது 2015-05-18 at the வந்தவழி இயந்திரம்
- www.shaktipith.com பரணிடப்பட்டது 2015-03-17 at the வந்தவழி இயந்திரம்
- அம்மனின் 51 சக்தி பீடங்கள் - தினமலர் கோயில்கள்
- யோகிகள் கூடும் சக்தி பீடம் காமாக்யா கோவில் - நக்கீரன்[தொடர்பிழந்த இணைப்பு]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-09-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-13 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ http://www.hinduofuniverse.com/hou/history-of-hinglaj-maa.html
- ↑ http://www.hinduofuniverse.com/hou/history-of-hinglaj-maa.html
- ↑ http://www.hinduofuniverse.com/hou/history-of-hinglaj-maa.html
- ↑ http://www.hinduofuniverse.com/hou/history-of-hinglaj-maa.html
- ↑ http://www.hinglajmata.com/story.htm
- ↑ http://www.vanzasocietywa.org/about-us
- ↑ http://www.vanzasocietywa.org/about-us
- ↑ http://www.vanzasocietywa.org/about-us
- ↑ http://www.vanzasocietywa.org/about-us
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2015-05-18 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-13 அன்று பார்க்கப்பட்டது.