உள்ளடக்கத்துக்குச் செல்

போக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போக்ரா, வங்காளதேசம்
Bogra ,Bangladesh
বগুড়া
போகுரா
போக்ரா சாத்மாதா (போக்ராவின் இதயம்)
போக்ரா சாத்மாதா (போக்ராவின் இதயம்)
அடைபெயர்(கள்): Bogra
நாடு வங்காளதேசம்
கோட்டம்இராச்சாகி கோட்டம்
மாவட்டம்போக்ரா மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்10.37 sq mi (26.86 km2)
ஏற்றம்
70 ft (20 m)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,66,930
நேர வலயம்ஒசநே+6 (வங்காளதேச நேரம்)
அஞ்சல் குறியீடு
5800
அழைப்புக் குறியீடு051
இணையதளம்www.bogra.gov.bd

போக்ரா (ஆங்கிலம்:Bogra வங்காளம்: বগুড়া) வங்காளதேசத்தில் உள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் இராச்சாகி கோட்டத்தில் அமைந்துள்ள போக்ரா மாவட்டத்தில் இருக்கிறது. இம்மாவட்டத்தின் முக்கிய வணிகமையமாக போக்ரா நகரம் திகழ்கிறது.

வடக்கு வங்காளதேசத்தின் நரம்பு மையம் போக்ரா என்று சிலர் இந்நகரத்தை விவரிப்பதும் உண்டு. இராச்சாகி கோட்டம் மற்றும் இரங்பூர் கோட்டம் ஆகியவற்றுக்கு போக்ரா நகரம் ஒரு பாலமாகவும் விளங்குகிறது. தோராயமாக 10.37 சதுரமைல் அல்லது 26.86 கிலோமீட்டர் 2 பரப்பளவு கொண்ட இந்நகரம் 21 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2,66,930 நபர்கள் இங்கு வாழ்வதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

வரலாறு[தொகு]

இந்திய நாட்டின் மாமன்னர் அசோகர் காலத்தில் இந்நகரம் வங்காளத்தின் மிகப் பழமையான நகரமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்காளத்தை வெற்றி கொண்ட மாமன்னர் போக்ரா நகரத்தை நிறுவினார். இந்நகரம் முன்னதாக புந்தரவர்தம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டு அக்டோபரில், தினாய்பூர் மாவட்டத்தின் கோராகாட் துணைமாவட்டத்திலுள்ள சுரா பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள குளக்கரையில் ஒரு கல்வெட்டு கண்டறியப்பட்டது. போக்ரா ஒரு பழைமையான நகரம் என்பதற்கு இக்கண்டுபிடிப்பு வலிமை சேர்க்கிறது. இக்கல்வெட்டு குப்தர் காலத்தைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.

வங்காளதேச விடுதலைப் போரின் போது இந்நகரிலும் கடுமையான போர் நடைபெற்றது. போக்ரா போர் என்று அழைக்கப்பட்ட இப்போரில் பிரிவு ஏழைச் சேர்ந்த வங்கதேசபடையின் கொரில்லா அலகுகள் பாக்கித்தான் படையுடன் வீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்றன.

புவியியல்[தொகு]

போக்ரா நகருக்கு சில மைல்கள் தொலைவில் உள்ள மகாசுதங்கார் கோட்டையின் மதில்சுவர்கள்

1821 ஆம் ஆண்டு முதன்முதலாக போக்ரா உருவாக்கப்பட்டது. நிர்வாக மாவட்டமான போக்ரா 1,359 சதுர மைல் அல்லது 3520 கிலோமீட்டர் 2 பரப்பளவைக் கொண்டிருந்தது.

பிரம்மபுத்திரா நதியின் பல்வேறு செல்வழிகளால் இம்மாவட்டத்தில் பாயும் முக்கியமான ஆறுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆறுகள் உள்ளூரில் கோனை, தாவ்கொபா மற்றும் யமுனை என்ற பெயர்களால் அழைக்கப்பட்டன. யமுனை ஆறு இம்மாவட்டக் கிழக்கு எல்லையின் ஒரு பகுதியாக உருவாகியுள்ளது. பிரம்மபுத்திராவும் அதனுடைய வழி ஆறுகளும் வங்காளி, கரடோயா, அட்ரை முதலிய சிற்றோடைகளுடன் சேர்ந்து போக்ரா நகரத்திற்கான வணிகப் பயன்பாடுகளுக்கு உதவுகின்றன.

வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் கரடோயா ஆறு 1911 ஆம் ஆண்டில் மாவட்டத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது. கிழக்குப் பகுதி நிலப்பகுப்பில் வளமான வண்டல் மண் செழித்திருந்தது, செழிப்பாக்குகின்ற வெள்ளம் பாயும் பகுதியாக இப்பகுதி அமைந்ததால் இங்கு சணல், எண்ணெய் வித்துகள், மோட்டா அரிசி போன்ற கனப்பயிர்கள் வளர்ந்தன. மாறாக மேற்குப் பகுதியில் காணப்படும் உயர் நிலத்து மண்ணில் நெற்பயிர் நன்கு விளைந்தது[1].

பொருளாதாரம்[தொகு]

2009 நகர்ப்புற திட்டமிடல் மேம்படுத்தப்பட்டதால் 2009 ஆம் ஆண்டு முதல் போக்ரா நகரின் உள்கட்டமைப்புகளில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. நகரச் சாலைகளை அகலப்படுத்தி மறுகட்டுமானம் செய்தல், தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துதல், நிலத்தடி எரிவாயு இணைப்புகளை உருவாக்குதல் போன்றவை இத்திட்டத்தில் அடங்கும்.

போக்ரா நகரில் சிவப்பு மிளகாய் உற்பத்தி ஒரு முக்கிய உள்ளுர் தொழிலாக நடைபெறுகிறது. போக்ரா நகரத்திற்குள்ளேயே பனிரெண்டு மையங்களுக்கு மேல் சிவப்பு மிளகாய் சேகரிப்பில் ஈடுபட்டு வர்த்தகம் செய்கின்றன[2].

போக்ரா நகரம் பெரும்பாலும் வங்கிகள் நகரம் என்று அழைக்கப்படுகிறது. நிகழ்நிலை வங்கி வசதிகள், கடன் அட்டைகள், பற்றட்டைகள் போன்ற நவீன வசதிகளுடன் வங்கிகள் இயங்குகின்றன. இந்நகரிலுள்ள கணிசமான வங்கிகள் அரசு வங்கிகளின் கிளைகளாகச் செயல்படுகின்றன. வங்காள வங்கி (மத்திய வங்கி), சோனாலி வங்கி, ரூபாலி வங்கி, சனதா வங்கி, இராச்சாகி கிருசி உன்னயன் வங்கி, வங்காள வளர்ச்சி வங்கி லிமிடெட், உத்தரா வங்கி லிமிடெட், அக்ரானி வங்கி போன்ற வங்கிகளின் கிளைகள் நன்கு விரிவாக்கப்பட்டுள்ளன. இவை தவிர புபாலி வங்கி, தேசிய வங்கி போன்ற சில தனியார் சிறப்பு வங்கிகளும் நகரில் இயங்குகின்றன.

போக்ரா, செர்பூர் சாலை
வங்காளதேச வங்கி மண்டல அலுவலகம்,செர்பூர் சாலை,போக்ரா

கூடுதலாக, போக்ரா நகரில் மென்பொருள், தொழில்நுட்பம், மற்றும் கணினி சேவை நிறுவனங்கள் பல காணப்படுகின்றன[3]. 2008 இல் பிரஞ்சு கிராமீன் குழு மற்றும் தனோன் குழு இரண்டும் கூட்டு சேர்ந்து போக்ராவில் கிராமீன் தனோன் என்ற பெயரில் செயல்படத் தொடங்கின[4].

விவசாயத் துறையில் 29.95%, விவசாயப் பொருட்கள் உற்பத்தித் தொழிலில் 12.53%, பொது வணிகத்தில் 18.11% வாடிக்கையாளர் சேவைத் தொழிலில் 15.62% போக்குவரத்துத் தொழில் 6.66% கூலித் தொழிலாளர் 2.2%, பிற தொழில்கள் 14.93% என்ற அளவில் போக்ரா நகர மக்கள் ஈடுபடுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன[5].

சுற்றுலா[தொகு]

மகாசுதங்கார், போக்ரா

வங்காளதேசத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகர தொல்பொருள் தளமான மகாசுதங்கார் போக்ராவில்தான் உள்ளது. இதே போல கிராம மகாசுதன் தளமும் போக்ரா மாவட்டத்திலுள்ள சிப்கானி தானாவில் உள்ளது. இங்கு பண்டைய புந்தரவர்தன் நகரத்தின் நிலப்பகுதி எச்சங்கள் காணப்படுகின்றன[6][7][8] . புத்த மதத்தினர், இசுலாமியர்கள், இந்துக்கள் அனைவரும் இப்பகுதியை புனிதத்தலமாக கருதுகின்றனர்[9].

மகாசுதங்கார் அருகிலேயே அமைந்துள்ள பேகுலூர் பாசோர்கார் இடமும் ஒரு பிரபலமான சுற்றுலா தளாமாகும். பிரித்தானியர் காலத்தில் நீல்குத்தி என்றழைக்கப்பட்ட நவாப் அரண்மனை, கெருவா பள்ளிவாசல் (செர்பூர் துணை மாவட்டம்), பாரா பள்ளிவாசல், சுல்தான் பால்கி சாவின் சமாதி, பஞ்சுபிர் சமாதி, கோகுல் மெட்த், பரசுராம் அரண்மனை, பாசு பிகாரா, பள்ளி உன்னயன் நிறுவனம், சவுதியா நகரப் பூங்கா, பிமர் யங்கிள், நவாப் பாரி அரண்மனை அருங்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, போர் நினைவு அருங்காட்சியகம் போன்ற பல்வேறு இடங்கள் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்க போக்ரா நகரில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Chisholm 1911, ப. 121.
  2. "Turnover goes up to Tk 100cr from Tk 5cr in just 5 years". The Daly Star. பார்க்கப்பட்ட நாள் 6 December 2009.
  3. Bogra Database, retrieved 7 December 2009, Bogra.info
  4. "French minister backs social business". The Daily Star. http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=117794. பார்த்த நாள்: 6 December 2009. 
  5. Chawdhury, Shagata (2012). "Bogra Sadar Upazila". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
  6. Hossain, Md. Mosharraf, Mahasthan: Anecdote to History, 2006, Preface, Dibyaprakash, 38/2 ka Bangla Bazar, Dhaka, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9844832454
  7. Brochure: Mahasthan – the earliest city-site of Bangladesh, published by the Department of Archaeology, Ministry of Cultural Affairs, Government of the People’s Republic of Bangladesh, 2003
  8. Majumdar, Dr. R.C., History of Ancient Bengal, First published 1971, Reprint 2005, p. 10, Tulshi Prakashani, Kolkata, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-89118-01-3.
  9. Khan, Ayub (2012). "Goku Medh". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.

புற இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
போக்ரா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போக்ரா&oldid=2698036" இலிருந்து மீள்விக்கப்பட்டது