உள்ளடக்கத்துக்குச் செல்

இலவங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[1] மிளகிற்கு அடுத்தாற்போல் வணிகத்தில் சிறப்பு வாய்ந்த மணமூட்டும் பயிர் இலவங்கம் ஆகும் கடக்களில் விற்பனைக்கும் கிடைக்கும். இலவங்கம் காற்றில் உலர்த்தப்பட்ட மலராத மொட்டுகளாகும். இதன் தாவரவியல் பெயர் யூஜினியா கேரியோ ஃபுல்லேட்டா என்பதாகும். இப்பயிர் மிர்ட்டேசி குடும்பத்தைச் சார்ந்தது. வணிகத்தில் இதை கிராம்பு என்றும் அழைக்கிறார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே கீழை நாடுகளில் இம்மணமூட்டும் பொருள் சிறப்பாக மதிக்கப்பட்டது. இலவங்க மரம் பச்சைப் பசேலென நடுத்தரமாக 40-45 அடி உயரம் வரை வளரும். மரத்தின் அடியில் இருந்து கிளைகள் சம இடைவெளிக்கு ஒன்றாக வளர்ந்தும் நுணியில் கிளைகள் சிறுத்தும் குறுகியும் கோபுரம் போல் காட்சியளிக்கும். இணையாக இருக்கும் இலைகளிலும் குச்சிகளிலும் ஒரு வித நறுமணம் வீசுகின்றது. தலைப்பகுதியில் பூக்கள் மலரும். கருச்சேர்க்கைக்குப் பின்னர் பூவின் கீழ்ப்பாகத்திலிருந்து ஒரு விதை கொண்ட காய் உருவாகும். இம்மரம் 75 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும். உலர்ந்த இலவங்கம் இனிப்பு காரப் பண்டங்களில் சேர்க்கப்படுகிறது. மண விழாக்களிலும் பண்டிகைக் காலங்களிலும் வெற்றிலையுடன் சுவைப்பதற்குப் பெரிதும் விரும்பப்படுகிறது. மருத்துவ துறையில் வளிம அகற்றியாகவும் மணமூட்டியாகவும் எழுச்சியூட்டியாகவும் பயன்படுகிறது. எளிதில் உணவை செரிக்கச் செய்யும் பண்புடையது. இலவங்க எண்ணெய் மருத்துவ துறையில் செரிமானத்திற்கும் கிருமிகளை ஒழிக்கவும், பற்பசை, வாய் கொப்பளிக்கும் நீர், வாசனைப் பொருள், சோப்பு முதலியன தயாரிக்கவும் பயன்படுகிறது. பூக்களின் காம்புகளிலிருந்தும் இலைகளிலிருந்தும் தயாரிக்கப்படும் ஒரு வித எண்ணெய் செயற்கை முறையில் வெணிலா என்ற வாசனைப் பொருள் தயாரிக்கப் பயன்படுகிறது.

  1. அறிவியல் களஞ்சியம்-தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 63-4, தொகுதி 4, மே 1988, பக்கம்-816. [[பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவங்கம்&oldid=4041116" இலிருந்து மீள்விக்கப்பட்டது