முதலாம் ஹரிஹரர்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
முதலாம் ஹரிஹரர் (கி.பி. 1336-1356) விஜயநகரப் பேரரசை நிறுவியவர் ஆவார்.[1] ஹக்கா சங்கம மரபைத் தொடங்கியவருமான பாவன சங்கமரின் மூத்த மகனாவார். சங்கம மரபு, விஜயநகரப் பேரரசை ஆண்ட நான்கு மரபுகளுள் முதலாவதாகும். ஆட்சிக்கு வந்த உடனேயே தற்காலக் கர்நாடகத்தின் மேற்குக் கரையோரத்தில் உள்ள பர்கூரு என்னுமிடத்தில் கோட்டை ஒன்றைக் கட்டினார். இவர் 1339 இல் அனந்த்பூர் மாவட்டத்திலுள்ள குட்டி (Gutti) என்னும் தனது தலைமையிடத்திலிருந்து இன்றைய கர்நாடகத்தின் வடக்குப் பகுதிகளை நிர்வகித்து வந்தது கல்வெட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது. இவர் தொடக்கத்தில், ஹொய்சால அரசின் வடக்குப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகத் தெரிகிறது. பின்னர் 1343 இல் ஹொய்சால அரசன் மூன்றாவது வீர பல்லாலனின் மறைவைத் தொடர்ந்து ஹொய்சாலம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.
இவர் காலத்துக் கன்னடக் கல்வெட்டுக்கள், இவரை, கர்நாடக வித்யா விலாஸ் (மிகுந்த அறிவும், திறமையும் கொண்டவர்), ஆங்ரயவிபாடா (எதிர் அரசர்களுக்குத் தீ போன்றவர்), உறுதிமொழிகளைக் காப்பாற்றாத நிலப்பிரபுக்களைத் தண்டிப்பவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார். இவருடைய தம்பிகளுள், புக்கா ராயன் பேரரசருக்கு இரண்டாவது நிலையில் இருந்தார். கம்பண்ண என்பவன் நெல்லூர் பகுதியையும், முட்டப்பா முலபாகலு பகுதியையும், மாரப்பா சந்திர குட்டியையும் நிர்வாகம் செய்து வந்தனர்.
இவருடைய தொடக்கப் போர்கள் மூலம், துங்கபத்திரை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவிக் கொண்டார். பின்னர் இவருடைய கட்டுப்பாடு படிப்படியாக, கொங்கண், மலபார் கரையோரங்களிலுள்ள சில பகுதிகளுக்கும் விரிவாக்கப்பட்டது. இக்காலத்தில், மதுரை சுல்தானுடன் நிகழ்ந்த போரில் ஹொய்சாலத்தின் கடைசி அரசன் மூன்றாவது வீர பல்லாலன் இறந்தார். இந்த வெற்றிடம் அப்பகுதியில் தனது கட்டுப்பாட்டை நிறுவுவதற்கு ஹரிஹரருக்கு வாய்ப்பாக அமைந்தது. முழு ஹொய்சால அரசும் ஹரிஹரரின் நேரடி ஆட்சியின்கீழ் வந்தது.