இரண்டாம் தேவ ராயன்
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
இரண்டாம் தேவ ராயன் விஜயநகரப் பேரரசின் ஒன்பதாவது பேரரசன். சங்கம மரபைச் சேர்ந்தவன். இம் மரபில் வந்த அரசர்களுள் மிகச் சிறந்தவன் இவனே எனலாம். இவனது தந்தையான வீரவிஜய புக்கா ராயனின் குறுகியகால ஆட்சியைத் தொடர்ந்து அரியணை ஏறியவன் தேவ ராயன். தந்தையைப் போலல்லாது, தேவ ராயன், திறமையானவனாயும், வெற்றிகரமான பேரரசனுமாக விளங்கினான்.
வெற்றிகள்
[தொகு]1432 இல் கொண்டவீடு கோட்டையைக் கைப்பற்றியதுடன், ராய்ச்சூர் ஆற்றுப் பகுதியில் சில பகுதிகளை இழந்தாலும், முதலாம் அஹ்மத் ஷாவின் படையெடுப்பை முறியடித்து முட்கல் (Mudgal) கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டான். ஒரிசாவின் கஜபதியை 1427, 1436, 1441 ஆகிய ஆண்டுகளில் மும்முறை தோற்கடித்தான். ரெட்டி அரசான ராஜமுந்திரியை முன்னைய நிலைக்குக் கொண்டுவந்தான். சுல்தான் அலாவுதீனுக்கு எதிராகப் போரிட்டு, கேரளாவுக்குள்ளும் முன்னேறினான். அங்கே, கிலான் (Quilon) அரசனையும் பிற தலைவர்களையும் தோற்கடித்தான். இலங்கை மீதும் படையெடுத்துப் பெரும் திறை பெற்றான். கோழிக்கோட்டு அரசனும், பர்மாவின் பெகு, தனசெரிம் ஆகியவற்றின் அரசர்களிடமிருந்தும் கூடத் திறை பெற்றான். இத் தகவல்கள் நூனிஸின் எழுத்துக்களிலிருந்து அறியவருகின்றது.
பாரசீகத்தின் தூதுவனாக 1443 இல் தென்னிந்தியாவுக்கு வந்த அப்துல் ரசாக் என்பவன், இரண்டாம் தேவ ராயன், ஒரிசாவிலிருந்து மலபார் வரையும், இலங்கையிலிருந்து குல்பர்கா வரையும் பேரரசை விரிவாக்கியதுடன், தென்னிந்தியாவின் பல துறைமுகங்களையும் கைப்பற்றி இருந்ததாகக் குறிப்பிடுகின்றான். இருந்தும், பாமினி சுல்தானகம் தொடர்பில் எவ்வித தீர்வும் கிடைக்காமல், தேவராயனின் ஆட்சிக்காலம் முழுவதும் இரு அரசுகளுக்கு இடையிலும் பகைமை தொடர்ந்து நிலவியது. பஹமானி அரசு மீதான படையெடுப்புக்கள் வெற்றியளிக்கவில்லை எனினும், 1426 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தாக்குதலால் பஹமானி அரசன் தனது தலைநகரத்தை பிதாருக்கு (Bidar) நகர்த்த வேண்டியதாயிற்று.
தேவ ராயனின் இறுதிக் காலத்தில் முழுத் தென்னிந்தியாவையும் கைப்பற்றுவதில் அவன் வெற்றியடைந்ததோடு அல்லாமல், பேரரசை அதன் வளமான பொற்காலம் ஒன்றை நோக்கிக் கொண்டு சென்றான். [1]
இரண்டாம் தேவ ராயனுக்குப் பின்னர் மல்லிகார்ஜுன ராயன் அரசனானான்.