செப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செம்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இந்த கட்டுரை செப்பு உலோகம் பற்றியது. பிற பயன்பாட்டுக்கு, காண்க செம்பு (பொருள்).
செப்பு
29Cu


Cu

Ag
நிக்கல்செப்புதுத்தநாகம்
தோற்றம்
சிவப்பு-ஆரஞ்சு உலோக மிளிர்வு

செப்பு (~4 செமீ அளவு)
பொதுப் பண்புகள்
பெயர், குறியீடு, எண் செப்பு, Cu, 29
உச்சரிப்பு /ˈkɒpər/
தனிம வகை தாண்டல் உலோகம்
நெடுங்குழு, கிடை வரிசை, குழு 114, d
நியம அணு நிறை
(அணுத்திணிவு)
63.546(3)
இலத்திரன் அமைப்பு [Ar] 3d10 4s1
2, 8, 18, 1
வரலாறு
கண்டுபிடிப்பு மத்திய கிழக்கு நாடுகள் (கிமு 9ஆம் ஆயிரமாண்டு)
இயற்பியற் பண்புகள்
நிலை திண்மம்
அடர்த்தி (அ.வெ.நிக்கு அருகில்) 8.96 g·cm−3
திரவத்தின் அடர்த்தி உ.நி.யில் 8.02 g·cm−3
உருகுநிலை 1357.77 K, 1084.62 °C, 1984.32 °F
கொதிநிலை 2835 K, 2562 °C, 4643 °F
உருகலின் வெப்ப ஆற்றல் 13.26 கி.யூல்·மோல்−1
வளிமமாக்கலின் வெப்ப ஆற்றல் 300.4 கி.யூல்·மோல்−1
வெப்பக் கொண்மை 24.440 யூல்.மோல்−1·K−1
ஆவி அழுத்தம்
P (Pa) 1 10 100 1 k 10 k 100 k
at T (K) 1509 1661 1850 2089 2404 2834
அணுப் பண்புகள்
ஒக்சியேற்ற நிலைகள் −2, +1, +2, +3, +4
((ஓரளவு கார ஆக்சைடு))
மின்னெதிர்த்தன்மை 1.90 (பாலிங் அளவையில்)
மின்மமாக்கும் ஆற்றல்
(மேலும்)
1வது: {{{1st ionization energy}}} kJ·mol−1
2வது: {{{2nd ionization energy}}} kJ·mol−1
3வது: {{{3rd ionization energy}}} kJ·mol−1
அணு ஆரம் 128 பிமீ
பங்கீட்டு ஆரை 132±4 pm
வான்டர் வாலின் ஆரை 140 பிமீ
பிற பண்புகள்
படிக அமைப்பு face-centered cubic
செப்பு has a face-centered cubic crystal structure
காந்த சீரமைவு காந்தவிலக்கம்
மின்கடத்துதிறன் (20 °C) 16.78Ω·m
வெப்ப கடத்துத் திறன் 401 W·m−1·K−1
வெப்ப விரிவு (25 °C) 16.5 µm·m−1·K−1
ஒலியின் வேகம் (மெல்லிய கம்பி) (அ.வெ.) (annealed)
3810 மீ.செ−1
யங் தகைமை 110–128 GPa
நழுவு தகைமை 48 GPa
பரும தகைமை 140 GPa
பாய்சான் விகிதம் 0.34
மோவின் கெட்டிமை
(Mohs hardness)
3.0
விக்கெர் கெட்டிமை 343–369 MPa
பிரிநெல் கெட்டிமை 235–878 MPa
CAS எண் 7440-50-8
மிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)
முதன்மைக் கட்டுரை: செப்பு இன் ஓரிடத்தான்
iso NA அரைவாழ்வு DM DE (MeV) DP
63Cu 69.15% 63Cu இது 34 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்
64Cu syn 12.700 h ε 64Ni
β 64Zn
65Cu 30.85% 65Cu இது 36 நொதுமிகளுடன் நிலையான ஓரிடத்தான்கள்
67Cu syn 61.83 h β 67Zn
·சா
செப்புத் துருவல்
செப்பு

செப்பு (Copper) எனப்படுவது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமம் ஆகும். இது செம்பு எனவும் தாமிரம் எனவும் அழைக்கப் படுகிறது. இது Cu என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 29 ஆகும். இந்த மாழையானது சிவந்த நிறத்தில் இருப்பதால் செம்பொன் என்றும் அழைக்கப் படும். இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செம்பைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். செம்பு இயற்கையில் ஒரு தனி உலோகமாகக் கிடைக்கிறது அதன் கனிமங்களிலிருந்து மிக எளிதாகப் பிரித்தெடுக்க முடியும்.

செம்பு தனித்த வடிவில் அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்திலும் ரஷ்யாவில் சில இடங்களிலும், ஆஸ்திரேலியாவின் தென் பகுதிகளிலும், பொலிவியா நாட்டிலும் கிடைக்கின்றது. உலோகங்கள் மற்றும் அலோகங்களுடன் செம்பு சேர்ந்து பல வகையான கனிமங்களாகவும் காணப்படுகின்றது. இந்தியாவில் பீகார் மாநிலத்தில் சிங்பம் மாவட்டத்தில் செம்பு கிடைக்கின்றது. இவற்றுள் முக்கியமானது குப்ரைட், மாலசைட், அசுரைட், சால்கோ பைரைட், டெனொரைட், போர்னைட் போன்றவைகளாகும் .

கந்தகக் கலப்பில்லாத செம்புக் கனிமத்துடன் கால்சியத்தைச் சேர்த்து அதிலிருந்து ஈரம் மற்றும் கார்பன் டை ஆக்சைடை அகற்றி சூட்டுலையில் கரியுடன் சேர்த்து ஆக்சிஜனிறக்கம் செய்து செம்பைப் பிரித்தெடுக்கலாம். கந்தகக் கலப்புள்ள செம்புக் கனிமத்தில் இரும்பு, ஆர்செனிக், மற்றும் கந்தகம் ஆகியவை வேற்றுப் பொருளாகக் கலந்துள்ளன என்பதால் இவற்றைத் தொடர் வழிமுறைகளினால் மட்டும் தூய்மையூட்டி செம்பைப் பிரித்தெடுக்க முடிகின்றது. தூய்மையற்ற செம்பை மின்னாற்பகுப்பு முறை மூலம் 99.99 % வரை தூய்மைப்படுத்தலாம். உயிரி வேதியியல் வழிமுறைகள் மூலம் சில வகைப் பாக்டீரியாக்களைக் கொண்டும் செம்புக் கழிவிலிருந்து செம்பை தனித்துப் பிரித்தெடுக்கலாம்.

பண்புகள்[தொகு]

இதன் வேதிக் குறியீடு Cu ஆகும். பழங்காலத்தில் உள்ள செம்புச் சுரங்கங்களில் மிகவும் புகழ்பெற்றது சைப்ரஸ்(Cyprus) தீவிலுள்ள சுரங்கமாகும். இதிலிருந்துதான் செம்பு என்ற பெயரே உருவானது. இலத்தீன் மொழியில் செம்பிற்கு குப்ரம்(Cuprum) என்று பெயர். இதன் அணுவெண் 29, அணு நிறை 63.54, அடர்த்தி 8920 கிகி /கமீ, உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 1356 K, 2853 K ஆகும். செம்பு செந்நிறமும், பளபளப்பும், உறுதியும் கொண்ட ஓர் உலோகம். இதை அடித்துத் தகடாகப் பயன்படுத்தவும் கம்பியாக நீட்டி உபயோகிக்கவும் செய்யலாம். தங்கம், வெள்ளிக்கு அடுத்தபடியாக உயரளவு வெப்பம் மற்றும் மின் கடத்தும் திறனை செம்பு பெற்றுள்ளது. வறண்ட காற்று செம்பைப் பாதிப்பதில்லை. ஆனால் ஈரமான காற்று வெளியில் அதன் பொலிவு மங்கிப் போகின்றது. இதற்குக் காரணம் கருமையான குப்ரிக் ஆக்சைடு ஆக்சிஜனேற்றத்தால் படிவதே ஆகும். இது பச்சை நிறத்தில் சுடர் விட்டு எரிகிறது, காற்றில் எரிவதில்லை, ஆனால் பழுக்கக் காய்ச்சிச் சூடான நிலையில், அது மெதுவாக ஆக்சிஜனேற்றம் பெறுகின்றது.

புளூரின், குளோரின் போன்ற வளிமங்கள் செம்பின் புறப்பரப்பைத் தாகுகின்றன. செம்பு ஹைட்ரஜனுடன் நேரடியாக இணைவதில்லை. குளிர்ந்த நிலையில் நீர்த்த மற்றும் அடர் கந்தக மற்றும் ஹைட்ரோ குளோரிக் அமிலங்கள் செம்பை அரிப்பதில்லை. காற்றின் முன்னிலையில் நீர்த்த கந்தக அமிலம் செம்பை மெதுவாக அரிக்கிறது. சூடான கந்தக அமிலத்தில் செம்பு விரைவாகக் கரைகிறது. அடர் மற்றும் நீர்த்த நைட்ரிக் அமிலத்திலும் செம்பு விரைவாகக் கரைகின்றது. மின்சாரத்தை நன்கு கடத்தும். வெப்பத்தையும் நன்கு கடத்தும்.

பயன்கள்[தொகு]

நாணயங்கள், சமையல் பத்திரங்கள், கொதிகலன்கள், மேற்கூரைகள், கப்பலின் அடிப்பகுதி, நீராவிக் குழாய்கள், மின்கம்பி, மின்வடம், மின்வாய், போன்றவை செய்ய செம்பு பயன்படுகின்றது. எளிதில் தீப்பற்றிக் கொள்ளும் ஆபத்தான வேதிப் பொருட்களோடு தொடர்புடைய கருவிகள் மற்றும் சாதனங்களுக்கு இரும்பைக் காட்டிலும் செம்பு நற்பயன் அளிக்கிறது. இரும்பைப் பயன்படுத்தும் போது உராய்வினால் ஏற்படும் தீப்பொறி உண்டாக்கும் விபத்து இதனால் தவிர்க்கப்படுகின்றது .

செம்பு அசிடேட் பிரகாசமான பச்சை வண்ணத்திற்குப் பயன் தருகின்றது. 'வோல்டாமானி' என்ற மின்னாற்பகுப்பு மின்கலங்களுக்கு செம்பு ஒரு முக்கிய மூலப் பொருளாகும். செம்பை முதல் நிலை மின்னாற்பூச்சாக இரும்புத் தகடுகளில் பூசுகின்றார்கள். மின் முலாம் பூச்சிற்கு மிகவும் அனுகூலமான மூலங்களில் ஒன்று செம்பு. செம்பு முலாம் பூச்சிற்கான மின்னாற்பகு நீர்மத்தை காரக் கரைசலாகவோ அல்லது அமிலக் கரைசலாகவோ வைத்துக் கொள்ளமுடியும்.

செம்பின் மின்கடத்துத் திறன் இரும்பை விட 5 மடங்கும், அலுமினியத்தை விட 1.5 மடங்கும், துத்தநாகத்தை விட 3 மடங்கும், டைட்டானியத்தை விட 35 மடங்கும் அதிகமுள்ளது.அதனால் செம்பு மின்துறை வளர்ச்சியின் நெம்புகோலாக விளங்குகின்றது. மாங்கனின், கான்ஸ்டன்டன் போன்ற செம்பின் சில கலப்பு உலோகங்கள் உயர் மின்தடை கொண்டுள்ளன. இவை மின்னுலை, மின்னடுப்பு போன்ற கருவிகளுக்கு மின் கம்பியாகப் பயன் தருகின்றது. மின் மாற்றிகள், மின் மோட்டார்கள், மின்னியற்றிகள், மின் காந்தங்கள் போன்றவைகளுக்கான வரிச் சுற்றுகளுக்கு செம்புக் கம்பி இணக்கமானது. செம்பின் மின்தடை குறைவாக இருப்பதால் வெப்ப இழப்பும் குறைந்து மின்சாரம் கணிசமாக மிச்சமாகின்றது. கருவிகளைக் குளிர்விக்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.

செம்பிலிருந்து பலதரப்பட்ட கலப்பு உலோகங்களைப் பெறலாம். செம்பும்(99-70%) டின்னும் (1-30%) கலந்த கலப்பு உலோகம் வெண்கலமாகும். இதில் சில சமயம் ஈயம் அல்லது துத்தநாகம் சேர்க்கப்படும். இது கடினமானதாகவும் எளிதில் வார்த்தெடுக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. அதனால் சுழல் வட்டுக்கள் (bearings), ஒருவழிச்செலுத்திகள் (Valve) இயந்திர உறுப்புக்கள், அணிகலன்கள் ,உலோக ஆடிகள், சிலைகள், கோயில் மணிகள் போன்றவை செய்யப் பயன்படுகின்றது. சிலிகானும் செம்பும் 20:80 என்ற வீதத்தில் கலந்த சிலிகான் வெண்கலம், அலுமினியமும் செம்பும் கலந்த அலுமினிய வெண்கலம் இவற்றில் சிறிதளவு வெள்ளீயத்தை சேர்த்து நாணயங்கள், உலோகச் சிலைகள் செய்யவும் பற்றவைப்புக்கான இடு பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இக் கலப்பு உலோகங்கள் விமானங்களுக்கான இயந்திரங்கள், சுழலிகளுக்கான விசிறிகள் போன்றவைகள் செய்யவும் பயன்படுகின்றன. பெல் கலப்பு உலோகம் பாஸ்பரஸ் வெண்கலம், துப்பாக்கி உலோகம் (Gun metal) ஜெர்மானிய வெள்ளி, பித்தளை போன்ற பல சிறப்புக் கலப்பு உலோகங்களிலும் செம்பு சேர்ந்துள்ளது. பித்தளையில் செம்பும் துத்தநாகமும் முறையே 60-80 % 40-20 % என்ற விகிதத்தில் இருக்கும். அதற்கேற்ப நிறமும் செம்பின் சிவப்பிலிருந்து பொன்னிற மஞ்சள் வரை மாற்றமிருக்கும். துத்தநாகத்தின் செறிவு தாழ்வாக இருந்தால் அதை ஆல்பாபித்தளை என்றும் அதிகமாக இருந்தால் அதை பீட்டாபித்தளை என்றும் கூறுவர். இது பட்டறைப் பயனுக்கு இணக்கமானது என்பதால் பாத்திரங்கள் செய்யப் பயன்படுகின்றது.

விலங்கினங்களுள் ஆக்டோபஸ், கணவாய் மீன், சிப்பிகள், நண்டுகள், நத்தைகள் போன்ற கடல் வாழ் உயிரினங்களின் இரத்தத்தில் செம்பு ஹிமோசையனின் (hemocyanin) எனும் நிறமியாக உள்ளது. இதில் செம்பு 0.33-0.38 % அடங்கியுள்ளது. ஹிமோகுளோபினில் இரும்பு எங்ஙனம் செயல்படுகின்றதோ அது போல இவற்றில் செம்புச் செயல்படுகின்றது. வளி மண்டலத்திலுள்ள ஆக்சிஜனுடன் சேரும் போது இந்த நிறமி நீல நிறம் பெறுகின்றது. இதனால் நத்தைகள் நீல நிற இரத்தம் கொண்டவை எனச் சொல்லப்படுகின்றன. உட்கவர்ந்த ஆக்சிஜனை உடலிலுள்ள திசுக்களுக்கு ஆற்றலாகக் கொடுத்த பின் அவற்றின் இரத்தம் நிறமற்றதாகி விடுகின்றது .

சராசரி மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு 0.005 கிராம் செம்புச் சத்து தேவை. செம்புச் சத்துக் குறைவினால் இரத்தச் சோகை, சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு. இதனால் பலர் செம்புக்கு மருத்துவ குணமுண்டு என்று சொல்வார்கள். சில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்ளும் செம்பு வேறுசில உயிரினங்களுக்கு ஒத்துக் கொள்வதில்லை. சுறா மீன்களுக்கு செம்பு சல்பேட்டுக்கள் தீங்கானது. இதை எதிர் சுறாப் பொருள் என்று குறிப்பிடுகின்றார்கள். கடலில் சிக்கிக் கொண்டவர்கள் சுறாக்களிடமிருந்து தப்பிக்க இவ்வேதிப் பொருளைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள்.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்பு&oldid=2146384" இருந்து மீள்விக்கப்பட்டது