உள்ளடக்கத்துக்குச் செல்

கற்காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கற்கால அம்புமுனை
உலகிலேயே மிகப் பழையதாகக் கருதப்படும் ஜப்பானிய ஜோமோன் மட்பாண்டம்.

கற்காலம் (ஒலிப்பு) என்பது, கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட பரந்த வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக் கொண்டு செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும், ஆயுதங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. எரிமலைப்பாறைக் கற்களும், மணற்கற்களும் அரைக்கும் கற்களாகப் பயன்பட்டன. மிகப் பிந்திய கற்காலத்தில் களிமண் போன்ற வண்டற் படிவுகளைக் கொண்டு மட்பாண்டங்கள் செய்யப்பட்டன.

இது, மனிதனிடைய கூர்ப்பில் (பரிணாமம்), முதன் முதலாகத் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பகுதியாகும். கிழக்கு ஆபிரிக்காவின் சமவெளிகளிலிருந்து மனிதர் உலகின் ஏனைய இடங்களுக்குப் பரவியதும் இக் காலப்பகுதியிலேயே. இது வேளாண்மை, விலங்கு வளர்ப்பு, செப்புத் தாதுக்களிலிருந்து செப்பின் உற்பத்தி என்பவற்றின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. இக்காலத்தில் மனிதர்கள் எழுத அறிந்திருக்கவில்லை என்பதால் எழுதப்பட்ட வரலாறு கிடையாது. எனவே இக்காலம் வரலாற்றுக்கு முந்திய காலம் எனப்படுகின்றது.

கற்காலம் (கல்லூழி) என்னும் சொல், இப் பரவலான காலப் பகுதியைக் குறிப்பதற்காக தொல்லியலாளர்களால் பயன்படுத்தப்படுகின்றது. அழியக்கூடிய பிற மென்மையான பொருட்களால் செய்யப்பட்டவற்றைக் காட்டிலும், கற்களால் செய்யப்பட்ட கருவிகள் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் அழியாமல் இருக்கின்றன. தொல்லியலில் பயன்படும் மூன்று கால முறையில் கற்காலமே முதல் காலமாகும்.

கற்காலத்தை முந்திய பகுதியாகவும், பிந்திய பகுதியாகவும் பிரிக்கவேண்டும் என 1851 ஆம் ஆண்டில் முதன் முதலாக முன்மொழிந்தவர் ஜென்ஸ் ஜேக்கப் வெர்சாயே என்பவராவார். இன்றும் பயன்பாட்டில் உள்ள, கற்காலத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கும் முறை ஜான் லுப்பொக் என்பவரால் 1865 ஆம் ஆண்டில், அவர் எழுதிய வரலாற்றுக்கு முந்திய காலங்கள் (Pre-historic Times) என்னும் அவரது நூலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம் மூன்று பிரிவுகளும் மேலும் சிறிய காலப்பகுதிகளாகப் பிரிக்கப்படுவதும் உண்டு. உண்மையில், வெவ்வேறு கற்காலப் பகுதிகள் தொடங்கி முடியும் காலங்கள், பிரதேசங்களையும், பண்பாடுகளையும் பொறுத்துப் பெருமளவுக்கு வேறுபடுகின்றன.

தொல்லியலில் கற்காலம்

[தொகு]
கற்காலத்தைச் சேர்ந்த தூண்டில்

இக் காலப் பகுதியின் எல்லைகள் தெளிவற்றவையும், சர்ச்சைக்கு உரியவையும், பிரதேசங்களைப் பொறுத்து மாறக்கூடியவையும் ஆகும். முழு மனித குலத்தையும் கணக்கில் எடுத்துக் கற்காலம் என்பது பற்றிப் பேச முடியும். சில குழுக்கள் உலோகக் காலத்துக்கு எப்போதுமே வளர்ச்சி அடைந்ததில்லை. தொழில்நுட்ப அடிப்படையில் வளர்ச்சி பெற்ற சமுதாயங்களோடு தொடர்பு ஏற்படும்வரை அவை கற்காலத்திலேயே இருந்து வந்தன. இருந்தாலும் இக்காலம் பொதுவாக மூன்று மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஆப்பிரிக்காவில் ஹோமினிட்டுகள் கருவிகளைச் செய்தபோது தொடங்கியதாக நம்பப்படுகிறது.

கல்லாலான தொல்பொருட்களே பல சமயங்களில் ஒரே எச்சங்களாக இன்றுவரை காணப்படுவதால் அக்காலங்களுக்கான தொல்லியல் ஆய்வில் கற்பகுப்பாய்வு முக்கியமானதும் சிறப்பானதுமாக அமைகின்றது. இது, கற்கருவிகளை அளப்பதன்மூலம் அவற்றின் வகை, தொழிற்பாடு, தொடர்பான தொழில்நுட்பம் என்பவற்றை முடிவு செய்வதை உள்ளடக்குகிறது.

சொல்லின் தற்காலப் பயன்பாடு

[தொகு]

இச் சொல் தொடர்பான முக்கியமான ஒரு பிரச்சினை, வரலாற்றுக்கு முந்திய கால மனித முன்னேற்றமும், காலப் பகுதியும் அக்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளைச் செய்யப் பயன்பட்ட பொருட்களைக் கொண்டே அளக்கப்படுகின்றன என்பதாகும். சமூக அமைப்பின் வகை, பயன்படுத்திய உணவு மூலங்கள், கடுமையான தட்பவெப்பச் சூழலுக்குத் தம்மை இசைவாக்கிக் கொண்டமை போன்றவை கருத்தில் எடுக்கப்படவில்லை. இது 19 ஆம் நூற்றாண்டில், மூன்று கால முறை உருவாக்கப்பட்ட போது இருந்த அறிவுநிலையின் விளைவு ஆகும். அக்காலத்தில் தொல்பொருட்களைக் கண்டுபிடிப்பதே தொல்லியல் அகழ்வாய்வுகளின் முக்கியமான நோக்கமாக இருந்தது. தற்காலத் தொல்லியல் நுட்பங்கள் பரந்த அளவிலான தகவல்களைப் பெறுவதை முதன்மைப் படுத்துகின்றன. இதனால், வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பான நமது அறிவு விரிவடைந்துள்ளதுடன், காலங்களுக்கு இடையேயான பிரிவுகள் நல்லமுறையில் உருவாகின்றன. இதனால், கற்காலம் போன்ற சொற்கள் பயனற்றுப் போகும் நிலை உருவாகி வருகிறது. மனித சமுதாயத்தில் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவந்த மாற்றங்கள் சிக்கலானவை என்பதையும்; அவை வேளாண்மையைக் கைக்கொண்டது, குடியேற்றங்களை அமைத்து நிலைத்து வாழப் பழகியமை, சமயம் போன்ற பல காரணிகளோடு தொடர்புபட்டவை என்பதையும் இப்போது நாம் அறிவோம். கருவிகளின் பயன்பாடு சமூகத்தின் செயற்பாடுகள் நம்பிக்கைகள் என்பவற்றைச் சுட்டும் ஒரு காரணி மட்டுமே.

இச் சொல் குறித்த இன்னொரு பிரச்சினை இது ஐரோப்பாவின் தொல்லியல் நாகரிகங்களை விளக்க எழுந்தது என்பதாகும். அமெரிக்கா, ஓசானியா போன்ற சில பகுதிகள் தொடர்பில், இச் சொற்களைப் பயன்படுத்துவது வசதிக் குறைவானது. இப் பகுதிகளில், வேளாண் மக்களும், வேடுவர் உணவு சேகரிப்போர் போன்றோரும் ஐரோப்பியரின் தொடர்பு ஏற்பட்ட காலம் வரை கருவிகள் செய்வதற்குக் கற்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். உலோக வேலை, இப்பகுதி மக்களின் வாழ்க்கை தொடர்பில் மிகவும் முக்கியத்துவம் குறைவான ஒன்று. இதனால் இப் பகுதிகளின் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வதற்கு வேறு வகையான பிரிவுகள் பயனுள்ளவை.

கற்காலத்தைத் தொடர்ந்து வருவது வழக்கமாக வெண்கலக்காலம் ஆகும். இக் காலத்தில் கருவிகள் செய்வதற்கு வெண்கலம் என்னும் உலோகம் பயன்பட்டது. வட ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெரும்பாலான சமுதாயங்கள் கற்காலத்துக்கு வெளியே வரத்தொடங்கிய காலம் கிமு 6000 தொடக்கம் கிமு 2500 வரையான காலப்பகுதியாகும். கீழ்சகாராப் பகுதி ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் கற்காலத்தைத் தொடர்ந்து நேரடியாகவே இரும்புக்காலம் உருவாகிவிட்டது. மையக் கிழக்குப் பகுதியிலும், தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் சிலவற்றிலும் கிமு 6000 ஆண்டுக் காலப்பகுதியில் கற்காலம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் பொதுவாக நம்பப்படுகின்றது. ஐரோப்பாவிலும், ஆசியாவின் எஞ்சிய பகுதிகளிலும் கற்காலம் முடிவுக்கு வந்தது ஏறத்தாழ கிமு 4000 ஆண்டுக் காலப் பகுதியிலாகும். தென்னமெரிக்காவைச் சேர்ந்த முன்-இன்காப் பண்பாடுகள் கிமு 2000 ஆண்டுகள் வரை கற்காலத்திலேயே இருந்தன. இதன் பின்னரே செப்பு, பொன் போன்ற உலோகங்கள் அறிமுகமாயின. ஆஸ்திரேலியாவில் கற்காலம் 17 ஆம் நூற்றாண்டுவரை நீடித்தது.

கற்காலப் பிரிவுகள்

[தொகு]

கற்காலம் 3 பகுதிகளாக வகுக்கப்படுகின்றது. இவை:

  1. பழைய கற்காலம்
  2. இடைக் கற்காலம்
  3. புதிய கற்காலம்

என்பனவாகும். புதிய தொல்லியல் கண்டுபிடிப்புக்கள் இடம்பெற்றபோது புதிய காலப்பகுதிகளும், துணைக் காலப்பகுதிகளும் சேர்க்கப்பட்டன. வெவ்வேறு இடங்களில் நிலைமைகளை விளக்குவதற்காகப் புதிய முறைகளும் உருவாக்கப்பட்டன. கூடிய நவீனமான காலப்பகுப்பு ஒன்று பழைய கற்காலத்திலிருந்து புதிய கற்காலம் வரை பின்வருமாறு அமைகின்றது.

பழைய கற்காலம்

[தொகு]

பழைய கற்காலம் கற்கருவிகளின் உருவாக்கத்தோடு தொடர்புள்ள வரலாற்றுக்கு முற்பட்ட காலம். இது மனிதர் இப்புவியில் வாழ்ந்த காலத்தின் பெரும்பகுதியை உள்ளடக்குகிறது (ஏறத்தாழ மனித வரலாற்றின் 99%). இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இக் காலம் தொடங்குகிறது. இது ஹோமோ ஹபிலிசுகள் போன்ற ஹொமினிட்டுகள் கற்கருவிகளை அறிமுகப்படுத்தியதில் இருந்து கிமு 10,000 ஆண்டளவில் வேளாண்மை அறிமுகப்படுத்தப்பட்டது வரை நீடித்தது. பழையகற்காலம் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளை உள்ளடக்கியது. இக் காலத்தில் மனிதனுடைய கூர்ப்பின் மீது தாக்கங்களை ஏற்படுத்திய பல பெரிய காலநிலை மாற்றங்கள் ஏற்பட்டன. இடைக்கற்காலத்தின் தொடக்கத்துடன் பழையகற்காலம் முடிவுற்றது.

குலக்குழுக்கள் எனப்படும் சிறு குழுக்களாக இயங்கிய பழையகற்கால மனிதர் தமது உணவை தாவரங்களைச் சேகரிப்பதன் மூலமும், விலங்குகளை வேட்டையாடுவதன் மூலமும் பெற்றனர். பழையகற்காலத்தில், மரம், எலும்பு முதலியவற்றாலான கருவிகளும் பயன்பட்டுவந்த போதிலும் அக்காலத்தின் சிறப்பியல்பாக உள்ளது கற்கருவிகளே. இவற்றுடன், தோல், தாவர இழைகள், போன்றனவும் பயன்பட்டன ஆயினும் அவை விரைவில் அழிந்துவிடக்கூடியன ஆதலால் அவை போதிய அளவு பாதுகாக்கப்பட்ட நிலையில் இன்று கிடைக்கவில்லை. மனித இனம், ஹோமோ ஹபிலிஸ் போன்ற ஹோமோ பேரினத்தைச் சேர்ந்த பழைய இனங்களில் இருந்து படிப்படியாகக் கூர்ப்பு அடைந்து நடத்தைகளிலும், உடலமைப்பிலும் தற்கால மனிதனாக மாறியது பழையகற்காலத்திலேயே. பழையகற்காலத்தில் இறுதிப் பகுதியில், சிறப்பாக இடைப் பழையகற்காலத்திலும், மேல் பழையகற்காலத்திலும் மனிதர்கள் தொடக்ககால வகை ஓவியங்களை வரையத் தொடங்கியதுடன், இறந்தோரை அடக்கம் செய்தல், சடங்குகள் செய்தல் போன்ற சமயம் சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினர்.

கீழ் பழையகற்காலம்

[தொகு]

ஆப்பிரிக்காவில், பிளியோசீன் காலப்பகுதியின் முடிவுக்கு அணித்தாக, நவீன மனிதர்களின் தொடக்க மூதாதைகளான ஹோமோ ஹபிலிசுகள் உருவாக்கிய கற்கருவிகள் ஒப்பீட்டளவில் மிகவும் எளிமையானவை. இவர்கள் பிற விலங்குகளால் கொல்லப்பட்ட விலங்குகளின் இறைச்சியையும், காட்டுத் தாவர உணவுகளையும் உண்டு வாழ்ந்தனர். விலங்குகளை வேட்டையாடவில்லை. சுமார் 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மேலும் கூர்ப்படைந்த ஹோமோ இரெக்டசு என்னும் மனித இனம் தோன்றியது. ஹோமோ இரக்டசுக்கள் தீயைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்டதுடன், சற்றுச் சிக்கலான கற்கருவிகளையும் பயன்படுத்தினர். அத்துடன் இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து ஆசியாவை நோக்கிப் பரவினர். சீனாவிலுள்ள சூக்கோடியன் (Zhoukoudian) போன்ற களங்கள் இதனை எடுத்துக்காட்டுகின்றன. ஒரு மில்லியன் ஆண்டு அளவிலேயே ஐரோப்பாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான முதற் சான்றுகள் கிடைத்துள்ளன. அத்துடன் மேம்பட்ட கைக்கோடரி பயன்பட்டதும் அறியப்பட்டுள்ளது.

நடு பழையகற்காலம்[1]

[தொகு]

நடு பழையகற்காலம் (ஆங்கிலம்: Middle Paleolithic) என்பது பழையகற்காலத்தின் இரண்டாம் உட்பிரிவு ஆகும். 300,000 இருந்து 30,000 வரையிலான ஆண்டுகளுக்கு முன் இருந்த காலமே நடு பழையகற்காலம் ஆகும். உலகின் வெவ்வேறு பகுதிகளிடையே இக்காலம் கவனிக்கத்தக்க மாற்றங்களுக்கு உட்படும். நடு பழையகற்காலத்தை தொடர்ந்து, மேல் பழையகற்காலம் (மூன்றாம் உட்பிரிவு) ஆகும்.

மேல் பழையகற்காலம்

[தொகு]

35,000 தொடக்கம் 10,000 ஆண்டுக் காலத்துக்கு முன்னர் மேல் பழைய கற்காலம் என அழைக்கப்படும் காலத்தில் நவீன மனிதர்கள் புவியில் மேலும் பல இடங்களுக்குப் பரவினர். ஐரோப்பாவில் காணப்பட்ட இஅனித இனங்களில், குரோ-மக்னன்களதும், நீன்டெதால்களினதும் இயல்புகள் கலந்து காணப்பட்டன. சிக்கலான கற்கருவித் தொழில்நுட்பங்கள் விரைவாக அடுத்தடுத்துத் தோன்றின.

கடல் மட்டம் குறைவாக இருந்த அக்காலத்தில் வெளிப்பட்டு இருந்த பெரிங் நில இணைப்பு மூலம் மனிதர்கள் அமெரிக்காக்களில் குடியேறினர். இம்மக்கள் பாலியோ இந்தியர்கள் என அழைக்கப்படுகின்றனர். 13,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குளோவிஸ் பண்பாட்டுக்குரிய களங்களே இவர்களின் மிகப் பழைய காலத்துக்கு உரியனவாக ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. பொதுவாக சமுதாயங்கள் வேட்டையாடுபவர்களாகவும், உணவு சேகரிப்பவர்கள் ஆகவும் இருந்தாலும், வெவ்வேறு சூழல்களுக்குப் பொருத்தமான வகையில் கற்கருவி வகைகள் உருவானதைக் காணக்கூடியதாக உள்ளது.

இடைக் கற்காலம்

[தொகு]
அயர்லாந்தில் உள்ள கல்திட்டை

இறுதியான உறைபனிக் கால முடிவான சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 6000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதி, கடல்மட்ட உயர்வு, காலநிலை மாற்றங்கள், உணவுக்கான புதிய மூலங்களைத் தேடவேண்டிய நிலை போன்றவற்றை உடையதாக இருந்தது. இந்த நிலைமைகளைச் சமாளிக்கும் நோக்கில் நுண்கற்கருவிகளின் வளர்ச்சி ஏற்பட்டது. இவை முன்னைய பழங்கற்காலக் கற்கருவிகளிலிருந்தே வளர்ச்சியடைந்தன. ஐரோப்பாவுக்கு, இக் கருவிகளும், அதோடுகூடிய வாழ்க்கை முறைகளும் அண்மைக் கிழக்குப் பகுதிகளிலிருந்தே கொண்டுவரப்பட்டன. இங்கே, நுண்கற்கருவிகள், கூடிய செயற்திறன் உள்ள வகையில் வேட்டையாட வழிவகுத்ததுடன், சிக்கலான குடியிருப்புக்கள் தோன்றுவதையும் ஊக்கப்படுத்தின.

புதிய கற்காலம்

[தொகு]

புதிய கற்காலத்தில், வேளாண்மை, மட்பாண்டங்களின் வளர்ச்சி, கட்டல் ஹூயுக் (Çatal Hüyük ), எரிக்கோ போன்ற பெரிய குடியிருப்புக்களின் தோற்றம் என்பன முக்கியமான சிறப்பியல்புகளாக இருந்தன. முதலாவது புதிய கற்காலப் பண்பாடுகள் கி.மு 7000 ஐ அண்டித் தோற்றம் பெற்றன. தொடர்ந்து மத்தியதரைக் கடல் பகுதி, சிந்துச் சமவெளி, சீனா, தென்கிழக்கு ஆசியா போன்ற பகுதிகளிலும் புதிய கற்காலப் பண்பாடு பரவியது.

கூடிய அளவில் பயிர்களை அறுவடை செய்வதற்கும் பதப்படுத்துவதற்குமான தேவை ஏற்பட்டதால், அரைப்பதற்கும், தீட்டுவதற்குமான கற்கருவிகள் பரவலாகப் பயன்பாட்டுக்கு வந்தன. முதன் முதலாக பெரும் அளவிலாக கட்டுமானங்கள் அமைக்கப்பட்டன. இது, இத்தகைய வேலைகளில் பெருமளவில் ஆட்களை ஈடுபடுத்துவதற்கான வளங்கள் இருந்ததை எடுத்துக்காட்டுகின்றது. எந்த அளவுக்கு இந் நிகழ்வுகள், உயர்குடியினரும், சமூகப் படிநிலை அமைப்பும் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தன என்பது இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பொலினீசிய சமுதாயங்களைப் போலச் சில சிக்கலான படிமுறை அமைப்புக்கொண்ட சமுதாயங்கள் பிந்திய புதியகற்காலத்தில் உருவாகியிருந்தாலும், பெரும்பாலான புதியகற்காலச் சமுதாயங்கள் எளிமையானவை ஆகவும் சமத்துவச் சமுதாயங்களாகவுமே இருந்தன. எனினும், இவை தமக்கு முந்திய பழையகற்காலச் சமுதாயங்களைவிடக் கூடிய படிமுறை அமைப்புக் கொண்டவையாகவே இருந்தன. நிலையாக வாழத்தொடங்கிய சமுதாயங்கள் தமக்குத் தேவையான பொருட்களைப் பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள இடங்களில் இருந்து பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் புதியகற்காலத்தில் வணிக நடவடிக்கைகள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஸ்காட்லாந்துக்கு அப்பால் அமைந்துள்ள ஆர்க்னித் தீவில் உள்ள ஸ்காரா பிரே, புதியகற்கால ஊருக்கு ஐரோப்பாவில் உள்ள எடுத்துக்காட்டு ஆகும். இச் சமுதாயத்தினர் கல்லாலான படுக்கைகளையும், பொருட்கள் வைக்கும் தட்டுக்களையும், உள்ளகக் கழிவறைகளையும் கூட அமைத்திருந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  1. நடு பழையகற்காலம் பரணிடப்பட்டது 2016-12-22 at the வந்தவழி இயந்திரம், விக்கிபீடியா கட்டுரை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்காலம்&oldid=3440773" இலிருந்து மீள்விக்கப்பட்டது