இரும்புக் காலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரும்புக்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Dun Carloway broch, லெவிஸ், ஸ்கொட்லாந்து

இரும்புக் காலம் (Iron age) என்பது, மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும். இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகளினதும், ஆயுதங்களினதும் பயன்பாடு முன்னணியில் இருக்கும். சில சமூகங்களில், இரும்பின் அறிமுகமும், மாறுபட்ட வேளாண்மைச் செயல் முறைகள், சமய நம்பிக்கைகள், அழகியல் பாணிகள் போன்ற மாற்றங்களும் ஒரே சமயத்தில் நிகழ்ந்தன. ஆனாலும், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்பதில்லை.

ஒரு இரும்புக்கால வேயப்பட்ட கூரை. ஹம்ப்ஷயர், ஐக்கிய இராச்சியம்.

வரலாற்றுக்கு முந்திய சமூகங்களை வகைப்படுத்தும் முக்கால முறையில் இறுதியான முக்கிய கால கட்டம் இதுவாகும். இது வெண்கலக் காலத்தைத் தொடர்ந்து நிலவியது. இது நிலவிய நாடு, புவியியல் பிரதேசம் ஆகியவற்றைப் பொறுத்து இதன் காலமும், சூழலும் மாறுபட்டன. பண்டைய அண்மைக் கிழக்கு, கிரேக்கம், பண்டைய இந்தியா ஆகிய இடங்களில் இரும்புக் காலம் கி.மு. 12 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. இரும்பை உருக்குதல், அதனைக் கருவிகள் தயாரிப்பதற்கேற்ப உருவாக்குதல் என்பவற்றை உள்ளடக்கிய இரும்பின் பயன்பாடு, ஆபிரிக்காவின் நொக் (Nok) பண்பாட்டில், கி.மு 1200 அளவில் தோன்றியது. ஐரோப்பாவின் பிற பகுதிகளில் இது மிகவும் பிந்திய காலத்திலேயே தொடங்கியது. இரும்புக் காலப் பண்பாடு, மத்திய ஐரோப்பாவில் கி.மு. 8 ஆம் நூற்றாண்டிலும், வட ஐரோப்பாவில் கி.மு 6 ஆம் நூற்றாண்டிலும் தோற்றம் பெற்றது. மத்திய தரைக் கடற் பகுதிகளில், கிரேக்க, ரோமப் பேரரசுக் காலத்தில் உருவான வரலாற்று மரபுகளுடனும், இந்தியாவில், பௌத்தம், சமணம் ஆகியவற்றின் எழுச்சியுடனும், சீனாவில் கன்பூசியனிசத்தின் தோற்றத்துடனும் இரும்புக்காலம் முடிவுக்கு வந்தது. வட ஐரோப்பியப் பகுதிகளில் இது மத்திய காலத் தொடக்கப் பகுதி வரை நீடித்தது.

வரலாறு[தொகு]

இரும்புக்காலத்தை பின்வருமாறு வகை பிரிப்பர். அவை,

  1. வெண்கலக் காலம் வழக்கிழந்த பகுதியும் இரும்புக் காலம் தொடங்கிய பகுதியும் (கி.மு. 1400 முதல் கி.மு. 1300 வரை)
  2. செம்மையான இரும்புக் காலம் (கி.மு. 1300 முதல் கி.பி. 500 வரை)
    1. பழைய இரும்புக்காலம் (கி.மு. 1300 முதல் கி.மு. 475 வரை)
    2. மத்திய இரும்புக்காலம் (கி.மு. 475 முதல் கி.பி. 250 வரை)
    3. புதிய இரும்புக்காலம் (கி.பி. 250 முதல் கி.பி. 500 வரை)

இரும்புக்காலத்தின் போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகே பயன்படுத்தப்பட்டது. இவை இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன. கரிமத்தின் அளவு கருவியின் எடையில் 0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டது. எஃகை விட குறைந்த கரிம அளவு கொண்ட தேனிரும்புக் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு கடினத்தன்மையுள்ள கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது. எஃகை கடினப்படுத்தும் முறை மத்திய தரைகடல் பகுதிகளிலும் ஆப்ரிக்கப் பகுதிகளிலும் பெரிதளவு மாறுபட்டிருந்தன. சில பகுதிகளில் ஆயுதங்கள் மொத்தமாக கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது. மற்ற பகுதிகளில் ஆயுதங்களின் வெளிப்பகுதியோ அல்லது கூர்மையான பகுதியோ மட்டுமே தேவைக்கேற்ப கரிமம் சேர்த்து எஃகால் ஆக்கப்பட்டது.

அண்மைய கிழக்குப் பகுதிகள்[தொகு]

அண்மைய கிழக்குப் பகுதிகளான மத்திய கிழக்காசியாவிலும் தென்மேற்கு ஆசியாவிலும் இரும்பின் பயன்பாடுகள் வழக்கமான இரும்பின் பயன்பாட்டுக்காலமான கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டுக்கு முற்பட்டும் காணப்படுகின்றன. அவற்றில் சாலடியா மற்றும் அசிரியா பகுதிகளில் கிமு. 4000 ஆண்டுகளிலும் அனட்டோலியப் பகுதிகளில் கி.மு. 2500களிலும் இரும்பின் பயன்பாடு அரிதாக காணப்படுகின்றது. ஆனால் பரவலான இரும்பின் பயன்பாடு கி.மு. இரண்டாம் ஆயிராவாண்டின் பிற்பகுதியிலேயே காணப்படுகின்றது.

இரும்புப் பயன்பாட்டின் அளவுகள்
எளிய உலோகங்களுக்கான பண்டைய எடுத்துக்காடுகளும் பயன்பாடுகளும்.[1]
காலம் கிரீட் ஈகன் கிரேக்கம் சைப்ரசு மொத்தம் அனடோலியா அனைத்தும் சேர்த்து
கி.மு. 1300–1200 5 2 9 0 16 33 49
கி.மு. 1200–1100 1 2 8 26 37 தரவில்லை 37
கி.மு. 1100–1000 13 3 31 33 80 தரவில்லை 80
கி.மு. 1000–900 37+ 30 115 29 211 தரவில்லை 211
வெண்கலக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 5 2 9 0 16 33 49
இரும்புக் காலத்தின் மொத்த பயன்பாடுகள் 51 35 163 88 328 தரவில்லை 328

 

 

வட இந்தியாவும் தக்காணமும்[தொகு]

வட இந்தியாவிலும் தக்காணத்திலும் உலோகவியல் கி.மு. இரண்டாயிரமாது ஆண்டுகளிலேயே தோன்றிவிட்டது. மல்ஹர், தாதாபூர், உத்திர பிரதேசத்தின் லாகூர்தேவா போன்ற இடங்களில் இரும்புக்காலம் கி.மு. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. பதிரெண்டாம் நூற்றாண்டு வரை ஆரம்பமாகிரது. ஆந்திர பிரதேசத்தின் ஐதராபாத் நகரில் காணப்படும் இரும்புகளின் காலம் கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு அளவுக்கு பழமையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பண்டைய தமிழகமும் இலங்கையும்[தொகு]

பொதுவாக தமிழகத்திலும் இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. சென்னையில் உள்ள தேசியக் கடலாய்வு நிறுவனத்தைச் சார்ந்த பத்ரி நாராயணன், சசிசேகரன், இராசவேலு போன்றவர்கள் ஆதிச்சநல்லூர் பகுதியில் மின்னழுத்தத் தடுப்புக்கள ஆய்வுகளை (Electro-resistivity survey) மேற்கொண்டனர். அதன் மூலம் உலோகங்கள் இப்பகுதியில் எந்தளவு உபயோகப் படுத்தப்பட்டுளது என்பதை அறியலாம். இம்மின்னழுத்த ஆய்வில் கிடைத்த இரும்பு பொருட்களை அறிஞர்கள் குறைந்தது பொ.மு. பத்தாம் நூற்றாண்டு அளவில் உபயோகப் படுத்தப்பட்டவை என்றும் இவற்றின் பழமை கி.மு. 17 ஆம் நூற்றாண்டு அளவு கூட செல்லும் என்றும் கணித்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தின் இரும்புக்காலத்தை கி.மு. 2000 அளவு மாற்றியமைக்க வேண்டியுள்ளது.

தமிழகத்தைப் போலவே இலங்கையிலும் இரும்பின் தோற்றம் கி.மு. ஆயிரமாவது ஆண்டுகளை ஒட்டியே கணிக்கப்படுகின்றன. அனுராதபுரத்திலும் சிகிரியா மலையிலும் கிடைத்த தொல்பொருட்கள் கரிம எண் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டதோடு அல்லாமல் இவற்றின் காலம் அதிகபட்சமாக கி.மு. எட்டாம் நூற்றாண்டு பழமை வரை எடுத்துச் செல்லப்படுகிறது. இவற்றை ஒத்த பழமையான தளங்கள் கந்தரோடை, மாதோட்டம், திசமகரமை போன்ற இடங்களிலும் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிழக்காசியா[தொகு]

பண்டைய கிழக்காசிய நாடுகளில் இரும்புக்காலம் சீனம், கொரியா, ஜப்பான் என்ற வழியில் பயணிக்கிறது. சீனாவின் இரும்புக்காலம் கி.மு. ஒன்பதாம் நூற்றான்டிலேயே தொடங்குகிறது. இங்கு காணப்படும் பெரும் முத்திரையின் எழுத்துக்கள் கி.மு. எட்டாம் நூற்றாண்டினதாகவும் யாங்கு சீ பகுதியில் காணப்படும் இரும்புப் பொருட்கள் கி.மு. ஆறாம் நூற்ற்றாண்டு அளவில் பழமையானதாகவும் கணிக்கப்படுகின்றன.

கொரியாவின் மஞ்சள் கடல் பகுதியில் இரும்புக்காலம் கி.மு. நாலாம் நூற்றாண்டிலும், ஜப்பானில் யாயோய் ஆட்சிக்காலத்தின் போதும் (கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை) இரும்புக்காலம் ஆரம்பமானது.

  1. Alex Webb, "Metalworking in Ancient Greece"
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புக்_காலம்&oldid=2309837" இருந்து மீள்விக்கப்பட்டது