உள்ளடக்கத்துக்குச் செல்

கல்திட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அயர்லாந்திலுள்ள போல்னாபுரோன் கல்திட்டை

கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன.

தொடக்கக் கல்திட்டைகள் ஏன், யாரால், எப்பொழுது கட்டப்பட்டன என்பது குறித்துத் தெளிவில்லை. அறியப்பட்டவற்றுள் மிகப் பழைய கல்திட்டைகள் மேற்கு ஐரோப்பாவில் காணப்படுகின்றன. இவை ஏறத்தாழ 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இவை யாரால் கட்டப்பட்டவை என்பதைத் தொல்லியலாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், இவை எதற்காகக் கட்டப்பட்டன என்று அறிவது கடினமாக உள்ளது. தெளிவான சான்றுகள் இல்லாவிட்டாலும், இவை எல்லாமே கல்லறைகளாகவோ அல்லது புதைகுழிகளாகவோ இருக்கலாம் என்றே பொதுவாகக் கருதப்படுகின்றன. கதிரியக்கக்கார்பன் முறை மூலம் காலத்தை அறிவியல் அடிப்படையில் கணிக்கத்தக்க மனித எச்சங்கள் இவ்வாறான கல்திட்டைகளுக்கு அருகில் காணப்படுவது உண்டு. ஆனாலும், இவ்வெச்சங்கள் கல்திட்டைகள் கட்டப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை என நிரூபிப்பது கடினம்.[1]

கல்திட்டைகள் காணப்படும் இடங்கள்

[தொகு]

கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. பெருங்கற்காலப் பண்பாடு உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின் காலமும் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன.

ஐரோப்பா

[தொகு]

பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள், பால்ட்டிக் மறும் வட கடற்கரைப் பகுதிகளில், ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் நாடுகளுக்குத் தெற்கே காணப்பட்டுள்ளன.

ஆசியா

[தொகு]

கொரியா

[தொகு]
கேரளாவின் மறையூரிலுள்ள கற்திட்டைகள்.

இது போன்ற நினைவுச் சின்னங்கள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகில் மிகச் செறிவாக அமைந்துள்ள கல்திட்டைகள் கொரியத் தீவக்குறையில் காணப்படுகின்றன. இவை, கி.மு முதலாம் ஆயிரவாண்டில் இருந்தான காலப் பகுதிகளைச் சேர்ந்தவை. தென்கொரியாவிலும், வடகொரியாவிலும் உள்ள கற்திட்டைகளின் எண்ணிக்கை சுமார் 30,000 ஆகும். இது உலகிலுள்ள மொத்தக் கற்திட்டைகளின் எண்ணிக்கையில் ஏறத்தாழ 40% ஆகும். யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களங்களான கோச்சாங், இவாசுன், காங்வா( இவாசுன் – 34°58′39″N 126°55′54″E / 34.9775414°N 126.931551°E / 34.9775414; 126.931551) ஆகிய மூன்று களங்களில் மட்டும் 1000க்கு மேற்பட்ட கல்திட்டைகள் உள்ளன.[2] வடக்கத்திய வகையைச் சேர்ந்த, கங்வா என்னும் இடத்திலுள்ள கற்திட்டைகள் மேசை போன்ற அமைப்புடையவை. இதிலே முன்னோருக்கான கிரியைகள் நடத்தப்பட்டன. தென்கொரியாவில் உள்ள இது போன்ற கற்திட்டைகளில் மிகப் பெரியது இதுவே. இது 2.6 x 7.1 x 5.5 மீட்டர் அளவுகள் கொண்டது.

கல்திட்டைக்கான கொரிய மொழிச் சொல் "கொயின்டோல்" என்பது. "தாங்கப்பட்ட கல்" என்பது இதன் பொருள். உலகின் பிற பகுதிகளில் கல்திட்டைகள் குறித்த ஆய்வுகள் பொருமளவில் இடம்பெற்றதற்கு மிகப் பிற்பட்ட காலத்திலேயே கொரியாவில் பெருங்கற்காலச் சின்னங்கள் குறித்த ஆய்வுகள் தொடங்கின. 1945க்குப் பின்னரே கொரிய அறிஞர்களால் புதிய ஆய்வுகள் தொடங்கப்பெற்றன. கொரியக் கல்திட்டைகளின் உருவவியல் வளர்ச்சி அத்திலாந்திக் ஐரோப்பியக் கல்திட்டைகளிலிருந்தும் வேறுபட்டுத் தனித்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.[3]

இந்தியா

[தொகு]

இந்தியாவிலும் பல பகுதிகளில் கற்திட்டைகள் உண்டு. கேரளாவின், மறையூர் என்னுமிடத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழிஞ்சுவாடு என்னும் சிற்றூருக்கு அண்மையில் கற்திட்டைகள் காணப்படுகின்றன. இக் கற்திட்டைகள் இரண்டு முதல் ஐந்து கற்திட்டைகள் கொண்ட கூட்டங்களாக அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு கூட்டமும் ஒரு குடும்பத்துக்கு உரியது எனக் கருதப்படுகின்றது. இப் பகுதியில் இவ்வாறான கூட்டங்கள் நூற்றுக்கணக்கில் காணப்படுகின்றன. இக்கற்திட்டைகள் கனமான கருங்கற்களால் ஆனவை. இப்பகுதி பல நூற்றாண்டுகளாக ஆதி சேரர் எனப்பட்ட இனக்குழு மரபினரின் புதைகுழிகளுக்கான இடமாக இருந்துள்ளது.

தமிழ்நாடு

[தொகு]

தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் கல்திட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கல்வெட்டு ஆய்வாளர்கள் வீரராகவன், தொல்லியல் ஆர்வலர்கள் ஆறகளூர் வெங்கடேசன் ஆகியோருடன் கூடிய குழு இதனைக் கண்டறிந்துள்ளது. இது பொன்சொரி மலையில் 2,250 அடி உயரத்தில் தாமரைப்பாழி எனும் சுனையருகே உள்ளது. இதனை இறந்தவரின் வீடு என்று பொருள் படும்படி மாண்டவர் வீடு என அழைக்கப்பட்டு தற்போது பாண்டவர் வீடு என்று கூறுகின்றனர். இக்கற்திட்டை ஒரே பலகைக் கல்லால் அமைக்கப்படாமல் துண்டு கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.[4]

மேலும் நிழற்படங்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lewis, S. (2009) Guide to the Menhirs and other Megaliths of Central Brittany, Nezert Books, ISBN 978–952–270–595–2
  2. UNESCO World Heritage List. "Gochang, Hwasun and Ganghwa Dolmen Sites." http://whc.unesco.org/en/list/977
  3. Joussaume, Roger Dolmens for the Dead Batsford Ltd (Jan 1988) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7134-5369-0 p. 141–142
  4. வி.சீனிவாசன் (1 சூலை 2016). சேலத்தில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை, கற்குவை கண்டுபிடிப்பு. தி இந்து தமிழ் திசை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்திட்டை&oldid=3196556" இலிருந்து மீள்விக்கப்பட்டது