உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பதுக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்தில் உள்ள ஒரு கற்பதுக்கை.
ஒரு கற்பதுக்கை
வடக்கு எஸ்டோனியாவில் வெண்கல வயது கல் சிஸ்ட் கல்லறைகள்

கல்பதுக்கை (cist, அல்லது kist) என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்றாகும்.[1] கற்பதுக்கைகள் உலகின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களின் பல நாடுகளில் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே கற்பதுக்கைகள் அமைக்கப்பட்டதற்கான சான்றுகள் காண்டறியப்பட்டுள்ளன. பொதுவாக, இது, இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கான கல்லால் அமைக்கப்பட்ட சிறிய பெட்டிபோன்ற அமைப்பு எனப்படுகிறது. தென்னிந்தியாவிலும் பல கற்பதுக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர். தென்னிந்தியாவில் காணப்படும் பிற்காலத்துக் கற்பதுக்கைகள் கூடுதல் சிக்கல்தன்மை கொண்டவை. இவை நிலத்தில் குழி தோண்டி அதனை அறைகளாகப் பிரித்து உருவாக்கப்படும் ஒரு அமைப்புக் கொண்டவை.[2] இயற்கையாகக் காணப்படும் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கல்திட்டைகள் போலன்றி, முறையாக வேண்டிய அளவுக்கு வெட்டியெடுக்கப்பட்ட கற்பலகைகளைப் பயன்படுத்தியே இவ்வாறான கல்பதுக்கைகள் அமைக்கப்பட்டன. இவை அவற்றின் அளவுக்கேற்ப ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையுள்ள கற்பலகைகளினால் மூடப்படுகின்றன.[3]

சொற்பொருள்[தொகு]

மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலியில் தரப்பட்டுள்ள சொற்பொருள்களில் இருந்து, "பதுக்கை" என்னும் சொல் "மறை", "ஒளி" போன்ற பொருள் கொண்ட "பதுக்கு" என்பதில் இருந்து பிறந்ததாகத் தெரிகிறது. இப்பேரகரமுதலியின்படி, "பதுக்கை" என்பது "கற்குவியல்", "இலைக்குவியல்", "மணற்குன்று" போன்ற பல்வேறு குவிந்திருக்கும் பொருட்களைக் குறிப்பதாகவும் தெரிகிறது.[4] பண்டைக் காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்த இடங்களை மறைப்பதற்கான கற்களைக் குவியல்கள் பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. பல சங்கப் பாடல்களில் குறிப்பிடப்படும் "பதுக்கைகள்" இவ்வகையினவாக இருந்ததாகத் தெரிகிறது.[5] காலப்போக்கில், அடக்கக் குழிகள் சிக்கல்தன்மை கொண்டவையாக வளர்ச்சியடைந்த பின்னரும், அவற்றின்மீது அடையாளத்துக்காகக் கற்கள் குவிக்கப்பட்டு முழு அமைப்புமே பதுக்கைகள் என அழைக்கப்பட்டன. "கல்பதுக்கை" அல்லது "கற்பதுக்கை" என்னும் வழக்கு சங்ககாலப் பாடல்களில் காணப்படவில்லை. பிற்காலத்திலேயே இச்சொல் பயன்பாட்டுக்கு வந்திருக்கக்கூடும்.

சங்ககாலப் பதுக்கைகள்[தொகு]

சங்கத்தமிழ் ஆக்கங்களான அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு போன்றவற்றில் அக்காலத்துப் பதுக்கைகள் குறித்த குறிப்புக்கள் உள்ளன. அக்காலத்தில் பாலை நிலத்தின் வழியே செல்லும் வழிப்போக்கர்களைக் கொன்று பொருள் பறிக்கும் மறவர்கள், அவ்வாறு கொல்லப்பட்டோரின் உடல்களின் மீது தழைகளைப் போட்டு மூடிக் கற்களையும் குவித்து மேடு செய்து வைப்பர்.[6] பாலை நிலத்தினூடு செல்லும் பாதைகளின் மருங்கில் காணப்படும் இவ்வாறான பதுக்கைகளின் அச்சம் ஊட்டும் வருணனைகளைச் சங்கப் பாடல்கள் தருகின்றன. நரிகள் போன்ற காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருப்பதற்காகவும், பிணங்கள் எழுந்துவரக்கூடும் என்ற நம்பிக்கையினால், அவ்வாறு நடப்பதைத் தவிர்ப்பதற்குமாகவே தொடக்க காலங்களில் பிணங்களையோ, அவை புதைக்கப்பட்ட இடங்களையோ கற்கள் போட்டு மூடினர் என்கின்றனர்.[7]

சங்ககாலத்து நினைவுக் கற்கள் பற்றி ஆராய்ந்த கிருஷ்ணமூர்த்தி, அக்காலத்தில் நினைவுக் கற்களின் வளர்ச்சியினை 4 கட்டங்களாகப் பார்க்கலாம் என்கிறார். இவற்றில் முதற்கட்டம் கிமு 8 ஆம் நூற்றாண்டு முதல் கிமு மூன்றாம் நூற்றாண்டு வரை என்றும், இரண்டாம் கட்டம் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி முதலாம் நூற்றாண்டு வரை என்றும், மூன்றாம் கட்டம் கிபி முதல் நூற்றாண்டிலிருந்து கிபி 4 ஆம் நூற்றாண்டு வரை என்றும் இதற்குப் பிந்திய காலத்தை நான்காம் கட்டமாகவும் அவர் பிரித்துள்ளார்.[8] இக்கால கட்டங்களினூடாகப் பல்வேறு வகையான நினைவுச் சின்னங்களுடன் கற்பதுக்கைகளும் வளர்ச்சியடைந்து வந்தன. காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காகப் பிணங்களைக் கற்களால் மூடிய ஒரு நிலையில் இருந்து, சடங்குகளோடு கூடிய நினைவுச் சின்ன அமைப்புமுறை வளர்ச்சியடைந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. நடுகல் எடுப்பது குறித்து, காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுதல், பெரும்படை, வாழ்த்தல் என்னும் ஆறு நிலைகள் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படுகின்றன. இங்கே நடுகல் என்பது தற்காலத்தில் நடுகல் என்று புரிந்து கொள்ளப்படுவதை விட, கற்பதுக்கையை உள்ளடக்கிய பிற நினைவுக் கற்களுக்கே பொருந்தும் எனப்படுகிறது.[9]

தென்னிந்தியக் கற்பதுக்கைகள்[தொகு]

தென்னிந்தியாவில் தொல்லியல் ஆய்வுகள் மூலம் பல கற்பதுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இடுதுளைகளுடன் கூடிய கற்பதுக்கைகள், கற்குவையுடன் கூடிய கற்பதுக்கைகள் எனப் பல்வேறு வகைகளில் இவ்வாறான கற்பதுக்கைகள் உள்ளன.[10]

கற்பதுக்கைகள் வடிவமைப்புக்கு ஏற்பச் செதுக்கிய கற்களினால் அமைக்கப்பட்டவை. இதனால், கருங்கல்லைப் பயன்படுத்தாமல், செதுக்குவதற்கு இலகுவான செம்புரைக்கல்லைப் பயன்படுத்தியுள்ளதைக் காண முடிகிறது. இவ்வகைக் கற்கள் கிடைக்கக்கூடிய இடங்களில் இவ்வகையான கற்பதுக்கைகள் கூடுதலாகக் காணப்படுவதாகத் தெரிகிறது.[11] இவ்வாறான கற்பலகைகளைச் சுவசுத்திக்க வடிவில் அமையும்படி நிறுத்திச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன.[12] இந்த அமைப்பு கற்கள் உட்புறமாகச் சரிந்து விழுந்துவிடாமல் இருக்க உதவுகிறது. இது மேலே ஒரு பலகைக் கல்லை வைத்து மூடப்படுகிறது.

இடுதுளைகள்[தொகு]

நான்கு பக்கச் சுவர்களில் ஒன்றில் துளை இடப்பட்டிருக்கும். இது இடுதுளை எனப்படுகிறது. பெரிய கற்பதுக்கைகளில் இத்துளைகள் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவு பெரிதாக இருக்கும். இந்த இடுதுளையூடாகவே ஈமக் குழிக்குள் ஈமப் பொருட்கள் வைக்கப்படுகின்றன. உள்ளே தடுப்புச் சுவர்கள் இருக்கும் இடங்களில் இவற்றிலும் இடுதுளைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[13] இடுதுளைகள் சதுரம், வட்டம் ஆகிய வடிவங்களிலும், வேறு சில குறியீட்டு வடிவங்களிலும் காணப்படுகின்றன.[14]. "ம" வடிவில் அமைந்த இடுதுளைகள் தருமபுரி, வட ஆற்காடு ஆகிய மாவட்டங்களில் மட்டுமே சில இடங்களில் காணப்படுகின்றன.[15]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 34.
 2. பவுன்துரை, இராசு., 2004. பக். 77
 3. பவுன்துரை, இராசு., 2004. பக். 77, 78
 4. மதராசுப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகரமுதலியில் "பதுக்கை" குறித்த பதிவுகள்.[தொடர்பிழந்த இணைப்பு]
 5. அகநானூறு 109, 157, 215, 231, புறநானூறு 3, ஐங்குறுநூறு 362.
 6. கேசவராஜ், வெ., 2008. பக். 84
 7. கேசவராஜ், வெ., 2008. பக். 28
 8. கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 34-38
 9. கிருஷ்ணமூர்த்தி, ச., 2004. பக். 37
 10. சாந்தலிங்கம், சொ., 2004. பக். 21
 11. பவுன்துரை, இராசு., 2004. பக். 78
 12. சாந்தலிங்கம், சொ., 2004. பக். 22
 13. பவுன்துரை, இராசு., 2004. பக். 81, 83
 14. பவுன்துரை, இராசு., 2004. பக். 83
 15. சாந்தலிங்கம், சொ., 2004. பக். 22

உசாத்துணைகள்[தொகு]

 • கிருஷ்ணமூர்த்தி, ச., நடுகற்கள், மெய்யப்பன் பதிப்பகம், சென்னை, 2004.
 • கேசவராஜ், வெ., தென்னிந்திய நடுகற்கள், காவ்யா, சென்னை, 2008.
 • சாந்தலிங்கம், சொ., வரலாற்றில் தகடூர்", புது எழுத்து, காவேரிப்பட்டினம், 2006.
 • பவுன்துரை, இராசு., தமிழக நாட்டுப்புறக் கட்டடக்கலை மரபு, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2004.
 • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), அகநானூறு - மணிமிடை பவளம், பாரிநிலையம், சென்னை, 2002 (ஏழாம் பதிப்பு).
 • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), புறநானூறு, பாரிநிலையம், சென்னை, 2004.
 • புலியூர்க் கேசிகன் (தெளிவுரை), ஐங்குறுநூறு, கங்கை புத்தக நிலையம், சென்னை, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பதுக்கை&oldid=3938595" இலிருந்து மீள்விக்கப்பட்டது