சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்து கோவில் ஒன்றில் அனுசரிக்கப்படும் சடங்கு மாதிரி

சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பு ஆகும். பொதுவாகக் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் செய்யப்படுகின்றன.

சடங்குகள், ஒழுங்கான கால இடைவெளிகளிலோ, குறிப்பிட்ட சந்தர்ப்பங்களிலோ அல்லது அவரவர் விருப்பப்படியோ நடைபெறலாம். சடங்குகள் தனி மனிதர்களால், குழுக்களால் அல்லது முழுச் சமுதாயத்தாலுமே நிகழ்த்தப்படலாம். இதற்கெனக் குறித்து ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமன்றி எந்த இடத்திலும் நடத்தப்படக்கூடிய சடங்குகளும் உண்டு. சில சடங்குகள் பொதுவாக நடத்தப்படுகின்றன. வேறுசில தனிப்பட்ட சடங்குகளாகும். இன்னும் சில குறிப்பிட்ட ஒரு குழுவினர் மட்டும் பங்குபற்றும் சடங்குகளாக உள்ளன.

சடங்குகளில் நோக்கங்கள் பல்வேறுபட்டவையாக உள்ளன. சில சடங்குகள் சமயக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நிகழ்த்தப்படுகின்றன. சில, சடங்கு செய்பவரின் ஆன்மீக மற்றும் உணர்வுபூர்வமான திருப்திக்காகச் செய்யப்படுவன. சமூகப் பிணைப்புக்களை வலுப்படுத்தல், மரியாதையை வெளிப்படுத்தல் அல்லது அடிபணிதல், பொதுவான அல்லது குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான சமூக அங்கீகாரம் பெறுதல், அல்லது வெறுமனே சடங்குகள் செய்வதில் உள்ள இன்பத்துக்காகக் கூடச் சடங்குகள் இடம்பெறுவது உண்டு.


உலகின் பல்வேறு சமூகத்தவரிடையே பல்வேறு விதமான சடங்குகள் நடைபெற்று வருவதைக் காணலாம். சமயங்களினால் வழிபாட்டுத் தேவைகளுக்காக விதிக்கப்படுகின்ற சடங்குகள் ஒருபுறம் இருக்க ஏராளமான சமயம் சார்ந்தனவும் சாராதனவுமான சடங்குகள் உள்ளன. மனிதரின் வாழ்வோடு சம்பந்தமான பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயர் சூட்டுதல், காது குத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, அறுபதாம் கல்யாணம், இறப்பு ஆகியவற்றோடு தொடர்புடைய சடங்குகள் தமிழ் மக்களுடைய வாழ்வியலோடு தொடர்புள்ளவை. இவற்றைவிட வீடு கட்டுதல், வண்டிகள் வாங்குதல், தொழில் தொடங்குதல் என்பவை தொடர்பிலும் பல சடங்குகள் நடை பெறுகின்றன.

மேற்காட்டிய பழைய மரபு சார்ந்த சடங்குகள் தவிரப் பல்வேறு தற்கால நடவடிக்கைகளோடு ஒட்டிய நிகழ்வுகளிலும் சடங்குத் தன்மை பொருந்திய அம்சங்கள் காணப்படுகின்றன. நாடாளுமன்றக் கூட்டங்கள், புதிய அரசுகள் பொறுப்பெடுத்தல், அறிவியல் மகாநாடுகள், நீதிமன்ற விசாரணைகள், குற்றவாளிகளைத் தூக்கில் இடுதல் என்பவற்றில் கூட இவ்வாறான சடங்குத் தன்மைகளைக் காணமுடியும். கைகுலுக்குதல், கண்டதும் வாழ்த்துக் கூறுதல் என்பனவும் சடங்குத் தன்மை கொண்டனவே.

இவ்வாறு சடங்குகள் மனிதரின் வாழ்வில் பலவாறாகப் பரந்து கிடப்பினும், இவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அதாவது, இச் சடங்குகளின் குறியீட்டுத் தன்மையானது அச் சடங்கை நிகழ்த்துபவரால் தன்னிச்சையாகத் தெரிந்தெடுக்கப்படுவது அல்ல. இது சமயம், அரசு, நிறுவனங்கள் போன்ற வெளிச் சக்திகளினால் விதிக்கப்படுகின்றன அல்லது மரபுவழியாகப் பெறப்படுகின்றன.

சடங்குகள் பெயர்க்காரணம்[தொகு]

ஷட் அங்கங்கள்[தொகு]

சிட்சை = எழுத்தியல், வியாகர்ணம் = சொல்லியல், நிருத்தம் = பொருளியல், கல்பம் = செயல்முறை, சந்தஸ் = யாப்பு, ஜ்யோதிஷம் = ஜோதிடம் என்கிற ஆறு அங்கங்களைக் கொண்டு செய்யும் செயலைச் ஷட் அங்கங்கள் (ஷட் = ஆறு) என்று கூறுவார்கள். இதுவே நாளடைவில் மருவி சடங்குகள் என்று ஆகிவிட்டது.[1]

சடங்கு எனும் சொல்[தொகு]

சடங்கு என்ற சொல்லிற்குச் ‘சட்ட’ என்ற உரிச்சொல் வேர்ச் சொல் ஆகும்.

சட்ட + அம் + கு = சடங்கு

‘சட்ட’ என்ற சொல்லிற்கு செவ்விதான, ஒழுங்கு முறையான என்று பொருள்.

‘அம்’ என்ற சொல் அழகியது என்று பொருள் உடையது

‘கு’ என்பது தன்மையைக் குறித்ததோர் விகுதி.

பண்பு+அம்+கு = பாங்கு என்று ஆகியது போல சட்ட+அம்+கு = சடங்கு என்று ஆகியது.

“சட்ட நேர்ப்பட சழக்கனேன் உனைச் சார்ந்திலேன்”

ஓர் ஒழுங்கு முறைக்கும் உட்பட்டு வராத சழக்கன் நான். அதனால் பெருமானே! உன்னைச் சார்ந்து பயன்பெற வேண்டும்.என்று அறிவில்லாதவன் என ‘சட்ட’ என்ற இந்த வேர்ச்சொல்லை பழைய வழக்குச் சொல்லாக மணிவாசகர் திருவாசகத்தில் பயன்படுத்துகிறார். எனவே சடங்கு என்றால் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைச் செவ்விதமாக ஓர் ஒழுங்கு முறையாக அழகாகச் செய்விக்கும் தன்மை உடையது என்று பொருள் கொள்ளலாம்.

சடங்கிற்கு இன்னொரு பெயர்[தொகு]

சடங்குகள் வாழ்வு முறைதலுக்கு அரண் செய்வது; பாதுகாப்பு அளிப்பது. இதை அடிப்படையாகக் கொண்டு சடங்கிற்கு இன்னொரு பெயர் வந்தது. அது திரிந்து வந்த முறை வருமாறு:

அரண் – அரணம் – கரணம்

மொழி முதல் எழுத்தாக வரும் அகரம் வழக்கில் ககரமாகத் திரிவது உண்டு. அனல் கனலாகத் திரிந்தது இதற்கு உதாரணம். தொல்காப்பியத்தில் சடங்கு என்ற பொருளில் கரணம் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது.

“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளைக் செவ்விதாக்கி ஓர் ஒழுங்கு முறைக்குள் கொண்டு வர கரணங்களை, அதாவது சடங்குகளை யாத்தோர் தமிழ்ச்சான்றோர். நமது இலக்கியங்களில் வரும் ஐயர், அந்தணர், வேதியர், மறையோர், பார்ப்பணர் போன்ற சொற்கள் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பிடவில்லை. சான்றோர்களைக் குறிப்பிட்டது இங்கே ஐயர் என்பது சான்றோர் எனப் பொருள்படும்.

சடங்குகளின் வகைகள்[தொகு]

சடங்குகளை வாழ்க்கை வட்ட சடங்குகள், வளமைச் சடங்குகள், வழிபாட்டுச் சடங்குகள், மந்திரச் சடங்குகள் என நான்காகப் பிரிக்கின்றனர். [2]

இருவகைச் சடங்குகள்[தொகு]

சடங்குகள் இருவகைப்படும். அவை மங்கலச் சடங்கு மற்றும் அமங்கலச் சடங்கு.

மங்கலச் சடங்குகள்[தொகு]

 1. சேணை தொட்டு வைத்தல்
 2. தொட்டிலிட்டு குழந்தைக்குப் பெயரிடல்
 3. மகவுக்கு உணவூட்டல்
 4. வாழ்நாள் வேள்வி
 5. காதணி விழா
 6. எழுத்தறிவித்தல்
 7. சிவதீக்கை
 8. உபநயனம்
 9. பூப்புனித நீராட்டு விழா
 10. திருமண உறுதி
 11. பொன்னுருக்கல்
 12. திருமுறைத் திருமணம்
 13. வளைகாப்பு
 14. புதுமனை புகுவிழா
 15. மணி விழா,
 16. பவள விழா
 17. முத்து விழா

அமங்கலச் சடங்குகள்[தொகு]

 1. உயிர் புறப்பாடு
 2. சடல நீராட்டு
 3. திருவடிப் பேறு (மோட்ச தீபம்)
 4. கல் நிறுவல்
 5. ஆண்டுத் திதி

வெளி இணைப்புகள்[தொகு]

மக்கள் வாழ்வில் சாங்கியம் சடங்குகள்

மேற்கோள்கள்[தொகு]

 1. தேனி எஸ். மாரியப்பன் எழுதிய “ஆன்மிகக் குறிப்புகள்” நூல் பக்கம் -98.
 2. http://www.tamilvu.org/courses/degree/a061/a0614/html/a0614112.htm#book1 சடங்குகள் - வகைப்பாடு தமிழாய்வு தளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சடங்கு&oldid=2226825" இருந்து மீள்விக்கப்பட்டது