உள்ளடக்கத்துக்குச் செல்

பொன்னுருக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பொண்ணுருக்கு வைபவம் என்பது தமிழர்களின் இந்துத் திருமண ஆகம மரபுச் சடங்குகளில் ஒன்று. திருமாங்கல்யம் (தாலி) செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்துப் பூசை செய்து பின்னர் அவ்வூரில் பிறந்து வளர்ந்த பாரம்பரிய பொற்கொல்லர் மூலம் உருக்கப்படுவதே பொன்னுருக்கல் எனப்படும்.

நிலையான இடத்தில் பல தலைமுறை கண்ட பொற்கொல்லர் திருமாங்கல்யம் செய்வது மிகச் சிறந்த முறையில் வாழ்க்கை அமையும் என்பது முன்னோர்களின் வாக்கு.

மண நாளுக்கு முன்பு பொன்னுருக்கலுக்கு நிச்சயித்த சுபநாளில் மணமகன் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறுவது மரபாகும். இந்த சுப நிகழ்வில் மணப்பெண்ணைத் தவிர இரு வீட்டு உறவினர்களும், நண்பர்களும் கலந்து சிறப்பிப்பார்கள். குறித்த சுப நாளில் மணமகன் வீடு வாசலில் நிறை குடம் வைத்து விழாவைத் தொடங்குவார்கள்.

தாலி செய்வதற்கு உரிய தங்க நாணயத்தை ஆலயத்தில் இறைவனடியில் வைத்துப் பூசை செய்து பின்னர் உருக்குவது வழக்கமாகும். பொன்னுருக்கும் ஆச்சாரியார் கும்பம் வைத்து விளக்கேற்றி தூப தீபம் காட்டி பொன்னை உருக்க ஆரம்பிப்பார்.

ஆச்சாரியார் பொன்னை உருக்கிய பின்னர் ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், பூ, மஞ்சள், குங்குமம், தேசிக்காய் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தை வைத்து அதை மணமகனுக்குக் கொடுப்பார். மணமகன் பூசை அறையில் வணங்கி பொன்னுருக்கலுக்கு வந்திருக்கும் சபையோருக்கு அதைக் காண்பிக்க வேண்டும்.

அந்தத் தங்கத்தை வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையைச் சொல்லக் கூடியவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றும் இருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களின் வயதா, அனுபவமா அல்லது அதையும் தாண்டி ஏதாவது சக்தியா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

பொன்னுருக்கிய தங்கத்தைத் தாலி செய்வதற்கு ஒப்படைப்பதோடு குறித்த நாளில் இரு வீடுகளிலும் கன்னிக் கால் அல்லது பந்தக்கால் ஊன்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு முள் முருங்கையைப் பயன்படுத்துவார்கள். முருங்கைத் தடி நேராக இருக்க வேண்டும் என்பது ஐதீகம். இதன் காரணமாக நிறைந்த நேரான வாழ்க்கை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த நாளில் இருந்து திருமண நாள் வரை மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது என்பதும் மணமக்கள் வெளியில் செல்லக் கூடாது என்பதும் சம்பிரயதாயமாகும். குறித்த நன்னாளில் இரு வீடுகளிலும் திருமணத்திற்கு உரிய பலகாரங்களைச் செய்யத் தொடங்குவார்கள்.

இவ்வாறு தமிழர்களின் இந்துத் திருமணங்களில் பொன்னுருக்கல் இன்றியமையாத ஒரு சுப நிகழ்வாகக் கருதப்படுகின்றது.

தென் தமிழகம்[தொகு]

பாண்டியர் மன்னர்கள் ஆண்ட தென்தமிழகத்திலும் இந்த பராம்பரிய வழக்கம் சில இனங்களில் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்னுருக்கல்&oldid=3294773" இலிருந்து மீள்விக்கப்பட்டது