உள்ளடக்கத்துக்குச் செல்

கிடைக்குழு 1 தனிமங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிடைக்குழு 1 தனிமங்கள் (Period 1 elements) என்பவை தனிம அட்டவணையில் உள்ள முதல் கிடை வரிசையில் உள்ள தனிமங்களை குறிக்கிறது. இவை முதல் தொடர் தனிமங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இத் தொடரில் அணு எண் உயர்வதற்கேற்ப அவற்றின் ஆற்றல் கூடுகள் எலக்ட்ரான்களால் ஒரு மந்தவாயு அமைப்பு வரும்வரை முறையாக நிரப்பப்படுகின்றன. இத்தொடரில் உள்ள தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் ஏறுவரிசையில் அமைந்துள்ள அவற்றின் அணு எண்களுக்கு ஏற்ப ஆவர்த்தன் முறையில் மாற்றமடைகின்றன. ஒரு கிடை வரிசையில் இருக்கும் ஒரு தனிமத்தை ஒத்த பண்புகளை உடைய மற்ற தனிமங்களும் அதே வரிசையில் அமைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. கிடைக்குழு ஒன்றில் ஒன்று முதல் இரண்டு வரை அணு எண்களைக் கொண்ட ஐதரசன் மற்றும் ஈலியம் என்று இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன. இவை இரண்டுமே எசு வலைக்குழுவை சார்ந்த தனிமங்களாகும். இவை இரண்டும் ஒரே கிடைவரிசையில் இருப்பினும் இவற்றின் பண்புகள் ஒன்றல்ல. ஒன்று அலோகமாகவும், மற்றொன்று அருமண் வாயுவாகவும் உள்ளது. இத்தொடரில் உள்ள தனிமங்களின் நிலையைக் அணுக்கட்டமைப்பு குறித்த நவீன கோட்பாடுகள் விவரிக்கின்றன. அணுக்கட்டமைப்பற்றி விவரிக்கும் குவாண்டம் இயக்கவியல் கொள்கை, 1எசு ஆர்பிட்டல்களில் எலக்ட்ரான்கள் நிரம்புவதுடன் இத்தொடர் தொடர்புடையது என்று கூறுகிறது. மேலும் இத்தொடரில் உள்ள தனிமங்கள் இரும விதியைப் பின்பற்றுகின்றன. இவ்விதியின்படி இணைதிறன் கூட்டை நிரப்புவதற்கு அவற்றுக்கு இரண்டு எலக்ட்ரான்கள் தேவைப்படுகின்றன. அதிகபட்சமாக இரண்டு எலக்ட்ரான்களுக்கு இத்தொடரில் உள்ள தனிமங்களால் இடமளிக்க முடியும். எனவே இத்தொடரில் மொத்தமாக இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளன.

தனிமங்கள்

[தொகு]
தனிமம் வேதியியல் தொடர் எதிர்மின்னி அமைப்பு
1 H ஹைட்ரஜன் அலோகம் 1s1
2 He ஈலியம் அருமன் வாயு 1s2

ஆவர்த்தனப் போக்குகள்

[தொகு]

தனிம வரிசை அட்டவணையில் இடம்பெற்றுள்ள தொடர்களில் இத்தொடரைத் தவிர மற்ற அனைத்துத் தொடர்களும் குறைந்தது எட்டு தனிமங்களைக் கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை தொடரின் குறுக்காகச் செல்லும்போது ஆவர்த்தனப் பண்புகளின் போக்குகளை உணர உதவுகிறது. இத்தொடரில் இரண்டு தனிமங்கள் மட்டுமே உள்ளதால் இக்கோட்பாடு இங்கு பொருந்தவில்லை.

நெடுங்க்குழுவில் இடம்பெற்றுள்ள தனிமங்களின் பண்புகள் அடிப்படையில் நோக்கினால் ஈலியம் 18 ஆவது நெடுங்குழுவில் இடம்பெற்று மந்த வாயுக்களின் வரிசையைத் தொடங்கி வைக்கிறது. இதே அடிப்படையில் நோக்கினாலும் ஐதரசன் எந்த குழுவிலும் சேராமல் தனித்து நிற்கிறது. ஐதரசனின் பண்புகள் தனித்த பண்புகளாக உள்ளன. எனவே ஐதரசனை எந்த வகையான குழுவாகவும் வகைப்படுத்த இயலாது.

தனிம வரிசை அட்டவணையில் இடம்

[தொகு]

ஐதரசன் மற்றும் ஈலியம் இரண்டும் எசு-கூட்டுக்குள் இருந்தாலும் அவை எந்தவொரு எசு தொகுதி தனிமங்களுடனும் பண்புகளில் ஒத்து செயல்படாது. இவற்றின் நடத்தைகள் மற்ற எசு தொகுதி தனிமங்க்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானது, இந்த இரு தனிமங்க்களை தனிம வரிசை அட்டவணையில் வைக்கப்பட வேண்டுமா என்பதில் கணிசமான கருத்து வேறுபாடுகள் உள்ளன்.

ஐதரசன் சில சமயங்களில் தனிம வரிசை அட்டவணையில் இலித்தியத்திற்கு மேலாக , கார்பனுக்கு மேலாக[1] , புளோரினுக்கு மேலாக [1][2]வைக்கப்படுகிறது. இலித்தியம் மற்றும் புளோரினுக்கு மேலாக இரண்டுமுறை தோன்றும்படியும் வைக்கப்படுகிறது. மற்றும் சில சமயங்களில் இத்தனிமங்களுக்கு மேலாக தனித்து மிதக்கும்படி ஒதுக்கி எந்த குழுவிலும் வகைப்படுத்தாமல் தனித்து வைக்கப்படுகிறது[3].

ஈலியம் பெரும்பாலும் எப்போதும் பி தொகுதியில் இடம்பெற்றுள்ள நியான் வாயுவுக்கு மேலாக ஒரு மந்த வாயுவாக வைக்கப்படுகிறது. ஒரே மாதிரியான எலக்ட்ரான் ஒழுங்கமைப்பைக் கொண்டிருப்பதால் சில சமயங்களில் ஈலியத்தை பெரிலியத்துக்கு மேலாகவும் வைக்கிறார்கள்[4].

ஐதரசன்

[தொகு]

ஐதரசன் H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமாகும். இதை நீரியம், நீரகம், ஐதரோசெனியம் என்று பல பெயர்களால் அழைக்கிறார்கள். இத்தனிமத்தின் அணு எண் 1, அணு எடை1.008. தனிமவரிசை அட்டவணையில் இடம் பெற்றுள்ள தனிமங்களில் மிகவும் இலேசான தனிமமாகக் கருதப்படுவது ஐதரசனாகும். பிரபஞ்சத்தில் அதிக அளவிலுள்ள ஒற்றை அணு தனிமம் ஐதரசனேயாகும். பிரபஞ்சத்தின் மொத்த அணுக்கூறு நிறையில் 75% ஐதரசன் ஒற்றையணு நிரம்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. சில விண்மீன்கள் பிரதானமாக பிளாசுமா நிலை ஐதரசன் நிரம்பிய விண்மீன்கள்களாகக் கருதப்படுகின்றன. 1H என்ற குறியீட்டால் குறிக்கப்படும் புரோட்டியம் என்ற ஐசோடோப்பு பெரும்பாலாகக் காணப்படும் ஐதரசனின் ஐசோடோப்பு ஆகும். இதன் உட்கருவில் நியூட்ரான் எதுவும் இல்லாமல் ஒரு புரோட்டான் மட்டுமே இருக்கும். ஐதரசனானது, சீர்நிலை வெப்ப அழுத்தத்தில், நிறமற்ற, சுவையற்ற, மணமற்ற, எளிதில் தீப்பிடிக்கக்கூடிய வளிமம் ஆகும். இத்தனிமத்தை ஓர் அலோகமாகவும் கருதுகிறார்கள். ஒற்றை, இரட்டை அயனிகளாக உருவாகும் தன்மையை ஐதரசன் கொண்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆக்சிசனை செயற்கை முறையிலும் தயாரித்து இருக்கிறார்கள்.

ஈலியம்

[தொகு]

ஈலியம் என்பது He என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட தனிமமாகும். நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற, நச்சுத்தன்மையற்ற, கூடிய அளவில் வேதி வினையில் ஈடுபடாத ஒரு வளிமமுமாகும். இத்தனிமம் தனிம அட்டவணையில் இரண்டாமிடத்தில் இருக்கிறது. இதன் உருகுநிலையும் கொதிநிலையும் எல்லாத் தனிமங்களை விடவும் குறைவானதாகும். இதன் அணு எண் 2. இதுவே அண்டத்தில் மிகுந்து காணப்படும் தனிமங்களில் இரண்டாவது ஆகும். இதுவே நீரியத்திற்கு அடுத்து எளிய அமைப்புக் கொண்ட தனிமமும் ஆகும். பூமியின் கடல் மட்டத்தில் காற்றுமண்டலத்தில் ஈலியம் 6ஆவது இடத்தைப் பிடிக்கிறது. நைட்ரசன், ஆக்சிசன், ஆர்கான், காபன் டை ஆக்சைடு, நியான் என்பவை பிற சேர்மங்க்களாகும். இதன் செழுமை மில்லியனில் 5.2 பங்குகள் ஆகும். பூமியில் அரிதாகக் கிடைத்தாலும் அண்டப் பெருவெளியில் நீரியத்திற்கு அடுத்து மிகுதியாக இருப்பது ஈலியமாகும். இதன் பங்கு 7%. நீரியமும் ஈலியமும் சேர்ந்து அண்டப் பெருவெளியில் 99.9%ஆக உள்ளது. வாயு நிலையில் மட்டுமே காணப்படும் இத்தனிமத்தின் உருகு விலையும் கொதி நிலையும் மற்ற தனிமங்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Cronyn, Marshall W. (August 2003). "The Proper Place for Hydrogen in the Periodic Table". Journal of Chemical Education 80 (8): 947–951. doi:10.1021/ed080p947. Bibcode: 2003JChEd..80..947C. https://archive.org/details/sim_journal-of-chemical-education_2003-08_80_8/page/947. 
  2. Vinson, Greg (2008). "Hydrogen is a Halogen". HydrogenTwo.com. Archived from the original on January 10, 2012. பார்க்கப்பட்ட நாள் January 14, 2012.
  3. Kaesz, Herb; Atkins, Peter (November–December 2003). "A Central Position for Hydrogen in the Periodic Table". Chemistry International (International Union of Pure and Applied Chemistry) 25 (6): 14. http://www.iupac.org/publications/ci/2003/2506/ud.html. பார்த்த நாள்: January 19, 2012. 
  4. Winter, Mark (1993–2011). "Janet periodic table". WebElements. Archived from the original on April 6, 2012. பார்க்கப்பட்ட நாள் January 19, 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிடைக்குழு_1_தனிமங்கள்&oldid=3586602" இலிருந்து மீள்விக்கப்பட்டது