உள்ளடக்கத்துக்குச் செல்

விழுப்புரம் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விழுப்புரம்
மாவட்டம்

செஞ்சிக் கோட்டை

விழுப்புரம் மாவட்டம்:அமைந்துள்ள இடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
தலைநகரம் விழுப்புரம்
பகுதி வட மாவட்டம்
ஆட்சியர்
திரு. டி. மோகன்,
இ.ஆ.ப.
காவல்துறைக்
கண்காணிப்பாளர்

மரு. என். ஸ்ரீநாதா,
இ.கா.ப.
நகராட்சிகள் 3
வருவாய் கோட்டங்கள் 2
வட்டங்கள் 9
பேரூராட்சிகள் 7
ஊராட்சி ஒன்றியங்கள் 13
ஊராட்சிகள் 688
வருவாய் கிராமங்கள் 928
சட்டமன்றத் தொகுதிகள் 7
மக்களவைத் தொகுதிகள் 1
பரப்பளவு 3715.33 ச.கி.மீ.
மக்கள் தொகை
20,85,790 (2011)
அலுவல்
மொழி(கள்)

தமிழ்
நேர வலயம்
இ.சீ.நே.
(ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு
604 xxx, 605 6xx,
606 2xx
தொலைபேசிக்
குறியீடு

04146, 04147, 04149, 04151, 04153
வாகனப் பதிவு
TN-32, TN-16
பாலின விகிதம்
987 /
கல்வியறிவு
71.88%
இணையதளம் viluppuram

விழுப்புரம் மாவட்டம் (Villupuram district) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் விழுப்புரம் ஆகும். இம்மாவட்டம் திருச்சி – சென்னையை சாலையை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 45-இன் நடுவே அமைந்துள்ளது. விழுப்புரத்தில் மிகப்பெரிய தொடர்வண்டிச் சந்திப்பு உள்ளது. இது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் (பரப்பளவில்) இங்கு அமைந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

வரலாறு

[தொகு]
செஞ்சிக் கோட்டையின் அகலப்பரப்புக் காட்சி

செப்டம்பர் 30, 1993-ஆம் ஆண்டு முந்தைய தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம் இராமசாமி படையாட்சியார் மாவட்டம் என உருவாக்கப்பட்டு, பின்னர் விழுப்புரம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[1] விழுப்புரம் மாவட்டம் முந்தைய தென் ஆற்காடு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. சங்ககாலத்தில் விழுப்புரம் , கடலூர் , கள்ளக்குறிச்சி , மற்றும் புதுச்சேரி மாநிலம் ஆகிய நாண்கு மாவட்டங்கள் சங்ககால தமிழகத்தில் தொண்டை மண்டலத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

எல்லைகள்

[தொகு]

கிழக்கில் புதுச்சேரி மாநிலமும், தெற்கில் கடலூர் மாவட்டமும், தென்மேற்கு/மேற்கில் கள்ளக்குறிச்சி மாவட்டமும், வடமேற்கே திருவண்ணாமலை மாவட்டமும், தென்கிழக்கில் கடலூர் மாவட்டமும், வடக்கில் செங்கல்பட்டு மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன.

புவியியல்

[தொகு]

தென்பெண்ணை ஆறு ,மணிமுத்தாறு, கோமுகி ஆறு, கெடிலம் ஆறு, சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு ஆகியன இம்மாவட்டத்தில் பாயும் குறிப்பிடத்தக்க ஆறுகளாகும். இம்மாவட்டத்தில் கப்பியாம்புலியூர் ஏரி, கெங்கவரம் ஏரி, சாலமேடு ஏரி, மல்லிகைப்பட்டு ஏரி, கோமாலூர் ஏரி ஆகியவை குறிப்பிடத்தக்க ஏரிகளாகும்.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

3,725.54 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 3,458,873 ஆகும். அதில் ஆண்கள் 1,740,819 ஆகவும், பெண்கள் 1,718,054 ஆகவும் உள்ளனர். கடந்த பத்தாண்டுகளில், மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 16.84% ஆக உயர்ந்துள்ளது. பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு, 987 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம், ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டரில் 481 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். மாவட்ட சராசரி எழுத்தறிவு 71.88% ஆகவுள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 404,106 ஆகவுள்ளனர்.[2]

மாவட்ட வருவாய் நிர்வாகம்

[தொகு]

2019-இல் விழுப்புரம் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறுவப்பட்டப் பின்னர், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் மற்றும் திண்டிவனம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 9 வருவாய் வட்டங்களும், 34 குறுவட்டங்களும், 932 வருவாய் கிரமங்களும் கொண்டுள்ளது.[3][4]

வருவாய் வட்டங்கள்

[தொகு]
  1. விழுப்புரம் வட்டம்
  2. செஞ்சி வட்டம்
  3. திண்டிவனம் வட்டம்
  4. வானூர் வட்டம்
  5. விக்கிரவாண்டி வட்டம்
  6. மரக்காணம் வட்டம்
  7. மேல்மலையனூர் வட்டம்
  8. கண்டாச்சிபுரம் வட்டம்
  9. திருவெண்ணெய்நல்லூர் வட்டம் (புதியது).

உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் 3 நகராட்சிகளும், 7 பேரூராட்சிகளும்[5], மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையும், 13 ஊராட்சி ஒன்றியங்களும் கொண்டது.[6]

நகராட்சிகள்

[தொகு]

பேரூராட்சிகள்

[தொகு]

ஊராட்சி ஒன்றியங்கள்

[தொகு]

அரசியல்

[தொகு]

விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், ஆரணி என 2 மக்களவைத் தொகுதிகளையும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[7]

மக்களவை உறுப்பினர்கள்
17வது மக்களவைத் தொகுதி(2019-2024)
11 விழுப்புரம் திரு.சி.ரவிக்குமார் (திமுக)
சட்டமன்ற உறுப்பினர்கள்
16வது சட்டமன்றத் தொகுதி(2021-2026)
70 செஞ்சி திரு.கே.எஸ்.மஸ்தான் (திமுக)
71 மயிலம் திரு.ச.சிவக்குமார் (பாமக)
72 திண்டிவனம் திரு.பொ.அர்ச்சுனன் (அதிமுக)
73 வானூர் திரு.சக்கரபாணி (அதிமுக)
74 விழுப்புரம் திரு.இரா.லட்சுமனன் (திமுக)
75 விக்கிரவாண்டி திரு.நா.புகழேந்தி (திமுக)
76 திருக்கோவிலூர் திரு.க.பொன்முடி (திமுக)

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

இம்மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

  1. செஞ்சி (சட்டமன்றத் தொகுதி)
  2. மயிலம் (சட்டமன்றத் தொகுதி)
  3. திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி)
  4. வானூர் (சட்டமன்றத் தொகுதி)
  5. விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி)
  6. விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி)
  7. திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி)

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் மறுசீரமைப்பு காரணமாக விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் (சட்டமன்றத் தொகுதி), வானூர் (சட்டமன்றத் தொகுதி), விழுப்புரம் (சட்டமன்றத் தொகுதி), விக்கிரவாண்டி (சட்டமன்றத் தொகுதி) என 4 சட்டமன்றத் தொகுதிகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோயிலூர் (சட்டமன்றத் தொகுதி), உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி) என 2 சட்டமன்றத் தொகுதிகளும் அடங்கும்.

விழுப்புரம் மாவட்டத்திலிருக்கும் செஞ்சி (சட்டமன்றத் தொகுதி), மயிலம் (சட்டமன்றத் தொகுதி) என 2 சட்டமன்றத் தொகுதிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஆரணி (சட்டமன்றத் தொகுதி), போளூர் (சட்டமன்றத் தொகுதி), செய்யார் (சட்டமன்றத் தொகுதி), வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளும் சேர்த்து ஆரணி மக்களவைத் தொகுதி அமைக்கப்பட்டிருக்கிறது.

நீர்வளம்

[தொகு]

மாவட்டத்தின் சராசரி மழையளவு 1060 மி.மீ.. இதில் வடகிழக்கு பருவமழை மூலம் மட்டும் 638 மி.மீ (60%) மழை கிடைக்கப்பெற்றுள்ளது.[8]

இம்மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திறந்தவெளி கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகள் விளங்குகின்றன. நிகர நீர்பாசனப் பரப்பு சுமார் 2.43 இலட்சம் எக்டராக உள்ளது. இது மொத்த சாகுபடி பரப்பில் 33.6% மற்றும் நிகர சாகுபடி பரப்பில் 72% ஆகும். இம்மாவட்டத்தில் வீடூர், கோமுகி மற்றும் மணிமுத்தாறு அணைக்கட்டு மூலம் 18553 ஏக்கர் பரப்பிலும், சாத்தனூர் அணைக்கட்டு மூலம் 35000 ஏக்கர் பரப்பிலும் பாசனம் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆறுகள்

[தொகு]

வேளாண்மை

[தொகு]

விழுப்புரம் மாவட்டத்தில் 75% மக்கள் விவசாயத்தையும், அது சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளதால், வேளாண்மையே, இந்த மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. இம் மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 722203 எக்டரில் 337305 எக்டரை (45%) சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. இதில் 137647 எக்டர் பரப்பளவில் ஒருமுறைக்கு மேல் பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. பயிர் சாகுபடி திறன் அதாவது மொத்த சாகுபடி பரப்பிற்கும் நிகர சாகுபடி பரப்பிற்கும் உள்ள விகிதம் 1.40 ஆகும். இது நமது மாநில சராசரி (1.25)ஐ விட அதிகமாகும்.விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 5.68 இலட்சம் பண்ணை குடும்பங்கள் உள்ளன. 75% குறு விவசாயிகள், 16% சிறு விவசாயிகள் மற்றும் 9% பிற விவசாயிகள் முறையே 33, 25 மற்றும் 42% நிலப்பரப்பினை கொண்டுள்ளனர். பிற விவசாயிகளின் நிலப்பரப்பு மாநில அளவில் சுமார் 34% மட்டுமே உள்ளது.[9]

பயிர்கள்

[தொகு]

நெல் இம்மாவட்டத்தின் பிரதான பயிராக விளங்குகிறது. சொர்ணவாரி, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிரிடப்படுகிறது. மொத்த பயிர் சாகுபடி பரப்பில் 40% நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல்லுக்கு அடுத்தபடியாக பயறுவகை பயிர்கள் இம்மாவட்டத்தில் முக்கிய உணவுதானிய பயிராக விளங்குகிறது. அதில் உளுந்து 80% சாகுபடி செய்யப்படுகிறது. கரும்பு இம்மாவட்டத்தின் முக்கிய பணப்பயிராகும். இம்மாவட்டத்தில் உள்ள 7 கரும்பு ஆலைகளுக்கு முழுமையாகவும் மற்றும் பிற மாவட்டத்தில் உள்ள 5 சர்க்கரை ஆலைகளுக்கு பகுதி அளவிலும் கரும்பு வழங்கப்படுகிறது. எனவே விழுப்புரம் மாவட்டம் தமிழகத்தின் சர்க்கரை கிண்ணமாக விளங்குகிறது.

மாநில உணவு தானிய உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் மிகவும் முக்கிய பங்கை வகிக்கிறது. 2013-14ஆம் ஆண்டு முதல் 2017-18 வரை தொடர்ந்து இம்மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாநில உற்பத்தியில் இம்மாவட்டத்தின் பங்களிப்பு 10 சதவிகிதத்திற்கு மேல் உள்ளது.

பயறுவகை பயிர் உற்பத்தியில் உற்பத்தி திறனில் மாநில அளவில் 850 கிலோ சராசரி மகசூல் பெற்று முதலிடத்தில் உள்ளது. 2013-14ம் ஆண்டு தேசிய அளவில் பயிர் அறுவடை பரிசோதனை மகசூல் அடிப்படையில் ஒரு எக்டருக்கு 1792 கிலோ விளைவித்து சாதனை செய்த திருமதி.விசாலாட்சி, க/பெ.வேலு, கொந்தமூர், வானூர் வட்டாரம் அவர்களுக்கு தேசிய விருதான கிரிஷி கர்மான் விருது மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால், வேளாண் உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

விவசாய உற்பத்தியை உயர்த்த வேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும், அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர்கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும், விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த, ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில்நுட்பங்களுடன் கூடுதலாக தீவிரமான ஒருங்கிணைந்த வேளாண்மை (NMSA) , பயனற்ற நில மேலாண்மை திட்டம், நீடித்த வறட்சி நில வேளாண்மை, கூட்டுப்பண்ணையம், விரிவான நீர்வடி நிலப்பகுதி வளர்ச்சி செயல்பாடுகள், நுண்ணீர்பாசனம் மூலமாக நீர் மேலாண்மை, பசுமை உரங்கள், உயிர் உரங்கள் மூலம் மண் வளம் வளர்ச்சி, நீடித்த கரும்பு விவசாய வளர்ச்சி முன்னெடுப்புகள், இயற்கை உர வேளாண்மை, ஒருங்கிணைந்த சத்து மேலாண்மை மேற்கொள்ளல் (INM), ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை (IPM), போன்ற தொழில்நுட்பங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "விழுப்புரம் வரலாறு".
  2. Viluppuram (Villupuram) District : Census 2011 data
  3. விழுப்புரம் மாவட்ட நிர்வாகம்
  4. மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு
  5. விழுப்புரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகள்
  6. விழுப்புரம் மாவட்ட வட்டார ஊராட்சி ஒன்றியங்கள் -13
  7. விழுப்புரம் மாவட்ட மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகள்
  8. http://www.tnenvis.nic.in/WriteReadData/UserFiles/file/8_VILLUPURAM_RAINFALL.pdf
  9. https://viluppuram.nic.in/departments/agriculture/

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விழுப்புரம்_மாவட்டம்&oldid=4126888" இலிருந்து மீள்விக்கப்பட்டது