காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காவிரி நதி பாயும் விவர வரைபடம்

காவிரி ஆற்று நீர்ப் பிணக்கு என்பது இந்திய மாநிலங்களான தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் இடையேலான ஆற்று நீர்ப் பங்கீட்டுப் பிணக்கு ஆகும். காவிரியாற்றின் நீரை கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகிர்ந்துகொள்ள வேண்டும். 1892 மற்றும் 1924 ஆண்டுகளில் சென்னை மாகாணத்திற்கும் மைசூர் மாகாணத்திற்கும் இடையே நிகழ்ந்த இரு வேறு முரண்பட்ட ஒப்பந்தங்கள் இந்த நீர் பங்கீட்டு பிரச்சினைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்து விடுவது குறித்து கர்நாடகாவில் பல இடங்களில் வன்முறையில் நடந்தது. கலவரத்தின் உச்சக்கட்டமாக கர்நாடகத்தின் பல பகுதிகளில் தமிழக வாகனங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன.கடந்த பல வருடங்களாக நீடித்து வரும் இந்த காவிரி நீர் பகிர்வு பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முதல் கலவரம் அல்ல இது. சரியாக 25வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற காவிரிப் பிரச்சனை காரணமாக நாம் நேற்று கண்டதைவிட பல மடங்கு பெரிய கலவரம் 1991-ம் ஆண்டு வெடித்தது....12-13, டிசம்பர் -1991தென் கர்நாடக பகுதிகளில் தான் இந்த கலவரம் பெரிதாக உண்டானது. முக்கியமாக பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில். காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையை எதிர்த்து இந்த கலவரம் நடந்தது.தமிழர்கள் மீது தாக்குதல்!இந்த கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள், தென் கர்நாடக பகுதியில் வசித்து வந்த தமிழர்கள் தான். எல்லை பகுதியில் வாழ்ந்து மக்கள் மீது கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்தனர்.

பெங்களூர் நகர்புறம், பெங்களூர் கிராமப்புறம், ராமநகரம், மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் தமிழக மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஜூன் 25, 1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்றம் கர்நாடக அரசை தமிழகத்திற்கு 205 பில்லியன் ft3 அளவு நீரை அந்த வருடத்திற்குள் திறந்துவிட ஆணை பிறப்பித்தது. பிறகு கர்நாடக அரசு காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்-ல் முறையிட்டது. இந்திய அரசு டிசம்பர் 11,1991 அன்று காவிரி நீர் நடுவர் மன்ற ஆணையை நிறைவேற்ற கூற, மறுநாளே கர்நாடகம் முழுவதும் பெரியளவில் கலவரம் வெடித்தன. கர்நாடக அரசியல்வாதி வட்டாள் நாகராஜ் தலைமையில் பந்த் அறிவிக்கப்பட்டது. காவிரி கர்நாடகத்தின் தாய், அதை நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறி நீர் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. டிசம்பர் 12 தேதி முதலே சாலைகளில் கலவரக்காரர்கள் அதிகரித்தனர், தமிழ் பேசும் மக்கள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, நீலகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் வசித்து வந்த கன்னட மக்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மாற்றி மாற்றி நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களால் ஏறத்தாழ 17கோடி மதிப்பிலான சொத்துக்கள் அளிக்கப்பட்டன என இந்திய மனித உரிமை ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது

நீர்ப்பங்கீட்டு அட்டவணை[தொகு]

கர்நாடகா தமிழ்நாடு கேரளம் புதுச்சேரி Total
நீர் பிடிப்பு பகுதி (in km²)[1] 34,273 (42%) 44,016 (54%) 2,866 (3.5%) 148(-) 81,155
வறண்ட பகுதி (in km²) [2] 21,870 (63.8%) 12,790 (29.2%) -- -- 34,660
மாநிலத்தின் பங்களிப்பு (கர்நாடகா) (in billion ft³)[3] 425 (53.7%) 252 (31.8%) 113 (14.3%) 790
மாநிலத்தின் பங்களிப்பு (தமிழ்நாடு)(in billion ft³)[3][4] 392 (52.9%) 222 (30%) 126 (17%) 740
மாநிலங்கள் கோரும் அளவு[சான்று தேவை] 465 (41%) 566 (50%) 100 (9%) 9.3 (1%) 1140.3
மாநிலங்கள் கோரும் அளவு (தமிழ்நாட்டின் படி )[சான்று தேவை] 177 (24%) 566 (76%) 5 (1%) - 748
ஆற்று நீர் ஆணயம் நிர்ணயித்த அளவு 2007 [5] 270 (37%) 419 (58%) 30 (4%) 7 (1%) 726

வரலாறு[தொகு]

தலைக்காவிரி - காவிரி உற்பத்தியாகும் இடம்

இருநூறு ஆண்டுகளுக்கு முன் 1807-ஆம் ஆண்டு மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் இடையே காவிரி நதி நீரைப் பகிர்ந்துகொள்வதில் சிக்கல் எழுந்தது. மைசூர் அரசு போதைய நடுவண் அரசிடம் முறையிட்டதன் பேரில் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1892-ஆம் ஆண்டு முதன்முதலாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆறு விதிகளைக் கொண்டிருந்த அந்த ஒப்பந்தத்தின்படி மைசூர் அரசு காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணை ஒன்றைக் கட்டினால் அது குறித்த முழு விவரங்களையும் சென்னை மாகாணத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

1910இல் மைசூர் அரசு கண்ணம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி. நீரைத் தேக்கும் கொள்ளளவுடன் அணை ஒன்றைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு அனுமதி கேட்டபோது, சென்னை மாகாண அரசு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் சிக்கல் எழுந்து., மைசூர் அரசு அப்போதைய நடுவண் அரசிடம் பிரச்சினையைக் கொண்டு சென்றது. அப்போதைய நடுவண் அரசு, கண்ணம்பாடி அணையின் கொள்ளளவு 11 டி.எம்.சி.க்கு மேல் போகக்கூடாது என்ற நிபந்தனையோடு அனுமதி அளித்தது. அதற்கு ஒப்புக்கொண்ட மைசூர் அரசு, தான் திட்டமிட்ட 41.5 டி.எம்.சி. அளவுக்கே அணையைக் கட்ட ஆரம்பித்தது.

மைசூர் அரசும் சென்னை மாகாண அரசும் முரண்பட்ட நிலையை எடுத்த காரணத்தால் அன்றைய பிரித்தானிய அரசு 1892-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிரிஃபின் என்பவரை நடுவராக நியமித்து உத்தரவிட்டது. அவர் 1914ஆம் ஆண்டு மே மாதம்

"இரண்டு தரப்பினருக்கும் திருப்தியளிக்கும் ஒரு தீர்வைத் தர முடியாததற்காக நான் வருந்துகிறேன். இரண்டு தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளும் ஏற்கத் தக்கவையாக இல்லை... இரு தரப்பினருமே ஒரு சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ஆர்வமற்றவர்களாக இருந்தனர்... தற்போதைய சென்னை மாகாணத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியம். அதே சமயம், மைசூர் அரசு சென்னை மாகாணத்துக்குத் தந்தது போக மிச்சமிருக்கும் நீர் முழுவதையும் பயன்படுத்திக்கொள்ளலாம்"

என கிரிஃபின் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.[6]

புதிய ஒப்பந்தம் 1924[தொகு]

கிருஷ்ணராஜ சாகர் அணை எனப்படும் கண்ணம்பாடி அணை

கிரிஃபின் கூறியதைச் சென்னை மாகாண அரசு ஏற்கவில்லை. அது மேல்முறையீடு செய்தது. மீண்டும் மைசூர் அரசுக்கும் சென்னை மாகாண அரசுக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கின. அதன் இறுதியாக 1924 பிப்ரவரியில் ஒரு புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தம் ஐம்பது ஆண்டுகள் நடை முறையில் இருக்குமென்று அப்போது தீர்மானிக்கப்பட்டது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 1929, 1933 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட சில துணை ஒப்பந்தங்களின் படி, 1929 ஒப்பந்தப்படி மைசூர் அரசு கிருஷ்ணராஜ சாகர் அணைத் திட்டத்தையும் சென்னை மாகாண அரசு மேட்டூர் அணைத் திட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள வகை செய்யப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு காவிரிச் சிக்கல் மேலும் தீவிரமடைந்தது.

உண்மை அறியும் குழு[தொகு]

மாநிலங்களுக்கு இடையே ஏற்படும் நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்களுக்கு இணக்கமான முடிவுகளை எடுக்க 1924ஆம் ஆண்டு ஒப்பந்தம் முடிவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு "காவிரி உண்மை அறியும் குழு" ஒன்றை அமைத்தது. அந்தக் குழு 1972இல் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1976 ஆகஸ்டு மாதத்தில் ஓர் ஒப்பந்தம் எட்டப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநில அரசுகள் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்தாமல் பின்வாங்கிக்கொண்டன.

காவிரி நடுவர் மன்றம்[தொகு]

ஒகேனக்கல் அருவியைத் தாண்டிச் செல்லும் காவிரி

இந்தியாவில் பதினான்கு மகாநதிகள் உள்ளன. அவை ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. 44 நடுத்தர ஆறுகளுள் ஒன்பது ஆறுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்றன. மாநிலங்களுக்கு இடையே ஓடுகிற ஆற்று நீரைப் பங்கீடு செய்வதில் வரும் சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இதற்கெனப் பிரிவு 262 சேர்க்கப்பட்டுள்ளது. நதிநீர்ப் பங்கீடு பற்றிய சிக்கல் எழுந்தால் அதை நாடாளுமன்றம் தலையிட்டுத் தீர்த்துவைக்க வேண்டும் என அந்தப் பிரிவு கூறுகிறது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 262 -இன்படி மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பிரச்சினைகள் சட்டம் 1956-இல் இயற்றப்பட்டது. காவிரிப் பிரச்சினை போலவே மேலும் பல நீர்ச் சிக்கல்களுக்கும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கிருஷ்ணா ஆற்றுநீரைப் பங்கிட்டுக்கொள்வதில் எதிர்கொண்ட சிக்கலைத் தீர்க்க 1969-இல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மேலும், கோதாவரி, நர்மதா முதலிய ஆறுகளின் நீரைப் பங்கிடுவதிலும் சிக்கல் எழுந்து அவற்றுக்காகவும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் எதுவும் நிரந்தரமாகத் தீர்க்கப்படவில்லை. பல ஆண்டுகள் சென்ற பிறகு ஒன்றிய அரசு காவிரி நீர்ப்பங்கீட்டிற்காக 1990-ல் 'காவிரி நடுவர் மன்றம்' அமைத்தது.[7][8]

தீர்ப்பு[தொகு]

1991இல் தமிழ்நாட்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டுமென்று ஒரு இடைக்கால ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. 1991 தமிழருக்கெதிரான கருநாடகக் கலவரம் காவிரி ஆற்று நீர்ச் சிக்கலில் பிப்ரவ௨ரி 5, 2007-ஆம்நாள் காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்களைக்கொண்ட, ஐந்து தொகுதிகளையும் (வால்யூம்கள்) கொண்ட அத்தீர்ப்பில்,[9] தமிழகத்திற்கு 419 பில்லியன் அடிகள்³ (12 கி. மீ.³) அளவு காவிரி நீரும், கர்நாடகத்திற்கு 270 பில்லியன் அடிகள்³ (7.6 கி. மீ³) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி என்.பி. சிங் தலைமையிலான நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் காவிரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என கணக்கிடப்பட்டு அது தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பான்டிச்சேரி (புதுச்சேரி) ஆகிய மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு 419 டி.எம்.சி. வழங்கப்பட்டிருந்தாலும், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு ஆண்டிற்கு, வெறும் 192 பில்லியன் அடிகள்³ (5.4 கி. மீ.³) அளவு தண்ணீரை வழங்கியது. மீதமுள்ள 227 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்தில் உள்ள நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து கிடைக்குமென நடுவர் மன்றம் கூறியிருக்கிறது. மேலும், கேரள மாநிலத்திற்கு 30 பில்லியன் அடிகள்³ மற்றும் பான்டிச்சேரிக்கு 7 பில்லியன் அடிகள்³ அளவு வழங்கப்பட்டது. தமிழகத்துக்கு வழங்கப்பட்டுள்ள நீரில் 7 டி.எம்.சியைப் புதுவைக்குத் தர வேண்டும். இந்தத் தீர்ப்பின் மூலம் 1892 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் இனிச் செயலற்றுப்போகும்.[10]

மேல் முறையீடு[தொகு]

பாதிக்கப்பட்டதாகக் கருதுகிற மாநிலங்கள் 90 நாட்களில் மேல்முறையீடு செய்து கொள்ளலாம் என்று நடுவர் மன்றம் அனுமதித்திருப்பதையொட்டி இப்போது கர்நாடகமும் தமிழ்நாடும் மறு ஆய்வு மனு செய்யப்போவதாக அறிவித்தன. அந்த மனுக்களின் மீது ஒரு ஆண்டுக்குள் நடுவர் மன்றம் தனது முடிவைத் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு இத்தீர்ப்பை ஏற்றுக்கொண்ட போதும், கர்நாடகம் இத்தீர்ப்பில் மகிழ்ச்சியடையவில்லை, அதனால் மேல்முறையீடு செய்தது.

அரசாணை[தொகு]

2007ல் தீர்ப்பு வழங்கப்பட்டாலும் இத்தீர்ப்பு ஒன்றிய அரசின் அரசாணையில் இடம் பெறவில்லை. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து ஒன்றிய அரசு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டது. [11]

காவிரி மேலாண்மை ஆணையம்[தொகு]

காவிரி நதிநீர் பங்கிட்டு வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007 இல் இறுதி உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி நீர் வழங்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு கர்நாடகா கேரளம் ஆகிய மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த இவ்வழக்கில் 2018 பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நீரின் அளவை 192 டி.எம்.சியில் இருந்து 177.25 டி.எம்.சி ஆக குறைக்கப்பட்டது. கர்நாடகாவுக்கு 284.75 டி.எம்.சி.நீரும் கேரளாவுக்கு 30 டி.எம்.சி நீரும் புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி நீரும் வழங்க வேண்டும் என்றும் இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த மத்தில அரசு 6 வாரங்களுக்குள் செயல் திட்டம் உருவாக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. 2018 மே 14 ஆம் தேதியில் மத்திய அரசு 14 பக்க செயல்திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்தது. இதில் தமிழகம்- கேரளா புதுச்சேரி அரசுகள் பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டன. தமிழக அரசின் கோரிக்கையின்படி காவிரி மேலாண்மை ஆணையம் என பெயர் மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவிலிருந்து புது தில்லிக்கு மாற்றப்பட்டது. நீர் பங்கீடு ஆய்வுகள் மேற்கொள்வது அணைகளை திறப்பது இறுதி முடிவை எடுப்பது உள்ளிட்ட அனைத்து அதிகாரமும் ஆணையத்துக்கே இருக்க வேண்டும் என்பதையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதன் தொடர்பாக திருத்தப்பட்ட இறுதி அறிக்கையை 2018 மே 18 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு அறிக்கையின்படி காவிரி மேலாண்மை வாரியமானது வரும் பருவ காலத்துக்குள் மத்திய அரசால் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பை அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி சூன் 1 ஆம் நாள் காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பு மத்திய அரசிதழ் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் தற்காலிக தலைவராக மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் யூ. பி. சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.[12]இந்த ஆணையத்திற்கான தமிழக உறுப்பினர்களாக தமிழக பொதுப்பணித்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.[13]

வெளி இணைப்புகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]