மேலணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேலணையிலிருந்து கொள்ளிடத்தில் நீர் திறந்து விடப்படுகிறது.
மேலணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள காவிரி
முக்கொம்பு முதல் கல்லணை வரை காவிரியின் வரைபடம்

மேலணை, முக்கொம்பு அணை’ (Upper Anaicut, Mukkombu Anai) என்பது காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பு என்னுமிடத்தில் உள்ள அணையாகும்.[1]

அணையின் விபரம்[தொகு]

இது திருச்சிக்கு மேற்கே முக்கொம்பு (மேலணை) 15 கி.மீ தொலைவில் கரூர் செல்லும் வழியில் உள்ளது. இங்கிருந்துதான் காவிரி ஆறானது காவிரி, கொள்ளிடம் என இரண்டாகப் பிரிகிறது. கொள்ளிடம் ஆறு காவிரியின் வட புறமாகப் பாய்கிறது. காவிரியின் தென்புறம் முக்கொம்பும் வடபுறம் வாத்தலையும் உள்ளன. காவிரியில் வரும் தண்ணீர் முக்கொம்பில் இருந்து காவிரியைக் காட்டிலும் கொள்ளிடம் ஆறுவழியாக அதிக அளவில் வெளியேறி கடலில் கலந்து வந்தது. இதை முறைப்படுத்தி அதிக அளவு நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தி முறைப்படுத்த ஆங்கிலேய அரசு முடிவெடுத்தது. இதையடுத்து காவிரிப்பாசனப் பகுதி பொறியாளராக 1829இல் பொறுப்பேற்ற சர் ஆர்தர் மணல் மேடுகளால் நீர் போக்கு தடைப்பட்டிருந்த கல்லணையில் மணல் போக்கிகளை அமைத்தார். கல்லணையின் கட்டுமான உத்தியால் கவரப்பட்ட அவர், கல்லணையை முன்மாதிரியாகக் கொண்டு, முக்கொம்பில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 630 மீட்டர் நீளத்தில் 40 அடி அகலத்தில் ஆறு அடி உயர 45 மதகுகள் கொண்ட மேலணையைக் கட்டினார். இந்தப் பணிகள் 1834இல் தொடங்கி 1836இல் முடிக்கப்பட்டது. அதன் பிறகு 1846இல் அணையின்மீது பாலம் உள்ளிட்டவை கட்டப்பட்டன. இவ்வணையிலிருந்து காவிரியின் தென்புறமாக கால்வாய் வெட்டப்பட்டு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் சென்று கடலில் கலப்பது தடுக்கப்பட்டது. மேலும் வெள்ளக் காலத்தில் மட்டும் பெருகி வரும் நீரானது இவ்வணை மூலம் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டாப் பகுதி பாதுகாக்கப்படுகிறது. இவ்வணைப் பகுதியில் உள்ள பூங்காவும், இவ்வணையும் சுற்றுலா இடங்களாகத் திகழ்கின்றன.

மேட்டூர் அணையில் இருந்து 177 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள இந்த மேலணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2.70 லட்சம் கன அடி தண்ணீர் திறக்க இயலும்.

பாலம் உடைந்தது[தொகு]

2018 ஆகத்து 22 அன்று இரவு இந்த அணையில் காவேரி வெள்ள அபாய நீர் வரத்தை கொள்ளிடத்தில் கதவணைகள் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடம் பாலத்தின் ஐந்தாவது தூண் முதல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஒன்பது தூண்களும், மதகுகளும் 408 அடி நீளத்துக்கு உடைந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "முக்கொம்பு - கொள்ளிடம் மேலணை உடைந்தது - 7 மதகுகள் முழுமையாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன". செய்தி. இந்து தமிழ். 23 ஆகத்து 2018. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2018.
  2. ஜெ. குணசேகர் (ஆகத்து 24 2018). "டெல்டா பாசன விவசாயிகளைப் பாதுகாத்த கொள்ளிடம் மேலணையின் 182 ஆண்டு கால சகாப்தம் நிறைவு 40க்கும் மேற்பட்ட வெள்ளங்களை எதிர்கொண்ட அணை". இந்து தமிழ். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேலணை&oldid=3773993" இலிருந்து மீள்விக்கப்பட்டது