பவானி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பவானி ஆறு காவிரியுடன் கலக்கும் கூடுதுறை

.

பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது. [1] [2] இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் . உள்ள குந்தா மலைப்பகுதியில் தென்மேற்கு மூலை முகட்டில் உருவாகிறது. மலை முகட்டிலிருந்து கீழிறங்கத் தொடங்கும் பகுதியில் மேல் பவானி அணை கட்டப்டுள்ளது.அங்கிருந்து தென்மேற்காக கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் கிழக்கு நோக்கி திரும்பி பாய்கிறது. சிறுவாணி ஆறு பவானியுடன் இணைந்தபின் மீண்டும் தமிழகத்துக்குள் பவானி நுழைகிறது[3]. பின் குந்தா ஆறு பவானியுடன் இணைகிறது.இதற்கு கீழ் பில்லூர் அணை பவானியில் கட்டப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆறு சமவெளியை அடைகிறது. பின் சிறுமுகை வழியாக கொத்தமங்கலம் அருகே கீழ் பவானி அணைக்கட்டு எனப்படும் பவானி சாகர் அணையை அடைகிறது .பவானி சாகர் நீர்த்தேக்கத்தில் மோயார் ஆறானது இணைந்து கொள்கிறது.

கீழ் பவானி திட்ட கால்வாய் பவானி சாகர் அணைக்கட்டிலிருந்து தொடங்கி ஈரோடு கரூர் மாவட்டங்களை வளப்படுத்துகிறது.

இது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ளது. பின் பவானி ஆறு கோபிச்செட்டிப்பாளையம் வழியாக பாய்ந்து பவானி நகரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. காவிரி ஆற்றுடன் கலக்கும் முன் இதிலிருந்து காளிங்கராயன் வாய்க்கால் தொடங்குகிறது.

அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாயும் பவானி ஆற்றில் அணை கட்டி[4][5] பாரதப்புழா ஆற்றில் திருப்பிவிட கேரள அரசு திட்டமிட்டு வருகிறது.[6] தற்போதைய சூழலில் இந்த ஆறு சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மாசடைந்து உள்ளது.[7]

ஆடிப்பெருக்கு விழா[தொகு]

ஒவ்வோர் ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் திகதி அன்று, நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாக திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூசைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக நதித்தாயை வணங்குவர். பூசைக்காக, மலர் மாலை, பச்சரிசி, ஊதுபத்தி, சாம்பிராணி, மஞ்சள், குங்குமம், தேங்காய், வெற்றிலை பாக்கு, பழங்கள், வெல்லம், மஞ்சள் கயிறு, கற்பூரம், விபூதி, சந்தனம், நாணயங்கள், நறுமணப் பூக்கள், தேன், பச்சரிசி மாவு, பன்னீர், வாழை இலை போன்றவற்றைக் கொண்டு சென்று, நதித்தாய்க்குப் படைத்து பண்டிகையாகக் கொண்டாடுவது வழக்கம். நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற வேண்டுகின்றனர்

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பவானி ஆறு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. முனைவர் ந. ஆனந்தி, கார்மேகக் கவிஞர் இயற்றிய கொங்குமண்டல சதகம் மூலமும் தெளிவுரையும், சாரதா பதிப்பகம், 2008, முன்னுரை பக்கம் 14
  2. சாந்துவரு வானி நீரினும் தீந்தண் சாயலன் மன்ற தானே. பதிற்றுப்பத்து (86)
  3. பவானி ஆறு - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  4. "Karunanidhi condemns Kerala move on dam on Bhavani". Archived from the original on 2012-06-20. பார்க்கப்பட்ட நாள் 2013-10-03.
  5. Opposition from Erode farmers over Kerala’s proposal for dam across Bhavani intensifies
  6. http://www.tngreenmovement.org/activities/outreach/7-bhavani-river-diversion-stopped.html[தொடர்பிழந்த இணைப்பு]
  7. நதியின் வாக்குமூலம்: கழிவுகளால் கண்ணீர் விடும் பவானி!தி இந்து தமிழ் ஜூன் 17 2015

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பவானி_ஆறு&oldid=3562167" இலிருந்து மீள்விக்கப்பட்டது