காரைக்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காரைக்கால்
—  city  —
காரைக்கால்
இருப்பிடம்: காரைக்கால்
, பாண்டிச்சேரி
அமைவிடம் 10°49′52″N 79°43′6″E / 10.83111°N 79.71833°E / 10.83111; 79.71833ஆள்கூற்று: 10°49′52″N 79°43′6″E / 10.83111°N 79.71833°E / 10.83111; 79.71833
நாடு  இந்தியா
மாநிலம் பாண்டிச்சேரி
மாவட்டம் காரைக்கால்
ஆளுநர் கிரண் பேடி[1]
முதலமைச்சர் வி. நாராயணசாமி[2]
மக்களவைத் தொகுதி காரைக்கால்
மக்கள் தொகை 2,27,589 (2009)
நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
இணையதளம் www.karaikal.gov.in

காரைக்கால்! மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி கொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார். இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது.

காரைக்கால் (ஆங்கிலம்:Karaikal), இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர்.

காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள புதுச்சேரி நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 227589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். காரைக்கால் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்கால் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் சில‌ ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள்.

நகரமைப்பு[தொகு]

காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். துறைமுக நகரான‌ காரைக்கால் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என்று மூன்று மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது தொழில் நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், நூற்பாலைகள், டைல்ஸ், பாலிதீன் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் திருநள்ளாறு காரைக்காலை ஒட்டிய திருத்தலம்.

காரைக்கால் துறைமுகம்[தொகு]

நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுகம்.

காரைக்கால் விமான நிலையம்[தொகு]

காரைக்காலில் கட்டமைக்கப்பட்டு 2014இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த விமான‌ நிலையம் இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் விமான‌ நிலையமாகத் திகழும். பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011இல் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது. இந்த விமான‌ நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள பல சமயத் திருத்தலங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் பேருதவியாக இருக்கும்.

சுற்றுலாத் தகவல்கள்[தொகு]

காரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள்:

  1. காரைக்கால் அம்மையார் கோவில்
  2. திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்(சனீஸ்வர ஸ்தலம்),காரைக்கால்
  3. தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை - காரைக்காலிலிருந்‌து 14 கி.மீ
  4. நாகூர் தர்கா - காரைக்காலிலிருந்‌து 15 கி.மீ
  5. வேளாங்கண்ணி மாதா திருத்தலம் - காரைக்காலிலிருந்‌து 28 கி.மீ
  6. சிக்கல் சிங்கார வேலவர் ஆலயம் - காரைக்காலிலிருந்‌து 25 கி.மீ
  7. திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் - காரைக்காலிருந்து 20 கி.மீ

ஆதாரங்கள்[தொகு]

  1. http://india.gov.in/govt/ltgovernor.php
  2. http://india.gov.in/govt/chiefminister.php
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.

வெளி இணைப்புகள்[தொகு]

அதிகாரப்பூர்வ இணையதளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்கால்&oldid=2251732" இருந்து மீள்விக்கப்பட்டது