ஆசியப் பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசியப் பனை
Asian palmyra (Borassus flabellifer).JPG
போராசஸ் பளாபெலிபர்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலை
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: பனை
குடும்பம்: பனை
பேரினம்: பனை
L
இனம்: B. flabellifer
இருசொற் பெயரீடு
Borassus flabellifer

ஆசியப் பனை என்பது, தமிழ்நாடு, இலங்கையின் வடபகுதி என்பன உள்ளிட்ட தென்னாசியா, தென்கிழக்காசியா போன்ற ஆசியப் பகுதிகளிலும், சில ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் காணப்படும் பனைச் சிற்றினம். இச்சிற்றினப்பெயரே பேரினம்,குடும்பம் ஆகியவற்றுக்கும் தமிழில் வழங்கப்படுகிறது போராசசு பளாபெல்லிபர் (Borassus flabellifer) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட இச்சிற்றினத்தைக் கள்ளுப் பனை, சர்க்கரைப் பனை, கம்போடியப் பனை ஆகிய பெயர்களாலும் அழைக்கின்றனர். இம்மரத்தின் இலை முதல் வேர் வரை அனைத்து பாகங்களும் மிக்க பயனுள்ளதாக விளங்குகின்றது.

இந்தியாவில், கேரளா, கோவா, மும்பை தொடக்கம் குஜராத் வரையுள்ள பகுதிகளிலும், தமிழ் நாட்டில், கன்னியாகுமரி தொடங்கி, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, தஞ்சாவூர் போன்ற இடங்கள் உட்படச் சென்னை வரை பனைகள் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தியாவில் மொத்தம் 8.59 கோடி பனைகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 5.10 கோடி பனைகள் தமிழ்நாட்டிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.[1][2]

தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படும் இது இம்மாநிலத்தின் தாவரம் எனவும் அறியப்படுகிறது. இலங்கையிலும், பனைகள் தமிழர் வாழுமிடங்களான வடபகுதியிலேயே மிகுந்து வளர்கின்றன. 1960களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி, இலங்கையின் வடபகுதியில் சுமார் 70 இலட்சம் பனைகள் வரை இருந்தனவாம். அண்மைக்கால உள்நாட்டுப் போர் காரணமாகவும், நிலத்தேவைகள் காரணமாகவும் ஏராளமான பனைகள் அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. உள்நாட்டுப் போரினால் மட்டும், 25 லட்சம் பனைகள் வரை அழிந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. அண்மைய கணக்கெடுப்பு ஒன்றின்படி, 30 லட்சம் பனைகள் மீந்து இருக்கக்கூடுமெனத் தெரியவருகிறது.

பண்புகள்[தொகு]

பனை பழம்

பனை வரட்சிகளைத் தாங்கி வளரக்கூடிய வலிமையுள்ளத் தாவரம். இது தென்னையை ஒத்த பண்புகளைக் கொண்ட ஆரிகேசியே என்னும் குடும்பத்திற்குள் வரும் இனமாகும். இது 100 ஆண்டுகளைக் கடந்தும் வாழக்கூடியது. இம்மரத்தின் 30 மீ. உயரமும், 3 மீ. அகலத்திற்கு உச்சியில் காணப்படும் இலைகளின் கூட்டமைப்பும் இதன் அழகை எடுத்தியம்பும். இளைக்கணுக்கள் வளர்ந்து முதிர்ந்த பின் விழுந்தும் வடுக்களாய் இம்மரத்தின் தண்டுகளில் பதித்துவிட்டுப் போகும்.

பனையின் இலை அகன்ற விசிறியைப் போன்றது. அதற்குப் பொதுவாக பனையோலை என்னும் தனிப்பெயரும் உண்டு. அதன் காய்கள் இளம்பருவத்தில் பச்சை நிறத்திலும் நாள்பட கார் நிறத்திலும் காணப்படும். காய்கள் தென்னை மரத்தில் உள்ளது போல குலைகளாய்க் காய்க்கும். இதன் காய்களுக்குள் பகுப்புளாகப் பிரிக்கப்பட்டு அகத்தில் காணப்படும் வெண்ணிற சதைப்படலமும் அதனுள் சுவைநீரும் மிகுந்து காணப்படும். பழம் வெளியில் கருமை நிறத்திலும் உட்பகுதியில் மஞ்சள் நிறத்திலும் காணப்படுவது இம்மரத்தின் தனியடையாளங்களாகும்.

பனையின் பயன்கள்[தொகு]

பனைவெல்லங்களில் ஒன்று - மேற்புறத் தோற்றம்
பனைவெல்ல வகைகளில் ஒன்று - அடிப்புற தோற்றம்

இது முறையாகப் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் ஒரு தாவரமாக இல்லாதிருப்பினும், இதிலிருந்து மக்கள் ஏராளமான பயன்களைப் பெறுகிறார்கள். இதன் நுனியிலிருந்து நிலத்தின் கீழுள்ள வேர் வரையிலும், முளைவிட ஆரம்பித்ததிலிருந்து, வெட்டி வீழ்த்தப்பட்டபின்னரும் நெடுங்காலத்துக்குப் பனைகளுக்குப் பயன் உண்டு. இதனால்தான் இதனைப் பூலோக கற்பகதரு எனக் குறிப்பிடுகிறார்கள். கற்பகதரு என்பது வேண்டுபவர்களுக்கு வேண்டியனவெல்லாம் கொடுக்கின்ற, இந்துப் புராணக்கதைகளில் குறிப்பிடப்படும் ஒரு தேவலோகத்து மரமாகும். பனையிலிருந்து பலவகையான உணவுப் பொருள்களும், உணவல்லாத வேறு முக்கியமான பொருள்களும் பெறப்படுகின்றன. முற்காலத்தில் எழுதப் பயன்பட்டு வந்த பனையோலை இம்மரத்திலிருந்தும், தாலிப்பனையிலிருந்தும் (தாளிப்பனை,கூந்தல்பனை) (Corypha umbraculifera) உண்டாக்கப்பட்டதாகும் . கட்டிடங்களுக்கு வேண்டிய பல கட்டிடப்பொருட்கள், கைப்பணிப் பொருட்கள், மற்றும் தும்பு, நார் முதலியவற்றிலிருந்து செய்யப்படும் பல்வேறு பயன்படு பொருட்கள் என்பனவற்றையும் பனையிலிருந்து பெற முடியும். பொதுவாக, இது வளரும் இடங்களிலெல்லாம், வசதியற்ற ஏழை மக்களின் பொருளாதார நிலையுயர, அடித்தளமாக விளங்குகிறது.

பனை மரத்தில் இருந்து ஆண்டொன்றுக்கு கிடைக்கும் பொருட்களின் அளவு[3]:

 • பதனீர் - 180 லிட்டர்
 • பனை வெல்லம் – 25 கிலோ
 • பனஞ்சீனி - 16 கிலோ
 • தும்பு - 11.4 கிலோ
 • ஈக்கு - 2.25 கிலோ
 • விறகு - 10 கிலோ
 • ஓலை - 10 கிலோ
 • நார் - 20 கிலோ
 • பானங்கள் - இதிலிருந்து பதநீர் (பதனீர்) என்னும் சுவை மிகுந்த நீரும், கள்ளு (கள்) என்னும் மதுபானமும் தயாரிக்கப்படுகிறது.
 • நுங்கு - இது வெயில் காலங்களில் கிடைக்கப்பெறும் ஒரு இயற்கை வெட்கைத் தணிப்பானாகும்.
 • கிழங்கு (பனங்கிழங்கு) - இதிலிருந்து பெறப்படும் கிழங்கானது நார்ச்சத்து நிறைந்த, சத்துள்ள உணவாகும்.
 • வெல்லம் - இம்மரம் உலகில் காணப்படும் ஒரு வகைச் சர்க்கரைப் பனை மரமாகும். இதிலிருந்து பனைவெல்லம் என்னும் சுவையும் மருத்துவப்பண்பும் உள்ள இனிப்புப் பொருள் தயாரிக்கப்படுகிறது.
 • ஓலைகள் - ஓலைகள் விசிறியாகவும், நுங்கு விற்பவருக்கு கூடையாகவும், ஒரு காலத்தில் படுக்கும் பாயாகவும் முற்காலத்தில் எழுது ஏடாகவும் பயன்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தினமனியில் பனைமரம் குறித்த தகவல்கள்[தொடர்பிழந்த இணைப்பு], பார்த்த நாள்: 3, சனவரி, 2012.
 2. பனை மரங்கள்,பார்த்த நாள்: 30, மார்ச்சு, 2012.
 3. கிராம உலகம், அனைத்திந்திய அறிவியற் தமிழ்க்கழகம், தஞ்சாவூர், முதற்பதிப்பு, 2002, கட்டுரை: கிராமப் பொருளாதாரத்தில் பனையின் பங்கு, இரா. சுதமதி, தமிழ்த்துறைத் தலைவர், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி, திருச்செந்தூர்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசியப்_பனை&oldid=3363424" இருந்து மீள்விக்கப்பட்டது