உள்ளடக்கத்துக்குச் செல்

பனங்கிழங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழகப் பனங்கிழங்குகள்

பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துட் செல்லும் வேரில் மாப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்கு உருவாகின்றது. இதுவே பனங்கிழங்கு ஆகும். ஒரு முனை கூராகவும், மறு முனை சுமார் ஒரு அங்குலம் விட்டம் கொண்டதாகவும் உள்ள ஒடுங்கிய கூம்பு வடிவான இக் கிழங்கு ஓர் அடி வரை நீளமானது.

பனை மரத்தில் உள்ள நுங்கு பனை பழமாக மாறி அதன் பின்பு அதை வெட்டி எடுத்து பனைபழத்தை பிரித்து மூன்று மூன்றாக இருக்கும் அதை தனித்தனியாக பிரித்து வெயிலில் காய வைத்து பின்பு ஒரு மணல் திருட்டு போல் உருவாக்கி அதில் இந்த பனை பழத்தை காய்ந்த பனைபழத்தை முளைப்பதற்கு ஏற்றாலும் போல் அதில் வரிசையாக நட்டு பின்பு சுற்றி மணலை போட்டு அதில் வட்டமாக பாத்தி பிடித்து தண்ணீர் ஊற்றிக் கொண்டே வரவேண்டும் நன்கு மிதித்து மிதித்து தண்ணீர் ஊற்ற வேண்டும் காலப்போக்கில் அது முளைக்க ஆரம்பித்து விடும் பின்பு மூன்று மாதம் கழித்து அதைத் தோண்டி பார்த்தால் பனங்கிழங்கு தயாராக இருக்கும் இவ்வாறு தான் பனங்கிழங்கு உற்பத்தி செய்கிறார்கள் இது தூத்துக்குடி மாவட்டத்தில் அதிக அளவில் பனை மரங்கள் இருப்பதால் அங்கு மிகவும் பிரபலமாக உள்ளது

உருவாக்குதல்=[தொகு]

பனம் பழங்கள் கிடைக்கும் காலங்களில் விதைகளைச் சேமித்து வைக்கும் மக்கள், உரிய காலத்தில் மண்ணைக் குவித்து மேடை போல அமைத்து, அதன்மேல் பனம் விதைகளைப் பரவி விடுவர். விதை முளைத்துக் கிழங்கு உருவானதும் அதனைக் கிண்டி எடுத்துப் பயன்படுத்துவர். பொதுவாக பனங்கிழங்கு திருவண்ணாமலை , வேலூர் , விழுப்புரம் போன்ற வட மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன.

பயன்கள்[தொகு]

பனங்கிழங்குகள்
  • பனங் கிழங்கைப் பச்சையாக உண்பதில்லை. உடனடியாக உண்பவர்கள் அதனை நீரில் இட்டு அவித்து உண்பர். (சிலர் நெருப்பில் வாட்டிச் சுட்டுத் தின்பதும் உண்டு)
  • கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சில நாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன்படுத்துவது வழக்கம். அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும். புழுக்கொடியலை நேரடியாகவே உண்ணலாம். ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன. (இந்தப் பயன்பாடு தமிழகத்தில் தற்போது இல்லை)

இலக்கியத்தில் பனங்கிழங்கு[தொகு]

நாரை எனும் பறவையின் நீண்ட கூரிய அலகு, இளம் மஞ்சள் நிறமான, நீண்ட கூம்பு வடிவம் கொண்ட பனங்கிழங்கு போலிருப்பதால், சத்திமுற்றப்புலவர் எனப்படும் சங்ககாலப் புலவர் ஒருவர் நாரையின் அலகுக்கு உவமையாகப் பனங்கிழங்கைப் பின்வருமாறு எடுத்தாண்டுள்ளார்.[1][2][3]

நாராய் நாராய் செங்கால் நாராய்
பனம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் ....

வலம்புரி ஒலித்தது! என்ற 225 ஆவது புறநானூற்றுப் பாடலில் புலவர் ஆலத்தூர் கிழார் சோழ மன்னன் நலங்கிள்ளியின் படையின் சிறப்பை பாராட்டுகிறார். அதில்

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானை...

என்று குறிப்பிடுகிறார். முன்னே செல்லும் படையினர் வழியில் பனைமரங்களைக் கடக்கும்பொழுது பனை நுங்கின் இனிமை கொண்ட நீரை உண்ணுவர்; இடைப்பகுதியில் உள்ளோர் மரங்களைக் கடக்கும்பொழுது பனம்பழத்தின் இனிய கனிப்பகுதியை உண்ணுவர். படையின் இறுதியில் செல்பவர் "பிசிரொடு சுடுகிழங்கு" (தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கை) உண்ணுவர். இளநுங்கு, அது பழுத்து பனம்பழம், பழத்தின் கொட்டையில் இருந்து விளைவித்த பனங்கிழங்கு யாவையும் வெவ்வேறு காலங்களில் விளைபவை. அவ்வாறு காலங்கள் கடந்து கடக்கும் பெரும்படையை உடையவன் சோழன் நலங்கிள்ளி எனப் பாடுகிறார் புலவர்.[4]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆதி வள்ளியப்பன் (06 மார்ச் 2012). "நாராய் நாராய்". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. சு.தியடோர் பாஸ்கரன். "நாராய் நாராய் புலம்பெயரும் புள்ளினம்". உயி்ர்மை பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "நாரைவிடு தூது". Poem. Tamil Higher Certificate Grade 3. பார்க்கப்பட்ட நாள் 7 பெப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. புறநானூறு-மூலமும் உரையும், புலியூர்க் கேசிகன், பக். 235
"https://ta.wikipedia.org/w/index.php?title=பனங்கிழங்கு&oldid=3801389" இலிருந்து மீள்விக்கப்பட்டது