இடும்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடும்பன் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் வழிபாடு பெறும் தெய்வங்களில் ஒன்றாவான். இடும்பன் கவசம் என்ற கவசமும் காணப்படுகிறது.

இடும்பனின் வரலாறு[தொகு]

இடும்பனின் வரலாறு பழனி முருகன் கோவில் தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. சூரபத்மன் போன்ற அசுரர்களுக்கு வில்வித்தை போன்ற வித்தைகளைப் பயிற்றிய இடும்பாசுரான் முருகனின் வேலால் அசுரர்கள் அழிந்தமையால் மனைவி இடும்பியுடன் வானவாசஞ் சென்றான். அவ்வழியால் திருக்குற்றாலத்துக்கு அருகில் அகத்திய முனிவரைக் கண்டு வணங்கி தம்மை ஆட்கொள்ள வேண்டினான். அகத்தியரும் திருக்கேதாரத்தில் உள்ள வனத்தில் இருக்கும் இரு மலைகளை எடுத்துக் கொண்டு பொதியமலைக்கு வருவாயானால் பெறற்கரும் பேற்றை அடைவாய் எனக் கூறினார்.

இடும்பனும் மனைவியோடு அவ்வனத்திற்கு சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூல மந்திரங்களைக் கூறித் தவமிருந்தான். இரு சிகரங்களையும் தம் தவவலிமையால் பாம்புகளால் உறி போலச் செய்து தோளில் வைத்து காவடி எடுப்பார்போல பொதிகை சென்றான். பழனியை அடைந்தபோது முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி பாரமாகத் தோன்ற அவற்றை இறக்கி வைத்தான். பின்னர் காவடியைத் தூக்க முடியாமல் போனது. அங்குள்ள மர நிழலில் தண்டாயுதபாணியைக் கண்டு அவனை விலகும்படி பணித்தான். முருகன் விலகாமல் இருக்கவே இடும்பன் கோபங்கொண்டு பாய்ந்தபோது அங்கு வீழ்ந்து இறந்தான். இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகனும் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார்.

இடும்பன் தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போல காவடி எடுத்து வரும் அடியார்களுக்கு அருளும்படியும் கேட்டுக்கொண்டான். இக்கதையுடன் முருகனுக்குக் காவடி எடுக்கும் வழக்கம் உருவானதாகக் கூறுவர்.

கோயில்களில் இடும்பன்[தொகு]

முருகபக்தனான இடும்பனுக்கு முருகன் கோயில்களில் சிறப்பிடம் அளித்தனர். இடும்பன் பூசை பல கோயில்களில் மகோற்சவத்தை அடுத்து நடைபெறுதல் வழக்கம்.

இலங்கையில் இடும்பன் கோயில்கள்[தொகு]

இலங்கையில் கொழும்பு,யாழ்ப்பானத்தில் பண்டத்தரிப்பு(காலையடி) இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லாந்தை மற்றும் மட்டக்களப்பின் சில பாகங்களிலும் இடும்பன் பரிவார தெய்வமாகத் தனிக் கோயில் பெற்று விளங்குவதைக் காணலாம். திரிகோணமலையில் பறையன்குளம் எல்லையிலுள்ள காளி கோயிற் பகுதியில் இடும்பன்மலை எனக் குன்று ஒன்று உள்ளது.

தமிழகத்தில் இடும்பன் கோயில்கள்[தொகு]

தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இடும்பாவனம் மற்றும் திருக்கன்றாப்பூர் போன்ற இடங்களில் இடும்பன் சிவனைப் பூசித்து வரம் பெற்றதாகக் கூறுவர். பழனி, குன்றக்குடி போன்ற தலங்களில் இடும்பனுக்கு சிறப்பான வழிபாடுகள் நடைபெறும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடும்பன்&oldid=2196084" இருந்து மீள்விக்கப்பட்டது