உள்ளடக்கத்துக்குச் செல்

சித்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சித்தர்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அகத்தியர்

சித்தர்கள் என்போர் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளைப் பெற்றவர்கள் ஆவர்.[1] "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

வகைப்பாடு

[தொகு]

எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்

[தொகு]
  1. இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.
  2. நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல்
  3. ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல்.
  4. பிராணாயாமம் - பிரணாயாமமாவது சுவாசத்தைக் கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவைச் சீா்படுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல்.
  5. பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதலே :பிரத்தியாகாரமாம்.
  6. தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல்.
  7. தியானம் - தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல்.
  8. சமாதி - சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்கச் செய்வது ஆகும்.

எண் பெருஞ் சித்திகள் அல்லது அட்டமா சித்திகள்

[தொகு]

திருமூலரின் திருமந்திரம், 668வது பாடல்

எண் பெருஞ் சித்திகளின் விளக்கம்

[தொகு]
  1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
  2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
  3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
  4. கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல்.
  5. பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
  6. பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
  7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல்.
  8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.

இத்தகைய எண் பெருஞ் சித்திகளை எட்டு வகையான யோகாங்க பயிற்சியினால் சித்தர்கள் பெற்றனர்.

சித்தர்கள் இயல்பு

[தொகு]

சித்தர்கள் பொது வாழ்க்கை நெறிக்கு உடன் படாதவர்களாகத் தங்களுக்கென்று தனி வாழ்வியல் வழி முறைகளை உருவாக்கி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்த இயற்கையோடு இயற்கையான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஆவார். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

சித்தர்கள் இயற்கையைக் கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுதப் பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் (materialists) அல்லா். "மெய்ப்புலன் காண்பது அறிவு" என்பதிற்கிணங்க, உண்மை அல்லது மெய் நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.

"சாதி, சமயச் சடங்குகளைக் கடந்து, சமுகத்தில் பயனுடையவை எவை, என்பதைப் பிரித்தறிந்து அவற்றுள் புதுமைகளைப் புகுத்துகின்ற அறிஞர்களாகவும், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, சாதி சமய மத மாத்சரியங்களை மாற்றக் கருதிய சீர்த்திருத்தவாதிகளாகவும்" சித்தர்கள் வாழ்ந்தனர். "விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி" ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம். அப்படிப்பட்ட மேலோட்டமான வருணிப்புக்களுக்கு மேலாக, சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.

சித்தர்களை புலவர்கள், பண்டாரங்கள், பண்டிதர்கள், சந்நியாசிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ஓதுவார்கள், கலைஞர்கள், கவிஞர்கள், அரசர்கள், மறவர்கள், ஆக்கர்கள், புலமையாளர்கள், அறிவியலாளர்கள், பொது மக்கள் ஆகியோரிடம் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். சித்தர்களின் மரபை, கோயில் வழிபாடு, சாதிய அமைப்பை வலியுறுத்தும் சைவ மரபில் இருந்தும், உடலையும் வாழும்போது முக்தியையும் முன்நிறுத்தாமல் "ஆத்மன்", சம்சாரம் போன்ற எண்ணக் கருக்களை முன்நிறுத்தும் வேதாந்த மரபில் இருந்தும் வேறுபடுத்திப் பார்க்கலாம். இன்று, சித்தர் மரபு அறிவியல் வழிமுறைகளுடன் ஒத்து ஆராயப்படுகின்றது. எனினும், சித்தர் மரபை தனி அறிவியல் கண்ணோட்டத்தில் பார்ப்பது அதன் பரந்த வெளிப்படுத்தலை, அது வெளிப்படுத்திய சூழலை புறக்கணித்து குறுகிய ஆய்வுக்கு இட்டு செல்லும்.

தமிழ் வளர்த்த சித்த நூல்கள்:

[தொகு]

சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை படைத்துள்ளனர். தமிழ் நாட்டிலே சித்தர்கள் இயற்றினவாக, இரசவாதம், வைத்தியம், மாந்திரிகம், சாமுத்திரிகாலட்சணம், கைரேகை சாத்திரம், வான சாத்திரம், புவியியல் நூல், தாவரயியல் நூல், சோதிட நூல், கணித நூல் முதலிய துறைகளைச் சார்ந்த நூல்கள் காணப்படுகின்றன.

சொல்லிலக்கணம்

[தொகு]

சித்தம் என்பது மனமாகும். தன்னிச்சையாகத் திரியும் மனதினை அடக்கி, இறைவனிடம் செலுத்துகின்றவர்கள் சித்தர்கள் ஆவார்.[2]

சித்தர்களின் கொள்கை

[தொகு]

பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.

உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

பிரிவுகள்

[தொகு]

சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். அவையாவன,.

  1. சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
  2. ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
  3. காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி,[3] சுந்தரானந்தர், உரோமுனி[4]

சித்த வைத்தியம்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: சித்த மருத்துவம்

சித்தர்களின் வைத்திய முறைகள் காலம் குறிப்பிடப்பட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்குத் தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர். அவ்வைத்திய முறைகளை, அவர்களின் இருப்பிடத்திலே அருகில் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு, மனித குலத்தைக் காத்து வந்தனர். சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளையும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும்.

மக்கள் அனைவரும், ஒழுக்கம் தவறாமல் வாழவேண்டும் என்றும், பொய், சூது, கொலை, குடி, விபச்சாரம், கூடா ஒழுக்கம் ஆகியவை உடல் நோயை உண்டாக்கும் என்றும் யோகப் பயிற்சியிலே வாழ்வில் வெற்றி பெறமுடியும் என்றும் உடல் வலிமையுடன் நீண்டநாள் வாழ முடியும் என்றும் சித்தர்கள் பல பாடல்கள் பாடியுள்ளனர்.

"உலகில் சாவாமைக்கு வழிகாண முடியும் என்ற உயரிய நோக்கம் கொண்ட மருத்துவ முறை சித்த மருத்துவமே."[5]

சித்தர்களின் இரசவாதம்

[தொகு]

இரசவாதம் என்னும் சொல்லுக்கு இரசத்தை வேதித்தல் என பொருள். எளிய உலோகங்களுடன் சிலவகையான தாவர வகைகளைச் சேர்த்து தங்கம் தயார் செய்வது. இவற்றை சித்தர்கள் செய்தமைக்கு ஆதாரமான பாடல்கள் உண்டு. அதில் ஒன்றான திருமூலர் சொல்லும் செடியின் பெயர் பரிசனவேதி. அந்த பாடல் பின்வருமாறு:

பரிசன வேதி பரிசித்த தெல்லாம்
வரிசை தருவான் வகையாகு மாபோல்
குருபரி சித்த குவலய மெல்லாம்
திரிமலம் தீர்ந்து சிவகதி யாமே

இப்படி செய்து தங்கம் கிடைக்க வேண்டுமென்றால் தங்கத்தின் மீது ஆசை இருக்க கூடாது. இந்த வகையான முயற்சி கடந்த நூற்றாண்டுகளில் உலகெங்கிலும் நடந்திருக்கின்றது." [6] இன்றைய வேதியியல் அறிவின் படி இரும்பையோ அல்லது வேறு எந்த ஒரு தனிமத்தையோ பொன்னாக்க முடியாது. எனினும் அப்படிப்பட்ட முயற்சிகளே இன்றைய வேதியல் துறையின் முன்னோடி என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றுதான்.

மருந்துகளில் ரசம் முதன்மையானது. இதன் மூலம் இரசபற்பம், ரசசெந்தூரம், ரசக்கட்டு, முதலிய மருந்துகள் தயாரிக்கப்பட்டன. தீராத பல கொடிய நோய்களுக்கு இம்மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. எனவே ரசவாதம் என்றால் ரசத்தின் மாறுதல்களை அறிவது என்று பொருள்.

சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி இறைப்பொருளுடன் ஒன்றுவதை ஒருவிதமான ரசவாதமாகப் பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்ப ரசவாதம்', 'இன்ப ரசவாதம்', என்றும் 'ஞான ரசவாதம்' என்றும் சொல்வார்கள்.

போகர் என்ற சித்தர் எழுதிய பாடல்கள் வேதியல் தொடர்பான பாடல்களில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவை தமிழில் அமைந்தாலும், அவர் ஒரு சீனர் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது.

சித்தர்களின் நவீன அறிவியல் ஆராய்ச்சி

[தொகு]

சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாசாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கத்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

சித்தர்களின் ஞானம்

[தொகு]

மதவாதிகள், ஆத்திகர்கள் உள்ளிட்டோர் "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.[7] கற்பக மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.

தமிழ்ச் சித்தர்கள்

[தொகு]

சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது. சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர்.

தலையாய சித்தர்கள்

[தொகு]

முதன்மை சித்தராக சிவன் கருதப்படுகின்றார், மேலும் தமிழ் மரபின்படி 18 தலையாய சித்தர்கள் இருந்தனர், அவர்கள் பின்வருமாறு:[8][9]

1 திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 அகத்தியர் 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி
7 கமலமுனி 8 போகர் 9 மச்சமுனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர்
13 போதகுரு 14 பாம்பாட்டி சித்தர் 15 சட்டைமுனி 16 சுந்தரானந்தர் 17 குதம்பைச்சித்தர் 18 கோரக்கர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sithar Padalgal | தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY". www.tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
  2. சித்தர்கள் - இளமுனைவர் பக்கம் 5
  3. மருந்து 41: இன்பத்தின் ஆணிவேர் இம்பூறல் இந்து தமிழ் திசை 26.ஜனவரி.2019
  4. சித்தர்கள் - இளமுனைவர் தமிழ்ப்பிரியன் பக்கம் 9
  5. *சித்த மருத்துவம், சுப. சதாசிவம், 2001, வானதி பதிப்பகம், சென்னை
  6. * அறியப்படாத தமிழகம் (தொ. பரமசிவன், 2001, காலச்சுவடு பதிப்பகம், சென்னை)
  7. * சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
  8. "18 siddhars". Palanitemples.com. Archived from the original on 2022-10-25. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.
  9. "Siddhars". Aanmeegam.in. பார்க்கப்பட்ட நாள் 2013-06-22.

உசாத்துணை நூல்கள்

[தொகு]
  • சித்தர் பாடல்கள் (சித்தர்கள், 2001 திருநாவுக்கரசு புத்தக நிலையம், சென்னை)
  • பதினெண் சித்தர்கள் இயற்றிய நாடி சாஸ்திரம் (துர்க்காதாஸ் எஸ்.கே., 1999, பூம்புகார் பதிப்பகம், சென்னை)
  • இந்திய தத்துவக் களஞ்சியம்-அவைதிகத் தத்துவங்கள்-தொகுதி 1 (சோ.ந. கந்தசாமி, 2003, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்).
  • சித்தர்கள் கலைக் களஞ்சியம் (எஸ்.ஆர். சங்கரலிங்கனார், 1997, சித்தாசிரமம், சென்னை)
  • டி. என். கணபதி. (2004). தமிழ்ச் சித்தர் மரபு. சென்னை: ரவி பதிப்பகம்.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்தர்&oldid=3969309" இலிருந்து மீள்விக்கப்பட்டது