உள்ளடக்கத்துக்குச் செல்

மீராபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீரா
மீராபாய்
பிறப்புபொ.ஊ. 1498
ராஜஸ்தான், இந்தியா
இறப்புபொ.ஊ. 1547
இராஜஸ்தான், இந்தியா

மீரா அல்லது மீராபாய் (பொ.ஊ. 1498 – பொ.ஊ. 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார். தென்னிந்திய ஆண்டாள் போல இவர் கிருஷ்ணர் மீது தீவிர பற்று கொண்டவர். 1300 பாடல்களுக்கு மேல் பாடிய மீரா ராஜபுத்திர இளவரசியாக தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.பக்தி நெறியில் தீவிர பற்று கொண்ட இவர் , கிருஷ்ணரின் மீது இயற்றிய பக்திப் பாடல்கள் மிகவும் புகழ்பெற்றவை.

வாழ்க்கை

[தொகு]
கிருஷ்ண பக்தை மீரா
மீராபாய் வழிபட்ட கண்ணன் கோயில்,சித்தோர்கர்

மீராபாய் ஜோத்பூர் அரசை நிர்மாணித்த ராவ்ஜோதாவின் மகனான ராவ்தூதாவின் இளையமகனான ரத்தன் சிங், வீரகுமாரி தம்பதிகளின் மகளாக ஒரு வைணவக்குடும்பத்தில் பிறந்தார். தன்னுடைய ஏழாம் வயதில் தன் அன்னையை இழந்த மீரா பின்னர் தன் பாட்டனாரான ராவ்தூதால் வளர்க்கப்பட்டு கல்வியும் பயின்றார். அரச குடும்பத்தைச் சார்ந்த இவர் வைணவ சமய மரபில் வளர்க்கப்பட்டார். குழந்தைப் பருவம் முதலே ""கிரிதர கோபாலன்"" எனும் கிருஷ்ணர் சிலை மீது தொடங்கிய ஈடுபாடு நாளடைவில் ஆண்டாள் போல கண்ணனை தன் மணவாளானாக வரித்துக்கொண்டது. குடும்பத்தின் வற்புறுத்தலின் பேரில் 1516-ல் பதினெட்டு வயதில் சுய விருப்பமின்றி போஜராஜன் எனும் சித்தோர்கர் இளவரசனுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்.

போஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான துளஜ பவானி எனும் துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ளாத மீராபாயின் கிருஷ்ண வழிபாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது. 1521 இல் தில்லி சுல்தானின் இசுலாமிய சாம்ராச்சியத்திற்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்றுசேர்ந்து போர்புரிந்த போது இறந்த பலர் அரசர்களில் மீராவின் கணவர் போஜராஜனும் ஒருவர். மாமனார் அரவணைப்பில் அரண்மனையில் வாழ்ந்த மீரா, பின்னர் அவரையும் இழக்க கண்ணன் ஒருவனே துணையென சித்தோர்கர் அரண்மனையிலேயே வாழ்ந்து வரலானார்.

கொலைமுயற்சி

[தொகு]

ஆரம்பம் முதலே இவரின் கிருஷ்ண பக்திக்கு இருந்துவந்த எதிர்ப்பு, அடுத்து பதவிக்கு வந்த போஜராஜன் தம்பியான விக்ரமாதித்யாவால் உச்சத்தை அடைந்தது. அந்தரங்கமான இவரின் பக்தி நாளடைவில் அரண்மனைவிட்டு சாதுக்களின் கூட்டத்தோடும் சாமான்யர்களோடும் தன்னைமறந்து ஆடுவதும் பாடுவதுமான போக்கினால், அரசகுடும்ப மதிப்பிற்கு களங்கம் வருமென எண்ணி விக்ரமாதித்யா தன் தங்கையான உதாபாயோடு சேர்ந்து பலமுறை மீராவை கொலைசெய்ய முயற்சித்தான். அவற்றில் சில;

  • கண்ணனுக்கு நிவேதனம் (படைத்த) செய்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதனை மீராவை அருந்துமாறு செய்தான். பின்னர் கண்ணன் அருளால் நஞ்சு நீக்கப்பட்டது
  • மீராவின் படுக்கையில் இரும்பு முட்களை நிறைக்க, கண்ணன் அருளால் அவைகள் ரோசாமலர் இதழ்கள் ஆனது
  • கொடிய பாம்பு அடைத்த பூக்கூடையை கொடுத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்குமாறு கொடுக்க, அலங்கரிப்பதற்கு மீரா அப்பூக்கூடையை திறந்த போது அது அழகிய பூமாலை ஆனது

தேடல்

[தொகு]

பின்னாட்களில் குரு ரவிதாசருக்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது பல இடங்களுக்கு சென்றும் நிறைவுப்பெறாது இறுதியில் கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தார். அங்கு தன்னை கோபியர்களில் ஒருவராக உணர்ந்த அவர் வட இந்தியா முழுதும் யாத்திரையாக சென்று தம் கருத்துகளை பாடல்கள் மூலம் வட்டார மக்கள் மொழியான விரஜ மொழியில் பரப்பினார். பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியினின்று விடுபட்டு பேரின்ப நிலையை அடைய கிருஷ்ணபக்தி அவசியம் என்றார். இவரது பக்திப்பாடல்கள் இனிமையானவை. பக்தி நெறியைச் சுவையான பாடல்கள் வாயிலாகப் பரப்பினர். எளிய பக்தியும், நம்பிக்கையுமே வீடு பேற்றினை அடைய நல்வழி என்றார். பிறப்பால் எவரும் உயர்ந்தவர் இல்லை. உயர்விற்கு காரணம் செயல் என்னும் கருத்தைப் பரப்பினார்.

முக்தி

[தொகு]

தன் இறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார். அங்கு கோயில்கொண்ட துவாரகதீசன்[1] (கண்ணன்) முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்து மாயமானார்.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

இதையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீராபாய்&oldid=3854241" இலிருந்து மீள்விக்கப்பட்டது