முண்டக உபநிடதம்
தொடரின் ஒரு பகுதி |
இந்து புனித நூல்கள் |
---|
முண்டக உபநிடதம் அதர்வண வேதத்தை சார்ந்தது. முண்டம் என்பதற்கு தலை என்று பொருள்.எனவே இவ்வுபநிடதத்திற்கு முண்டக உபநிடதம் என்பார். அங்கிரசு என்ற முனிவர், சௌனகர் என்ற முனிவருக்கு அருளிய உபதேசமே முண்டக உபநிடதம். முண்டக உபநிடதத்தின் 65 மந்திரங்களுக்கு ஆதிசங்கரர், மத்வர் விளக்கம் அளித்துள்ளனர். [1] [2]
பெயர்க் காரணம்
[தொகு]தலையில் நெருப்புச் சட்டியை சுமந்து கொண்டு செய்யப்படும் ஒருவித வேள்வியை முடித்த பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் அல்லது தலை முடியை அகற்றிய பின்பு இந்த உபநிடதத்தை படிக்க துவங்க வேண்டும் என்பதால் இப்பெயர் வரக் காரணமாயிற்று.
மையக் கருத்து
[தொகு]சௌனக முனிவர், எந்த ஒன்றை அறிவதனால் அனைத்தையும் அறிந்ததற்குச் சமம் என்று கேட்டதற்கு, அதற்கு அங்கிரசு முனிவர் மெய்ப்பொருளை (பிரம்மம்) அறிவதால் மட்டுமே அனைத்தையும் அறிந்ததற்கு சமம் என்று சௌனக முனிவருக்கு அருளிச் செய்தார்.
உபநிடத அமைப்பு
[தொகு]இந்த உபநிடதத்தில் உள்ள 65 மந்திரங்களை மூன்று அத்தியாயங்களாகவும், ஒவ்வொரு அத்தியாமும் இரண்டு பகுதிகளாகவும் அமைந்துள்ளது. அத்தியாயத்தை “முண்டகம்” என்றும், பகுதிகளை ”கண்டம்” என்றும் அழைப்பர்.
உபநிடத சாரம்
[தொகு]எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் பிரம்ம ஞானம் எனும் ஆத்ம வித்யா, (பிரம்மக்ஞானம்) என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். பிரம்மத்தை புரிந்து கொள்ளும் அறிவே பராவித்யா ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் அபரா வித்யா ஆகும்.
பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால் இறைவன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளார். எ.கா., சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளதோ, அதே போல் படைப்பிற்கு ஈஸ்வரனே ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார்.
ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம். மேலும் அபரா வித்யா நான்கு வேதங்களையும் அவற்றின் முடிவுப் பகுதியான உபநிடதங்களையும் விளக்குகிறது. கர்மங்களின் பலன்களும், அதனால் அடையப்படும் நிலையற்ற தன்மை விளக்கப்படுகிறது.
அபராவித்யா மூலம் மாபெரும் சம்சாரக் கடலை கடக்க முடியாது. கர்ம யோகத்தை விட ‘உபாசனை’ மூலம் சுவர்க்கத்திற்கும் மேலான பிரம்மலோகத்தை அடையலாம். பொதுவாக சுவர்க்கம் மற்றும் பிரம்ம லோகத்தை அடைந்தாலும் அதன் பலன்கள் நிலையற்றது.
வீடுபேறு அடைய கர்ம யோகம் நேரடியான வழி அல்ல என்பதை உணர்ந்து, மரபு வழியாக வந்த குருவிடம் பிரம்ம ஞானத்தை அறிந்து வீடுபேறு அடைய வேண்டும். பிரம்மத்திடமிருந்து பஞ்சபூதங்கள், பிராணன், மனம், சித்தம், அகங்காரம் தோண்றின. படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கு தலைவனாக விளங்கும் பிரம்மத்தை விராட் என்பர்.
விராட் இந்த பிரபஞ்சத்தின் உடலாக உருவகம் செய்யப்படுகிறது. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பிரம்மனே ஒவ்வொருவருடைய ஆத்ம வடிவாக உள்ளது. மேலும் பார்க்கப்படுகிற அனைத்தும் வெறும் வெளித்தோற்றமே [மித்யா] என்ற அறிவை அடைபவன் வாழ்க்கை எனும் பெரும் துயரக்கடலிருந்து விடுதலை அடைகிறான். இந்த பிரம்மமே எல்லோராலும் அடையத்தக்க முடிவான இலக்கு.
உபநிடதத்தின் துணையுடன் சீவாத்மா, பரமாத்மாவை அடைய வேண்டும். பிரம்ம ஞானத்தில் நிலை பெறத் தேவையற்ற பேச்சை நிறுத்த வேண்டும் என்று சாதனையாக கூறப்படுகிறது. பிரபஞ்சத்தின் ஒளி விளக்குகளாக உள்ள சூரியன், சந்திரன், விண்மீன்கள், தங்கள் ஒளியால் பிரம்மத்தை விளக்காது. ஆனால் இவைகள் பிரம்மத்தால் ஒளிர்கிறது.
கயிறு பாம்பாக தெரிவது போல, தோண்றிய இந்த பிரபஞ்சம் மற்றும் சீவராசிகள் வெறும் தோற்றமேயன்றி உன்மையல்ல என்று இந்த பிரபஞசத்தை நீக்கி, பிரம்மம் மட்டும் இரண்டற்றதாக (அத்வைதம்) உள்ளது என்று அறிய வேண்டும். பிரம்மத்தை அடைய ஞானமே அடிப்படைக் காரணம். ஞானத்தின் சாதனைகளாக வாய்மை, தவம், குரு, சாத்திரத்தின் மீது நம்பிக்கை வைத்து கேட்டல், பிரம்மச்சர்யம் ஆகியவைகள் கூறப்படுகிறது. இந்த பிரம்மத்தை, அமைதியை அடைந்த மனதின் மூலம் மட்டுமே அறியமுடியும். வீடுபேறு அடைய விரும்புபவர்கள், ஞானியின் துணையுடன் தீரர்கள் துயரத்தை கடக்கிறார்கள்.
இவ்வுலகிலே அனைத்து ஆசைகளை நீக்கியவனுக்கு மறுபிறப்பு ஏற்படுவதில்லை. இந்த ஆத்ம தத்துவத்தை, மனபலம் அற்றவர்களும், வைராக்கியமற்றவர்களும் அடைய முடியாது. வேதாந்த ஞானத்தை அடைந்தவர்கள், தியாகம், தூய்மை அடைந்தவர்கள், சீவன் முக்தர்களாக இருந்து கொண்டு பாவத்தையும் சோகத்தையும் கடந்து இறுதியான மரணத்தை அடைந்த பின்பு பிரம்ம வடிவாகவே இருந்து மீண்டும் பிறப்பதில்லை.
பண்பாட்டுத் தாக்கம்
[தொகு]சத்யமேவ ஜயதே (தமிழில்: வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியாவின் தேசிய குறிக்கோளுரை ஆகும். இந்திய தேசிய சின்னத்தில் இந்த வாக்கியம் பொறிக்கப் பட்டுள்ளது.
இது முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://archive.org/details/EssenceOfMundakaUpanishad
- ↑ https://ia600704.us.archive.org/14/items/UpanishadsTamil/02_Mundaka_Upanishad.pdf
ஆதாரநூலகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- சுவாமி குருபரானந்தரின் முண்டக உபநிடத சொற்பொழிவை கேட்க (தமிழில்)
- Mundaka Upanishad (தமிழில்)