மந்திரம்
அறிவியல் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பு, மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த காலத்தில் இயற்கையின் சீற்றத்தில இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழலில் இருந்தனர். அப்போது மனிதன் தன்னைச் சுற்றியுள்ள இயற்கையையும் மீறிய ஆற்றல் இருக்கிறது என்று நம்பி அவ்வாற்றலின் துணையுடன் இயற்கையின் பலன்களைப் பெற முயற்சித்தான். பின்னர் அவ்வாற்றலைக் கட்டுப்படுத்தி மேலாதிக்கம் செலுத்த வழிமுறைகளை மேற்கொண்டனர். இவ்வாறு கையகப்படுத்திய ஆற்றலை சில சூத்திரங்கள் அல்லது வாய்ப்பாட்டுக்களாக சுருக்கி உச்சரிப்பதன் மூலம் பெறலாம் என்று நம்பினான். அதுவே மந்திரம் என்று அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு அவர்களுடைய சூத்திரமும், உடல்மொழியும் (sign language) முறையாக அமையும் போது, அவர்கள் தொடர்பு கொள்ளப் போகும் சக்தி தனக்கு கீழ்ப்படிந்து நடக்கும் என்று நம்பினான். இதற்கு பலவிதமான சடங்குகளையும், வழிபாடுகளையும், கடுமையான உடல் வருத்தும் செயல்களையும் மேற்கொண்டனர். இது ஆதிகால மக்களின் தொழில்நுட்ப பற்றாக்குறையை போக்க தோன்றிய ஒரு கற்பனைத் தொழில் நுட்பம் என்று சொல்லலாம்.[1]
அடிப்படைக் கோட்பாடுகள்
[தொகு]பிரேசர் (Frazer) பல்வேறு பண்பாடுகளில் மந்திரம் எத்தகைய வடிவங்களைக் கொண்டுளளது என்று ஆய்வு செய்து அவற்றின் தன்மைகளை விளக்கியுள்ளார். ஆதிகால மக்களின் வாழ்க்கையில் மதம், தெய்வம், வழிபாடு, என்று எதுவும் இல்லை. மந்திரம் மட்டுமே இருந்தது. இந்த மந்திரம் ஆக்க நிலை சார்ந்ததாகவோ (Positive) அல்லது எதிர்மறை சார்ந்ததாகவோ (Negative) இருக்கலாம்.[2] இந்த மந்திரத்தின் செயல்பாடுகள் இரு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்
- ஒத்தது ஒத்ததை உருவாக்குகிறது (Like Produces like)
- ஒருமுறை தொடர்பு கொண்டால் தொடர்ந்து தொடர்பு கொண்டிருக்கும் (Once in contact, continues to act)
முதல் கோட்பாடு ஒத்தவிதி (Law of similarity) எனப்படும். இவ்விதியோடு தொடர்புடைய மந்திரம் ஒத்த மந்திரம் (Homeopathic magic) அல்லது பாவனை மந்திரம் (Imitative magic of Mimic magic) எனப்படும். இரண்டாவது கோட்பாடு தொடர்பு அல்லது தொற்று விதி (Law of contact) எனப்படும். இதனோடு தொடர்புடைய மந்திரம் தொற்று மந்திரம் (Contagious magic) எனப்படும்.
மந்திரத்தின் உட்கூறுகள்
[தொகு]பழங்கால மக்களின் கற்பனை தொழில்நுட்பமாக விளங்கிய மந்திரம், பெரும்பாலும் 1. விருப்பம் 2. செயல் 3.சொல் என்று மூன்று உட்கூறுகளாக அமைந்தன. இவற்றுள் விருப்பம் என்பது அடைய வேண்டிய பயனைக் குறிக்கும். செயல் என்பது மந்திர சடங்கு (Magic rites) ஆகும். சொல் என்பது மந்திர சொற்கள் (Spells) மற்றும் மந்திர சூத்திரங்களைக் (Formulae) குறிக்கும்.[3] காலப்போக்கில் ஆதிகால மக்கள் மந்திர ஆற்றலை அவரவர் விருப்பம் போல் பயன்படுத்த தொடங்கினர். அவற்றின் அடிப்படையில் தூய மந்திரம்(White Magic), தீய மந்திரம்(Black Magic), உற்பத்தி மந்திரம்(Productive Magic), பாதுகாப்பு மந்திரம்(Protective Magic), அழிப்பு மந்திரம் (Destructive Magic) என பலவாறாக அமைந்தன. வேளாண்மை, வேட்டை, யுத்தம், மருத்துவம் ஆகிய துறைகளில் தனிமனிதனின் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும், தூய மந்திரம் பயன்படுத்தப்படுகின்றது. செழிப்பை வேண்டிச் செய்யப்படும் செழிப்புச் சடங்குகள் யாவும் தூய மந்திரத்தினுள் அடங்கும். உற்பத்தி மந்திரமும் தூய மந்திரத்தின் நோக்கங்களையே அடிப்படையாக கொண்டது. தீய மந்திரம் பகைவனைக் கொல்லவும், இடையூறு செய்யவும், பயன்படுத்தப்படுகின்றது. சூனியம்(witch craft), பில்லிசூனியம்(Sorcery), ஏவல் சூனியம்(voodoo), போன்றவை கெட்ட ஆவி, பேய், ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட மனிதனுக்கு, அல்லது சமூகத்திற்கு எதிராக ஏவுவது ஆகும். இயற்கையின் கொடூரங்களிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பாதுகாப்பு மந்திரம் பயனபடுத்தப்படுகின்றது. தங்களிடமுள்ள குறைகள், தீமைகள் போன்றவற்றை பிற உயிர்கள் அல்லது பொருட்களுக்கு மாற்றிவிட மாற்றுவிக்கும் மந்திரம் (Transferecne of evil) பயன்படுகிறது.[4]
மந்திரம் பயன்பாடு
[தொகு]மழை வேண்டுமென்பதற்காக, மழை வருவது போல் பாவனை செய்து, சடங்கு நடத்தினால், ஒத்தது ஒத்ததை உருவாக்கும் என்று நம்பினர். அதைப் போல் குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை பொட்டலமாக கட்டி ஆலமரத்தில் தொங்கவிட்டால் மரத்தோடு தொடர்பு கொண்டு மரத்தைப் போல் செழித்து வளருவான் என்றும் நம்பினார்கள். பொருளாதார நலனே தொடக்ககாலத்தில் நோக்கமாக இருந்தது. வேட்டையிலும், மீன்பிடித்தலிலும், வணிகம் செய்வதிலும் நல்ல பலன் கிடைக்கவும், பயிர்கள் செழித்து வளரவும், கால்நடைகள் பெருகவும் மந்திரம் பயன்படுத்தப்பட்டது.இவ்வாறு மந்திரமே ஓர் உற்பத்தி கருவியாக விளங்கியதால் ஆதிகால மனிதனின் பொருளாதார நடவடிக்கைகள் பலவற்றிலும் மந்திரம் நீக்கமற நிறைந்திருந்தது. இவை மக்களின் பொருளாதார நடவடிக்கையின் ஒரு அங்கமாக இருந்தது.[5]
நிகழ்காலத்தில் மந்திரம்
[தொகு]பல தீய மந்திரங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஒரு மனிதனுக்கு இடையூறு செய்ய ஒரு உருவ பொம்மையை செய்து, அதை அந்த மனிதனாகவே பாவித்து, சில மந்திரங்களைக் கூறி, பொம்மையின் உறுப்புக்களை ஊசியால் குத்தும் சமயத்தில், அந்த மனிதனை ஊனப்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. ஒரு மனிதனின் காலடி மண்ணை எடுத்து நெருப்பில் போடுவது,ஒருவரோடு தொடர்புடைய பொருட்களை ஊறு செய்வது, தலைமுடியை எடுத்து மந்திரம் கூறி அழைப்பது போன்ற செய்வினைகள் மூலம் ஒருவருக்கு தீங்கிழைக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
நவீன யுகத்தில் மந்திரம்
[தொகு]கி.பி. 16 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், தோன்றிய அறிவியல் புரட்சியானது மனித வாழ்க்கையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய கண்டுபிடிப்புக்களான நியூட்டனின் விதிகள், டார்வினின் விளக்கங்கள், பிரான்சிசு பேக்கன், டெக்கார்ட் போன்ற தத்துவியலாளர்களின் சிந்தனைகள், இந்த உலகத்தை எத்திரமாக பார்க்க தூண்டின. மனிதன் இயற்கையை அடக்கி ஆள முடியும் என்றும், மனிதன் இயற்கையை கண்டு அஞ்ச வேண்டியது இல்லை என்றும் கூறின. மனித உடல் ஒரு இயந்திரம், இந்த உலகம் ஒரு கடிகாரம், எந்திரத்தில் உள்ள பகுதிகள் இணைந்து செயல்படுவது போல, இந்த உலகம் செயல்படுகின்றது, என்ற எண்ண ஓட்டம் ஏற்பட்டது. பல்வேறு விதிகளால் உலகம் ஆளப்படுகின்றது, எனவே உலகத்தை பல்வேறு அளவு முறைகளாலும், ஆராய்ச்சியாலும், ஆதாரங்களாலும், அளந்து விடலாம் என்று நம்பப்பட்டது. இவற்றின் தொடர்ச்சியால் புதிய கண்டுபிடிப்புகளும், தொழில் புரட்சியும், ஏற்பட்டன. எல்லாவற்றிற்கும் அறிவியல் விளக்கம் அளிக்கலாம் என்ற தன்னம்பிக்கை எழுந்தது. இந்த பின்னனியில் தான் தொன்று தொட்டே ஆதிமனிதன் பின்பற்றி வந்த மந்திர சடங்குகள் போன்ற தொழில்நுட்பம் அர்த்தமற்றவைகளாகவும், மூடத்தனமான செயல்பாடுகளாகவும அடையாளப்படுத்தப்பட்டன. அறிவியல் வளர்ச்சி மக்கள் நம்பிக்கைகளை, மூட நம்பிக்கைகள் என்று முத்திரை குத்தின. அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில் நுட்பங்களின் வளர்ச்சியாலும், பிரச்சனைகளுக்கும் தீர்வு காணலாம் என்று அறுதியிட்டு கூறியது. இதன் விளைவாக புராதன சமூகத்தில் காணப்பட்ட சமயம், சமூகம் சார்ந்த மூடநம்பிக்கைகள், மந்திரத்தில் மனிதனுக்கு இருந்த நம்பிக்கைகள், படிப்படியாக மறைந்து வருகின்றது. மதம் ஒழுக்கநெறி, கலை, இலக்கியம் போன்றவை மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்று ஒதுங்கியது. இதனால ஒருசில படித்தவர்கள் மத்தியிலும், அறிவியல் புலத்திலும், மந்திரங்கள், சடங்குகள் சார்ந்த நம்பிக்கைகள் அறிவியலுக்கு புறம்பானதாக கருதப்பட்டன. ஒருசில முற்போக்கு இயக்கங்களும், இடதுசாரி கட்சிகளும், மார்க்சியவாதிகளும், இதை ஒரு இயக்கமாகவே முன்னேடுத்து செல்கின்றனர். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நடத்திய பகுத்தறிவு இயக்கம் நாத்திக விமர்சனங்களாகவும், மூட நம்பிக்கைகளைக் கிண்டல், கேலி செய்யும் பேச்சுக்களாலும், பத்திரிக்கை மூலமாகவும, மேடை பேச்சின் மூலமாக பகுத்தறிவு வாதமாக மந்திரத்தை எதிர்த்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பக்தவச்சல பாரதி, 1990:583
- ↑ Frazer 1972: 419
- ↑ ஆ. சிவ சுப்ரமணியன் 1988: 18
- ↑ பக்தவச்சல பாரதி 1990:33லிருந்து337
- ↑ ஆ. சிவ சுப்ரமணியன் 1988: 17