அபிராமி அந்தாதி

| தொடரின் ஒரு பகுதி |
| இந்து புனித நூல்கள் |
|---|
| இக்கட்டுரை சாக்தம் தொடரின் ஒரு பகுதியாகும். |
| சாக்த நெறி |
|---|
|
|
அபிராமி அந்தாதி (அந்தம்-முடிவு, ஆதி-துவக்கம்) என்பது சைவ சமயத்தில் சக்தி வழிபாட்டை மையமாகக் கொண்ட ஒரு சாக்த பக்தி நூலாகும். இந்த நூலை அபிராமி பட்டர் இயற்றினார். மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக்கடையூரில் அபிராமி அம்மன் அமிர்தகண்டேசுவரர் கோயில் உள்ளது. மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலம் திருக்கடையூராகும். கி. வா. ஜகந்நாதன்[1] மற்றும் கண்ணதாசன் அவர்கள் அபிராமி அந்தாதிக்கு விளக்க உரை எழுதினார்கள்.[2]
ஒரு பாடலின் ஈற்றடியின் கடைச்சொல் (அந்தம்), வரும் பாடலின் துவக்கச் சொல்லாக (ஆதி) அமையும் இலக்கணமுறை அந்தாதி ஆகும். அபிராமி அந்தாதி பாடல் வரிகள் மற்றும் காரணங்கள் என்பது, அந்தம் + ஆதி இலக்கணத்தில் அமைந்த 100 பாடல்களின் தொகுப்பாகும்.
அபிராமி அந்தாதியில் சக்தி தேவியை பரம்பொருளாகக் காணும் சைவ சக்தி கொள்கை தெளிவாக வெளிப்படுகிறது. உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவை வழங்கும் தாயாக அபிராமி வர்ணிக்கப்படுகிறாள். உலகின் தோற்றம் நிலை மாற்றம் அழிவு ஆகிய அனைத்திற்கும் சக்தியே அடிப்படை என்ற கருத்து இதில் கூறப்படுகிறது. மனித வாழ்க்கையின் துன்பங்கள், ஆசைகள், பயங்கள் ஆகியவை இறை அருளால் நீங்கும் என்ற நம்பிக்கை பாடல்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பக்தியின் மூலம் ஞானம் அடையலாம் என்ற சைவ மரபுக் கருத்தும் இதில் இடம் பெறுகிறது.
இந்த நூலுடன் தொடர்புடைய ஒரு பாரம்பரிய கதை பரவலாக அறியப்படுகிறது. அமாவாசை நாளில் அபிராமி பட்டர் பெளர்ணமி எனக் கூறியதால் அரசரின் கோபத்துக்கு ஆளானார் எனவும் பின்னர் தேவியின் அருளால் நிலா தோன்றி அவரது பக்தி உண்மையானது நிரூபிக்கப்பட்டது எனவும் அந்த கதை கூறுகிறது. இந்நூல் தமிழ்ச் சமய இலக்கியத்தில் முக்கிய இடம் பெறுகிறது. கோவில்களில் பாராயணம் செய்யப்படும் நூலாகவும் இசை வடிவங்களில் பாடப்படும் படைப்பாகவும் இது இன்று வரை பயன்பாட்டில் உள்ளது.
நூற் பயன்
[தொகு]பாடல் 101:
| “ | ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவியடங்கக் |
” |
விளக்கம்: அன்னையை, எங்கள் அபிராமி தேவியை, இந்த உலகத்தையெல்லாம் பெற்றெடுத்தவளை, மாதுளம் பூ நிறங்கொண்டவளை, இப்பூமியைக் காப்பவளை வணங்குகிறோம். அவள் ஐவகை மலரம்புகளையும், பாசத்தையும், அங்குசத்தையும், கரும்பு வில்லையும் தன் திருக்கரங்களில் ஏந்தியவள். முக்கண்ணியை வணங்குவோர்க்கு எந்தத் தீங்கும் இல்லை.
காப்பு
[தொகு]| “ | தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊரர் தம் பாகத்துமை மைந்தனே உலகேழும் பெற்ற சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அமர் மேனிக் கணபதியே நிற்கக் கட்டுரையே ! |
” |
(உரை) மாலையாகப் பொருந்திய கொன்றையையும் சண்பகமலர் மாலையையும் முறையே அணிந்தருளுகின்ற தில்லையெம்பெருமானுக்கும், அப்பெருமான் வாமபாகத்தில் உறைகின்ற உமாதேவியாருக்கும் திருக்குமரனே, கரிய நிறம் பொருந்திய திருமேனியையுடைய கணபதியே, ஏழு உலகங்களையும் பெற்ற சிறப்புடைய அபிராமியம்மையைப் பற்றிய அந்தாதியென்னும் இப்பிரபந்தமானது எப்போதும் என் உள்ளத்துக்குள்ளே நிலைபெறும்படி திருவாய்மொழிந் தருளுவாயாக. தார்-மார்பின் மாலை. கொன்றை சிவபெருமானுக்கும், சண்பகம் அம்பிகைக்கும் உரிய மாலைகள்; சாம்பேயகுஸும ப்ரியா (435) என்பது அம்பிகையின் திருநாமங்களுள் ஒன்று. உலகேழும் பெற்றது: "புவியேழையும் பூத்தவளே" (12) என்பர் பின். ஊரருக்கும் உமைக்கும் மைந்தனே என்க. உமை: இங்கே, சிவகாமசுந்தரி; "சேரும் தலைவி சிவகாமசுந்தரி" (68). அந்தாதி யென்றது. இங்கே அந்தாதிப் பிரபந்தத்திற்குரிய சொற்பொருள் வளத்தை. கணபதியின் திருநிறம் வெண்மையென்றும் சிவப்பென்றும் கூறுவதும் உண்டு. அந்தாதி நிற்கக் கட்டுரை என்க. கட்டுரைத்தல் - பொருந்தும்படி திருவாய் மலர்ந்தருளுதல்; என்றது தம் உள்ளத்துள்ளே நின்று சொற்பொருள்களைத் தோற்றுவிக்க வேண்டுமென்று பிரார்த்தித்தபடி.
முதல் செய்யுள்
[தொகு]| “ | உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்குமத்தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே ! |
” |
விளக்கம்: உதயமாகின்ற செங்கதிரவனும். மேல் நெற்றியில் அணியும் சிந்துரத் திலகமும், ஞானம் உடையவர்கள் நன்கு மதிக்கின்ற மாணிக்கமும், மாதுள மலரும், தாமரை மலரில் எழுந்தருளிய திருமகள் துதிசெய்கின்ற மின்னற் கொடியும், மெல்லிய வாசனையையுடைய குங்குமக் குழம்பும் ஆகிய பொருள்களைப் போன்றதென்று நூல்கள் கூறுகின்ற திருமேனியையுடைய அபிராமியம்மை என்னுடைய மேன்மையான துணை ஆவாள்.
கடைசி செய்யுள்
[தொகு]| “ | குழையத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி கழையைப் பொருத திரு நெடுந்தோளும் கருப்பு வில்லும் விழையப் பொருதிறல் வேரியம் பாணமும் வெண்ணகையும் உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே ! |
” |
‘உதிக்கின்ற செங்கதிர்’ என்று தொடங்கிய நூலை ‘எப்போதும் உதிக்கின்றவே’ என்று முடித்து, முழுமையான அந்தாதிப்பாமாலையைத் தொடுத்து வழங்கியிருக்கிறார் பட்டர்.
விளக்கம்: குழையும்படி தன்னைத் தழுவிய சிவபிரானது திருமார்பின் மாலையாகிய கொன்றையின் மணம் வீசுகின்ற நகிலையுடைய கொடி போன்ற அபிராமியினுடைய மூங்கிலைப் பொருது வென்ற அழகிய நீண்ட திருத்தோள்களும், கரும்பாகிய வில்லும், ஆண் பெண்கள் ஒருவரை ஒருவர் விரும்பும்படி பொரும் வலிமையையுடைய தேனையுடைய அழகிய மலரம்புகளும், வெள்ளிய புன்முறுவலும், மான் கண்ணை வென்ற திருவிழியும் அடியேனது நெஞ்சில் எக் காலத்தும் தோன்றிக்கொண்டிருக்கின்றன.
சாக்தம்
[தொகு]சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை, குங்குமம் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்தி அனைத்துலகத்தையும் படைத்து, காத்து, தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது இவர்களின் கருத்து ஆகும்.
சாக்த கோவில்கள்
[தொகு]சதி தேவியான தாட்சாயிணியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்கள் சக்தி வழிபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பௌர்ணமி திதி
[தொகு]அக்காலத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்த முதலாம் சரபோஜி மன்னர் (Serfoji I) ஆண்டு வந்தார் (பொ.ஊ. 1675–1728). தெய்வ பக்தியும் மதப்பற்றும் மிகுந்தவர். அவர் ஒரு தை அமாவாசை தினத்தன்று காவிரி சங்கமத்தில் நீராட எண்ணித் தம் பரிவாரங்களுடன் காவிரிப்பூம்பட்டினம் சென்று தம் நேர்த்திக்கடனை நிறைவு செய்தபின், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் தரிசனம் செய்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் மிகுதியால் திருக்கடவூரை அடைந்தார்.
அரசர் திருக்கோயிலுக்கு உள்ளே சென்றபொழுது கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன் இவ்வுலக நினைவு ஏதுமின்றி தியான நிலையில் அமர்ந்திருந்தார். மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் அருகில் இருந்தோரை நோக்கி, “இவர் யார்?” என்று கேட்டார். அருகில் இருந்தவர்கள், “இவர் ஒரு பித்தர்; தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு ஏதோ ஒரு துர்தேவதையை வழிபடுகின்றவர்” என்று கூறினார்கள். ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. ஆகையால் திரும்பி வரும்போது பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், 'பட்டரே! இன்று என்ன திதி?' என்று கேட்டார். அம்பிகையின் அருள்மிகு தோற்றத்தை ஆனந்தமாய்க் கண்டு பரவசமுற்றிருந்த நிலையில் இருந்த அபிராமி பட்டர் வாய் குழறி, “இன்று பௌர்ணமி” என்றார்.
அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம் கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நிகழ்ந்ததை உணர்ந்து பெரிதும் வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன் என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்தி, அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று வேண்டிக்கொண்டு அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி, அதில் விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி அமர்ந்து கொண்டார். "அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு, அபிராமி அந்தாதியைப் பாட ஆரம்பித்தார். "உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பிக்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். அப்போது எழுபத்தொன்பதாவது பாடலாகிய,
பாடல் 79: விழிக்கே அருள் உண்டு
| “ | விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கவ் வழி கிடக்கப் |
” |
என்ற பாடலை பாடிய உடன், ஸ்ரீ அபிராமியம்பிகை பட்டருக்கு வெளிப்பட்டுத் தோன்றிக் காட்சி கொடுத்தருளினாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்து பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்தது. அவள் பட்டரிடம், "நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு", என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார்.
மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார். அரசர் பட்டருக்கு ஏராளமான மானியம் கொடுத்துத் தலைமுறைத் தலைமுறையாக அனுபவித்துக் கொள்ளும்படி வேண்டினார்.
அபிராமி அந்தாதியில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் ஒரே இரவில் பாடப்பெற்றது. அபிராமி அந்தாதியில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் முதல் வரி 'உதிக்கின்ற' என்ற வார்ததையுடன் ஆரம்பிக்கும் முதல் பாடல் அதே வார்த்தையை கடைசி வார்த்தையாகக் கொண்டு நூறாவது பாடல் முடிவடைகிறது.
இசை வெளியீடு
[தொகு]அபிராமி அந்தாதி பல பாடகர்களால் பாடப்பட்டிருந்தாலும், பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் பாடியதும், இசை தி. ஆர். பாப்பா அமைத்ததும், கவியரசு கண்ணதாசன் விளக்கம் எழுதியதும் ஆகிய வடிவமே மிகவும் பிரபலமானதாக கருதப்படுகிறது[3].
விளக்க உரை மற்றும் ஆன்மீக பேச்சு
[தொகு]அபிராமி அந்தாதி பற்றி விரிவாகப் பேசிய முக்கிய பேச்சாளர்களின் பட்டியல் இவை.
பாடலாக பாடியவர்கள்
[தொகு]அபிராமி அந்தாதி பாடிய முக்கியமான பாடகர்கள் :
சௌந்தரிய லகரி, அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்
[தொகு]சௌந்தரிய லகரி, அபிராமி அந்தாதி, லலிதா ஸஹஸ்ரநாமம்: அம்பிகையின் அருளைப் போற்றும் இந்த மூன்று புனித நூல்களும் சாக்த வழிபாட்டில் (சக்தி வழிபாடு) மிக முக்கியமானவை. இவற்றின் ஒப்பீட்டை கீழே காணலாம்.
பொதுவான ஒற்றுமைகள்: இந்த மூன்றுமே பராசக்தியை (அம்பிகையை) முழுமுதற் கடவுளாகப் போற்றுகின்றன. இவை அனைத்திலும் தேவியின் அழகைப் பாதாதிகேசம் (பாதம் முதல் தலை வரை) அல்லது கேசாதிபாதம் என வர்ணிக்கும் பகுதிகள் உள்ளன. மேலும், ஸ்ரீவித்யா உபாசனை மற்றும் குண்டலினி யோக ரகசியங்கள் இம்மூன்றிலும் அந்தந்த மொழிகளுக்கேற்ப மறைபொருளாகக் கூறப்பட்டுள்ளன. இவற்றைத் துதிப்பவர்களுக்கு லௌகீகமான செல்வங்களும், ஆன்மீகமான முக்தியும் கிட்டும் என்பது பொதுவான நம்பிக்கை.
ஒவ்வொன்றின் சிறப்பம்சங்கள்: சௌந்தரிய லகரி (அழகின் அலை): இதன் முதல் 41 பாடல்கள் 'ஆனந்த லகரி' என்றும், மீதமுள்ளவை 'சௌந்தரிய லகரி' என்றும் அழைக்கப்படுகின்றன. இது வெறும் துதிப் பாடல் மட்டுமல்ல, ஒரு மந்திர சாஸ்திரம். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு குறிப்பிட்ட எந்திரம் (Yantra) மற்றும் பலன் உண்டு. அம்பிகைக்கும் சிவபெருமானுக்கும் உள்ள பிரிக்க முடியாத உறவை இது மிக அழகாக விளக்குகிறது.
அபிராமி அந்தாதி: இது தமிழில் அமைந்த மிகச்சிறந்த பக்தி இலக்கியம். ஒரு பாடலின் கடைசிச் சொல் அடுத்த பாடலின் முதல் சொல்லாக வரும் 'அந்தாதி' முறையில் இது பாடப்பட்டுள்ளது. மரண பயத்தைப் போக்கி 'அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய' வரலாற்றுப் பின்னணி இதற்கு உண்டு. எளிய தமிழில் இருப்பதால், பாமர மக்களும் அம்பிகையிடம் உருகிப் பிரார்த்தனை செய்ய இது ஒரு சிறந்த கருவியாகும்.
லலிதா ஸஹஸ்ரநாமம்: இதில் தேவியின் 1000 பெயர்கள் எவ்விதத் திரும்பக் கூறலும் (Repetition) இன்றி இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்ட புராணத்தில் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு உபதேசித்ததாக இது அமைகிறது. தேவியின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் ஆகிய ஐந்து தொழில்களையும் (பஞ்ச கிருத்யம்) இது விரிவாக விவரிக்கிறது. இதனைப் பாராயணம் செய்வது அனைத்து தேவதைகளையும் வழிபட்டதற்குச் சமமாகக் கருதப்படுகிறது.
| அம்சம் (Feature) | சௌந்தரிய லகரி | அபிராமி அந்தாதி | லலிதா சகஸ்ரநாமம் |
|---|---|---|---|
| மொழி | சமஸ்கிருதம் | தமிழ் | சமஸ்கிருதம் |
| ஆசிரியர் | ஆதி சங்கரர் | அபிராமி பட்டர் | ஹயக்ரீவர் |
| நூலின் அமைப்பு | 100 ஸ்லோகங்கள் (மந்திர வடிவம்) | 100 பாடல்கள் (அந்தாதி முறை) | 1000 திருநாமங்கள் (பெயர்கள்) |
| இலக்கிய முறை | காவியம் மற்றும் தந்திர சாஸ்திரம் | அந்தாதி (செய்யுள் வகை) | ஸஹஸ்ரநாமம் (நாமாவளி) |
| முதன்மை நோக்கம் | ஸ்ரீவித்யா உபாசனை மற்றும் யோகம் | பக்தி மற்றும் சரணாகதி | தேவியின் திருப்புகழைப் பாடுதல் |
| குறிப்பிடத்தக்க சிறப்பு | ஒவ்வொரு பாடலுக்கும் தனி எந்திரம் மற்றும் பலன் உண்டு | அமாவாசையை பௌர்ணமி ஆக்கிய பக்தித் திறன் கொண்டது | திருநாமங்கள் மீண்டும் வராமல் (Repetition-free) அமைக்கப்பட்டவை |
அபிராமி அந்தாதி ஆய்வு
[தொகு]தேவகி முத்தையா என்பவர் ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்) பட்டத்திற்கு அபிராமி பட்டரின் “அபிராமி அந்தாதி” எனும் நூலினை ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்துப் பட்டம் பெற்றிருக்கின்றார். இவரது ஆய்வேடு பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற பின் தருமை ஆதீனத்தின் ஞானசம்பந்தப் பதிப்பக வெளியீடாக “அபிராமி அந்தாதி ஆராய்ச்சி” என்ற பெயரில் நூலாக வெளியிடப் பெற்றிருக்கின்றது. அபிராமி அந்தாதிப் பாடல்களை விளக்கி “அபிராமி அந்தாதி விளக்கவுரை” எனும் தலைப்பிலும் இவர் நூலாக வெளியிட்டுள்ளார்.[சான்று தேவை]
இவற்றையும் காண்க
[தொகு]- அபிராமி அந்தாதி
- அபிராமி அந்தாதி எளிய விளக்கம் (யூட்டியூப்)
- மதுராபுரி அம்பிகை மாலை என்னும் நூலை அபிராமி பட்டர் தழுவியது
- ↑ "கி. வா. ஜகந்நாதன்-அபிராமி அந்தாதி விளக்க உரை". Retrieved 2021-09-20.
- ↑ "கவிஞர் கண்ணதாசனின் விளக்கவுரை". Retrieved 2019-07-03.
- ↑ "அபிராமி அந்தாதி இசை வெளியீடு". Retrieved 2019-07-03.