பழனி முருகன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழனி முருகன் கோவில்
பெயர்
பெயர்:பழனி பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில்
அமைவிடம்
அமைவு:பழனி
கோயில் தகவல்கள்
மூலவர்:தண்டாயுதபாணி சுவாமி (முருகன்)
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:தென்னிந்தியக் கோயில்

பழனி முருகன் கோவில் அல்லது பழநி முருகன் கோவில் (Dhandayuthapani Swami Temple) முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு

ஒருநாள் நாரதர் மிக அரிதாகக் கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காகக் கொண்டு வந்தார். அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள். ஆனால் பரமசிவனோ பழத்தைப் பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தைப் பரிசாக அறிவித்தார். குமரனோ தனது மயில் வாகனத்தில் ஏறி உலகத்தைச் சுற்றி வந்தார். விநாயகனோ தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் "பழம் நீ " (பழனி) என அழைக்கப்படுகிறது.

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி மூலவர்

பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் மூலம் பழனிமலையையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு வந்து வைத்தார் என்று புராணங்கள் கூறுகின்றன.

புராணங்களில் இப்படியான பெயர்க் காரணங்கள் வழங்கப்பட்டாலும் பழனம் என்ற பழந்தமிழ்ச் சொல்லின் அடிப்படையில் உருவான பெயரே பழனி. பழனம் என்ற சொல் விளைச்சலைத் தருகின்ற நிலத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட நல்ல விளைச்சல் நிலம் நிறைந்த பகுதி என்பதால் பழனி என்ற பெயர் உருவானது.

இக்கோவிலுக்கு வி.வி.சி.ஆர். முருகேச முதலியார் என்பவர் தேவஸ்தான கல்லூரிக்கு இலவச இடம், தங்கத் தேர், வைரவேல், தங்க மயில் வாகனம், விஞ்ச் மின் இழுவை வாகனம் ஆகியவற்றை நன்கொடையாக செய்து கொடுத்தார்.[1][2][3]

முருகன் சிலையின் சிறப்பு

முருகனின் சிலை நவபாசாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாசாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாசாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.

போகர் வரலாறு

போகர் தமிழ் நாட்டிலுள்ள பிரபலமான சித்தராவார். இவர் நவபாஷாண முருகன் சிலையைச் செய்ததே மிகச்சுவையான தகவலாகும். அகத்தியர் தன்னை நாடி வருவோர்க்கு பஸ்பம், வில்லை போன்ற மருந்துகள் அளித்து நோயைக் குணப்படுத்தி வந்தார். போகரோ நவபாஷாணம் கொண்டு செய்த வில்லைகளை தன்னை நாடி வருவோர்க்கு அளித்து வந்தார்.

அகத்தியரின் மருந்துகளால் சீக்கிரமாக மக்கள் குணமடைந்து வந்தனர். ஆனால் போகரின் மருந்துகளுக்கு வீரியம் அதிகமானதால் மக்கள் உயிரிழந்தனர். இது கண்ட போகர் நவபாஷணத்தால் ஒரு சிலை செய்து அதன் மீது சந்தனத்தைப் பூசி அதிலிருந்து ஒரு குண்டுமணி அளவுக்கு வில்லையாக தன்னை நாடி வருபவர்களுக்கு அளித்து நோயை குணப்படுத்தி வந்தார் என்பது பழனியில் வழங்கி வரும் ஒரு செவிவழி செய்தியாகும்.

காவடி

கேரள மாநிலம் எழபெத்தவீடு என்ற ஊரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு காவடியைச் சுமந்து வந்தார். மரம் மற்றும் அலுமினியக் கலவையால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் காவடியின் ஒரு பக்கத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகரும், மற்றொரு பக்கத்தில் சித்தி, புத்தி சமேத விநாயகரும் பொறிக்கப்பட்டுள்ளனர். மலை உச்சியில் போகர் சமாதி பகுதியில் இந்த முதல் காவடியை தற்போது வரை பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.[4]

கோவில் திருவிழாக்கள்

பழனி திருவிழாக்களுக்கு பெயர்பெற்ற ஊராகும். இங்கு நடக்கும் குறிப்பிடத்தக்க திருவிழாக்கள்:

  1. தைப்பூசம்
  2. பங்குனி உத்திரம்
  3. சூரசம்ஹாரம் [5]

சிறப்பு

  • பஞ்சாமிர்தம் - மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பிரசாதம்.
  • தங்கத் தேர் வழிபாடு
  • காவடி சுமந்த பக்தர்கள்
குழந்தை வேலாயுதசாமி திருக்கோயில் (பழனி மலைக்கு கீழ்(அடிவாரத்தில்) உள்ளது)

உச்சியை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன:

  1. யானைப் பாதை (ஏறுவதற்கு இதை பயன்படுத்தினால் எளிதாக இருக்கும்)
  2. நோ் பாதை (இதை இறங்குவதற்கு பயன்படுத்தலாம்)

பிழை

பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்த குழந்தை வேலாயுத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் ஒன்று, இதுவே திருவாவினன்குடி மூன்றாம் படைவீடு ஆகும். பலரால் மலை மீதுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலே அறுபடை வீடுகளில் ஒன்று என்று தவறாக எண்ணப்படுகிறது. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். “தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்” என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.

வையாவி கோப்பெரும் பேகன் என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் ஆவியர்குடி. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி.

இழுவை ஊர்தி

பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல மூன்று இழுவைத் தொடருந்து ஒரு கம்பிவட இழுவை ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது.

கம்பிவட ஊர்தி

பழனி மலையின் அடிவாரத்திலிருந்து மலைஉச்சி பகுதியிலுள்ள முருகன்கோவிலுக்கு செல்ல கம்பிவட ஊர்திகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிப்பதால் மீண்டும் ஒரு கன்பிவட ஊர்தி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.[6]

கல்வி நிலையங்கள்

இக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இரண்டு பள்ளிகளும் 4 கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.[7]

  1. அருள்மிகு பழனியாண்டவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
  2. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தொடக்கப்பள்ளி
  3. அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி, பழனி
  4. அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னக்கலையம்புத்தூர்
  5. அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரி, ஒட்டன்சத்திரம்
  6. அருள்மிகு பழனியாண்டவர் அரசு மகளிர் கலைக் கல்லூரி, பழனி

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2021-01-25 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210125192908/http://palanimurugantemple.tnhrce.in/. 
  2. (in தமிழ்) வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019. https://archive.org/details/vidyavaani_july2019/page/n9/mode/1up. 
  3. "முதலாளி" (in தமிழ்). தினமலர். 2013. https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=14421&Print=1. 
  4. பழனிக்கு வந்த முதல் காவடி. மாலைமலர் இதழ். 18-Jan-2019. https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2019/01/18120140/1223288/First-Kavadi-in-palani.vpf. 
  5. விஜயதசமியன்று வன்னிகாசுர வதத்துடன் நிறைவுபெற்ற பழநி நவராத்திரி விழா! https://www.vikatan.com/news/spirituality/140208-vijayadashami-festival-at-palani-murugan-temple.html
  6. பழநி கோயிலில் விரைவில் இரண்டாவது ரோப் கார்: உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி
  7. "பழனி கோயில் நிர்வாகத்தின் பள்ளி, கல்லூரிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் தொடக்கம்". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2022/nov/16/palani-temple-administration-starts-breakfast-program-in-schools-and-colleges-3950363.html. பார்த்த நாள்: 2 November 2023. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பழனி_முருகன்_கோவில்&oldid=3820310" இருந்து மீள்விக்கப்பட்டது