குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(குமாரபுரம் ஸ்ரீ சித்ர வேலாயுத சுவாமி ஆலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி கோயில்
குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி கோயில் is located in இலங்கை
குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி கோயில்
குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி கோயில்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°13′20.95″N 80°48′4.09″E / 9.2224861°N 80.8011361°E / 9.2224861; 80.8011361
பெயர்
பெயர்:குமாரபுரம் ஸ்ரீ சித்ரவேலாயுத சுவாமி கோயில்
அமைவிடம்
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:முல்லைத்தீவு
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
குமாரபுரம் சித்ரவேலாயுதர் ஆலயத்தின் முன்புறத் தோற்றம்
கந்தவனக்கடவையிலுள்ள பழையவர்

குமாரபுரம் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் குமாரபுரம் என்ற சிற்றூரில் அமைந்துள்ள ஒரு முருகன் கோவில் ஆகும்.

பொது[தொகு]

வன்னிய மன்னர்களாட்சியில் இருந்த புராதன ஆலயங்களுள் குமாரபுரம், வற்றாப்பழை, புதுவூர், உருத்திரபுரம் ஆகியவை பழமையானவை. தனியூற்றின் கீழ்ப்பாலமைந்த குமாரபுரப் பகுதி அக்காலத்துத் “தண்ணீர் முறிப்பு” என வழங்கப்படினும் முற்காலத்துப் பெரிய “குருந்தனூர்க்குளம்” என்றபெயரால் வழங்கப் பெற்றது. நாகதீபத்தை தரிசித்த புத்தர் இப்பகுதியிலுள்ள தண்ணிமுறிப்புக் குளக்கட்டு வழியாக தென்னிலங்கைக்குச் சென்றார் என்று ஒரு வரலாறு உண்டு. இடிக்கப்பட்ட இக் கோவிலிலுள்ள செங்கற்களிலே தெய்வ உருவங்கள் பல செதுக்கப் பட்டிருந்தன[1].

வரலாறு[தொகு]

பரராசசேகர மன்னன் காலத்தில் வன்னிப் பகுதியை அடைந்த தெய்வங்களாக ஐங்கரன் மூத்த நயினார் (விநாயகர்) குமரேசன் சித்திர வேலாயுதன் ஆகியவர்களை வையாபாடல் குறிக்கின்றது. இவை முறையே விநாயகர் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு இடப்பட்ட பெயர்களே ஆகும். இவ்வாலயம் பற்றி வையா பாடல் பின்வருமாறு கூறுகின்றது. அந்நியராலழிக்கப்பெற்ற குமாரபுர ஆலயத்தின் பழைய தெய்வ உருவங்கள் இற்றைக்கு 2000 ஆண்டுக்கு முற்பட்டனவென புதைபொருளாராய்ச்சியாளர் கணிக்கின்றனர். இக்கோவில் கதிர்காமம் போன்ற பெருமையுடையதென தெட்சண கயிலாய மான்மியம் கூறுகின்றது. கோயில் சிறப்பினாலேயே இடத்திற்குக் குமாரபுரம் என்னும் பெயர் வந்தது. மூர்த்தி மிக விசேடமானது. மூர்த்தி விசேடத்தினாலேயே திருக்கோயில் சிறப்பான பெயருடன் விளங்கியது.

இந்த விக்கிரகத்தின் சிறப்பாக "இந்திரமயில்" குறிப்பிடப்படுகிறது. இவ்வமைப்பையுடைய விக்கிரகம் இந்தியா, தமிழ்நாட்டிலுள்ள சிக்கல் சிங்காரவேலர், எட்டுக்குடி[2], எண்கண், போன்ற சில ஆலயங்களிலுள்ள முருகன் சிலையை ஒத்த அமைப்புடையது. இவையனைத்தும் ஒரே சிற்பியினால் உருவானதாக அந்தந்த தலங்களின் தலவரலாறு கூறுகிறது.

இத் தலத்தை அந்நிய மதத்தினர் இடித்தழிக்கப்போகின்றனர் என்பதை அறிந்த மக்கள், இவ்வாலயத்தில் இருந்த சித்ரவேலாயுதர் எனும் பெயருடைய விக்கிரகத்தை, இரவோடிரவாக இரகசியமாக, கடல் வாணிபம் செய்பவர்களூடாக நெல்லுச் சாக்கினுள் மறைத்து மரக்கலத்தினூடாகக் கொண்டுவரப்பட்டு யாழ்ப்பாண மாவட்டம், கந்தவனக்கடவை என இக்காலத்தில் வழங்கும் பொலிகண்டிக் கடற்கரையில் இறக்கினர். அங்கேயே ஒரு சிறு கோயில் அமைத்து இரகசியமாகப் பூசித்து வரலாயினர். பொலிகண்டி என வழங்கிய இந் நெய்தல் நிலக் கிராமம் சித்திர வேலாயுத சுவாமி கோயில் கொண்ட காலந் தொடக்கம் கந்தவனம் எனவும் கந்தவனக் கடவை எனவும் வழங்கலாயிற்று.

ஒரு நாள் பூசகரின் கவலையினத்தினால் மூர்த்தியின் திருக்கரமொன்றில் ஊறு ஒன்று ஏற்பட்டுவிட்டது. ஊறு ஏற்பட்ட மூர்த்தியை வைத்து வணங்குதல் சரியல்ல என்ற முடிவுக்கு வந்தனர் சிலர். அதனால் கடலில் கொண்டு சென்று மூழ்க விடுவதாக யோசித்தனர். பலர் கடலில் மூழ்கவிட விரும்பாதாராய் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர் திருக்கோயிலின் உள் வீதியில் வடக்குப் புறமாக வன்னிமரத்தின் கீழ் ஒரு சிறு கோயில் அமைத்து ஊறு ஏற்பட்ட மூர்த்தியை அக் கோயிலில் தாபித்து “பழையவர்”[3] என்ற பெயரால் அழைத்து நித்திய பூசை நடக்கச் செய்தனர்.

குமாரபுரத்தில் 1817ஆம் ஆண்டில் 42 குடும்பங்க ளும் 1839ஆம் ஆண்டில் 48 குடும்பங்களும் 1881ஆம் ஆண்டில் 4 குடும்பங்களும் வசித்து வந்தனர். 1891ஆம் ஆண்டில் ஒருவருமே வசிக்கவில்லை என வன்னிக் கைநூல் கூறுகின்றது[4]. ஆகவே சேவலும் மயிலும் சைவ அன்பர்களும் நடமாடிய குமாரபுரம் காட்டுக் காய்ச்சலும், கரடி வெம்புலிகளும், நச்சரவமும் வாழும் கானகமாக மந்தியு மறியா மரம் நிறை அடுக்கமாக மாறியது.[4] இவ்வாலயத்தைக் காடுமூடியழிவு செய்திருப்பதறிந்த புத்தூர் சிவஸ்ரீ நா. குமாரசாமிக் குருக்கள் 1904-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசினரிடமிருந்து விலைக்குப் பெற்றுக் காடு கொன்று புதுக்கி யருச்சித்து வந்தார்.[5][6] 1915 இல் பிரசித்த வழக்கறிஞர் தெ. ச. துரையப்பாவினால் எழுதப்பட்ட உறுதியின்படி நா. குமாரசாமிக் குருக்கள் அவர் குமாரரான கு. பரமசாமிக்குருக்களை மனேச்சராக்கி (ஆதீனகர்த்தா) அவரின் பரம்பரையில் வரும் மூத்த அண் வாரிசுக்கு இந்த உரிமை செல்லவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 1955 சூன் 3 இல் குடமுழுக்கு நடைபெற்றது.[1][5]

விழாக்கள்[தொகு]

இந்த ஆலயத்தில் கந்தஷஷ்டி விழா மிகவும் சிறப்பானதாகும். முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆலயத்திலேயே முதன்முதலில் சூரன்போர் நிகழ்வு நடந்ததென்பர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 மு. செல்லையா (1955). குமாரபுரக் குமரன் தோத்திரம். குமாரபுரம், முள்ளியவளை: Commercial House Ltd., Colombo 2.. பக். 16.
  2. கலாநிதி. க. கணபதிப்பிள்ளை, ஈழத்து வாழ்வும் வளமும்[தொடர்பிழந்த இணைப்பு], KUMARAN PUBLISHERS, பக்கம் 21
  3. "பொலிகண்டி கந்தவனகடவையில் பிரதிட்டை செய்யப்பட்ட சுப்பிரமணிய சுவாமி - பழையவர் பரணிடப்பட்டது 2015-04-14 at the வந்தவழி இயந்திரம்". பார்த்த நாள் 14 நவம்பர் 2014.
  4. 4.0 4.1 நா. முத்தையா, (1964), ஆத்மஜோதி, ”குமாரபுரம் சித்திர வேலாயுத சுவாமி கோயில்”
  5. 5.0 5.1 பண்டிதர் வித்துவான் சைவப்புலவர் இ. திருநாவுக்கரசு (1970), குமாரபுர வெண்பா (திருவூஞ்சலுடன்), குமாரபுரம், முள்ளியவளை
  6. கொம்பறை 2001, வன்னிப் பிரதேச நாவல் இலக்கிய முன்னோடி திரு த. கயிலாசபிள்ளை - வே. சுப்பிரமணியம்