உள்ளடக்கத்துக்குச் செல்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் கோயில் முகப்புத் தோற்றம். 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கை, யாழ் மாவட்டத்தில் இணுவில் தெற்கிலுள்ள மடத்துவாசலில் அமைந்துள்ளது. இக் கோயில் காங்கேசந்துறை வீதியில், யாழ்ப்பாண நகரத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இணுவில் சந்தியில் இருந்து மேற்கு நோக்கி மானிப்பாய்க்குச் செல்லும் வீதியில் அமைந்துள்ளது. போத்துக்கேயர் யாழ்ப்பாண இராச்சியத்தை 1620 ஆம் ஆண்டில் கைப்பற்றுவதற்குமுன் அதை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்தில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படும் இந்தக் கோயில் யாழ்ப்பாணத்தில் உள்ள மிகவும் பழைய கோயில்களுள் ஒன்று. இக்கோயிலின் சிற்ப ஓவிய வேலைப்பாடுகள் ஒரு சிறப்பான அம்சமாகும்.

பெயர்

[தொகு]

13 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை யாழ்ப்பாணத்தை ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்தினர் ஆண்டனர். இவர்கள் பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர்களை மாறிமாறி வைத்துக்கொண்டனர். இவர்களில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட ஒரு மன்னனின் பெயராலேயே இக்கோயிலில் உள்ள பிள்ளையாருக்கு பரராசசேகரப் பிள்ளையார் என்றும், கோயில் பரராசசேகரப் பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் இல்கோயிலுக்குப் பெயர் வந்ததற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை. அம்மன்னன் இக்கோயிலைக் கட்டுவித்ததால் அப்பெயர் ஏற்பட்டது என்றும், அவன் வணங்கிவந்த கோயில் ஆதலால் அவன் பெயரால் கோயில் அழைக்கப்பட்டது என்றும் கருத்துக்கள் நிலவுகின்றன. ஆரியச் சக்கரவர்த்திகளின் மற்றச் சிம்மாசனப் பெயரைக் கொண்ட செகராசசேகரப் பிள்ளையார் கோயிலும் இணுவிலில் இருப்பது குறிப்பிடத் தக்கது.

வரலாறு

[தொகு]
இணுவில் பரராசசேகரப்பிள்ளையார் திருமண மண்டபம். முகப்புத் தோற்றம். 2004 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம்

ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தவரின் ஆட்சி 1240களில் இருந்து 1620 வரை ஏறத்தாழ 380 ஆண்டுகள் நிலைத்திருந்தது. இக்காலப் பகுதியில் பரராசசேகரன் என்ற சிம்மாசனப் பெயரைக் கொண்ட மன்னர்கள் குறைந்தது 6 பேராவது இருந்ததாகத் தெரிகிறது.[1] இவர்களில் எந்தப் பரராசசேகரன் காலத்தில் இக்கோயில் உருவானது என்பது தெரியவில்லை. இதனால் இது தோன்றிய காலம் பற்றி எதுவும் கூறமுடியாது. ஆரியச் சக்கரவர்த்தி வம்ச ஆட்சியின் தொடக்க காலத்திலேயே இணுவில் ஒரு முக்கியமான ஊராக இருந்ததுடன் அரசரின் பிரதிநிதி ஒருவரும் அங்கு இருந்ததாக யாழ்ப்பாண வைபமாலை கூறுகிறது. இதனால், இணுவில் 13 ஆம் நூற்றாண்டிலேயே அரசத் தொடர்புள்ள ஊராக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.

யாழ்ப்பாண அரசர் காலத்தில் இக்கோயிலை அண்டி ஒரு மடம் இருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் இதைப் பயன்படுத்தி வந்தனர். யாழ்ப்பாணத்தைப் போத்துக்கேயர் கைப்பற்றியபின்னர் இராச்சியத்தில் இருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்தனர். அவ்வேளை இக் கோயிலில் இருந்த பிள்ளையார் சிலையை ஒழித்து வைத்த மக்கள் அக்கட்டிடத்தை ஒரு மடம் எனக்கூறியதால் அக்கட்டிடத்தைப் போத்துக்கேயர் இடிக்காமல் விட்டனர்.[2]

போத்துக்கேயருக்குப் பின்னர் வந்த ஒல்லாந்தரும் தமது 138 ஆண்டுக்கால ஆட்சியில் சைவ வழிபாட்டுக்கு இடமளிக்கவில்லை. இறுதிக் காலத்தில் சில ஆண்டுகள் அவர்களது கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்பட்டபோது ஆங்காங்கே கோயில்களும் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் பரராசசேகரப் பிள்ளையார் கோயிலிலும் வழிபாடுகள் தொடங்கியிருக்கக்கூடும். ஆங்கிலேயர் 1796ல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர் வழிபாட்டுச் சுதந்திரம் கிடைத்தது. 1800களில் பழைய கோயில் கட்டிடம் திருத்தப்பட்டுக் குடமுழுக்கும் இடம்பெற்றதாகத் தெரிகிறது. இக்காலத்தில், கருவறையுடன், அர்த்தமண்டபம், மகாமண்டபம் ஆகியவற்றையும் கொண்டிருந்த இக்கோயில் சிறியதாக இருந்தது. அக்காலப்பகுதியில் பூசைகள் ஒழுங்காக நடைபெற்று வந்ததுடன், திருவிழாக்களும் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.[3]

1928 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் திருத்த வேலைகளும், புதிய கட்டிடவேலைகளும் இடம்பெற்றன. 1939ல் குடமுழுக்கும் செய்யப்பட்டது. இதன் பின்னரும் பல தடவைகள் திருப்பணி வேலைகள் இடம்பெற்றுக் கோயில் விரிவாக்கப்பட்டது. தற்போது பல மண்டபங்கள், இராசகோபுரம், மணிமண்டபம் என்பவற்றைக் கொண்டதாக இக்கோயில் விளங்குகிறது.

கடவுளர்

[தொகு]

இக்கோயிலில் மூல மூர்த்தியான விநாயகருடன் பஞ்சமுக விநாயகர், லட்சுமி, சுப்பிரமணியர், வைரவர், சண்டேசுவரர், நவக்கிரகம் என்போர் பரிவார மூர்த்திகளாக உள்ளனர்.

  1. எண்களுடன் கூடிய வரிசை உறுப்பினர்

திருவிழா

[தொகு]

வைகாசி சதயத்தில் கொடியேறித் திருவாதிரையில் தேரும் அடுத்துத் தீர்த்தோற்சவமும் நடைபெறுகின்றன. இங்கு மூன்று தேர்கள் பவனியில் கலந்து கொள்கின்றன.

பாடல்கள்

[தொகு]

அடிக் குறிப்புகள்

[தொகு]
  1. சுவாமி. ஞானப்பிரகாசர், 2003. பக். 80.
  2. சிவலிங்கம், மூ., 2004. பக். 04.
  3. கோயில் இணையத்தளம் பரணிடப்பட்டது 2012-05-23 at the வந்தவழி இயந்திரம், வரலாறு. 15 நவ 2012ல் பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்

[தொகு]
  • சுவாமி. ஞானப்பிரகாசர், யாழ்ப்பாண வைபவ விமர்சனம்: தமிழரசர் உகம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், சென்னை. 2003 (முதற் பதிப்பு: அச்சுவேலி, 1928).
  • சிவலிங்கம், மூ., சீர் இணுவைத் திருவூர், சைவத்திருநெறிக் கழகம், இணுவில். 2004.

வெளி இணைப்புக்கள்

[தொகு]