செகராசசேகரப் பிள்ளையார் கோயில்
செகராசசேகரப் பிள்ளையார் கோயில் இலங்கையின் வட பகுதியில், யாழ்ப்பாண நகரத்துக்கு அண்மையில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒர் கோயில். 13 ஆம் நூற்றாண்டு முதல் 1620 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்தி வம்சத்து அரசர்களின் சிம்மாசனப் பெயர்களில் ஒன்றான "செகராசசேகரன்" என்னும் பெயரைத் தழுவிய பெயர் கொண்ட இக் கோயில், தொடக்கத்தில் அக்கால மன்னர்களில் ஒருவரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இக் கோயிலுக்குப் பருத்தியடைப்புப் பிள்ளையார் கோயில் என்ற பெயரும் வழங்கி வருகிறது.
வரலாறு
[தொகு]செகராசசேகர மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோவில், யாழ்ப்பாண இராச்சியத் தொடக்க காலத்தில் இணுவில் பகுதித் தலைவனான பேராயிரவரும், அவர் வழிவந்தவர்களும் வழிபாடாற்றி வந்ததாகத் தெரிகிறது.[1] தற்போதும் அவர்கள் வழிவந்தவர்களே கோயிலை பராமரிப்பவர்களாகவும் அவர்களது பரம்பரையினரே அக்கோயிலை அண்ட வசிப்பவர்களாகவும் காணப்படுகின்றனர்
1620 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கேயர் அங்கிருந்த எல்லா இந்துக் கோயில்களையும் இடித்துவிட்டனர். அப்போது யாழ்ப்பாண மன்னர்கள் கட்டுவித்த செகராசசேகரப் பிள்ளையார் கோவிலும் அழிந்துவிட்டது. ஏறத்தாழ இரண்டரை நூற்றாண்டுகள் கழிந்த பின்னர் இலங்கையைப் பிரித்தானியர் ஆண்ட காலத்தில் இக் கோயில் மீளக் கட்டப்பட்டது.[2] சென்ற நூற்றாண்டுத் தொடக்கத்தில் சிறிய அளவிலான சாந்துக் கட்டிடமாக இருந்த இக் கோயில் இப்போது பொழிகற்களால் கட்டப்பட்ட அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம் என்பவற்றை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது.
பாடல்கள்
[தொகு]செகராசசேகரப் பிள்ளையார் மேல் வித்துவான் இ. திருநாவுக்கரசு ஒரு திருவூஞ்சற் பதிகம் ஒன்றைப் பாடியுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- சிவலிங்கம், மு., சீர் இணுவைத் திருவூர், சைவத் திருநெறிக் கழகம், இணுவில். 2004.
- திருநாவுக்கரசு, இ., சிறீ பரராச சேகர விநாயகர் தோத்திரப் பத்தும் சிறீ செகராச சேகர விநாயகர் திருவூஞ்சற் பதிகமும், இணுவை மத்திய இந்துசமய வளர்ச்சிச் சங்கம், இணுவில்.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணுவில் செகராச சேகரப்பிள்ளையார் பரணிடப்பட்டது 2013-01-20 at the வந்தவழி இயந்திரம்