மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஞ்சநேய கோவிலின் முகப்பு தோற்றம்
கோவில் மண்டபம் உட்புறத் தோற்றம்

மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் உடுவில் பகுதியில் உள்ள மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் யாழ்ப்பாணம் காங்கேசந்துறை வீதியை அண்டி அமைந்துள்ளது. பொதுவாக மருதனார்மடம் ஆஞ்சநேயர் கோவில் எனவே அறியப்படுகின்ற போதிலும், இதற்கு வழங்கப்பட்டுள்ள பெயர் "ஸ்ரீ சுந்தர ஆஞ்நேய திருப்பதி தேவஸ்தானம்" ஆகும். சிலர் இதனை மருதர் பெரும்பதி ஆஞ்சநேயர் ஆலயம் எனவும் அழைப்பர். அண்மைக் காலத்தில் நிறுவப்பட்ட இக்கோயில் வளாகத்தினுள் வீதியோரமாக அமைக்கப்படுள்ள மிகப்பெரிய அனுமன் சிலை இக்கோயிலின் சிறப்பு அம்சங்களில் ஒன்றாக விளங்குகின்றது. சி.வினாசித்தம்பி அவர்களின் வழிகாட்டலின் கீழ் தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோயில் பிரதம குரு இ.சுந்தரேஸ்வர சிவாச்சாரியாரின் முயற்சியால் இக்கோயில் அமைக்கப்பட்டது.[1]

பிரமாண்டமான அனுமன் சிலை[தொகு]

72 அடி உயர அனுமன் சிலை

ஆஞ்சநேயர் கோவிலின் முகப்பில் இருக்கும் அனுமான் சிலையானது மருதனார்மடத்திற்கே அடையாளமாக விளங்குகின்றது. 72 அடி உயரமான இந்த சிலையானது 2013 இன் முற்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டது.[2] இது இலங்கையிலேயே மிக பெரிய ஆஞ்சநேயர் சிலையாக கருதப்படுகின்றது. மருதனார்மடத்திற்கு உட்பட்ட பகுதியில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியக் கூடிய வகையில் இச்சிலை அமைந்துள்ளது.

ஆலய வரலாறு[தொகு]

ஒரு குருவும் சீடனுமாக இருவர் இராம நாமத்தை ஓதி ராமசக்கரத்தை வழிபட்டு வந்த இடமே கோவில் அமைந்திருக்கும் இடம் என நம்பப்படுகின்றது. இக்கோவில் 22.04.1999 இல் தொடங்கி வைக்கப்பட்டு 29.01.2001 இல் மகாகும்பாபிடேகம் நடைபெற்றது.

ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவம் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டு உடுவில் மருதனார்மட திருப்பதியில் நிறுவப்பட்டது. இக் கோவிலில் காலை மதியம் மற்றும் அந்தி நேர பூசைகள் வழமையாக நடைபெறுவதுடன் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகின்றன. ஸ்ரீ சுந்தர ஆஞ்சனேயர் திருவுருவத்திற்கான கும்பாபிடேகத்தின் பின்னர் 18 அடி உயர ராஜகோபுரம் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிடேகம் 09.02.2005 இல் நடைபெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆஞ்சநேயர் கோயில், மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "72 அடி ஆஞ்சநேயர் சிலை திறப்பு, EJaffna, January 24, 2013". செப்டம்பர் 1, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. மார்ச் 22, 2017 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  • அருள்வளர் சுந்தர ஆஞ்சநேயர் துதிப் பாடல்கள் நூல் (வெளியீட்டு திகதி :- 01.10.2005)
  • 09.02.2005 திகதிக்குரிய உதயன் பத்திரிகை
  • ஆற்றல் பல நல்கும் ஆஞ்சநேயர் நூல் (சர்வானந்தமய பீடத்தால் 08.01.2001 அன்று வெளியிடப்பட்டது)

வெளியிணைப்புக்கள்[தொகு]