வடபழனி ஆண்டவர் கோவில்
வடபழனி ஆண்டவர் கோவில் (Vadapalani Andavar Temple) என்பது சென்னைக்கு மேற்கே அமைந்திருக்கும் வடபழநியில் அமைந்திருக்கும் ஒரு புகழ் பெற்ற முருகன் கோவில் ஆகும்.[1] இக் கோவில் 1920இல் புதுப்பிக்கப்பட்டு இராஜ கோபுரம் கட்டப்பட்டது. மேலும், இது தமிழ்நாட்டின் கோடம்பாக்கத்தில் (கோலிவுட்) அமைந்துள்ளதாலும் தமிழ் திரைப்படத்துறையினர் வருகை அதிகமிருப்பதாலும் மக்களிடையே பிரபலமான கோவிலாக உள்ளது.[2]
வரலாறு
[தொகு]1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையுடன் இக் கோயில் கட்டப்பட்டது. இன்று மக்களின் ஆதரவால் புகழ் பெற்ற கோவிலாக உள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 7,000 தம்பதியர் இங்கு வந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.
இக் கோவிலின் தலபுராணத்தில், முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் முதலில் இருந்த கொட்டகையை அவரின் சொந்த வழிபாட்டிற்காக அமைத்தார் எனவும், அங்கு தென்பழநி முருகனின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு சமயம் தீவீர வயிற்றுவலியால் அவதிப்பட்டார். அந்நோய் தீருவதற்கு அவர் தவறாமல் திருத்தணி மற்றும் திருப்போரூர் சென்று முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். பின்னர், தென்பழநி யாத்திரையின் போது ஒரு சாது சொல்லியதற்கிணங்க, தான் தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகனின் உருவப்படத்தை வைத்து வழிபடலானார். தன் நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கை செலுத்தினார். இதற்கு "பாவாடம்" என்று பெயர். பாவாடம் காணிக்கையால் அவருடைய வயிற்றுவலி நீங்கப்பெற்றார். மேலும், அவர் நாளடைவில் அந்த இடத்தில் முருகனின் தெய்வீக சக்தியை உணர்ந்தார். அதனால் அவர் பிறரிடம் சொல்லும் சம்பவங்கள் அனைத்தும் நடந்தேறின. அதனால் மக்கள் அவர் சொல்வதை "அருள்வாக்கு" என்று எடுத்துக்கொண்டனர். மக்களின் அன்றாடப் பிரச்சினைகளான நோய் தீருதல், வேலை வாய்ப்பு மற்றும் திருமணம் ஆக வேண்டி அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர் என்ற விபரம் கூறப்படுகிறது. அது முதல் அவர் அண்ணாசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார்.
அவருக்குப்பின், அவரின் பிரதான சீடரான இரத்தினசாமி செட்டியார் என்பவரால் 1865ம் ஆண்டு தென்பழநியில் உள்ளது போல சிலை செய்யப்பட்டு கோவில் கட்டப்பட்டது. ஒரு நாள் இரத்தினசாமி செட்டியாரின் கனவில் அண்ணாசாமித் தம்பிரான் தோன்றி தன்னைப்போலவே "பாவாடம்" தரித்துக் கொள்ளுமாறு பணித்தார். அதனால் இவரும் பாவாடம் தரித்து, குறி சொல்லும் ஆற்றலைப் பெற்று இரத்தினசாமித் தம்பிரான் என அழைக்கப்பட்டார். தற்போது உள்ள கர்ப்பக்கிருகம், உட்பிரகாரம் மற்றும் கருங்கல் மண்டபம் போன்றவை இரத்தினசாமித் தம்பிரானின் சீடரான பாக்கியலிங்கத் தம்பிரான் செங்குந்தர்[3] காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். இம் மூன்று தம்பிரான்களின் (சித்தர்கள்) சமாதியும் தமிழ்நாட்டில் உள்ள நெற்குன்றம் போகும் பாதையில் அமைந்துள்ளன. இங்கு சித்தர்கள் ஆலயம் அமைக்கப்பட்டு பௌர்ணமி பூசை மற்றும் குரு பூசை போன்றவை விமரிசையாக நடைபெறுகிறது.
தனிச் சன்னதிகள்
[தொகு]இக் கோவிலில் பல தெய்வங்களுக்கு தனிச் சன்னதிகள் காணப்படுகின்றன. வரசித்தி விநாயகர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள் இங்கு உள்ளன.
இக்கோவிலின் உட்பிரகாரத்தில் மூலவர் பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு முருகன் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார். நவகிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கென்று ஒரு தனிச் சன்னதி இருக்கிறது. மேலும் இங்கு தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி சன்னதிகளும் உள்ளன.
இக்கோவில், திருமணங்களுக்கும் மத சொற்பொழிவுகளுக்கும் பயன்படுத்தப்படும் ஒரு விசாலமான மண்டபத்தைக் கொண்டுள்ளது. இது சென்னையில் உள்ள மக்கள் அடிக்கடி வரும் முருகன் ஆலயங்களில் ஒன்றாக இருக்கிறது.
இந்த கோவிலின் முன்புற இராஜ கோபுரத்தில், கந்த புராணக் காட்சிகள் வண்ணமயமாக விளக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முன்புறம் திருக்குளம் உள்ளது. இங்கு தைப்பூசம் மற்றும் விழாக் காலங்களில் 'தெப்போற்சவம்' நடைபெறுகிறது. இதன் கிழக்கு கோபுரம் 40.8.மீ உயரம் கொண்டது. இதில் 108 பரதநாட்டிய நடன அசைவுகள் காணப்படுகின்றன. இக்கோவிலின் தல விருட்சமாக அத்தி மரம் உள்ளது.
கோவிலின் சிறப்பு
[தொகு]- தங்க ரதம்: வைகாசி விசாகம்
- பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சனேயர் சன்னதி இங்கு உண்டு.
- மூன்று சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வளரப்பட்டது இந்தத் திருக்கோயில்.
- தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவது.
வழிபாடு
[தொகு]இக் கோவிலில் வழிபாடு அதிகாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து காலசந்தி பூசை 7 மணிக்கும், உச்சிக்கால பூசை மதியம் 12 மணிக்கும், சாயரட்சை மாலை 5 மணிக்கும் மற்றும் அர்த்தசாம பூசை இரவு 9 மணிக்கும் நடைபெறுகிறது. (விழாக்காலங்களில் பூசை நேரங்கள் மாறுபடும்)
திருவிழாக்கள்
[தொகு]இங்கு தமிழ் மாதம் பன்னிரெண்டிலும் விழாக்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் வைகாசி விசாகத் திருவிழா 11நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனி மற்றும் ஆடிக் கிருத்திகையில் சிறப்பு பூசை மேற்கொள்ளப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் 6 நாட்கள் கந்த சஷ்டி விழா சூர சம்காரத்துடன் சிறப்பாக நடக்கிறது. இந்த ஆறு நாட்களிலும் முருகப் பெருமானுக்கு "லட்சார்ச்சனை" நடைபெறுகிறது. மேலும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகருக்கு 9 நாட்கள் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
படங்கள்
[தொகு]-
வடபழநி முருகன் கோவில் நுழைவாயில்
-
வடபழனி முருகன் கோவில் மாதிரி
-
வடபழநி முருகன் கோவில்
-
வடபழனி கோவிலில் கண்ட பல்லக்கு
-
வடபழனி முருகன் கோவிலிலுள்ள கொடி மரம்
குறிப்புகள்
[தொகு]- ↑ வடபழநி ஆண்டவர் திருக்கோயில்
- ↑ King, Anthony D. (1984). Buildings and Society: Essays on the Social Development of the Built Environment. Routledge & Kegan Paul. pp. 143–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7102-0234-5.
- ↑ https://m.dinamalar.com/temple_detail.php?id=37748
வெளியிணைப்புகள்
[தொகு]- கோவில் அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2014-09-16 at the வந்தவழி இயந்திரம்