நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்

ஆள்கூறுகள்: 9°40′.217″N 80°02′.460″E / 9.66672694°N 80.03346111°E / 9.66672694; 80.03346111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் நுழைவாயில்.
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் is located in இலங்கை
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°40′.217″N 80°02′.460″E / 9.66672694°N 80.03346111°E / 9.66672694; 80.03346111
பெயர்
பெயர்:நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:பிள்ளையார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
இணையதளம்:http://www.nayanmarkaddu.org/
நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் - வீதியில் இருந்தான பார்வை

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலயம் (ஆங்கில மொழி: Nayanmarkaddu Arasady Pillaiyar Alayam) இலங்கையின் வடக்கில் யாழ்ப்பாணத்தில் நாயன்மார்கட்டு என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பிள்ளையார் கோயில் ஆகும். இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூர் இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கைஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்டது. மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளையும் செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக்குளத்திறகு வடபகுதியில் நாயன்மார் குருபூஜை மடம் ஒன்றையும் அமைப்பித்தான். இதற்குச் சான்றுகள் குளத்திற்கு வடபால் உள்ள காணிகளின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள பிரதேசத்தில் சரஸ்வதி மகால் என்று அழைக்கப்பட்ட ஓர் நூலகமும் காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆலய அமைப்பு[தொகு]

இவ்வாலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், நிருத்த மண்டபம், முஷிகம், பலிபீடம், கொடி மரம் என்பவற்றை கொண்ட ஸ்தம்ப மண்டபமும் அமைந்துள்ளன. உள்வீதிப் பிரகாரத்திலே அக்கினி மூலையில் பாகசாலையும் (மடப்பள்ளி), அதைத் தொடர்ந்து களஞ்சிய அறை, வாகன சாலை, குரு வாசம் என்பனவும், கர்ப்பக்கிரகத்திற்கு மேற்கே நாகதம்பிரான் சந்நிதியும், கர்ப்பக்கிரகத்திற்கு வடக்கே சண்டேஸ்வரர் சந்நிதியும், ஈசான மூலையிலே வசந்த மண்டபம் அதையடுத்து யாகசாலை, வைரவர் சந்நிதி, மணிக்கூடு என்பன அமைந்துள்ளன. ஆலயத்திற்கு கிழக்கே நாயன்மார்கட்டு குளம்(தாமரைக் குளம்) அமைந்துள்ளது. மூல மூர்த்தியாக விநாயகப் பெருமான் வீற்றிருக்கின்றார். சதுர்த்தி உற்சவ சிறிய விநாயகர், எழுந்தருளி விநாயகர், பஞ்சமுக விநாயகர், சிவகாமசுந்தரி சமேத நடராஜப் பெருமான், மீனாட்சி அம்மன், வேலாயுதப் பெருமான், சந்தான கோபாலர், மாணிக்கவாசகர், சண்டேஸ்வரர் ஆகிய எழுந்தருளி மூர்த்தங்களும் அமைந்துள்ளது.

நாயன்மார்கட்டு அரசடிப்பிள்ளையார் ஆலய கற்பக்கிரகத்தின் தோற்றம்

வரலாறு[தொகு]

இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஈழநாட்டில் தமிழர் தலைநகராக விளங்கிய யாழ்ப்பாணம் நல்லூரை இராசதானியாகக் கொண்டு அரசாட்சி புரிந்த தமிழ் மன்னாகிய சிங்கை ஆரியச்சக்கரவர்த்தியினால் அமைக்கப்பட்டது. மன்னன் இவ்வாலயத்திற்கு முன்னால் ஓர் அழகிய திருக்குளத்தை அமைப்பித்து அதன் நடுவில் ஓர் நீராழி மண்டபமும் விநாயகப் பெருமான் திருக்குளத்தில் நீராடி நீராழி மண்டபத்திலே இளைப்பாறிச் செல்வதற்கு வேண்டிய வசதிகளையும் செய்வித்தான். அது மட்டுமல்லாது இத்திருக்குளத்திறகு வடபகுதியில் நாயன்மார்கள் குருபூசை மடம் ஒன்றையும் அமைப்பித்தான். இதற்குச் சான்றுகள் குளத்திற்கு வடபால் உள்ள காணிகளின் பெயர்களே. அத்தோடு இக்குளத்திற்கு வடபால் உள்ள பிரதேசத்தில் சரஸ்வதி மகால் என்று அழைக்கப்பட்ட ஓர் நூலகமும் காணப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.இற்றைக்கு 1942 ஆண்டு அரசாங்கத்தால் குளத்தை ஆழமாக கிண்டுகின்றபோது ஓர் கல்வெட்டு சிலாசாசனம் கிடைக்கப்பெற்றது. எமது ஆலயத்தில் சிவஶ்ரீ செ.சதாசிவக்குருக்களின் பாரமரிப்பில் நீண்டகாலம் வைக்கப்பட்டு இருந்து பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுாதன சாலைக்கு கொடுக்கப்பட்டது. அதில் “கலி 3625 ல் சிங்கையாாியனல் பொருமானுக்கு தீர்த்தம் கொடுக்க இத்திருக்குளம் வெட்டப்பட்டது” என்று பொறிக்கப்பட்டுள்ளது.

திருக்குளத்துடன் இவ்வாலயம் அமைந்திருப்பதனால் குளத்தடிப் பிள்ளையார் என்ற பெயரும், பரராசகேசர மன்னனின் மருமகனாகிய மகாவித்துவான் அரசகேசரி இக்குளத்தில் நீராடி விநாயகப்பெருமானை வழிபட்டு அவரின் ஆசியைப்பெற்று தாமரைக்குளத்தில் நடுவில் அமைந்திருந்த நீராழி மண்டபத்தில் இருந்து இரகுவம்சம் என்னும் வடமொழிக் காவியத்தை இனிய தமிழில் பாடினார். இதன் காரணமாக அரசகேசரிப் பிள்ளையார் என்ற சிறப்புப் பெயரும் பிள்ளையாருக்கு உண்டாயிற்று.

ஆலய பரிபாலனமும் சிவாசாரியார்களும்[தொகு]

ஆதியிலிருந்தே சைவக்குருமார்களினால் நித்திய நைமித்திய வழிபாடாற்றப்பட்டு பரிபாலிக்கப்பட்டு வருகின்ற ஆலயங்களில் இதுவும் ஒன்று. ஆலயத்திற்கு நித்திய நைமித்தியபூஜை வழிபாடுகளை செய்வதற்கென மன்னன் தென்னிந்தியாவில் வேதாரணியம் என்ற இடத்திலிருந்து சைவக்குருமார் பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீமத் கயிலாசநாதக்குருக்கள் குடும்பத்தாரை வருவழைத்து பரம்பரையாகப் பரிபாலித்து பூசை செய்து வரும்படி வேண்டிக் கொண்டான். அவர்களது பரம்பரையினரே தற்போதும் இவ் ஆலயத்தைப் பராமரித்து வருகின்றனர்.

ஆலய உற்சவங்கள்[தொகு]

சித்திரைப் புத்தாண்டு உற்சவம்[தொகு]

இவ்வாலயத்தில் இடம் பெறும் சித்திரைப் புத்தாண்டு உற்சவம் மிகச் சிறப்பானது ஆகும். ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு அன்று விஷு புண்ணியகாலத்தில் மூல மூர்த்தியான விநாயகப்பெருமானுக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று வருடம் பிறக்கும் நேரம் மூலமூர்த்திக்கு விசேட பூசை நடைபெற்று தொடர்ந்து உற்சவமும் நடைபெறும். இவ் உற்சவத்தில் சிறப்பான அம்சங்களாக கோபூசை, கண்ணாடி தரிசனம், என்பன குறிப்பிடத்தக்கதாகும். இக்காலத்தில் அடியார்கள் திரள் திரளாக இங்கு கூடுவார்கள் மேலும் இச் சித்திரைப்புத்ததாண்டு உற்சவத்தின் சிறப்பான ஓர் நிகழ்வாக கைவிசேஷம் கொடுக்கும் நிகழ்வு இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. அதாவது வருடப்பிறப்பன்று வரும் அடியவர்கள் அனைவருக்கும் பிரதம குருக்கள் அவர்களால் கைவிசேஷம் வழங்கப்படும். இந் நிகழ்வானது இவ்வாலயத்தில் சிவஸ்ரீ செல்லையாக்குருக்கள் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை சிறப்பாக பின்பற்றப்படுவது முக்கிய ஓர் நிகழ்வாகும். மேலும் இப்புண்ணிய காலத்தில் ஸ்நானத்தின் போது மருத்துநீர் வைத்தல் முக்கியமான பிரதானமான ஓர் அம்சமாகும். இதனைக் கருத்தில் கொண்டு தான் மிகச் சிறப்பாக இந் நாயன்மார்கட்டு கிராமத்திலே இவ்வாலயத்தில் மட்டும் தான் மருத்துநீர் வழங்கப்படுவதும் குறிப்பிடதக்கதாகும்.

சதுர்த்தி உற்சவம்[தொகு]

ஒவ்வொரு மாதமும் வருகின்ற விநாயக சதுர்த்தி தினத்தில் பகல் மூலமூர்த்திக்கு உருத்திராபிடேகம் இடம்பெற்று சதுர்த்தி உற்சவத்திற்கென பிரதிஷ்டை செய்யப்பட்ட சிறிய உற்சவமூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசை இடம்பெறும். தொடர்ந்து சிறிய எலி வாகனத்தில் விநாயக் பெருமான் வீதியுலா வருதலும் இடம்பெறுகின்றது. அத்தோடு ஆவணி சதுர்த்தி அன்று மூலமூர்த்திக்கு ஸ்நபன அபிடேகம் நடைபெற்று விநாயகப் பெருமான் திருவீதியுலா வருதல் என்பன இடம்பெறும்.

நவராத்திரி விழாவும் விஜயதசமி உற்சவமும்[தொகு]

நவராத்திரி முதல் நாளன்று காலை வசந்தமண்டபத்திலே மீனாட்சிஅம்மன் வீற்றிருக்க கும்பமும் கொலுவும் வைக்கப்பட்டு பூசை நடைபெறும். பின்பு ஒன்பது தினங்களும் மாலைப்பூசையின் போது மூலமூர்த்திக்கு வழமையான பூசை நடைபெற்றதும் மீனாட்சி அம்மனுக்கு விசேட பூசை இடம் பெற்று சகலகலா வல்லி மாலை தோத்திரம் ஓதப்படும். இறுதி நாளான விஜயதசமி அன்று மானம்பூ திருவிழா இடம்பெறும். அதைத் தொடர்ந்து சிறார்களுக்கு ஏடு தொடக்கலும், குருகுலகல்வி பயில ஆரம்பிக்கும் சைவக்குருமார்களின் சிறார்களுக்கு குருகுலக்கல்வியை ஆரம்பித்து வைத்தலும் நடைபெறும்.

கார்த்திகைத் தீபம்[தொகு]

கார்த்திகை விளக்கீடு அன்று விநாயகப்பெருமானுக்கு விஷேட பூசை நடைபெற்று மாவிளக்கு ஏற்றும் நிகழ்வும், சொக்கப்பானை கொழுத்தும் நிகழ்வும் நடைபெறும்.

விநாயக ஷஷ்டி உற்சவம்[தொகு]

கார்த்திகை மாதம் நடைபெறும் விநாயக ஷஷ்டி உற்சவமானது இவ்வாலயத்திலும் நடைபெறுகின்றது. விநாயக ஷஷ்டி விரத ஆரம்ப நாள் தொடக்கம் 20ம் நாள் வரை காலைப்பூசையின் போது மூலமூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசையும், அஷ்டோத்தரசத நாம அர்ச்சனையும் நடைபெற்று பிள்ளையார்யார் கதை படிப்பும் இடம்பெறும். அத்தோடு 20 நாட்களிலும் விநாயகருக்கு சிறப்பான வெவ்வேறு நிவேதனம் பொருட்களும் செய்து படைக்கப்படும். உதாரணமாக அப்பம் எள்ளுருண்டை, இராசவள்ளிக்கிழங்கு என்பனவற்றைக் குறிப்பிடலாம். இறுதி நாள் அன்று விநாயகருக்கு ஸ்நபன அபிஷேகம் நடைபெற்று வசந்தமண்டபத்திலே உற்சவ மூர்த்தி விநாயகருக்கு விஷேட பூசை நடைபெற்று திருவிழாவும் நடைபெறும்.

மார்கழித் திருவெம்பாவையும் திருவாதிரை உற்சவமும்[தொகு]

மார்கழி மாதம் இ;வ்வாலயத்திலும் திருவெம்பாவை உற்சவம் இடம்பெறுவதாகும். இக்காலத்தில் இங்குள்ள சிவகாமி அம்பாள் சமேத நடேசப் பெருமானுக்கு ஒன்பது தினங்கள் விசேட பூசையானது நடைபெற்ற திருவெம்பாவை ஓதலும் நடைபெற்றும். அதிகாலையில் திருப்பள்ளியெழுச்சி ஓதுவதும் இங்கு சிறப்பாக இடம்பெறும். ஏனைய ஆலயங்களில் பாடப்படும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் அன்றி இவ்வாலயத்திற்கென தனித்தே விளங்கும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் இங்கு எம்பெருமான் விநாயகருக்காக இயற்றப்பட்டு பாடப்படுவது சிறப்பான ஓர் நிகழ்வாகும். இறுதி நாளான பத்தாம் நாள் திருவாதிரை தினத்தன்று அதிகாலை மகா ஸ்நபன அபிஷேகம் நடராசப் பெருமானுக்கு நிகழ்த்தி விசேட அலங்காரங்களாலும் விசேட நைவேத்தியம், தீபாரதனை , அர்ச்சினை, பூசை முதலிய உபசார பொருட்களினால் உபசரித்தல் இடம் பெறும். இதனை தொடர்ந்து ஆருத்திராதரிசனமும் திருவிழாவும் இடம் பெறும்.

மார்கழித் திருவாசக முற்றோதல் விழா[தொகு]

ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய அமரர் சிவஸ்ரீ சதா. ஆறுமுகக்குருக்கள் அவர்களின் சிரார்த்த தினத்தன்று திருவாசக முற்றோதல் நடைபெறும். இந்நிகழ்விற்கு பல இடங்களிலிருந்தும் ஓதுவார்கள் வந்து கலந்து கொள்ளுவார்கள். இத்திருவாசக முற்றோதலின் பின் சிவகாமசுந்தரி சமேத நடேசப் பெருமானுக்கு விஷேட பூசை நடைபெற்று திருவீதியுலா வருதலும் இடம்பெறும். தொடர்ந்து மதியம் அன்னதானமும் நடைபெறும்.

தைப்பொங்கல் பண்டிகை[தொகு]

தைப்பொங்கல் பண்டிகையானது இவ்வாலயத்தில் இடம்பெறும் நைமித்திய கிரியைகளில் ஒன்றாகும். தம்ப மண்டபத்திற்கு அடுத்ததான தரிசன மண்டபத்தில் சூரியனின் ரதமானது வரையப்பட்டு அதில் சூரிய கும்பம் வைக்கப்பட்டு அதிகாலை சூரிய உதயத்தின் போது முதலில் சூரியனுக்கு பூசை நடைபெற்று பின்பு மூலமூர்த்திக்கும் ஏனைய பரிவாரதெய்வங்களுக்கும் பூசை நடைபெறும். மறுநாள் இவ்வாலய கோமாதாவிற்கு பட்டிப்பொங்கலும் இடம்பெறும்.

மணவாளக்கோல உற்சவம்[தொகு]

இவ்வாலயத்தில் மஹாகும்பாபிஷேக தினமாகிய தை மாத ரேவதி நட்சத்திரத்தன்று நடைபெறும். காலை ஆயிரத்து எட்டு சங்காபிஷேகமானது சிறப்பாக நடைபெற்றும். இதனை தொடர்ந்து அன்று மாலை எம்பெருமானுக்கு திருவூஞ்சலும், திருவிழாவும் நடைபெற்று மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூந்தண்டிகையில் விநாயகப் பெருமான் திருவீதியூலா வருதலும் இடம்பெறும்.

கும்பாபிஷேகம்[தொகு]

போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் இவ்வாலயமும் அழிக்கப்பட்டது. சைவ மக்கள் தங்கள் வழிபாடுகளைச் செய்ய முடியாது, தண்டனைக்கு அஞ்சியமக்கள் மறைமுகமாக ஆலயம் இருந்த இடத்தில் சிறிய கொட்டகை அமைத்து கைலாசநாதக்குருக்களின் மகன் கதிர்காமநாதக்குருக்கள் காலத்தில் விநாயகனின் சிறிய உருவச்சிலையை பூக்கூடையில் வைத்து பூ வில்வம் பத்திரம் முதலியவற்றுடன் மறைத்துக்கொண்டு வநது வழி பட்டார்கள் என்றும், புராணங்கள் படித்தார்கள் என்றும் (பின்பு அக்கூடையில் வைத்து மறைத்து வீட்டிற்குக் கொண்டுபோனார்கள் என்றும், கர்ணபரம்பரைக்கதைகள் கூறுகின்றன. ஆங்கில ஆட்சி வந்தபின் சுதந்திரம் கிட்டியது அழிக்கப் பட்ட ஆலயங்கள் மீண்டும் புதியவையாக அமைக்கப்பட்டன கதிர்காமநாதக்குருக்களின் மகன் ஆறுமுகக்குருக்கள் மேற்படி ஆலயத்தை வெள்ளைக்கற்களாலும் செங்கற்களாலும் கட்டுவித்து 1800-1825 க்கு இடைப்பட்ட காலத்தில் கும்பாபிஷேகம் நடாத்தி வைத்தார். அதன் பின் ஆறுமுகக்குருக்கள் மகன் செல்லையாக்குருக்கள் சில திருத்த வேலைகளைச் செய்து 17-1-1916ம் வருடம் புனருத்தாரண கும்பாபிஷேகம் செய்துவைத்தார். இவரது காலத்திலேயே கோவிலை முழுக்க இடித்து வெள்ளைக்கற்களாலும் சீமெந்துக்கற்களாலும் கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் தம்பமண்டபம் முதலியவற்றைக் கட்டுவித்து கரவருடம் பங்குனி மாதம் 14ம் திகதி (27-3-1952ம்) ஆண்டு வியாழக்கிழமையும் ரேவதி நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் புனருத்தாரண மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.

'
வருடம் கும்பாபிஷேகம் விபரம் ஆலய பிரதமகுரு கும்பாபிஷேக பிரதமகுரு விஞ்ஞாபனம்
1800-1825 மகாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ.க.ஆறுமுகக்குருக்கள்
17-01-1916 புனருத்தாரண கும்பாபிஷேகம் சிவஸ்ரீ.ஆ.செல்லையாக்குருக்கள்
27-03-1952 கரவருடம் பங்குனி மாதம் 14ம் திகதி வியாழக்கிழமை ரேவதி நட்சத்திரமும் புனருத்தாரண கும்பாபிஷேகம் சிவஸ்ரீ.ஆ.செல்லையாக்குருக்கள் சிவஸ்ரீ.க.சிவபாதசுந்தரக்குருக்கள்
10-02-1989 விபவ வருடம் தைத்திங்கள் 28ம் நாள் ரேவதி நட்சத்திரமும் புனருத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா கும்பாபிஷேகம் சிவஶ்ரீ.செ.சதாசிவக்குருக்கள், சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள் சிவஸ்ரீ.சதா.மகாலிங்கசிவக்குருக்கள்
11.02.2008 சா்வசித்து வருடம் தைத்திங்கள் 28 ஆம் நாள் திங்கட்கிழமை பஞ்சமுக விநாயகர் நூதன பிரதிஷ்டா பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ.சதா.மகாலிங்கசிவக்குருக்கள் சிவஸ்ரீ.சி.இராஜேந்திரக்குருக்கள்
09.02.2017 துர்முகி வருடம் தைத்திங்கள் 27ம் நாள் புனர்பூச நட்சத்திரமும் புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் சிவஸ்ரீ.சதா.மகேஸ்வரக்குருக்கள், சிவஸ்ரீ.சதா.மகாலிங்கசிவக்குருக்கள் சிவஸ்ரீ.தி.ஜெயராஜ்குருக்கள்

சமய சமுகப்பணி[தொகு]

சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை[தொகு]

சைவசிறார்கள் நற்பிரஜைகளாக சிறுவயதிலிருந்தே அறநெறிக்கல்வி போதிக்கப்பட்டு வளர்க்கப்படவேண்டும் எனும் நோக்கோடு எமது ஆலயத்தினால் சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலை பாலஸ்தாபன தினமான 20.04.2016 புதன்கிழமை அன்று ஆலய முதல்வர்களினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் சின்மயா மிஷன் வதிவிட ஆச்சாரியார் பிரம்மச்சாரி ஜாக்ரத் சைதன்யா அவர்கள் கலந்து மாணவர்களுக்கான அறநெறி வகுப்புக்களை ஆரம்பித்து வைத்தார்கள். அங்குரார்பண வைபவத்தில் மூத்த சைவக்குருமார்களும் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளும் கலந்து சிறப்பித்தார்கள்.

சதாசிவக்குருக்கள் அறநெறிப் பாடசாலையினால் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.30-7.30 மணிவரை யோகாசனப் பயிற்சியும், மு.ப. 9.00 – 10.00 மணிவரை அறநெறி வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. இதில் எமது கிராமத்துச் சிறார்கள் பலர் கலந்து பயன்பெற்றுவருகின்றார்கள்.

உசாத்துணை நூல்கள்[தொகு]