உள்ளடக்கத்துக்குச் செல்

திருவாவினன்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருவாவினன்குடி முருகன் கோவில்
பெயர்
பெயர்:திருவாவினன்குடி முருகன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவு:திருவாவினன்குடி
கோயில் தகவல்கள்
மூலவர்:குழந்தை வேலாயுத சுவாமி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மீள் கட்டுமானம் - நாட்டுக்கோட்டை நகரத்தார்

திருவாவினன்குடி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், மூன்றாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், திண்டுக்கல் மாவட்டம், பழனி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயில், குழந்தை வேலாயுத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது.[1] சங்ககாலப் புலவரான நக்கீரரும், பிற்காலத்தவரான அருணகிரிநாதரும் திருவாவினன்குடி முருகனைக் குறித்துப் பாடல்கள் பாடியுள்ளனர். அகத்தியர் இங்கு தவம் புரிந்து முருகனிடம் தமிழிலக்கணம் பயின்றதாகப் புராணங்கள் கூறுகின்றன.

வரலாறு[தொகு]

திரு என்ற இலக்குமி தேவியும், ஆ என்ற காமதேனுவும், இனன் என்ற சூரிய பகவானும், இத்தலத்து முருகப்பெருமானை வழிபட்டமையால் திருஆஇனன்குடி என்று பெயா் பெற்றதாக சொல்லப்படுகிறது.

சங்க காலத்தில் இந்த ஊர் திருவாவினன்குடி என்றே அழைக்கப்பட்டதாகவும், மாம்பழத்திற்காக கோபம் கொண்டு வந்தமர்ந்த முருகப்பெருமானை சிவனும், பார்வதியும், இத்திருத்தலத்திற்கு வந்து ஞானப் "பழம் நீ" என்று முருகனுக்கு சூட்டிய பெயரே, நாளடைவில் மருவி பழநி என்று ஊர் பெயர் வர காரணமானதாக தல புராணம் கூறுகின்றது.

அமைவிடம்[தொகு]

இத்திருத்தலம் பழநி மலைக்கோவிலுக்கு செல்லும் வழியில், பழநி மலை அடிவாரத்தில் வையாபுரி ஏரிக்கரையில் அமைந்துள்ளது. இக்கோவிலின் வடகிழக்கு திசையில் சரவணப் பொய்கை உள்ளது. இத்தலத்தில் உள்ள பெருமானை வழிபட்ட பின்னரே, மலைக்கோவிலுக்கு சென்று தண்டாயுதபாணித் தெய்வத்தை வழிபடுவது மரபு.

மூன்றாம் படைவீடு விளக்கம்[தொகு]

மூன்றாம் படைவீடு என்பது பழநி மலைக்கோவிலா அல்லது திருவாவினன்குடி திருத்தலமா என்பதில் பலருக்கும் மிகப்பெரிய சந்தேகம் உள்ளது.

திருவாவினன்குடி கோவிலையே நக்கீரர் பெருமான், திருமுருகாற்றுப்படையிலே முருகனின் மூன்றாம் படைவீடாக

"தாஇல் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவி னன்குடி அசைதலும் உரியன்: அதாஅன்று"

அதாவது, குற்றம் இல்லாத கோட்பாடுடன், யாவர்க்கும் நன்மையே விளைவிக்கும் உயர்ந்த கொள்கை உடைய தன் துணைவியோடு சிலகாலம் ஆவினன்குடியில் தங்கியிருப்பதற்கு உரிமை உடையவன் என்று போற்றி பாடியுள்ளார் என்பதாக சொல்லப்படுகிறது.

கோபம் கொண்டு வந்து அமர்ந்த இடமான பழநி மலைக்கோவிலில் தண்டாயுதபாணித் தெய்வமாகவும், திருவாவினன்குடி திருத்தலத்தில் மயில் மீது அமர்ந்த குழந்தை வேலாயுத சுவாமியாகவும் காட்சியளிக்கிறார். சங்க காலத்தில் இந்த இரண்டு திருத்தலங்களையும் சேர்த்தே இந்த ஊரின் பெயர் திருவாவினன்குடி என்று இருந்ததாக புராணங்கள் சொல்கின்றன.

ஆக நக்கீரர் பெருமகனார் பாடிய திருத்தலம் பழநி மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி கோவில் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு தலமாகவே கொள்ளலாம். எனவே மலைக்கோவில் மற்றும் திருவாவினன்குடி திருத்தலம் இரண்டையுமே மூன்றாம் படைவீடாகக் கொள்ள வேண்டும்.[2]

ஆனால் சிலகாலம் முன்பு வரை இக்கோவிலின் சன்னதிக்கு வெளியே மூன்றாம் படைவீடு என்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது. காலப்போக்கில் அப்பெயர்ப்பலகை நீக்கப்பட்டுவிட்டது. இன்றும் பழநி மலை அடிவாரத்தில் படிக்கட்டு நடைபாதை முடிந்து வெளியே வரும் இடத்தில் அரசாங்கத்தால் மூன்றாம் படைவீடு திருவாவினன்குடி செல்லும் வழி என்று வழிகாட்டும் பலகை வைக்கப்பட்டுள்ளது.

திருவிழாக்கள்[தொகு]

அறுபடை வீடுகளில் சிறப்பாக கொண்டாடப்படும் பங்குனி உத்திரத் திருவிழா, திருவாவினன்குடி திருத்தலத்திலே கொடியேற்றத்துடன், திருக்கல்யாணம் மற்றும் தேர் வடம் பிடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தேவஸ்தானத்தால் நடத்தப்படுகின்றன.[3]

திருப்பணிகள்[தொகு]

பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோவிலை நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் மறு கட்டுமானம் செய்தும், புதிதாக மண்டபங்கள், பிரகாரம், ராஜ கோபுரம் அமைத்தும் பெரிய கற்றளியாக எழுப்பியுள்ளனர். 1919 சூன் 26 இல் குடமுழுக்கு இடம்பெற்றது.[4]

சான்றுகள்[தொகு]

  1. திருவாவினன்குடி பெயர்க்காரணம் தெரியுமா?. தினமலர் நாளிதழ். 05 மே 2018. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. வீடுபேறு அளிக்கும் முருகனின் அறுபடை வீடுகள், தினமணி நாளிதழ்
  3. "பங்குனி உத்தரத்தில் சிறப்பு வழிபாடுகள் ஒரு பார்வை!".
  4. பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியார் (1953). வயிநாகரம் அ. இராமநாதன் செட்டியார் (ed.). நாட்டுக்கோட்டை நகரத்தார் வரலாறு. p. 251.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருவாவினன்குடி&oldid=3581056" இலிருந்து மீள்விக்கப்பட்டது