கபிலவஸ்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கபிலவஸ்து என்பது இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, புத்த மதத்தினரின் புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒரு இடமாகும். இது, அம் மதத்தினரின் இன்னொரு புனிதத் தலமான லும்பினிக்கு அண்மையில் அமைந்துள்ளது. கபிலவஸ்து என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி நேபாளத்திலும், சிறு பகுதி இந்தியாவிலும் உள்ளன. சுவான்சாங், பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் பிப்ராஹ்வா என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் திலோராக்கொட் என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, திலோராக்கொட் பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.

யுனெஸ்கோ, நேபாள கபிலவஸ்துவை, லும்பினியுடன் சேர்த்து உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலவஸ்து&oldid=1779082" இருந்து மீள்விக்கப்பட்டது