முகம்மது பின் துக்ளக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இதே பெயரில் வெளிவந்த திரைப்படம் பற்றி அறிய முகமது பின் துக்ளக் (திரைப்படம்) கட்டுரையைப் பார்க்கவும்.
முகம்மது பின் துக்ளக்கினால் வெளியிடப்பட்ட ஒரு நாணயம்

இளவரசர் ஃபகர் மாலிக், ஜவானா கான் மற்றும் உலுக் கான் என்றும் அறியப்பட்ட முகம்மது பின் துக்ளக் (Muhammad bin Tughluq, அரபி: محمد بن تغلق‎, ~1300 - மார்ச் 20, 1351) தில்லி சுல்தானகத்தை ஆண்ட சுல்தானும் துக்ளக் வம்சத்தில் தோன்றிய இரண்டாவது ஆட்சியாளருமாவார். கியாசுதீன் துக்ளக்கின் மூத்த மகனான இவர் ஆப்கானிஸ்தானத்தை சேர்ந்த துருக்கிய இன மரபினராவார். இவர் முல்தான் என்னுமிடத்தில் பிறந்தவர். இவரது மனைவி திபல்புரின் அரச குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை கியாசுதீன் இவரை இளமைப்பருவத்தில் தக்காண பகுதியின் வாரங்கல் பகுதியை தலைமை இடமாக கொண்டு ஆண்டு வந்த அரசர் பிரதாபருத்ரருக்கு எதிராகப் போரிட அனுப்பினார். இவரது தந்தையின் மறைவிற்கு பிறகு தில்லி சுல்தானகத்தின் 1325இல் மன்னரானார்.

முகம்மது துக்ளக் தத்துவம், கணிதம், வானவியல் மற்றும் இயற்பியல் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருந்தார். இவர் அதுமட்டுமல்லாது மருத்துவத்திலும் வாதம் செய்வதிலும் திறன் கொண்டிருந்தார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார்; பாரசீகம், அரபு, துருக்கி மற்றும் சமஸ்க்ருதம் போன்ற பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இப்னு பதூதா இவரது ஆட்சிகாலத்தில் இந்தியாவிற்கு வந்து இவரது ஆட்சி பற்றிய குறிப்புகளை பதிவு செய்துள்ளார். துக்ளக் தனது நிருவாகத்தில் பல் புதுமைகளைப் புகுத்தினாலும் அவை தோல்வியடைந்தன.

துக்ளக்கின் ஆட்சி[தொகு]

துக்ளக் தனது ஆட்சியில் தனது சுல்தானகத்தினை விரிவு படுத்தவேண்டி இந்திய தீபகற்ப்பம் முழுவதையும் வெல்ல நினைத்தார். சுல்தானகத்தை மேலும் வலுபெற வைக்கவேண்டி இவர் தலைநகரை தில்லியில் இருந்து தேவகிரிக்கு மாற்றினார். இது தில்லியில் இருந்து 1500 கிலோமீட்டர் தூரத்தில் தக்காணத்தில் இருந்தது. தவுலதாபாத் என இதற்கு துக்ளக் பெயர்மாற்றினார். தலைநகரை நாட்டின் நடுவில் அமைப்பதன் மூலம் சிறப்பாக ஆட்சி செய்ய முடியும் என கருதினார். இதற்காக தில்லியில் இருந்து தேவகிரிக்கு சுலபமாக இடம்பெயரும் நிமித்தம் பிரமாண்டமாக சாலையும் போடப்பட்டது. ஆனால் சிறந்த திட்டமிடல் இல்லாத பணிகளால் இந்த புலம்பெயர்தலில் பலர் இறக்க நேரிட்டது மேலும் தேவகிரியில் நீர், தங்குமிடம், உணவு போன்ற வளங்கள் பற்றாமல் போனமையாலும் அவரது தளபதிகளின் வெறுப்பை பெருமளவில் இந்த திட்டம் சம்பாதித்தது. பின்னர் அமைச்சர்கள் மீண்டு தலைநகரை தில்லிக்கே மாற்ற கோரினர். மேலும் வடக்கில் மங்கோலியர்களின் படையெடுப்பும் இந்த திட்டத்திற்கு பெரும் சரிவாக அமைந்தது. பின்னர் இரண்டே வருடங்களில் மீண்டும் தலைநகர் தில்லிக்கே மாற்றப்பட்டது. இந்த புலம்பெயர்தலிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தில்லி வெறிச்சோடி கிடந்ததாக இப்னு பதூதா குறிப்பிடுகிறார். (”நான் தில்லியில் நுழைந்த போது, அது ஒரு பாலைவனம் போல் இருந்தது”). துக்ளக்கின் ஆட்சியின் போது அவரது பேரரசின் பல பகுதிகள் (எ.கா மதுரை சுல்தானகம், பாமினி சுல்தானகம்) அவருக்கு எதிராகப் புரட்சி செய்து பிரிந்து சென்று விட்டன. இவ்வாறான கலகங்களை அடக்குவதில் துக்ளக் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைச் செலவிட்டார். அவரது ஆட்சிகாலத்தின் இறுதியில் தில்லி சுல்தானகத்தின் பரப்பளவு வெகுவாக சுருங்கி விட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முகம்மது_பின்_துக்ளக்&oldid=2240300" இருந்து மீள்விக்கப்பட்டது