உள்ளடக்கத்துக்குச் செல்

அரபு மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரபு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அரபு
العربية (அல்-அரபிய்யா)
உச்சரிப்பு/alˌʕaraˈbijja/
நாடு(கள்)அல்ஜீரியா, பஹ்ரேய்ன், சாட், எகிப்து, எரித்திரியா, ஈராக், இசுரேல், ஜோர்தான், குவெய்ட், லெபனான், லிபியா, மௌரித்தானியா, மொராக்கோ, ஓமான், பாலஸ்தீனம், கத்தார், சவுதி அரேபியா, சோமாலியா, சூடான், சிரியா, துனீசியா, ஐக்கிய அரபு அமீரகம், மேற்கு சகாரா, யெமென்; இஸ்லாம் மதத்தின் மொழி.
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
186 மில்லியன் முதல் 422 மில்லியன் வரை (தாய்மொழி), மேலும் 246 மில்லியன் இரண்டாம் மொழி [1].  (date missing)
ஆபிரிக்க-ஆசிய
அரபு எழுத்துமுறை
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
26 நாடுகளின் ஆட்சி மொழி[2]
மொழி கட்டுப்பாடுஎகிப்து: கெய்ரோவின் அரபு மொழி அகாடெமி

ஈராக்: ஈராக்கி அறிவியல் அகாடெமி
சூடான்: அரபு மொழி அகாடெமி, கார்த்தூம்
மொராக்கோ: ரபாட்டில் அரபு மொழி அகாடெமி
ஜோர்தான்: ஜோர்தான் அரபு அகாடெமி
லிபியா: பலமக்களாட்சியில் அரபு மொழி அகாடெமி
துனீசியா: பேத் அல்-ஹிக்மா நிறுவனம்

இசுரேல்: அரபு மொழி அகாடெமி[3]
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ar
ISO 639-2ara
அரபு அரிச்சுவடி
சுட்டிடைச் சொல் பயன்பாடு(சிவப்பு)

அரபு மொழி ஆப்பிரிக்க ஆசிய மொழிக் குடும்பத்தின் செமிட்டிக் கிளையின் மிகப் பெரிய மொழி. அறமைக் மொழி, எபிரேயம், அம்காரியம், திகுரிஞா ஆகியவற்றுடன் தொடர்புடையது. இன்று 26 நாடுகளில் அரபு ஆட்சி மொழியாகும். ஐ.நா-வின் அதிகாரப்பூர்வ மொழிகளுள் ஒன்றாகவும் விளங்குகிறது. 310 மில்லியன் (31 கோடி) மக்களின் தாய்மொழியாக அரபு மொழி இருக்கிறது.[6] இசுலாமிய சமயத்துடன் தொடர்பு பட்டதாகையால் உலகெங்குமுள்ள முசுலிம்களால் கற்கப்படுகிறது. அரபி வலமிருந்து இடமாக எழுதப்படுகிறது. அல்சீரியா, பகுரைன், எகிப்து, எரித்திரியா, ஈராக், சோர்தான், குவைத், லெபனான், லிபியா, ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சூடான், சிரியா, யேமன் போன்ற நாடுகளில் பேசப்படுவதோடு, அரசுஏற்புடைய மொழியாகவும் உள்ளது. இன்று உலக வர்த்தகத்தில் பயன்படும் உலகச் செம்மொழிகளில் சீன மொழிக்கு அடுத்த இடத்தில் உள்ள மொழி என்று பல பெருமைகள் கொண்டது அரபு மொழி. அரபு நாட்டில் வாழும் அந்நிய இனத்தினர் பலர் அரபு மொழியைத் தாய்மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருக்கின்றனர்.

அரபு மொழி பல மொழிகளுக்குத் தன் சொற்களைக் கொடை அளித்துள்ளது. அவற்றில் பாரசீக மொழி, துருக்கியம், சோமாலி, போசுனியன், வங்காளி, உருது, இந்தி, மலாய், அவுசா போன்றவை அடங்கும். அதே போல அரபு மொழிக்கும் மற்ற மொழிகள் சொற்கொடை வழங்கியுள்ளன. அவற்றுள் எபிரேயம், கிரேக்கம், பாரசீகம், சிரியாக்கு போன்ற மொழிகளும் அடங்கும்.

பாரம்பரிய அரபு மொழி

[தொகு]

செமித்திய மொழிக் குடும்பத்தை சேர்ந்த அரபி மொழியானது அரபு தீபகற்பத்தின் மத்திய மற்றும் வடக்கு பகுதிகளில் தான் முதன் முதலில் தோற்றம் பெற்றது. பாரம்பரிய அரபுி மொழியின் கல்வெட்டுக்களை ஆய்வு செய்ததில் அதன் வரலாறு கி.பி. 328 ஆம் ஆண்டு வரை பின்னோக்கி செல்கின்றது. 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிரியா மற்றும் அரேபியாவின் எல்லைப்பகுதியான 'நபீதான்' என்ற பகுதியில் வைத்து மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்கள் பெறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 'நபீதான்' என்ற பகுதியல் வைத்து கண்டெடுக்கப்பட்டதால் அந்த எழுத்துக்களுக்கு ‘நபீதான் நெடுங்கணக்கு' என அழைக்கப்படுகின்றது. இந்த ‘நபீதான் நெடுங்கணக்'கினை ஆய்வு செய்ததில் அந்த எழுத்துக்கள் கி.மு. இரண்டாம் நுற்றாண்டு பழமை வாய்ந்தது என்றும், அந்த ‘நபீதான நெடுங்கண'க்கே கி.பி நான்காம் நுற்றாண்டிற்கு பின் பாரம்பரிய அரபு மொழியாக மாற்றம் பெற்றதாவும் ஆய்வுகள் கூறுகின்றன. கி.பி 4 ஆம் நுற்றாண்டு தொட்டு, இஸ்லாம் அரபு தீபகற்பத்தில் உதயமாகும் வரையான காலப்பகுதியில் பாரம்பரிய அரபு மொழியானது ஒரு செல்வாக்கு பெற்ற மொழியாக காணப்படவில்லை. அரபு மொழி என்பது கி.பி. ஆறாம் நுற்றாண்டுகளின் ஆரம்ப பகுதியில் அரேபிய தீபகற்பத்தில் வாழ்ந்த நாடோடி பழங்குடி மக்களால் போசப்பட்ட ஒரு சிறு பான்மை மொழியாகும்.

அரபு மொழி ஏற்றம்

[தொகு]

இஸ்லாத்தின் உதயத்துடன் பாரம்பரிய அரபு மொழியின் வரலாறே மாறியது. முகம்மது நபியின் பேச்சு மொழி அரபாக காணப்பட்டதனாலும் அரபு மொழியில் குர்ஆன் இறக்கப்பட்டதாலும் அரபு மொழிக்கான தேவை அதிகரித்தது. எனவே ரோம், பாரசீகம் போன்ற முந்தைய வல்லரசு நாடுகளும் சீனா, ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்தும் பலர் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளல், போர், வியாபாரம் போன்ற தேவைகளுக்காக வெளிநாட்டவர்கள் வரத் தலைப்பட்டனர். எனவே, பண்மை அரபு மொழியின் இலக்கண இலக்கிய மறபுகளை கற்பதற்கும் ஆய்வு செய்வதற்குமான தேவை உலக அளவில் ஏற்பட்டது. உமைய்யா மற்றும் அப்பாஸிய கலீபாக்களின் காலம் தொட்டு இந்த ஏற்றம் தொடர்கிறது.

அரபு இலக்கியம்

[தொகு]

அரபு மொழி ஒரு செழுமை மிக்க மொழியாகும். சொற் சுருக்கம், கருத்துச் செறிவு, உண்மை தன்மை, பிற மொழிகளிடம் இருந்து இரவல் வாங்காத தனித்துவம் போன்றன அரபு மொழியில் காணப்படுகின்ற சிறப்பு அம்சங்களாகும். அரபு மொழியில் 28 எழுத்துக்கள் காணப்படுகின்றன. அரபு மொழியானது உலகில் காணப்படுகின்ற ஏனைய மொழிகளைவிட பல வகையிலும் வித்தியாசமான இலக்கண முறையினை கொண்டுள்ளது. அவற்றில் பின்வருபவன முக்கியமானதாகும். அரபு மொழியில் சொற்களில் கூட ஆண்பால், பெண்பால் மிக உன்னிப்பாக கையாளப்படுகின்றது, வாக்கியங்களில் கூட ஆண்பால், பெண்பால் வாக்கியங்கள் என்ற இரு முறைகள் காணப்படுகின்றது. மேலும் அரபு இலக்கனத்தில் ஒருமை, பன்மை போல் இருமையும் மிக முக்கியமாகும். இந்த ஒருமை,இருமை மற்றும் பன்மைகளில் கூட ஆண்பால், பெண்பால் அவதானிக்கப்படுகின்றன. அரபு மொழியில் குறிப்பிட்ட ஒரு சொல் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ‘ஒட்டகம்’ என்ற சொல்லை குறிப்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சொற்கள் காணப்படுகின்றன.

நவீன அரபு

[தொகு]

அரபு மொழியானது மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் மொழியாக வளர்ந்துள்ளது. தற்போது 26 நாடுகளில் அரபு மொழி தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளில் இருந்தும், பொதுவாக ஏனைய ஐரோப்பா மற்றும் லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இருந்தும் வெளியாகின்ற பத்திரிகைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் மற்றும் செய்திச் சேவைகள் போன்றவற்றிலும், மேலும் உலகில் நடைபெறும் மாநாடுகள், கூட்டத் தொடர்களிலும் இந்த நவீன அரபு மொழியே பயன்படுத்தப்படுகின்றது.

ஆரம்பகால அரபு மொழி

[தொகு]

ஆரம்பகாலத்தில் அரபி எழுத்துக்கள் ஒரே எழுத்துருவைக் கொண்டிருந்தாலும் தற்போது உள்ள எழுத்துகளைப் போல் "நுக்தா" புள்ளி அமைப்பிலான எழுத்துகள் இருக்கவில்லை. உதாரணமாக ع= ஆயின், ع=க்ஹாயின், س=ஸீன், س=ஷீன் இன்னும் பல எழுத்துகள் ஒரே வடிவ அமைப்பையும், ஆனால் வெவ்வேறு ஒலி அமைப்பையும் கொண்டுள்ளன. அவற்றை வேறுபடுத்துவது புள்ளிகள் தான். குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்ட வேதமாக இருப்பதால், அரபி மொழியைக் கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அரபி அரபியற்குத் தாய் மொழியாக இருந்ததால் எந்த விதமான சிரமமும் இன்றி பேசி, மற்றும் குர்ஆனையும் ஒதிவந்தனர், ஆனால் அரபி அல்லாத பிற மொழிக்காரர்களுக்குக் கடினமாக இருந்ததால் குர்ஆன் ஓதுவதில் பிழை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் "நுக்தா" என்ற அடையாளப் புள்ளி அமைப்பு கொண்டு வரப்பட்டது. உதாரணத்திற்கு مثل(மஸல) என்ற வார்த்தை முற்கால எழுத்துப்படி எழுதப்படுமானால் مىل என்று புள்ளி இன்றி எழுதப்படும், இதை مثل (மஸல) அல்லது مبل (மபல) அல்லது متل (மதல) அல்லது منل (மனல) அல்லது ميل (மயல) என எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம். இவை அனைத்தும் ஒரே வித வடிவமைப்பை கொண்டுள்ளன: புள்ளிகளை வைத்துத்தான் எழுத்துகளை இனங்காண முடிகிறது. இதை அரபியர்களால் சரியாகப் படிக்கமுடியும், அரபியர் அல்லாதவர்களுக்கு பிழை ஏற்பட வாய்ப்புள்ளது என்பதாலும், குர்ஆன் இறைவார்த்தை என முஸ்லிம்கள் நம்புவதாலும் பிழையின்றி படிப்பதற்கு ஏற்றவாறு நுக்தா என்னும் புள்ளி அடையாள வடிவத்தை கொண்டுவத்துள்ளனர். {ع=ஆயின், غ=க்ஹயின், س=ஸீன், ش=ஷீன், ص=ஸாத், ض=லாத், د=தால், ذ=த்தால், ب=பா, ت=தா, ث=ஸா}, அத்துடன் உயிர் மெய் அடையாளக்குறிகளும் கொண்டுவரப்பட்டது. உயிர் மெய் அடையாளம் என்பது உதாரணத்திற்கும் தமிழில் (ெ)ஒற்றை கொம்பு, (ே)இரட்டை கொம்பு, (ா)துணைக்கால் போன்ற உயிர் மெய் அடையாளங்களை வைத்துத்தான் கா என்றும், கி என்றும், கே என்றும் அடையாளபடுத்தி படிக்கப்படுகிறது. இல்லை என்றால் தமிழ் என்ற வார்த்தை தமழ என்று உயிர் மெய்க் குறியீடு இல்லாமல் எழுதினால், இதை தமிழ் என்றும் படிக்கலாம் அல்லது திமிழ் என்றும் படிக்கலாம் அல்லது தமழ என்றும் படிக்கலாம். உயிர் மெய் அடையாளம் இல்லாதிருந்தால் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளவருக்கு எளிதாக இருக்கும், ஆனால் அரபி அல்லாதவருக்கு மிகக் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்து, பிற்காலத்தில் உயிர் மெய்க் குறியீடுகள் கொண்டுவரப்பட்டன. ஒரு எழுத்திற்கு மேலே கோடுப்போட்டால் (ஃபதஹா) அகரமாகவும், கீழே கோடுபோட்டால் (கஸ்ரா) இகரகமாகவும், அரபி எழுத்து (و) வாவ்வைப் போன்று மேலே சிறிய அடையாளமிட்டால் (தம்மா) உகரமாகவும் மாறும். இதைத் தவிர்த்து, இன்னும் பல அடையாளங்களும் உண்டு. இன்றும் நடைமுறையில் அரபியர்கள் குர்ஆனைத் தவிர்த்து ஏனைய புத்தகங்கள், வலைத்தளங்கள், சாலையோரத் திசைகாட்டிகள் என அனைத்திலும் உயிர் மெய்க்குறியீடுகள் அடையாளமிடப்படாமலே எழுதப்படுகின்றன. எந்த நாட்டில் உள்ள குர்ஆனாக இருந்தாலும் அதில் கண்டிப்பாக உயிர் மெய் அடையாளம் இடப்படுகிறது. இது பொதுவாகக் கடைபிடிக்கின்ற விதியாகும், இதைத் தவிர்த்து, குழந்தைகளின் ஆரம்பகால கல்விப் புத்தகங்களிலும் உயிர் மெய் அடையாளங்கள் இடப்படுகின்றன. மற்ற எதிலும் உயிர் மெய் அடையாளம் இடுவதில்லை.

அரபு மொழி ஒலிப்பு

[தொகு]

அரபு மொழியில் உள்ள ظ என்ற எழுத்து தமிழில் என்றுதான் பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • ظهر - ழுஹ்ர்
  • ظلال - ழிலால் (பீ ழிலாலில் குர்ஆன் என்பதில் உள்ளது போல்).

அவ்வாறே ض என்ற எழுத்து என்று பெயர்க்கப்படுகிறது. உதாரணம்:

  • حضرموت - ஹளரமௌத்
  • مضر - முளர்.

தமிழில் உள்ள இந்த ழகரம் அரபு மொழியின் ظ ஒலிப்பிற்கும், ளகரம் அரபு மொழியின் ض ஒலிப்பிற்கும் நெருங்கி ஒலிக்கின்றன. மேலும், தமிழில் உள்ள இந்த ழகர, ளகர ஒலிகள் உருது போன்ற மொழிகளில் இல்லை. அதனால்தான் உருது, இந்தி மற்றும் அவற்றுக்கு நெருங்கிய மொழிக்காரர்கள் ஆங்கிலத்தின் z போல மொழிகின்றனர். தமிழை ஆங்கிலத்துக்கு ஒலிபெயர்க்கும்போதும் இதே குழப்பம் வருகிறது. இந்த ழகரத்துக்குச் சிலர் z என்றும் zh என்றும் ஒலிப்புக் கொடுக்கின்றனர். அவ்வாறே L ஒலிப்பும் Tamil என்பதில் போலப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தின் z எழுத்தைப் போல மொழியப் பழகிய பின்னர் இந்துசுத்தானி மொழிகளைச் சேர்ந்தோர் தங்களது மொழிகளுக்கு ஏற்றால் போல அவற்றை ஜ எழுத்தின் ஓசையிலும் மொழிவதுண்டு. அத்துடன், அரபு மொழியை ஆங்கிலத்தில் ஒலிபெயர்க்கும்போதும் நாட்டுக்கு நாடு வேறுபாடு வருவதுண்டு. உதாரணம்:

  • مسلم - முஸ்லிம் - Muslim, Moslem
  • جمال - ஜமால் - Jamal, Gamal (எகிப்திய வழக்கு)
  • ظاهر - ழாஹிர் - Lahir, Zhahir, Dhahir
  • ذكر - திக்ர் - Zikr, Zekr, Dhikr
  • حافض - ஹாபிள் - Hafil, Hafiz, Hafidh, Hafid.

இந்தச் சிக்கல்கள் காரணமாகவே, அரபு மொழியைச் சரிவரக் கல்லாதோர் அவற்றைத் தமிழிற் கூறும்போது பிழை ஏற்படுகிறது.

பேச்சு அரபு மொழி

[தொகு]
பேச்சு அரபு தமிழில்
அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
வ அலைக்கும் ஸலாம் உங்களுக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாடினால்
அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம், பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடுகிறேன், இறைவனின் திருப்பொருத்தத்தைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன்
தவ்ஹீத் ஏகத்துவம் (ஓரிறைக் கொள்கை)
லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் வணக்கத்திற்கு உரியவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை, முஹம்மது ரஸுலுல்லாஹ் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரராவார்கள்
கேஃப் அல் ஹாலுக நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? அல்லது உங்கள் நலன் எப்படியுள்ளது?
அன பீ ஹைரி நான் நன்றாக இருக்கிறேன்.
மாஷா அல்லாஹ் இறைவனை நாடியவாரே
கலாஸ் முடிவடைந்துவிட்டது
நஅம் / அய்வா ஆம்
லா இல்லை
ஷுக்ரன் நன்றி
யல்லா தயாராகு / விரைவு செலுத்து
மாய் தண்ணீர்
வாஹித் ஒன்று
கைஃப எப்படி
அம்ஸ் நேற்று
அல் யவ்ம் இன்று
புக்றா நாளை
அசீர் பழரசம்
அய்ன / ஒய்ன் எங்கே
மௌஜூத் இருக்கு
அன நான்
அன்த நீ
அன தாலிபுன் நான் மாணவன்
நஹ்னு ஹுநூது நாங்கள் இந்தியர்கள்
அன ஹிந்தி நான் இந்தியன்
ஹுவ வலது அவன் சிறுவன்
ஹிய பிந்த் அவள் சிறுமி
ஷம்ஸ் சூரியன்
கமர் சந்திரன்
நசாரா/மசீஹீயன கிறிஸ்துவர்கள்
யஹுத் யூதர்கள்
யவ்மல் மீலாத் பிறந்த நாள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. Three lists பரணிடப்பட்டது 2011-09-27 at the வந்தவழி இயந்திரம், Ethnologue, Encarta பரணிடப்பட்டது 2008-07-24 at the வந்தவழி இயந்திரம், "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. John W. Wright (2001). The New York Times Almanac 2002. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1579583482.
  3. Knesset approves Arabic academy - Israel News, Ynetnews
  4. "Languages Spoken by More Than 10 Million People". Microsoft ® Encarta ® 2006. Archived from the original on 2009-10-31. பார்க்கப்பட்ட நாள் 2007-02-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Most Widely Spoken Languages". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-08-06.
  6. அரபி: ஓர் அறிமுகம், தமிழ் தி இந்து நாளிதழ்,டிசம்பர் 18,2013

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அரபு மொழி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபு_மொழி&oldid=4086344" இலிருந்து மீள்விக்கப்பட்டது