உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்து முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எழுத்துமுறை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கி.மு.3-ஆம் நூற்றாண்டு முதல் தமிழ் எழுத்தின் பரிணாம வளர்ச்சி

எழுத்து முறைமை (writing system), என்பது ஒரு மொழியைப் பார்க்கக்கூடிய வகையில் குறியீடுகள்மூலம் பதிவுசெய்வதைக் குறிக்கும். மிகப் பழைய வகை எழுத்துக்கள் ஓவிய எழுத்துக்கள் (pictographical) அல்லது கருத்தெழுத்துக்கள் (ideographical) ஆகும். பெரும்பாலான எழுத்து முறைமைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்: உருபனெழுத்து முறை (logographic), அசையெழுத்து முறை (syllabic) மற்றும் ஒலியனெழுத்து முறைமை (alphabetic). எழுத்து முறைமையில் குறியீடுகளை எழுத்துக்கள் என அழைப்பர். glyph என்பது ஒரு எழுத்தை வரைபு முறையில் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்.

எழுத்து முறைமைகளின் வரலாறு

[தொகு]

உலகின் முதல் எழுத்து முறைமை கிரேக்க மொழி யில் தான் முதன்முதலில் எழுதப்பட்டது. இது மூங்கில் குச்சிகளை கொண்டு முதன் முதலில் எழுதப்பட்டது. பின் கி.மு. 4 ஆவது ஆயிரவாண்டின் இறுதியையொட்டிச் சுமேரியர்களிடையே உருவான ஆப்பெழுத்து (cuneiform) ஆகும். எனினும் இதனை மிக அண்மையாகத் தொடர்ந்து, எகிப்திலும், சிந்துப் பள்ளத்தாக்கிலும் எழுத்து தோற்றம் பெற்றது. இதில் தொடங்கி, வெவ்வேறு நாகரிகங்கள் தொடர்பில் பல இடங்களிலும் எழுத்துக்கள் தோன்றின.[1]

உருபனெழுத்து முறைமை

[தொகு]

உருபனெழுத்து என்பது ஒரு முழுச் சொல்லை அல்லது ஒரு உருபனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு எழுத்தாகும். பல சீனமொழி எழுத்துக்கள் உருபனெழுத்து என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

ஒவ்வொரு குறியீடும், ஒவ்வொரு சொல்லை அல்லது உருபனைப் பிரதிநிதித்துவம் செய்வதனால், ஒரு மொழியின் சகல சொற்களையும் எழுதப் பெருமளவு உருபனெழுத்துக்கள் தேவைப்படும். ஏராளமான குறியீடுகளும் அவற்றுக்கான பொருள்களை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியதும், ஒலியனெழுத்து முறைமையோடு ஒப்பிடும்போது, இம்முறைமைக்குள்ள முக்கியமான வசதிக்குறைவாகும். எனினும் சொல்லின் பொருள் குறியீட்டிலேயே பொதிந்திருப்பதால், கோட்பாட்டளவில் ஒரே குறியீட்டையே வெவ்வேறு மொழிகளுக்குப் பயன்படுத்த முடியும். செயற்பாட்டளவில், syntactical constraints ஒரே குறியீட்டு முறைமையைக் எல்லா மொழிகளுக்கும் பயன்படக்கூடிய தன்மையைக் குறைப்பதால், இது, சீன மொழியின் வட்டார வழக்குகள் (dialects) போல மிக நெருக்கமான மொழிகளிடையே மட்டுமே சாத்தியமாகும். கொரிய மொழியும் ஜப்பானிய மொழியும் சீன உருபனெழுத்துக்களைத் தங்கள் எழுத்து முறைமைகளில் பயன்படுத்துவதுடன், பல குறியீடுகளும் ஒரே பொருளிலேயே பயன்படுகின்றன. எனினும் அவையிரண்டும், சீன மொழியில் எழுதப்பட்டவைகளை ஜப்பானியர்களோ, கொரியர்களோ இலகுவில் வாசித்து விளங்க முடியாத அளவுக்கு, சீன மொழியிலிருந்து வேறுபட்டவையாகும்.

பெரும்பாலான மொழிகள் முழுமையாக logographic எழுத்து முறைமைகளைப் பயன்படுத்தாவிட்டாலும், பல மொழிகள் சில logogram களைப் பயன்படுத்துகின்றன. நவீன உருபனெழுத்துக்களுக்குச் சிறந்த உதாரணம் அராபிய எண்கள்ஆகும். இக் குறியீடுகளைப் பயன்படுத்தும் எல்லோருக்கும், அவர்கள் அதை வண், யூனோ, ஒன்று, ஏக் என்று எப்படி அழைத்தாலும், 1 எதைக் குறிக்கிறது என்று விளங்கும். பல மொழிகளிலும் பயன்படும் ஏனைய உருபனெழுத்துக்கள் &, @ என்பவற்றையும் உள்ளடக்கும்.

உருபனெழுத்துக்கள் சில சமயங்களில் கருத்தெழுத்துக்கள் (Ideogram) என அழைக்கப்படுவதுண்டு. பண்பியல் (abstract) எண்ணங்களை வரைபுருவினாற் குறிப்பதால் இந்தப் பெயர். மொழியியலாளர்கள் இதன் உபயோகத்தைத் தவிர்க்கிறார்கள்.

மிக முக்கியமான (அத்துடன், ஓரளவுக்கு, வாழுகின்ற ஒரே) நவீன உருபனெழுத்து முறைமை சீனம் ஆகும். இதன் எழுத்துக்கள் வேறுபாடான அளவு மாற்றங்களுடன், சீன மொழி, ஜப்பானிய மொழி, கொரிய மொழி, வியட்நாமிய மொழி மற்றும் பல ஆசிய மொழிகளில் பயன்படுகின்றன. பழங்கால எகிப்திய hieroglyphics மற்றும் மாயன் எழுத்து முறைமையும் உருபனெழுத்து வகையைச் சார்ந்தவையே. இவை இப்போது வழக்கிலிருந்து மறைந்து விட்டன.

முழு உருபனெழுத்து முறைமையினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.

அசை எழுத்து முறைமைகள்

[தொகு]

முதன்மைக் கட்டுரை: அசையெழுத்து உருபனெழுத்து முறைமைகள் ஒரு முழுச் சொல்லுக்கு ஒரு குறியீட்டையே பயன்படுத்துகின்றவேளை, அசையெழுத்து, சொற்களை உருவாக்கும் அசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி எழுதப்பட்ட ஒரு தொகுதி குறியீடுகளைக் கொண்டுள்ளது. அசையெழுத்துக்களில் உள்ள ஒரு குறியீடு பொதுப்படையாக மெய்யொலியையும் அதைத் தொடர்ந்து வரும் உயிரொலியையும் கூட்டாகவோ; அதாவது ஒரு உயிர்மெய்யொலியையோ அல்லது தனியாக ஒரு உயிரொலியையோ குறிக்கின்றது. ஒரு உண்மையான அசையெழுத்து முறையில், ஒத்த ஒலியமைப்பையுடைய எழுத்துக்களிடையே ஒழுங்கு முறையிலமைந்த வரைபு ஒப்புமை இருப்பதில்லை (சில முறைமைகளில் உயிரெழுத்துக்களில் இவ்வாறான ஒற்றுமை காணப்படுகின்றது). அதாவது, "கே", "க", மற்றும் "கோ" போன்றவற்றைக் குறிக்கும் எழுத்துக்களிடையே ஒரு பொது "க்" தன்மையைக் காணமுடியாது.

ஜப்பானிய மொழியைப்போல் ஒப்பீட்டளவில் எளிமையான அசை அமைப்பைக் கொண்ட மொழிகளுக்கே அசையெழுத்து முறை மிகவும் பொருத்தமானது. ஆங்கில மொழியைப் போன்ற சிக்கலான அசை அமைப்பையும், பெருமளவிலான மெய்யொலிகளையும், சிக்கலான மெய்யொலிக் கூட்டங்களையும் கொண்ட மொழிகளில் சொற்களை அசையெழுத்து முறையில் எழுதுவது கடினமாகும். அமையக்கூடிய ஒவ்வொரு அசைக்கும் ஒரு எழுத்துப்படி ஜப்பானிய மொழியில் 100 எழுத்துக்களுக்குமேல் கிடையா. ஆங்கிலத்தை இதேமுறையில் எழுதுவதாயின் பல ஆயிரம் எழுத்துக்கள் வேண்டியிருக்கும் எனக்கூறப்படுகிறது.

அசை எழுத்து முறைமையைப் பயன்படுத்தும் மொழிகளுள் பின்வருவனவும் அடங்கும். மைசீனியன் (Mycenaean) கிரேக்கமொழி (லீனியர் B) மற்றும் செரோக்கீ போன்ற உள்ளூர் அமெரிக்க மொழிகள். பழங்கால அண்மைக் கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த பல மொழிகள், சில அசை அல்லாத அம்சங்களையும் கொண்ட அசையெழுத்து முறையிலான ஆப்பெழுத்து வடிவங்களைப் பயன்படுத்தின.

முழு அசையெழுத்துக்களின் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.

ஒலியன் எழுத்து முறைமை

[தொகு]

முதன்மைக் கட்டுரை: ஒலியனெழுத்து

ஒலியனெழுத்து (Alphabetic) என்பது ஒவ்வொன்றும், பேச்சு மொழியொன்றிலுள்ள, ஒரு ஒலியனை, அண்ணளவாகப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அல்லது பிரதிநிதித்துவப்படுத்திய சிற்றளவிலான எழுத்துக்களைக் கொண்ட தொகுதி - அடிப்படையான குறியீடுகள்- ஆகும். ஆங்கிலத்தில் இச் சொல்லைக் குறிக்கும் "அல்பபெட்" (alphabet) என்னும் சொல், கிரேக்க அரிச்சுவடியின் முதல் இரண்டு எழுத்துக்களான "அல்பா", "பீட்டா" என்பவற்றைச் சேர்த்துப் பெறப்பட்டது.

ஒரு முழுமையான ஒலியன் எழுத்து முறைமையில் (phonological alphabet), ஒலியன்களும் (phoneme), எழுத்துக்களும் ஒன்றுடனொன்று இரண்டு திசைகளிலே முழுமையாகப் பொருந்தக்கூடியன: ஒரு சொல்லின் உச்சரிப்புக் கொடுக்கப்பட்டால், எழுதுபவர் ஒருவர் அதற்குரிய எழுத்துக்களைக் கண்டுகொள்ளக்கூடியதாகவும், சொல்லுக்குரிய எழுத்துக்கள் கொடுக்கப்படும்போது, பேசுபவரொருவர் அதன் உச்சரிப்பை அறியக்கூடியதாகவும் இருக்கும். ஒவ்வொரு மொழிக்கும், அதன் எழுத்துக்களுக்கும், ஒலியன்களுக்கும் இடையிலான கூட்டைக் (association) கட்டுப்படுத்தும் பொது விதிகள் உள்ளன. ஆனால், மொழிகளைப் பொறுத்து, இவ் விதிகள் ஒரு தன்மைத்தாகப் பின்பற்றப்படவோ அல்லது பின்பற்றப்படாமல் இருக்கவோ கூடும்.

முழுமையான ஒலியன் எழுத்துக்கள் பயன்படுத்துவதற்கும், பயிலுவதற்கும் இலகுவானது என்பதுடன், கல்வி வளர்ச்சியில் அவ்வாறான மொழிகள், சிக்கலானதும், ஒழுங்கற்றதுமான எழுத்துக்கூட்டு முறைகளைக் கொண்ட ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் குறைந்த தடைகளைக் கொண்டவையாகும். பொதுவாக மொழிகள் எழுத்துமுறைமைகளில் தங்கியிராமல் வளர்வதாலும், எழுத்து முறைமைகள், குறிப்பிட்ட மொழிகளுக்கென வடிவமைக்கப்படாது, வேறு மொழிகளிலிருந்து கடன் பெறுவது உண்டு என்பதாலும், ஒலியன்களும், எழுத்தும் ஒன்றுடனொன்று பொருந்தும் அளவு மொழிக்கு மொழி வேறுபடுகின்றது. சில சமயம் ஒரு மொழிக்குள்ளேயே வேறுபடுகின்றது. நவீன காலத்தில், மொழியியலாளர், ஏற்கனவே எழுத்துமுறைகளைக் கொண்டிராத மொழிகளுக்குப் புதிய எழுத்துமுறைமைகளை உருவாக்கும்போது, முழுமையான ஒலியன் எழுத்து முறைமைகளை உருவாக்குவதே இலக்காக உள்ளது.

ஒலியன் எழுத்து (alphabet) பற்றிய மேலதிக விபரங்களுக்கு, ஒலியன் எழுத்து கட்டுரையைப் பார்க்கவும். எல்லா ஒலியன் எழுத்துக்களினதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.

அப்ஜாட்கள்

[தொகு]

விருத்தியாக்கப்பட்ட முதலாவது வகை உருபன் எழுத்து, அப்ஜாட் (Abjad) ஆகும். அப்ஜாட் என்பது ஒவ்வொரு மெய்யெழுத்துக்கும் ஒவ்வொரு குறியீட்டைக் கொண்டுள்ள, உருபன் எழுத்து முறைமையாகும். அப்ஜாட்கள், மெய்யொலிகளுக்கு மட்டுமே எழுத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த வகையில் அவை, வழமையான ஒலியன் எழுத்துக்களிலிருந்து வேறுபடுகின்றன. அப்ஜாட்டில் உயிரொலிகளுக்குக் குறியிடப்படுவதில்லை.

அறியப்பட்ட எல்லா அப்ஜாட்களும் செமிட்டிக் குடும்ப எழுத்துவகையைச் சார்ந்தவை. அத்துடன் அவையனைத்தும், மூல வடக்கு நீள் அப்ஜாட்டிலிருந்து பெறப்பட்டவயாகும். செமிட்டிக் மொழிகள், பெரும்பாலான சமயங்களில் உயிர்க் குறியீட்டைத் தேவையற்றதாக்கும் உருபன் அமைப்பைக் (morphemic structure) கொண்டுள்ளதே இதற்குக் காரணமாகும்.

அரபி, ஹீப்ரூ பொன்ற சில அப்ஜாட்கள் உயிர்களுக்கான குறியீடுகளையும் கொண்டுள்ளனவெனினும், கற்பித்தல் போன்ற விசேட சந்தர்ப்பங்களில் மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. அப்ஜாட்களிலிருந்து பெறப்பட்ட பல மொழிகள், உயிர்க் குறியீடுகளைச் சேர்த்து விரிவாக்கப்பட்டதன் மூலம், முழுமையான உருபன் எழுத்துகள் ஆகின. போனீசியன் அப்ஜாட்டிலிருந்து, முழுமையான கிரேக்க ஒலியன் எழுத்து உருவானது, ஒரு பிரபலமான உதாரணமாகும். இவ்வெழுத்துக்கள் செமிட்டிக் அல்லாத மொழிகளுக்குப் பயன்படுத்தப்பட்டபோதே பெரும்பாலும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

முழு abjads இனதும் பட்டியலுக்கு எழுத்து முறைமைகளின் பட்டியல் பார்க்கவும்.

அபுகிடாக்கள்

[தொகு]

எழுத்து முறைமை வகைபிரிப்பு

[தொகு]
எழுத்துமுறைமை ஒவ்வொரு குறியீடும் குறிப்பதுஎடுத்துக்காட்டு
உருபனெழுத்துசொல், எண்ணக்கரு, அல்லது எண்ணக்கரு+ஒலிப்புசீன ஹான்ஸி
அசையெழுத்துஅசைகட்டக்கானா
ஒலியனெழுத்துஉலியன்இலத்தீன்
 அபுகிடாஉயிர்மெய்யெழுத்து, உயிரெழுத்துதேவநாகரி
 அப்ஜாட்மெய்யெழுத்துஅரபி
 Featuralஒலியன் தோற்றம்கொரியன்

தமிழ் எழுத்துமுறை

[தொகு]

பிராமி எழுத்து

[தொகு]

தமிழ் பிராமி எனப்படும் தமிழி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது.[2]

வட்டெழுத்து

[தொகு]

பனை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு ஏதுவாகத் தமிழ் பிராமி எழுத்துமுறையானது வட்டெழுத்து முறையாக உருமாறத் தொடங்கியது. வட்ட வடிவில் எழுதப்படும் தமிழ் எழுத்து வட்டெழுத்து என வழங்கப்பட்டது. தமிழில் வட்டெழுத்துகள் உருவான அதே கால கட்டத்தில், வடமொழியின் பிராமி எழுத்துமுறையில் பல்லவ கிரந்தம் என்ற புதிய எழுத்துமுறை பல்லவர் காலத்தில் உருவானது. தமிழ் வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒருசேர வளர்ச்சி பெறத் தொடங்கின.

ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் இந்த வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது. இது சற்றேறக்குறைய ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னர், தமிழ் வட்டெழுத்து முறையின் பயன்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. பிறகு, நவீன தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியில், பல்லவத் தமிழ் எழுத்துமுறை உருவாகியது. இருப்பினும், 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனாலும், கேரளத்தின் மலையாள மொழியில் இவ் வட்டெழுத்து முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. வட்டெழுத்து முறையின் மற்றுமொரு எழுத்து வடிவமாகத் திகழ்ந்த கோலெழுத்து முறையானது, மலையாள மொழியில் நீண்ட காலம் வழக்கில் இருந்து வந்தது.

வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடுகள் மிகுதியாகக் காணப்படும். இதன்விளைவாக, எகரம் மற்றும் ஒகரம் ஆகியவை தெளிவாக எழுதப்பெறும். இவற்றில் பகர, வகர வேறுபாடுகளைத் தெளிவாக வட்டெழுத்தில் அறிய முடியாதது ஒரு பெருங்குறையாகும். ஏனெனில், தமிழ் வட்டெழுத்து முறையில் இவை இரண்டும் வேறுபாடுகள் அறியவியலாத வகையில் ஒத்த வடிவங்களைக் கொண்டதாக அமைந்து காணப்படும்.[3]

பல்லவர் கால எழுத்துமுறை

[தொகு]

அண்மைக்காலத் தமிழ் எழுத்துமுறையானது பல்லவர் கால எழுத்துமுறையிலிருந்து உருவானதாதாகும்.[3]

எனினும், பல்லவர் கால தமிழ் எழுத்துமுறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டன. தமிழ் எழுத்துகளில் இடம்பெறும் புள்ளி குறிக்கப்படாதது வாசித்தலில் சிக்கல்கள் ஏற்பட காரணமாக இருந்தது. இதனால், ஓலைச்சுவடி மற்றும் கல்வெட்டு வாசிப்புகளும் எளிதில் பொருள் கொள்ளும் விதமும் இடையூறாக அமைந்தன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. எழுத்துக்களின் தோற்றம் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
  2. "எழுத்துமுறை". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.
  3. 3.0 3.1 "தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எழுத்து_முறை&oldid=3446124" இலிருந்து மீள்விக்கப்பட்டது