கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆள்கூற்று: 7°47′40″N 81°34′44″E / 7.794363°N 81.579017°E / 7.794363; 81.579017

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
Eastern University, Sri Lanka
EUSL logo.png

குறிக்கோள்: Per Ardua Ad Scientiam
நிறுவல்: ஆகஸ்ட் 1, 1981 (பல்கலைக்கழகக் கல்லூரி)
அக்டோபர் 1, 1986 (பல்கலைக்கழகம்)[1]
வகை: பொது
துணைவேந்தர்: முனைவர் கிட்ணன் கோவிந்தராசா (மாசி 15, 2012 முதல்)
பீடங்கள்: கலை கலாச்சார, விஞ்ஞான, வர்த்தக முகாமைத்துவ, விவசாய மற்றும் சௌக்கிய பராமரிப்பு பீடம்
அமைவிடம்: வந்தாறுமூலை, மட்டக்களப்பு, இலங்கை
சார்பு: http://www.ugc.ac.lk பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு (இலங்கை)
இணையத்தளம்: http://www.esn.ac.lk

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை (Eastern University, Sri Lanka) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலையில் அமைந்துள்ள ஓர் பொதுத்துறை பல்கலைக்கழகம் ஆகும்.[2] 1981இல் பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட இது, 1986 இல் முழு பல்கலைக்கழகமாக மாறியது. இதன் ஒரு வளாகம் திருகோணமலையில் அமைந்துள்ளது. 2001 ஆம் ஆண்டில் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி இதன் ஒரு பாகமாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்திற்கான மருத்துவபீடத்தை ஆரம்பிக்கும் அனுமதி 2005இல் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டது, தற்போது இதன் வகையாக மட்டக்களப்பு நகரில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு பீடம் இயங்கி வருகின்றது.

இப்பல்கலைக் கழகத்தில் ஆங்கில மற்றும் தமிழ் மொழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன.

வரலாறு[தொகு]

1960களில் ஒரு தொகை நிலப்பரப்பை திருகோணமலை நிலாவெளியில் வாங்கி கிழக்கிலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவதற்கு இலங்கைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சிலர் முயற்சித்தபோதும் போதுமான நிதியுதவி கிடைக்காமையால் கைவிடப்பட்டது. அமைச்சர் கே. டபிள்யு. தேவநாயகம் உயர்கல்வி அமைச்சிலிருந்த பேராசிரியர் கல்பகேயுடன் சேர்ந்து 1981 இல் பல்கலைக்கழக திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

நிதி[தொகு]

இலங்கையில் உள்ள எல்லா பல்கலைக்கழகங்களைப் போன்று இதுவும் உயர் கல்வி அமைச்சின் பகுதியான இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிதியினைப் பெற்று வருகின்றது.

அமைவிடம்[தொகு]

கிழக்குப் பல்கலைக்கழக மூதவைக் கட்டடம்

இப்பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகம் செங்கலடி நகரத்திற்கு அருகே வந்தாறுமூலையில் அமைந்துள்ளது. இது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பாசிக்குடாப் பகுதிக்கு சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இதன் ஒரு பாகமான சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி நொச்சிமுனையிலும், சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் மட்டக்களப்பு நகரிலும் இயங்கி வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் திருகோணமலை நகரத்திலிருந்து 15.6 கி.மீ தொலைவிலுள்ள நிலாவெளி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை வளாகத்திற்கென ஏறக்குறைய 300 ஏக்கர் நிலப்பரப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை வளாகத்தின் முதல்வராக கலாநிதி. செந்தில்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாணவர்[தொகு]

2010 இல் இப்பல்கலைக்கழத்தில் 3,046 மாணவர்களும் 550 பணியாளர்களும் காணப்பட்டனர்.[3] மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இது இலங்கையில் பத்தாவது பல்கலைக்கழகம்.[3] 2009/10 இல் 1,149 மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர்.[4] இப்பல்கலைக்கழகம் 448,212 மில்லியன் இலங்கை ரூபாய்களை நிகழும் வரவு செலவாகவும், மில்லியன் ரூபாய்களை முதல் வரவு செலவாகவும் 2010 இல் கொண்டிருந்தது.[5] இதனுடைய வரவு 2010 இல் 591,903 மில்லியன் ரூபாய்கள் ஆகும். இதில் 98% அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகும்.[5]

பீடங்கள்[தொகு]

Faculty of Health-Care Sciences, Eastern University, Batticaloa..JPG
  • கலைப் பீடம்
  • விஞ்ஞான பீடம்
  • விவசாய பீடம்
  • வர்த்தக முகாமைத்துவ பீடம்
  • தொடர்பாடல் வாணிப கற்கைகள் பீடம்

சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்[தொகு]

சௌக்கியப் பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் (Faculty of Health-Care Sciences) இலங்கைக் கிழக்குப் பல்கலைக்கழகக் கல்விப் பீடங்களுள் ஒன்றாகும். 2005 ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சனனாயகச் சோசலிசக் குடியரசின் வர்த்தமான அறிவித்தலில் இப்பீடத்தின் ஆரம்பம் பற்றி உத்தியோக பூர்வமாக அரசினால் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு இது ஆரம்பிக்கப்பட்டது. தற்போது மட்டக்களப்பு வந்தாறுமூலையில் அமைந்துள்ள கிழக்குப்பல்கலைக்கழகத்திலிருந்து 17 கிலோ மீற்றர் தூரத்தில், மட்டக்களப்பின் நகரில் இது அமைந்துள்ளது. இதற்கான நிரந்தரக் காணி மட்டக்களப்புப் பிள்ளையாரடியில் மட்டக்களப்பு வாவியோரமாக அமைந்துள்ள அழகு நிறைந்த ஒரு இடமாகும்.

நிறுவகம்[தொகு]

திருகோணமலை வளாகம்[தொகு]

  • வர்த்தக வாணிப கற்கைகள் பீடம்
  • பிரயோக விஞ்ஞான பீடம்
  • சித்த மருத்துவ பகுதி

உபவேந்தர்கள்[தொகு]

இப்பல்கலைக்கழக உபவேந்தராக முனைவர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் முன்னர் பணியாற்றியபோது, 2006, திசம்பர் 15 இல் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டுப் பல ஆண்டுகளாகியும் இவரது நிலை சரியாகத் தெரியவில்லை[6][7]. இவரைத் தொடர்ந்து முனைவர் நா. பத்மநாதன் உபவேந்தராகப் பணியாற்றினார். இவரும் மார்ச் 2010 இல் மாணவர்களின் அழுத்தத்தைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடிவடையும் முன்னரே பதவியில் இருந்து விலகினார்[8]. இதனை தொடர்ந்து விவசாய பீடாதிபதி பிரேமகுமார் 2010/11 காலப்பகுதிகளில் பதில் உபவேந்தராக பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இருந்து வந்தார். இக்காலப்பகுதியில் பல்கலைக்கழக மானியங்கள் குழு இப்பல்கலைக்கழக நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகள் தொடர்பாக நேரடியாக தலையிட்டது. அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளர் ஒருவரின் கட்டளையின் கீழ் கிழக்குப் பல்கலைக்கழகம் இயங்கி வந்தது. தொடர்ந்தும் பதில் துணைவேந்தராக பிரேமகுமார் பெப்ரவரி 15, 2012 வரையில் இருந்து வந்தார், எனினும் இவருக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரின் அதிகாரம் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. முடிவுகள், தீர்மானங்கள் என்பன பல்கலைக்கழக மானியங்கள் குழுவின் கண்காணிப்பாளரின் கையிலேயே இருந்தன. பெப்ரவரி 15, 2012 முதல் கனேடியப் பிரசையான முனைவர் கிட்ணன் கோவிந்தராசா இப்பல்கைல்கழகத்தின் துணைவேந்தராக அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் நியமனம் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]