மழை
மழை (Rain) என்பது வளிமண்டலத்திலிருக்கும் நீராவியானது ஒடுங்கி, நீர்ம நிலையை அடைந்து, ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கி விழும் அளவுக்குக் கனமாகித் துளிகளாக நிலத்தை நோக்கி விழுவதாகும்.
மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், கதிரவனின் வெப்பத்தால், ஆவியாதல் செயன்முறை மூலம், நீரானது நீராவியாகி வானை நோக்கி மேலெழுந்து செல்கின்றது. அப்படி மேலெழுந்து செல்லும்போது, மேலே செல்லச் செல்ல வெப்பநிலை குறைவதனால் ஒடுக்கமடைந்து சிறு நீர்மத்துளிகள் உருவாகின்றன. அவை ஒரு தொங்கல் நிலையில் மேகங்களை உருவாக்கும். மேகங்கள் மேலும் குளிர்வடையும்போது, மேலும் ஒடுக்கமடைந்து பெரிய நீர்த்துளிகளாக மாறுகின்றன. அவற்றின் எடை அதிகரிக்கையில் புவி ஈர்ப்புவிசை காரணமாக மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவதும் உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.
மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா
[தொகு]"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக்டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகுகிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர்கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்." [1]
கோப்பென் காலநிலை வகைப்பாடு
[தொகு]கோப்பென் வகைப்பாட்டு (Köppen classification) விலாடிமீர் கோப்பெனால் உருவாக்கப்பட்ட காலநிலை வகைப்பாட்டுக்கான ஒரு முறையாகும். ஒரு பகுதியில் வளரும் தாவரங்களை அடிப்படையில் கோப்பென் இம்முறையை படைத்தார். உலகின் காலநிலை எங்கும் ஒரேமாதிரியாக காணப்படுவதில்லை. பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடுகின்றது. முக்கியமாக காலநிலை அம்சங்களைப் பொதுவாக கொண்டுள்ள பிரதேசங்களை ஒரே பிரிவின் கீழ் வகுத்து ஆராய்வதே காலநிலைப் பிரதேசங்கள் பற்றிய ஆய்வாகும். கோப்பென் உலகினை காலநிலைப் பிரதேசங்களாக வகுப்பதற்கு சிறந்த குறிகாட்டி தாவரம் என நம்பினர். டி.கண்டோல் என்பவருடைய தாவர வகைப்பாகுபாட்டை அடிப்டையாகக் கொண்டு தனது காலநிலைப் பிரதேசங்களை வகுத்தார்.
டி.கண்டோலின் ஐந்து முக்கிய தாவரப் பிரதேசங்களாவன :
- மிகு வெப்பநிலைக்குரியவை (Megathermal)
- வறட்சிக்குரியவை (Xerophilous)
- இடைவெப்பநிலைக்குரியவை (Mesothermal)
- நுண்வெப்பநிலைக்குரியவை (Microthermal)
- மிகத்தாழ்வெப்பநிலைக்குரியவை (Ekisthothermal)
டி.கண்டோலின் தாவரப் பிரிவுகளின் ஒழுங்கில் கெப்பன் உலகினை முதற்கட்டமாக ஐந்து காலநிலைப் பிரிவுகளாக (A,B,C,D,E) வகுத்தார். அவையாவன:
- அயனமண்டல மழைக்காலநிலை (A)
- உலர்ந்த காலநிலை (B)
- இளஞ்சூட்டு இடைவெப்ப மழைக்காலநிலை (C)
- கண்ட நுண்வெப்பக் காலநிலை (D)
- முனைவுக்காலநிலை (E)
என்றாலும், இப்பரந்த உலகை இந்த ஐந்து பிரிவுகளுக்குள் பிரித்து ஆராய்ந்துவிட முடியாது. எனவே ஐந்து பெரும் பிரிவுகளையும் வேறு குறிகாட்டிகளை ஆதாராமாகக் கொண்டு உட்பிரிவுகளாக (f,m,w,S,W,s,T,F) இரண்டாம் கட்டமாக வகுத்தார். மேலும் வேறு சில தனித்த இயல்புகளை அவதானித்த கெப்பன் மூன்றாம் கட்டமாக வேறு சில ஆங்கில எழுத்துக்களைக் (a,b,c,d,h,k,H) கொண்டு வகுத்தார்.
மழைமானி
[தொகு]மழையையோ அல்லது பனியையோ சாதாரண மழைமானி மூலம் அளவிடலாம். அஃது 100மிமீ (4 அங்குலம் பிளாஸ்டிக்) அல்லது 200மிமீ(8அங்குலம் உலோகம்) என்ற அளவுகளில் இருக்கும். சாதாரண மழை மானி ஆடி அல்லது உலோகத்தால் ஆன இரண்டு நீளுருளைகளையும் ஒரு புனலையும் கொண்டது. உட்புற உருளை 0மிமீ முதல் 25மிமீ (0.98 அங்குலம்) வரை அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். உட்புற உருளையின் மேல் உள்ள புனல் மழை நீரை அந்த உருளைக்குள் செலுத்துமாறு அமைக்கபட்டிருக்கும். உட்புற உருளை நிறைந்தபின் மழை நீர் மேற்புற உருளையில் சேகரிக்கப்படும்.
அளவிடும் முறை
[தொகு]பொதுவாக ஒவ்வொரு 24 மணிநேரத்திற்கும் மழை அளவிடப்படும். எனவே மழையை அளவிடும்முன் நேரத்தை குறித்துக்கொள்வது அவசியம். மழைமானியை ஒரு பொதுவான, இடர்பாடுகள் இல்லாத இடத்தில் மழை பெய்யும் நேரத்தில் திறந்து வைக்கவும். சரியாக 24 மணிநேரத்திற்கு பிறகு மானியில் உள்ள நீரின் அளவை மில்லி லிட்டர் அளவில் எடுக்கவேண்டும். நீர் ஒரு திரவம் என்பதால் மில்லி லிட்டர் என்ற அளவைவிட லிட்டர் என்ற அளவில் மாற்றினால் தெளிவாக இருக்கும். மழையை அளவிடும் SI அலகு மில்லி லிட்டர் ஆகும்.
“ | ஒரு மில்லிமீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம். | ” |
எனவே, 10மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ளவும். ஒரு ஊரில் எவ்வளவு மழை பெய்துள்ளது என கணக்கிட, அந்த ஊரின் பரப்பளவு (சதுர மீட்டரில்) தெரிந்திருக்க வேண்டும். சென்னையின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் (174 x 10,00,000 சதுர மீட்டர்). எனவே சென்னையில் 1mm மழை என்பது 17,40,00,000 லீட்டர் மழை பெய்ததாகக்கொள்ளலாம்.
மழை பெய்வதை முன்னரே அறியும் முறை
[தொகு]மழை பெய்வதை முன்னரே அறிய பிராணிகளின் நடத்தைகளைக் கண்காணிக்கலாம். மழை பெய்யப்போவதை முன் கூட்டியே அறியும் திறன் பிராணிகளுக்கு உள்ளது.
மழை பெய்வதை அறிய உதவும் பிராணிகளின் நடவடிகைகள்
- மயில் - தனது தோகையை விரித்து நடனம் ஆடும்.
- எருமை - வானத்தைப் பார்த்து முக்காளமிடும்.
- ஈசல் - தனது இருப்பிடத்தை விட்டு வெளியே வந்து பறக்கும்.
- பூனை - வீட்டு அடுப்பங்கரையினுள் பதுங்கி இருக்கும்.
- பறவைகள் - வானத்தில் தாழ்வாகப்பறக்கும்.
மழையின் வகைகள்
[தொகு]- ஆலி - மழை துளி
- சோனை - விடா மழை
- தூறல் - சிறிய மழை,
- சாரல் - மலையில் பட்டு விழும் மழை.
- அடைமழை - ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
- கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
- மாரி - மாரி அல்லாது காரியம் இல்லை என்பது பழமொழி. மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
- ஆலங்கட்டி மழை - பனிக்கட்டிகள், மழையுடனோ அல்லது தனியாகவோ வானில் இருந்து விழுதல் பனி மழை அல்லது ஆலங்கட்டி மழை என்று அழைக்கப்படும்.. இவ்வாறு பனி மழை பெய்ய காரணமாக இருப்பதற்கு "சூடோமோனாஸ் சிரஞ்சி" என்ற பனித்துகள்களை உண்டாக்கும் பாக்டீரியாவும் ஒரு காரணமாகும்...
- பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
- ஆழிமழை - ஆழி என்றால் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
- துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு (திருக்குறள்).
- பெய் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் மழையை பெய் என்று கூறப்பட்டுள்ளது. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு (குறள்).
- புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையைக்குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும், வாரி வளங்குன்றிக் கால் (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
- வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.
மழைக்காடுகள்
[தொகு]மழைக்காடுகள் என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன.
உலகிலுள்ள விலங்குகள், தாவரங்களில் 40% லிருந்து 75% வரை மழைக்காடுகளில் வாழ்பவைகளாக உள்ளன.[3] பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன.[4] உலக ஆக்சிஜன் உருவாக்கத்தில் 28% மழைக்காடுகளில் வளரும் மரங்களால் உற்பத்தி செய்யப்படுவதாகும்.[5]
உலகின் அதிக மழைப்பொழிவு இடங்கள்
[தொகு]இந்தியாவின், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான சில்லாங் அருகே கிழக்கு இமாலய மலைச்சரிவில் அமைந்திருக்கும் சிரபுஞ்சி பூமியின் அதிக மழைப்பொழிவுள்ள இடமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சராசரி ஆண்டு மழைப்பொழிவு 11,430 மி.மீ (450 அங்குலம்) ஆகும். 1961 ஒற்றை ஆண்டில் மட்டும் சிரபுஞ்சியில் 22,987 மி.மீ. (905.0 அங்குலம்) என்ற உச்சபட்ட மழைபொழிவு பதிவாகியுள்ளது.இந்தியாவின் மேகலாயா மாநிலத்தின் மௌசின்ரம் என்ற இடத்தின் 38 ஆண்டுகளின் சராசரி மழைப்பொழிவு 11,873 மி.மீ (467 அங்குலம்) ஆகும்.[6] ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள மவுன்ட் பெல்லிடன் கெர் என்ற இடத்தில் வருட சராசரி மழைப்பொழிவு 8,000 மி.மீ ஆகும். இந்த இடத்தில் 2000 ம் ஆண்டில் மட்டும் 12,200 மி.மீ மழை பொழிந்துள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.[7] ஹவாய் தீவுகளின் கவுஆய் தீவிலுள்ள மவுன்ட் வொய் அலே-அலே யின் 32 வருடங்களின் சராசரி மழைப்பொழிவு 12,000 மி,மீ (460 அங்குலம்) 1982 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17,340 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கண்டம் | உச்சபட்ச சராசரி | இடம் | உயரம் | பதிவு வருடங்கள் | ||
---|---|---|---|---|---|---|
அங்குலம் | மி.மீ | ft | மீ | |||
தென் அமெரிக்கா | 523.6 | 13,299 | லொரோ, கொலம்பியா (estimated)[a][b] | 520 | 158[c] | 29 |
ஆசியா | 467.4 | 11,872 | மௌசின்ரம், இந்தியா[a][d] | 4,597 | 1,401 | 39 |
ஓசியானா | 460.0 | 11,684 | அமெரிக்காவின் ஹவாய் தீவுகளின் மவுன்ட் வொய் அலே-அலே [a] | 5,148 | 1,569 | 30 |
ஆப்ரிக்கா | 405.0 | 10,287 | டெபுன்ட்ச்சா கேமரூன் | 30 | 9.1 | 32 |
தென் அமெரிக்கா | 354.0 | 8,992 | குயிப்டோ, கொலம்பியா | 120 | 36.6 | 16 |
ஆஸ்திரேலியா | 340.0 | 8,636 | மவுண்ட் பெல்லிடன் கெர், குயின்ஸ்லாந்து | 5,102 | 1,555 | 9 |
வட அமெரிக்கா | 256.0 | 6,502 | ஹென்டர்சன் ஏரி ,பிரித்தானிய கொலம்பியா | 12 | 3.66 | 14 |
ஐரோப்பா | 183.0 | 4,648 | Crkvice,மான்டிநீக்ரோ | 3,337 | 1,017 | 22 |
Source (without conversions): வெப்பநிலை மற்றும் மழைக்காடுகளின் உலகளாவிய அளவிலான அளவுகள், தேசிய காலநிலை தரவு மையம், ஆகத்து 9, 2004.[8] |
கண்டம் | இடம் | உச்சபட்ச மழைப்பொழிவு | ||
---|---|---|---|---|
அங்குலம் | மி.மீ | |||
உச்சபட்ச ஆண்டு சராசரி மழைப்பொழிவு [9] | ஆசியா | மௌசின்ரம் | 467.4 | 11,870 |
ஒரு வருடத்தில் அதிகபட்சம் [9] | Asia | சிரபுஞ்சி | 1,042 | 26,470 |
காலண்டர் மாதத்தில் அதிகபட்ச மழைப்பொழிவு[10] | Asia | சிரபுஞ்சி, இந்தியா | 366 | 9,296 |
24 மணி நேரத்தில் அதிகபட்சம்[9] | இந்தியப் பெருங்கடல் | பொக் பொக், லா ரீயூனியன் தீவு | 71.8 | 1,820 |
12 மணி நேரத்தில் அதிகபட்சம் [9] | இந்தியப் பெருங்கடல் | பொக் பொக், லா ரீயூனியன் தீவு | 45.0 | 1,140 |
ஒரு நிமிடத்தில் அதிகபட்சம் [9] | வட அமெரிக்கா | யூனியன்வில்லே, மேரிலான்ட், ஐக்கிய அமெரிக்கா | 1.23 | 31.2 |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]- ஆலங்கட்டி மழை
- அமில மழை
- பனிமழை
- செயற்கை மழை
- முகிற்பேழ் மழை
- சிவப்பு மழை
- இடியுடன் கூடிய மழை
- மழை நீர் சேகரம்
- வடகிழக்கு பருவமழை
- வருணன்
- மீன் மழை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ மழை பெய்விக்கும் பாக்டீரியா
- ↑ Peel, M. C. and Finlayson, B. L. and McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen-Geiger climate classification". Hydrol. Earth Syst. Sci. 11: 1633-1644. பன்னாட்டுத் தர தொடர் எண்:1027-5606. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html. (direct: Final Revised Paper)
- ↑ "Rainforests.net – Variables and Math". Archived from the original on 2008-12-05. பார்க்கப்பட்ட நாள் 2009-01-04.
- ↑ "Rainforests at Animal Center". Animalcorner.co.uk. 2004-01-01. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
- ↑ Killer Inhabitants of the Rainforests. "Killer Inhabitants of the Rainforests". Trendsupdates.com. Archived from the original on 2011-01-22. பார்க்கப்பட்ட நாள் 2012-08-26.
- ↑ A. J. Philip (2004-10-12). "Mawsynram in India" (PDF). Tribune News Service. Archived from the original (PDF) on 2010-01-30. பார்க்கப்பட்ட நாள் 2010-01-05.
- ↑ Bureau of Meteorology (2010). "Significant Weather - December 2000 (Rainfall)". Commonwealth of Australia. பார்க்கப்பட்ட நாள் 2010-01-15.
- ↑ "Global Measured Extremes of Temperature and Precipitation# Highest Average Annual Precipitation Extremes". National Climatic Data Center. August 9, 2004. Archived from the original on மே 25, 2012. பார்க்கப்பட்ட நாள் ஜூன் 3, 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 "Global Weather & Climate Extremes". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
- ↑ "World Rainfall Extremes". Members.iinet.net.au. 2004-03-02. பார்க்கப்பட்ட நாள் 2011-12-26.
வெளி இணைப்புகள்
[தொகு]- கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்