இமயமலை
இமயமலை | |
---|---|
திபெத் தன்னாட்சிப் பகுதியில் உள்ள அடிவார முகாமுக்கு செல்லும் பாதையிலிருந்து பார்க்கையில் தெரியும் எவரெசுட்டு சிகரத்தின் வடக்கு முகம். | |
உயர்ந்த புள்ளி | |
உச்சி | எவரெசுட்டு சிகரம், நேபாளம், இந்தியா மற்றும் சீனா |
உயரம் | 8,848 m (29,029 அடி) |
புவியியல் | |
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Himalayas Map.png" does not exist.
| |
நாடுகள் | ஆப்கானிஸ்தான், பூட்டான், பர்மா, சீனா, இந்தியா, நேபாளம் and பாகிஸ்தான் |
இமயமலை (Himalayas) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது.
உலகிலேயே மிகப்பெரியதும், மிகவுயர்ந்ததுமான மலைத்தொடர் இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெசுட்டு சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காசுமீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேசு மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும்.[1]
மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாக்கித்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது.[2] இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்து குஃசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளியையும் எல்லையாகக் கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது.
இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நமுசா பருவா பரமபுத்திராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும்.
சுற்றுப்புறம்
[தொகு]இமயமலையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் காலநிலை, மழை, உயரம், மற்றும் மண் கொண்டு மாறுபடும். மலை அடிவாரத்தில் வெப்ப மண்டல காலநிலையும், மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் உறைபனியாகவும் காணப்படுகிறது. கடக ரேகையின் அருகே உள்ளதால் இதன் பனி வரி 5500 மீட்டர் ஆகும்.[3] இது உலகிலேயே உயர்ந்ததவற்றில் ஒன்று. ஆண்டு மழை அளவு தெற்கு முகப்பில் மேற்கிலிருந்து கிழக்கு வரை அதிகரிக்கும். இத்தகைய உயர மாறுபாடு, மழை அளவு ,மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனி வரி காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது. உதாரணமாகத் தீவிர குளிர் மற்றும் அதிக உயரம் (குறைந்த காற்றழுத்தம்) காரணமாக உச்சவிரும்பிகள் உயிர் வாழுகின்றன.[4]
இமயமலையின் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு செல்வம் காலநிலை மாற்றம் காரணமாகக் கட்டமைப்பு மற்றும் இயைபு மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகப் பல இனங்கள் உயரமான இடங்களுக்குச் சென்று உயிர் வாழ்கின்றன. கர்வால் இமயமலை பகுதியில் கருவாலி மரங்கள் இருந்த இடத்தில தேவதாரு மரங்கள் வளர்கின்றன. சில மர இனங்களில் குறைந்த காலத்திலேயே பூத்தலும் பழுத்தாலும் நிகழ்கின்றன, குறிப்பாக ர்ஹோடோதேண்ட்ரோன், ஆப்பிள் மற்றும் மைரிக்கா ஈஸ்கிலேண்டா.
நிலவியல்
[தொகு]இமயமலை இக்கிரகத்தில் உள்ள இளம் மலைத் தொடர்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின் படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம்.
வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது. 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது.
இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது.[5]
நீர் வள இயல்
[தொகு]இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும்.
இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன:
- மேற்கு ஆறுகள் சிந்து படுக்கையில் இணைகின்றன. இவற்றில் சிந்து நதிதான் பெரிய நதி. சிந்து நதி திபெத்தில் உருவாகி தென்மேற்காகப் பாய்ந்து இந்தியா, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலில் செல்கிறது. இந்நதி ஜீலம், செனாப், ரவி, பியாஸ், மற்றும் சட்லெஜ் ஆறுகளால் ஊட்டப்படுகிறது.
- மற்ற இமாலய நதிகளின் கங்கா-பிரம்மபுத்ரா படுக்கைக்குச் செல்கிறது. இதன் முக்கிய நதிகள் கங்கை, பிரம்மபுத்ரா மற்றும் யமுனை. பிரம்மபுத்திரா மேற்கு திபெத்தில் யார்லுங் ட்சன்க்போ நதியாக உருவாகி கிழக்கு திபெத் மற்றும் அசாம் சமவெளி வழியாகப் பாய்கிறது. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா பங்களாதேசத்தில் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ஆற்று படுக்கை வழியே சென்று வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
கிழக்கு இமாலய நதிகளின் கிழக்கு அயேயர்வாடி நதியை ஊட்டுகின்றன, இந்நதி திபெதில் உருவாகி தெற்கு நோக்கிப் பர்மா வழியாக அந்தமான் கடலில் கலக்கிறது.
சல்வீன்,மீகாங்,யாங்சே மற்றும் ஹுவாங் ஹி (மஞ்சள் ஆறு) திபெத்திய பீடபூமியில் உருவாகின்றன. ஆகையால் இவை உண்மையான இமயமலை ஆறு அல்ல. சில புவியியலாளர்கள் இவ் ஆறுகளை வெளிச்சுற்று இமாலய ஆறுகள் என்று அழைகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் குறைவு விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, பனிப்படல ஏரிகள் கடந்த சில தசாப்தங்களில் பூட்டான் இமயமலை பகுதியில் குப்பைகள் உள்ளடங்கிய பனிப்பாறைகளின் மேற்பரப்பில் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த விளைவு பல ஆண்டுகளாக உணரப்படாது என்றாலும் உலர் பருவங்களில் பணிப்பறைகளால் உருவாகும் ஆறுகளைச் சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பேரிழப்பு ஏற்படும்.
ஏரிகள்
[தொகு]இமயமலை பகுதியில் மானசரோவர் ஏரி போன்று நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் 5,000 மீ உயரத்திற்கு கீழே உள்ளன, அதன் பரப்பு உயரத்திற்கு ஏற்றவாறு குறைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் விரிந்த பாங்காங்-த்சோ ஏரியும் மத்திய திபெதில் உள்ள யம்ட்ரோக் த்சோ ஏரியும் முறையே 700 சகிமீ, 638 சகிமீ கொண்டு மிகப்பெரியதாகும். குறுப்பிடத்தக்க மற்ற ஏரிகள் வட சிக்கிமில் உள்ள குருடோக்மார் ஏரி, சிக்கிமில் உள்ள த்சொங்க்மோ ஏரி மற்றும் நேபாளில் உள்ள டிளிசோ ஏரி.
பனிப்பாறை நிகழ்வினால் ஏற்படும் மலை ஏரிகளுக்கு டர்ன்ஸ் என புவியியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. டர்ன்ஸ் உயர் இமயமலையில், 5500 மீட்டர் மேல், காணப்படுகின்றன.
காலநிலை பாதிப்பு
[தொகு]இமயமலை இந்திய துணைகண்டம், திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள காலநிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை உலர் விரைப்பான தென் நோக்கிச் செல்லும் ஆர்க்டிக் காற்றை தடுத்து தென் ஆசியாவை மிதவெப்பமாக வைத்து மற்றும் அவர்கள் மற்ற கண்டங்களில் தொடர்புடைய வெப்பமான பகுதிகளை விட வெப்பமாக உள்ளன. இவை பருவக்காற்றை வடுக்கு நோக்கிச் செல்வதை தடுத்து டேராய் பகுதிகளில் கன மழை பெய்ய உதவுகிறது. இமயமலை மத்திய ஆசிய பாலைவனங்களான தக்ளமகன் மற்றும் கோபி பாலைவனங்கள் உருவானதில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
மதம்
[தொகு]இந்து மதத்தில் இமயமலையை பார்வதியின் தந்தையான இமாவான் (பனிக் கடவுள்) என உருவகப்படுத்தப்பட்டுள்ளது அவர் சிவனை திருமணம் செய்த பார்வதி, கங்கா மற்றும் சரஸ்வதியின் தந்தை ஆவார்.
இமயமலையில் உள்ள பல இடங்கள் இந்து, சமண, சீக்கிய மற்றும் புத்த மதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. குறுப்பிடத்தக்க எடுதுக்க்காட்டானது பத்ம சம்பாவ புத்த மதத்தைத் தோற்றுவித்த பூட்டானில் உள்ள பரோ தக்ட்சங் இமயமலையில் உள்ளது.
தலாய்லாமாவின் இருப்பிடம் மற்றும் திபெத்திய புத்த இடங்கள் இமய மலையில் உள்ளது. திபெத்தில் 6,000 மடங்கள் இருந்தன. திபெத்திய முஸ்லிம்கள் லாசா மற்றும் ஷிகட்சே இடங்களில் சொந்த மசூதிகள் கொண்டுள்ளனர்.
கைலாயம், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, ஜோஷி மடம், அமர்நாத் கோயில், வைஷ்ணவதேவி கோயில் போன்ற இந்து சமய வழிபாட்டிடங்கள் உள்ளது.
வரலாற்றில் இமயமலையின் பங்கு
[தொகு]இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தினை மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாகச் செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு.
தமிழ் - சங்க இலக்கியங்களில் இமயம்
[தொகு]- சேரலாதன் கடம்ப மரத்தை வெட்டிக் கடம்பரை ஓட்டிய பின்னர் இமயத்தில் வில்லைப் பொறித்தான். - அகம் 127
- வஞ்சி நகருக்குப் பெருமை அதன் அரசன் வானவன் இமயத்தில் வில்லைப் பொறித்தது. அந்த இமயம் "வரை அளந்து அறியாப் பொன்படு நெடுங்கோடு" கொண்டது. - புறம் 39
- வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த ... இயல் தேர்க் குட்டுவன். - சிறுபாணாற்றுப்படை 48-
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் தன் முத்திரையாகிய வில்லைப் பொறித்தான். - பதிற்றுப்பத்து பதிகம் 2
- இந்தியாவில் இமயப் பகுதி அரசர்கள் குமரிமுனை வரையில் கைப்பற்றக் கனவு கண்டனர். இமையவரம்பன் அவர்களது கனவுகளைப் பொய்யாக்கித் தன் புகழை இமயம் வரையில் நிலைகொள்ளச் செய்தான். - பதிற்றுப்பத்து - 2ஆம் பத்து - பாடல் 11
- வடதிசை எல்லை இமயமாகத் தென்திசைக் குமரிவரை ஆண்ட அரசர்களின் நாட்டை அழித்துப் போரிட்டவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன். - பதிற்றுப்பத்து 43
- கொண்டல் மழை இமயத்தைத் தீண்டிப் பொழியும். - புறம் 34
- இமயம் போல உயர்ந்து வாழ்க. - புறம் 166
- வடதிசை இமயமும், தென்திசை ஆய்குடியும் உலகைச் சமனிலை கொள்ளச் செய்யும். - புறம் 132
- தலைவி ஒருத்தி தன் காதலனை இமயம் ஆடினாலும் தன் காதலனின் பண்பு ஆட்டங்கூடக் காணாது என்கிறாள் . - குறுந்தொகை 158
- அரவணையான் புகழ் இமயத்துக்கு அப்பாலும் பரவ வேண்டும் என்று புலவர் திருமாலை வாழ்த்துகிறார். - கலித்தொகை 105
- தென்கடல் பரப்பில் மேய்ந்த அன்னப் பறவை இமயமலையிலுள்ள வானர மகளிரிடம் இருப்புக் கொள்ளுமாம். அதுபோல, என் காதலியை எனக்குத் திருமணம் செய்து கொடுக்க மறுப்பவர்கள் என்றேனும் ஒருநாள் கொடுப்பார்கள் என்கிறான் தலைமகன் ஒருவன். - நற்றிணை 356
- பொன்னுடை நெடுங்கோட்டு இமயம் போன்ற வேழம் பரிசாகத் தருக என்கிறார் ஒரு புலவர்.- புறம் 369
- என் காமம் இமயத்திலிருந்து இழிதரும் கங்கை ஆறு போல மாலை வேளையில் பெருகுகிறது என்கிறாள் ஒருத்தி. - நற்றிணை 369
- அந்தி வேளையில் அலையாமல் ஓரிடத்தில் தங்கும் விலங்கினம் போல ஆயத்தோடு ஆற்றுத்துறை மணல்மேல் ஒரிடத்தில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு நல்லவரைப் பார்த்தேன் என்று பரத்தைமாட்டுச் சென்ற தன் தலைவனைப்பற்றி ஒருத்தி குறிப்பிடுகிறாள். - கலித்தொகை 92
- நம் காதலர் பொருள் தேடச் சென்றாரே அந்தச் செல்வம் இமயத்தைப் போன்றதா, அன்றி நந்தர் பாடலி நகரில் மறைத்து வைத்த நிதியம் போன்றதா? ஆயினும் அந்தச் செல்வம் நம்மைக் காட்டிலும் பெரிதா? என்று சொல்லித் தலைவி தோழியிடம் அங்கலாய்த்துக் கொள்கிறாள். - அகம் 265
- சிவன் திரிபுரம் எரித்தபோது இமயம் அவனுக்கு வில்லாயிற்று. - கதை \ பரிபாடல் திரட்டு 1
- இமயத்தை வில்லாக்கிக்கொண்ட சிவன் கதை பேசப்படுகிறது. - கலித்தொகை 38
- அந்தி வந்ததும் அந்தணர் தம் கடமையாக முத்தீ வளர்க்கும் இடங்களுள் ஒன்று இமயம். மற்றொன்று பொதியில். அந்த முத்தீ விளக்கொளியில் பெரிய பெண்மான் உறங்குமாம். இந்த இரு மலைகளையும் போலப் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதன் உயர்விலும், புகழிலும் நடுக்கம் இல்லாமல் வாழவேண்டும் என்று புலவர் வாழ்த்துகிறார். - புறம் 2
- திருபரங்குன்றம் புகழால் இமயக் குன்றுக்கு ஒப்பானது. - பரிபாடல் 8
இவற்றையும் காணவும்
[தொகு]- இமயமலையின் சிகரங்கள் மற்றும் கணவாய்கள் பட்டியல்
- இமயம் (திரைப்படம்)
- இமயமலை சிற்றெலி
- இமயப் பாறைமுயல்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Himalayan Mountain System. பார்க்கப்பட்ட நாள் 2007-08-07.
- ↑ Bishop, Barry. "Himalayas (mountains, Asia)". Encyclopaedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 October 2012.
- ↑ Shi, Yafeng; Xie, Zizhu; Zheng, Benxing; Li, Qichun (1978). "Distribution, Feature and Variations of Glaciers in China". World Glacier Inventory (Riederalp Workshop). http://itia.ntua.gr/hsj/redbooks/126/iahs_126_0111.pdf. பார்த்த நாள்: 2012-12-22.
- ↑ Hogan, C. Michael (2010). Monosson, E.; Cleveland, C. (eds.). "Archaea". Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
{{cite web}}
: Text "location Washington DC" ignored (help) - ↑ இந்துகுஷ் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: பாகிஸ்தான், டெல்லி, வடமாநிலங்களிலும் அதிர்வு
மேலும் வாசிக்க
[தொகு]- Aitken, Bill, Footloose in the Himalaya, Delhi, Permanent Black, 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7824-052-1.
- Berreman, Gerald Duane, Hindus of the Himalayas: Ethnography and Change, 2nd rev. ed., Delhi, Oxford University Press, 1997.
- Edmundson, Henry, Tales from the Himalaya, Vajra Books, Kathmandu, 2019. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9937-9330-3-2.
- Everest, the IMAX movie (1998). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7888-1493-1.
- Fisher, James F., Sherpas: Reflections on Change in Himalayan Nepal, 1990. Berkeley, University of California Press, 1990. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-06941-2.
- Gansser, Augusto, Gruschke, Andreas, Olschak, Blanche C., Himalayas. Growing Mountains, Living Myths, Migrating Peoples, New York, Oxford: Facts On File, 1987. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8160-1994-0 and New Delhi: Bookwise, 1987.
- Gupta, Raj Kumar, Bibliography of the Himalayas, Gurgaon, Indian Documentation Service, 1981.
- Hunt, John, Ascent of Everest, London, Hodder & Stoughton, 1956. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-361-9.
- Isserman, Maurice and Weaver, Stewart, Fallen Giants: The History of Himalayan Mountaineering from the Age of Empire to the Age of Extremes. Yale University Press, 2008. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-11501-7.
- Ives, Jack D. and Messerli, Bruno, The Himalayan Dilemma: Reconciling Development and Conservation. London / New York, Routledge, 1989. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-01157-4.
- Lall, J.S. (ed.) in association with Moddie, A.D., The Himalaya, Aspects of Change. Delhi, Oxford University Press, 1981. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-561254-X.
- Nandy, S.N., Dhyani, P.P. and Samal, P.K., Resource Information Database of the Indian Himalaya, Almora, GBPIHED, 2006.
- Swami Sundaranand, Himalaya: Through the Lens of a Sadhu. Published by Tapovan Kuti Prakashan (2001). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-901326-0-1.
- Swami Tapovan Maharaj, Wanderings in the Himalayas, English Edition, Madras, Chinmaya Publication Trust, 1960. Translated by T.N. Kesava Pillai.
- Tilman, H. W., Mount Everest, 1938, Cambridge University Press, 1948.
- Turner, Bethan, et al. Seismicity of the Earth 1900–2010: Himalaya and Vicinity. Denver, United States Geological Survey, 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Digital Himalaya research project at Cambridge and Yale
- The making of the Himalaya and major tectonic subdivisions பரணிடப்பட்டது 2013-12-23 at the வந்தவழி இயந்திரம்
- Geology of the Himalayan mountains
- Birth of the Himalaya
- Some notes on the formation of the Himalaya பரணிடப்பட்டது 2010-06-12 at the வந்தவழி இயந்திரம்
- Pictures from a trek in Annapurna (film by Ori Liber) பரணிடப்பட்டது 2012-10-25 at the வந்தவழி இயந்திரம்
- Geology of Nepal Himalaya பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம்
- South Asia's Troubled Waters Journalistic project at the Pulitzer Center for Crisis Reporting